தொகுதி 50 · கடிதம் 3823
“மோனோ” போய்; “மெட்ரோ” வந்தது!
2013-11-08
உடன்பிறப்பே,
சென்னையில் “மெட்ரோ ரெயில்” சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். அனைத்து நாளேடுகளிலும் அதைப் பற்றி முதல் பக்கத்திலேயே பெரிதாக செய்திகள் வந்துள்ளன. 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அன்றாடம் தலைமைச் செயலகத்திலிருந்து “காணொலி காட்சிகள்'' மூலமாக பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதைப் போல இல்லாமல், இந்தத் திட்டத்திற்கு நேரிலே வந்து தொடங்கி வைத்திருக்கிறார். அந்தத் திட்டத்தைப் பற்றி அதனைத் தொடங்கி வைக்கும் விழாவிலே பேசிட வேண்டுமென்றால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கூற வேண்டுமல்லவா? அதனால் அங்கே விழாப் பேருரை எதுவும் இல்லாமல் கொடி அசைத்து, மெட்ரோ ரெயிலின் சோதனையோட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டார். அவர் அங்கே உரையாற்றா விட்டாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்பு தமிழக அரசினால் தரப்பட்டுள்ளது. அதிலே அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக அது எந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை மறைத்து விட்டார்கள். அந்தத் திட்டம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்தபோது, தொடங்கப்பட்ட திட்டம்.
சென்னையில் “மெட்ரோ ரெயில்” திட்டத்தைச் செயல்படுத்த தி.மு. கழகம் 2006ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. விரைவான, நம்பத்தக்க, வசதியான, திறன்மிக்க, நவீன மற்றும் சிக்கனமான பொது போக்குவரத்து
அமைப்பாகவும், பெருகி வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒரு நீண்டகாலத் தீர்வாகவும் அமைந்த இத்திட்டம் குறித்து, ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் கழக அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்தப் பணி டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் “சிறப்பு முயற்சித்” திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டம் துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை 1-11-2007இல் கிடைக்கப் பெற்று 7-11-2007 அன்று தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்றுவதற்காக “சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்: என்கிற சிறப்பு வகை பொதுத் துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, இந்தியக் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3-12-2007 அன்று பதிவு செய்தது.
இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் பெறப்படும். கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஐப்பான் அரசுக்கும் இடையே 21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது. மத்திய அரசு திட்டச் செலவில் 15 சதவீதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தைக் கடனாகவும் வழங்கும். மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.78 சதவிகித சார்நிலைக் கடனாகவும் வழங்கும். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 28-1-2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெட்ரோ ரெயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயிலானது 2 வழித் தடங்களிலும், செல்வதற்கு ஒன்றும், வருவதற்கு ஒன்றுமாக இரண்டு பாதைகள் நவீன முறையில் அமைக்கப்படுகின்றன.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு முயற்சித்து தொடங்கப்பட்ட திட்டம்தான் “மெட்ரோ ரயில் ” திட்டம். ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இதைப்பற்றி என்னவெல்லாம் பேசினார்?
2011ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த ஆளுநர் அறிக்கையிலேயே “சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரெயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகு 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார். கண்டறிந்தார்களா? மீண்டும் 30-1-2012 அன்று ஆளுநர் உரையில் “மோனோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சியடை கிறேன்” என்று சொன்னார்கள். அதன் பிறகு 26-3-2012 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில், மோனோ ரெயில் 4 வழித்தடங்களில் இயங்கும் என்றும், எந்தெந்த வழித்தடங்கள் என்றும் விரிவாகப் படித்தார்கள். அதைத்தான் மீண்டும் அந்தத் துறையின் அமைச்சர் ஏதோ புதிய அறிவிப்பு போலச் செய்தார். ஒப்பந்தப்புள்ளி கோரப் போவதாகச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே ஒரு முறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அதிலே “நிபந்தனைகள்” சரியாக முடிவுக்கு வராத காரணத்தால், இடையிலே ஏற்பட்ட பிரச்சினையினால் வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது! அதன் பிறகு 16-6-2012 தேதிய 'தினமணி'யில் 34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை என்றும் செய்தி வந்தது. மொத்தத்தில் “மோனோ” ரெயில் திட்டமே, தி.மு. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
“மெட்ரோ” ரெயில் திட்டத்தினை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம். கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக இன்னமும் அந்தத் திட்டம் “ஒப்பந்தப் புள்ளிகளை”ப் பரிசீலிக்கும் நிலையிலேதான் உள்ளது. “மோனோ” ரெயில் திட்டத்தைவிட “மெட்ரோ ரெயில் திட்டம்தான் சிறந்தது என்று ஆதாரங்களோடு மத்திய அதிகாரி ஸ்ரீதரன் போன்றவர்கள், வல்லுநர்கள் எல்லாம் இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிக்கையாக விடுத்தும்கூட ஜெயலலிதா அப்போது அதைக் கேட்கவில்லை.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தை இடையிலே அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. அப்போதுதான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முதன்மை ஆலோசகரான திரு. இ.ஸ்ரீதரன் 11-4-2012 அன்று சென்னையில் அளித்த பேட்டியில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தைக் கைவிட்டதன் மூலம் தமிழக அரசு மிக மோசமான தவறைச் செய்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நான் இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தைக் கைவிடும் தமிழக அரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பணிகளை தொழில் ரீதியில் சிறப்பாகச் செய்து வருகிறது. விரிவாக்கத்தின் மதிப்பை அவர்கள் உணார்ந்துள்ளதால் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் நடைபெற வேண்டுமென்றால், அதுகுறித்த ஆய்வுகள் இப்போதே மேற்கொள்ளப்படவேண்டும். இந்த ஆய்வுப் பணி 18 மாதங்களை எடுத்துக் கொள்ளும். மத்திய அரசு, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற மேலும் 18 மாதங்கள் ஆகும். இப்படி மூன்றாண்டுகளுக்கு மேலாகும். முதலகட்டத்துக்கும், இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் இந்த அளவிற்கு இடைவெளி விழுவது நல்லதல்ல.
டெல்லி மெட்ரோ ரயில் முதல்கட்டத்தில் 65 கிலோமீட்டரும், இரண்டாவது கட்டத்தில் 124.63 கிலோமீட்டரும் செல்வதால் நலல வணிக முன் மாதிரியாக இருப்பதுடன் இதன்
அடிப்படையில் ஐந்து பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. ஆனால், சென்னையில் தற்போதைய திட்டப்படி 45 கி.மீ. வரைதான் செல்லும். பல முக்கியமான பகுதிகளை மெட்ரோ ரயில் திட்டமுறையில் இணைக்காவிட்டால் இது வியாபார ரீதியில் கட்டுப்படியாகாது. திருவொற்றியூர் வரை விரிவாக்கம் செய்வது பற்றியும், மாநில அரசு மவுனமாக இருப்பது கவலை அளிக்கிறது.
திட்டமிடப்பட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடையாமல் தாமதம் ஆவதும், திட்டத்தை சீர்குலைப்பதாக ஆகிவிடும். மெட்ரோ திட்டத்தினைப் பொறுத்தவரையில் நேரம்தான் பணம். ஒருநாள் இழப்பு என்பது பல கோடி ரூபாய் இழப்பாகும். சென்னை தற்போது மிகப் பெரிய மாநகர் என்பதால் மெட்ரோ ரயில் போல வேறெந்த முறையும் திறமையாகவும், கட்டுப்படியாகவும் இயங்கமுடியாது. மெட்ரோ ரயிலின் நான்கில் ஒரு பங்குக்கு மட்டுமே மோனோ ரயில் பயன்படும். மேலும் மோனோ ரயிலை இயக்க மெட்ரோ ரயிலை இயக்குவதைப் போன்று 50 சதவீதம் அதிகமாகச் செலவாகும். அது மிகவும் அதிக செலவாகும் இணைப்பு சேவையாகும்.
பெருமளவு மக்கள் போக்குவரத்து முறையான மெட்ரோ ரயிலை நகர்ப்புற போக்குவரத்தின் முதுகெலும்பாகப் பார்க்க வேண்டும். மும்பையில் உருவாக்கப்படும் மோனோ ரயிலுக்கு கி.மீ.க்கு ரூ.110 கோடி செலவாகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் கொள்ளளவு அதைப்போல மேலும் மூன்று மடங்காகும். மெட்ரோ ரயில் போன்ற நகர்ப்புறப் போக்குவரத்து முறை மூலதனச் செரிவுடையவையாகும். மாநில அரசுகள் நீண்டகாலத் தேவைகளை மனதில் கொண்டு இவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்டம் என பணிகளை விரிவுபடுத்த வேண்டும். வளர்ந்த மெட்ரோ நகரங்களுக்கு மோனோ ரயில் திட்டம் மோசமான ஏற்பாடாகத்தான் இருக்கும். மெட்ரோ ரயில் மூலம் செல்லும் பயணிகளில் நான்கில் ஒரு பங்குதான் மோனோ ரயிலில் பயணம் செய்ய இயலும். பெரும்பாலான நகரங்களில் மோனோ ரயில் திட்டம் தோல்வி அடைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெருவாரியாக மக்கள்
பயணம் செய்ய மெட்ரோ ரயில் திட்டம்தான் உகந்தது. மோனோ ரயில் சாதாரண ஒன்றுதான். அதில் அதிகம் பேர் பயணம் செய்யமுடியாது. மோனோ ரயில் திட்டம் வெற்றிகரமான திட்டம் இல்லை. தற்போது அந்த ரயில் பயன்படுத்தப்படும் ஜப்பானில்கூட, சிறு சிறு நகரங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்தான் அவசியமாகும்.
அதேசமயம் மெட்ரோ ரயில் செலவும் குறைவாகும். மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும்போது மோனோ ரயில் திட்டத்திற்கான செலவு 50 சதவிகிதம் அதிகமாகும்” என்று அனுபவத்தின் அடிப்படையில் திரு. இ. ஸ்ரீதரன் தெரிவித்த கருத்தை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.
சேது சமுத்திரத் திட்டத்தையும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தையும் முடக்கி வைத்திருப்பதைப்போல, இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்கத்தையும் முடக்கி வைத்தார்கள். அவர்கள்தான் தற்போது மெட்ரோ ரெயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, தாங்கள்தான் அந்தத் திட்டத்திற்கே காரணகர்த்தா என்பதைப்போல பெருமை தேடிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மையும் யார் அந்த மெட்ரோ திட்டத்தை மறுத்து கருத்து வெளியிட்டார் என்ற உண்மையும் நன்றாகவே தெரியும்! அன்புள்ள, மு.க 08-11-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗