தொகுதி 50 · கடிதம் 3824
இருகரம் கூப்பி அழைக்கின்றேன்!
2013-11-10
உடன்பிறப்பே,
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இடைத்தேர்தல்கள் வருவதுண்டு. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது நடைபெறுவதைப் போல எந்த இடைத் தேர்தலிலும், வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்செய்வதற்கு முன்பிருந்தே தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் செயல்கள் நடைபெற்றதில்லை. ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவே 9-11- 2013 முதல்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்குள் அங்கே நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் தான் எத்தனை? எத்தனை? எண்ணற்ற விதிமுறை மீறல்கள்; எல்லை மீறிய சேட்டைகள்!
நம்மைப் பொறுத்தவரையில், தேர்தல் தேதி அறிவித்த இரண்டு நாட்களிலேயே சேலத்திலே உள்ள கழக முன்னணியினரை எல்லாம் சென்னைக்கே அழைத்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழகம் போட்டியிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது.
4-12-2013 அன்று நடைபெறவுள்ள ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு. கழக வேட்பாளரை நிறுத்த கழகத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டவுடன், முறைப்படி அதற்கு ஆதரவு கேட்டுத் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்களுக்கும் நான் நேரடியாகக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், “வருகிற 4-12-2013 அன்று நடைபெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி
வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்கப்பூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப் பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும்வகையில், இந்த இடைத்தேர்தலில் கழக வேட்பாளருக்குத் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தேன்.
இந்தக் கட்சிகளின் தலைவர்கள் பலர் கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக எழுதியிருந்தார்கள். சில கட்சிகளின் தலைவர்கள் மேலிடத்தைக் கேட்டு முடிவு சொல்வதாகத் தெரிவித்திருந்தார்கள். சிலர் பதிலே தெரிவிக்கவில்லை.
இந்த ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, நமக்குள்ள ஒரே குறை, இந்த இடைத்தேர்தலை முன்னின்று நடத்தவேண்டிய என் அருமைத் தம்பி, “சேலத்துச் சிங்கம்” வீரபாண்டி ஆறுமுகம் இல்லையே என்பதுதான்! இந்த நேரம் அவர் மட்டும் இருந்திருந்தால், அவர் தலைமையில் அல்லவா பணிகள் நடைபெற்றிருக்கும்; எப்படியெல்லாம் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றியிருப்பார் என்றெல்லாம் என்னால் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வது? இயற்கையை வெல்ல முடியுமா? அவர் இல்லாத நிலையில், அந்த மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக இருக்கும் சிவலிங்கமும், கழகத் தேர்தல் பணிச்செயலாளர் டி.எம். செல்வகண பதி, எம்.பி.யும், இளைஞர் அணித் துணைச்செயலாளர் ராஜேந் திரனும், வீரபாண்டியின் அன்பு மகன் ராஜாவும் திட்டமிட்டுச் சீரிய பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் உற்ற துணையாகத் தலைமைக் கழகத்திலிருந்து பொன். முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் அங்கே சென்று இடைத்தேர்தல் பணிகளை ஆற்றத் தொடங்கிவிட்டார்.
இதற்கிடையே 11-10-2013 அன்று அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் என்னுடைய தலைமையில் வேட்பாளர்
தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்று, போட்டியிட மனுத் தாக்கல் செய்த உடன்பிறப்புகள் 42 பேரையும் அழைத்து, அவர்களிடம் பேசிய பிறகுதான், அந்த மாவட்டக் கழக முன்னணியினரையும் கலந்து கொண்டு கழக வேட்பாளராக திரு. வெ. மாறன், எம்.பி.ஏ., நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டார். நம்முடைய வேட்பாளர் இளைஞர். தொகுதிமக்களுக்காக ஓடியாடிப் பயனுள்ள பணியாற்றக்கூடிய நல்லவர். படித்தவர், பண்பு மிக்கவர், பழகுவதற்கும் அருமையானவர்.
15-10-2013 அன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும், துணைப் பொதுச் செயலாளர் தம்பி துரைமுருகனும் கலந்து கொண்டதோடு, திரும்பி வந்து எந்த அளவிற்கு அந்தக் கூட்டம் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் நடைபெற்றது என்பதை என்னிடம் விளக்கினார்கள். தேர்தல் பணிமனைத் திறப்பு விழாவிலும் தம்பி துரைமுருகன் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார். ஏற்காடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை வேட்பாளர் நேர்காணலையும் உடனடியாக நடத்தி, இந்தத் தேர்தலில் யார் வேட்பாளர் என்பதையும் முதன்முதலாக அறிவித்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல், கழக வேட்பாளர் தொடர்ச்சியாகத் தொகுதி முழுவதும் நடைப்பயணம் செய்து, வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளார். கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளைத் தொய்வேதுமின்றி அங்கேயே தங்கிச் செய்வதற்காகத் தலைமைக் கழகத்தின் சார்பில், எஸ்.ஆர். சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி, எம்.பி., இரா. இராசேந்திரன், வீரபாண்டி ஆ. ராஜா, ஆதிசங்கர், எம்.பி., ஜி. சூடாமணி, ௧. சுந்தரம், பா. கோபால், சி. தமிழ்ச்செல்வன் ஆகிய ஒன்பது பேர் அடங்கிய “ஏற்காடு தொகுதி தேர்தல் பணிக் குழு” ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அ.தி.மு.க. சார்பாக ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 52 பேரைக் கொண்ட தேர்தல் பணிக் குழு ஒன்றை முதலில் அமைத்தது. பின்னர் அவர்களும் போதாது என்று மேலும் 9 பேரை அதாவது மொத்தம் 61
பேரை (கூட்டு எண் 7 என்பதைப் பார்த்து) அந்தக் குழுவில் சேர்த்துள்ளது. அமைச்சரவையிலே உள்ள அத்தனை அமைச்சர்களும் தங்களுடைய ரத கஜ துரக பதாதிகளோடு அங்கே படையெடுத்திருக்கிறார்களாம். சென்னையில் அரசுத் தலைமைச் செயலகமே காலி என்று செய்திவந்துள்ளது. இத்தனை பேரைத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாக அவர்கள் நியமித்ததில் இருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு இந்த இடைத்தேர்தலில் பயந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தனை பேரும் இணைந்து கட்டவிழ்த்து விடும் அராஜகங்களையும் நம்மால் சமாளிக்க முடியுமா, எதிர்கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே ஆளும் அ.தி.மு.க.வின் சார்பில், அந்தத் தொகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு என்னவெல்லாம் நடைபெறுகிறது என்பதை உன் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
தேர்தல் நடத்தை விதிகள் அந்தத் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டம் முழுமைக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்கள். அந்த அடிப்படையில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்த கழகக் கொடிக் கம்பங்களை, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மாவட்ட தி.மு.க. நிர்வாகத்திற்கே தெரிவிக்காமல், அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற அஞ்சி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபர் 5ஆம் தேதி முதல் சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த பிறகும், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட தும்பல், பாப்பநாய்க்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி உட்பட பல கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்-டாப் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமலா இவை வழங்கப்பட்டன?
இதுபோலவே; தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும், மாநில அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டம் முழுவதும் நடத்தினார்கள். இது குறித்துச் சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல் துறை உயர் அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தும் அந்தப் புகார் அலட்சியப் படுத்தப்பட்டதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் புகார் மனுவினைப் பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. பிரவின் குமார், ஐ.ஏ.எஸ்., ஏற்காடு தொகுதியைத் தவிர மாவட்டத்தின் எந்தப் பகுதிகளிலும் தி.மு.கழகக் கொடிக் கம்பங்களை அகற்றவே கூடாது என்று உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்திற்கு வரும் அமைச்சர்கள், அரசுக்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 14-10-2013 அன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் சிகப்பு விளக்கு பொருத்திய காரில் பந்தாவோடு பயணம் செய்திருக்கிறார். இதுபற்றியும் புகைப்படத்தோடுகூடிய புகாரைத் தேர்தல் ஆணையருக்குக் கழகத்தின் சார்பில் தரப்பட்டது.
டெல்லியிலே உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை, நாடாளுமன்றக்கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு 28-10-2013 அன்று சந்தித்து, ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. அமைச்சர்களும், மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக எப்படியெல்லாம் அரசு இயந்திரத்தைத் தவறான வழியிலே பயன்படுத்துகிறார்கள் என்று மூன்று புகார் மனுக்களைக் கொடுத்திருக்கிறார்.
மாநிலத்தில் புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தல என்ற போர்வையில் அரசுப் பணம், பொது நிர்வாக இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்தப் பேருந்தில் அ.தி.மு.க. சின்னத்தையும் வரைந்து மக்கள் மனங்களில் பதியவைத்துச் செல்வாக்குத்தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கழக வேட்பாளருக்கு எதிராக வாழப்பாடி கிராம நிர்வாக அதிகாரி மூலம் கழக வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக 22-10-2013 அன்று பத்து வாகனங்களுடன் சென்றார் என்று இட்டுக்கட்டிப் புகார் மனுவினைக் கொடுத்தார்கள். காவல் துறை அதிகாரியே அந்தப் புகார் மனு காலதாமதமாகக் கொடுக்கப்பட்டது என்றும், அதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றும், வாகனங்களின் நம்பர்கள் எதையும் தரவில்லை என்றும், வீடியோ ஆதாரங்களும் இல்லை என்றும் “இந்து” பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே தெரிவித்தார்.
30-10-2013 தேதிய “தினமலர்” நாளேட்டிலேயே சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம் தொகுத்து வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ்க் கட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள ஜெயலலிதா படம் மறைக்கப்படவே இல்லை. மினரல் வாட்டரில் ஜெயலலிதாபடம், அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விளம்பரம் என எங்கும் ஜெயலலிதா போட்டோக்களைத தாராளமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை என்ற விளம்பரப் பலகைகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உட்பட, அனைத்து இடங்களிலும் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவரோ நடுநிலையோடு ஒரு தேர்தல் அதிகாரி போல நடக்காமல், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளரைப் போல வெளிப்படையாகவே நடப்பதாகப் புகார் கழகத்தின் சார்பில் கூறப்பட்டுவருகிறது. அந்த அதிகாரி, இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற இருப்பதாகவும், மேலும் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளைச் சிறிதும் பிறழாமல் அனுசரித்து, அதன்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய இந்த அதிகாரியே, வேலியே பயிரை மேய்வதைப் போல, சேலம் மாவட்டம், ஓமலூர் பழைய நீதிமன்றம் எதிரே, ஓமலூர் தாலுகா
அலுவலகத்திற்கு, 2 கோடியே 52 இலட்சம் ரூபாய்ச் செலவில் கட்டிடம் கட்ட 6-11-2013 அன்று காலை 10.45 மணிக்கு வைதீக முறைப்படி பூஜைகள் நடத்தி அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி, மேட்டூர் துணை ஆட்சியர், ஓமலூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுப்பணித் துறை (கட்டுமானம்) உதவிச் செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாத்திட வேண்டிய மாவட்ட முதன்மை அதிகாரியே, தேர்தல் நடத்தை விதிகளைத் துச்சமென நினைத்து, அவற்றை மீறி நடந்தால், அதை யாரிடம் சென்று முறையிடுவது?
இந்த மாவட்ட ஆட்சித் தலைவர்மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே ஒரு வழக்கு நடைபெற்றது. அதைப்பற்றிக்கூட நான் அப்போதே சுட்டிக் காட்டினேன். சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி, 2009ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடந்தது. 136 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 19 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்குரிய இழப்பீட்டுத் தொகையாக, நெடுஞ்சாலைத் துறை 250 கோடி ரூபாய் ஒதுக்கியது. சந்தை மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துச் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். 2012 டிசம்பர் மாதத்திற்குள் உரிய இழப்பீடு வழங்க சேலம், விழுப்புரம் மாவட்டக் கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்திலேயே சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் 30 சதவிகிதம் “கமிஷன்” கேட்பதாகப் புகார் கூறினார்கள். இந்த வழக்கில் மாவட்ட
ஆட்சியருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இவ்வாறு தொடக்கத்திலிருந்தே ஜனநாயகத்திற்கு விரோதமான, சட்ட விதிமுறைகளுக்கு மாறான அத்தனை காரியங்களிலும் அடாவடியாக ஈடுபட்டுத்தான் ஆளுங்கட் சியினா் இந்தத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள். தேர்தல் நடைபெற
இன்னும் இருபது நாட்களுக்கு மேல் இருக்கின்றன. அதற்குள் எத்தனை சேட்டைகள்? எத்தனை அராஜகங்கள்? அட்டூழியங்கள்? தேர்தல் பணிக் குழுவில் அத்தனை அமைச்சர்களையும், கட் சியின் தலைமைக் கழகச் செயலாளர்களையும் நியமித்திருக்கிறார்கள். “தடைக்கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு” என்ற முறையிலேதான், இவ்வளவையும் சந்திக்கின்ற தீரத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்கின்றது. கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை ஆற்ற நம்முடைய கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் அங்கே சென்று, தங்களால் இயன்ற அளவிற்கு இடைத் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஆளுங்கட்சி செய்கின்ற அளவிற்கு நம்மால் செலவழிக்க இயலாது. வாக்காளர்களிடம் சென்று இந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும், முறைகேடுகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்து வாக்காளர்களின் மனதிலே பதிய வைத்திடும் பணியிலே ஈடுபட வேண்டும்.
வழக்கமாக இடைத்தேர்தலில் ஏற்படும் வன்முறைகள் - வசைமாரிகள் - இவையனைத்துக்கும் செவி சாய்க்காமல் - இப்போது களத்தில் நிற்கும் உடன்பிறப்புக்காகக் கழகத் தோழர்கள் அமைதியான முறையில் வாக்கு சேகரித்து, எப்படியும் வென்றே தீரவேண்டும் என்று வெறிகொள்ளாமல்; ஜனநாயக ரீதியிலும் - தந்தை பெரியார் வலியுறுத்திய மனித நேய உணர்வுடனும் - பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் விரும்பிய அறவழி - அன்பு வழியை மறந்துவிடாமலும் பணி புரிந்து வெற்றியை ஈட்டி; நமது பண்பாட்டை நிலைநிறுத்திட வேண்டுகிறேன். எதிர்த்தரப்பினர் தாக்கிப் பேசித் தரக்குறைவான வார்த்தைகளை வீசிடும்போது; அதைச் சகோதரப் பாசத்துடன் சகித்துக் கொண்டு - களத்தில் தோற்காமல் என்றென்றும் தலை நிமிர்ந்து நிற்கப்போவது கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் என்றும் கவனப்படுத்தி, மக்களுக்கான கழகப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனுபவத்தில் முதிர்ந்தவன் என்ற முறையில் உணர்வு கலந்து நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்:-
“இடைத்தேர்தலில் மோதும் இரு வரிசைகளில் ஜனநாயக
மாமணிகள் கோர்க்கப்பட்டு உண்மையிலேயே கொள்கை உறுதியுடனும் - இலட்சியதாகத்துடனும் வெற்றிக் கேடயம் ஏந்தி வரும் கொள்கை வீரர் யார் - அவர் உலவும் கொள்கைப் பாசறை எது - என்பதையெல்லாம் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து - அவர்தம் கரங்களில் வெற்றிக்கனியைத் தரும்போது - அதைப் பெற்றுக் கொள்ளத்தாள் பணிந்து கழக அணியினர் தயாராக இருக்கும்போது “உரியவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்ள உரிமையுண்டு” என்பதை உணர்ந்து, அதற்கான ஆதரவை அளிப்பதுதான் அறநெறியாகும் என்பதையும் - அரசியலில் ஜனநாயக நெறி விரும்புவோரின் கட்டாயக் கடமை என்பதையும் கனிவுடன் நினைவுபடுத்தி - இன்றைய இடைத்தேர்தலில் ஜனநாயகக் கனியை அனைவரும் மகிழ்ந்து சுவைத்திடவும், கழக வேட்பாளர் தம்பி மாறன் வெற்றி பெறவும், வாக்காளப் பெருமக்கள் - கடமையாற்ற வாரீர் வாரீர் என்று கரம் கூப்பி அழைக்கின்றேன்!” அன்புள்ள,
மு.க.
10-11-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗