உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3826

மக்கள் நலப் பணியாளர்களும், தமிழர்களே!

2013-11-14

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1989ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித்தர வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் 2-7- 1990 அன்று நியமனம் செய்யப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்கள் நியமனம் பெற்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் மீதும் சினம்கொண்டு, 1991ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து வாழ்வாதாரத்தைப் பறித்து மே திங்களில் வீட்டுக்கு அனுப்பினார்கள். 1996ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி, என்னுடைய தலைமையில் அமைந்தபோது, வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2001ஆம் ஆண்டு, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்தபோது, மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை இல்லை என்று கூறி 31-5-2001 அன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி என் தலைமையில் அமைந்த போது, 31-5-2006 அன்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைதரப்பட்டு, அவர்களுடைய வாழ்வும், வாழ்வாதாரமும் மீட்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொரு முறை தி.மு. கழக ஆட்சி என் தலைமையிலே அமைகிறபோது, மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுக் காப்பாற்றப்படுவதும், ஜெயலலிதா முதலமைச் சராகப் பொறுப்பேற்றதும் அவர்களைக் கைவிட்டு வீட்டிற்கு அனுப்புவதும் தொடர்ந்து மூன்று முறையாக நடந்து வருகிறது.

மக்கள் நலப் பணியாளர்கள் இவ்வாறு வேலை கொடுக்காமல் வீட்டிற்கு அனுப்பப்பட்ட காரணத்தால் 19 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நடைபெற்றன.

உதாரணமாக ஒருசிலவற்றைக் கூற வேண்டுமேயானால், நாகை மாவட்டம், கீழையூர் அருகேயுள்ள வைரவன்கட்டளை காமேஸ்வரன் என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் வேலை பறிக்கப்பட்டதின் காரணமாக 11-6- 2001 அன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சி. கந்தசாமியின் வேலை பறிபோன காரணத்தால், அவருடைய மனைவி பிரபா என்பவர் 11-6-2001 அன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். 12-6-2001 அன்று நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களின் குடும்பத்திற்கு அப்போதே தி.மு. கழகத்தின் சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி பணி பறிபோனதும் அந்தச் சோகத்தில் பட்டினி கிடந்தே மாய்ந்து போனார். நாகை மாவட்டத்தில் தரங்கம் பாடியைச் சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன் வேலை போன காரணத்தால் மனம் வெதும்பி, பட்டினி கிடந்து உயிர் துறந்தார் என்று பட்டியல் நீளுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய எந்தப் போராட்டத்திற்கும்

ஆட்சியாளர்கள் மனம் இரங்கவோ, செவி சாய்க்கவோ இல்லை.

2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மக்கள் நலப் பணியாளர்கள், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, பணிநீக்கம் செய்து தமிழக அரசு, 8-11-2011 அன்று அரசாணை எண். 86ஜஐப் பிறப்பித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதியைத் துடைத்து, மீண்டும் பணி வழங்கக்கோரி 15-1 1- 2011 அன்று தி.மு. கழக இளைஞர் அணியின் சார்பில், தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பணி நீக்க உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு அந்தச் சங்கத்தின் அலுவலர்கள் சார்பில் தொடரப்பட்டது. இதற்கான வழக்கில் நீதிபதி சுகுணா, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். 21-11-2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை; மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது. உடனடியாக அவர்களைப் பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும், கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை 23-11- 2011 அன்று தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.

மக்கள் நலப் பணியாளர் சங்கத் தேர்தல் 3-4-2012 அன்று நடத்தப்பட்டு, மதிவாணன் தலைவராகவும், ராஜேந்திரன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் ஏற்கனவே இருந்த பழனி நீக்கப்பட்ட போதிலும், இந்த வழக்குகுறித்த கோப்புகளையெல்லாம் புதிய சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கவில்லை. சங்கத்தின் சார்பில் எந்தவொரு முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டுமென்றாலும், சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டித்தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதன் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே இருந்த பழனி என்பவர் நீக்கப்பட்டிருந்த நேரத்தில், யாருடனும் கலந்துகொள்ளாமல், அவர் மட்டும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஐந்து மாதச் சம்பளம் கொடுத்தால் போதும், பணியிலிருந்து நீக்குவதற்கு ஒப்புக்கொள்வதாக ஒரு உடன்பாட்டினைச் செய்துகொண்டு, நீதிமன்றத்திலும் அதனைத் தெரிவித்துவிட்டனர். நீதிமன்றமும் அதனை உண்மை என்று ஏற்றுக்கொண்டு, மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஆணைக்கு ஒப்புதல் கொடுத்து உத்தரவிட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு அதன் பின்னர்தான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு எதிராகப் பழனி செய்த மோசடி தெரிய வந்திருக்கிறது.

அதற்குப் பிறகுதான் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர், “பழனி என்பவர் பொறுப்பிலேயே இல்லை, மதிவாணன்தான் பொறுப்பிலே இருக்கிறார், எனவே பழனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று மக்கள் நலப்

பணியாளர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் வில்சன் வாதம் செய்தார்.

நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், “மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம், நீக்கம் என அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துள்ளது தெரிகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் என வாதத்துக்குக் கருதினாலும்கூட கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி உள்ளனர். ஒரு கையெழுத்தில் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தால் நீதியின் கொள்கைப்படியும், சட்டப்படியும் அவர்களை நீக்கும் முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அரசு கருத்து கேட்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி சுகுணா இந்த வழக்கில் தடை உத்தரவைச் சரியாகப் பிறப்பித்துள்ளார். அதை நீக்க முடியாது. மக்கள் நலப் பணியாளர் களின் நிலையைப் பார்க்கும்போது கால்பந்து விளையாட்டு போல உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் நிர்ணயம் செய்து ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய பிறகு சரியான காரணம் இல்லாமல் அவரை நீக்குவது சட்ட விரோதமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு மாறும்போது மாறி மாறி உத்தரவு பிறப்பிப்பது கடும் கண்டனத்துக்குரியது, வேதனையானது, வருந்தத்தக்கது. எனவே அரசுக் கோரிக்கையை நிராகரிக்கிறோம். கடந்த ஆட்சியின் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்த ஊழியர்களை வேறு பணியில் அமர்த்த வேண்டும்; அதை விட்டுவிட்டு அவர்களை டிஸ்மிஸ் செய்வது தவறு. இது எந்த விதத்தில் நியாயமானது? இது அரசியல் சார்புடையது என்பது தெரியும். இருந்தாலும் அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறினார்கள்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். உச்சநீதிமன்றத்தில் 29-11-2011 அன்று நீதிபதிகள் டி.கே. ஜெயின், தவே ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, “தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஆட்சி மாறும்போது முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது ஏன்? இனிமேல் இதுபோன்ற

நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்தார்கள். இதனை அடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று தமிழக அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த வழக்குதான் தற்போது உச்சநீதிமன்றத்தில் 11-11- 2013 அன்று விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதிகள் அணில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுதான் இதனை விசாரித்து அளித்த தீர்ப்பில், “மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அனைத்து அம்சங்களையும் தகுதி அடிப்படையில் கணக்கிலே எடுத்துக்கொண்டு, வழக்கை மறுவிசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு வழக்கை ஒத்திவைக்குமாறு கோரக்கூடாது. பொறுப்பில்லாத ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையை அரசு பாழடித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. இருபது வருடம் அரசுக்காக அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள்.

உடன்பிறப்பே, ஜனநாயகத்தில் ஒரு அரசுக்கு இதைவிடக் கடுமையான கண்டனம் தேவையா? அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் யார? என்னுடைய உறவினர்களா? எனக்குத் தெரிந்தவர்களா? என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களா? தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தானே? அவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே? அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் ஊதியத்தை நம்பி அவர்களின் குடும்பங்களிலே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர்? அத்தனை பேரின் வயிற்றெரிச்சலைத் தனிப்பட்ட ஒரு பெண்மணி சம்பாதித்துக் கொள்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது? தி.மு. கழக ஆட்சியில் பணி வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்பதற்காக இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஒரு பெண் முதலமைச்சருக்கு இருப்பது நல்லதா? எத்தனை நீதிபதிகள் எந்த அளவிற்கு இந்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார்கள்? இதையெல்லாம் எண்ணிப் பார்த்து மனமாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டாமா? தி.மு. கழக

ஆட்சியில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதைப் போலவே, அ.தி.மு.க. ஆட்சியிலும் எவ்வளவோ பேர் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் தி.மு. கழக ஆட்சி அமைந்தபோது நீக்கப்பட்டு விட்டார்களா? அவர்கள் எல்லாம்

இப்போது பணியிலே நீடித்திருக்கவில்லையா?

மாண்புக்குரிய நீதியரசர்கள், “தமிழகத்திலே என்னதான் நடக்கிறது?” என்றும், “மக்கள் நலப் பணியாளர்களைப் பந்துபோல் விளையாடுவது சரிதானா?” என்றும் கேட்டிருக்கிறார்களே, அது இந்த அரசுக்கு அவமானமாகத் தெரியவில்லையா? நடந்தது, நடந்தாக இருக்கட்டும். இனியாவது அ.தி.மு.க. அரசு தெளிவு பெற வேண்டும். யாரையும் பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டுவிட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் வழக்கிலே உச்சநீதிமன்றம் இன்னும் ஆறு மாதங்களில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கவேண்டுமென்று தீர்ப்பு அளித்திருந்த போதிலும், அந்த விசாரணை நடைபெறும்வரை காத்திருக்காமல், தமிழக அரசே முன்வந்து, வழக்கினைத் திரும்பப் பெற்று, அந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் உடனடியாக மீண்டும் வேலை அளித்திட, முன்வர வேண்டும்.

ஆறுவது சினம்” என்பது பழமொழி. ஆறிவிடாமல் சினத்தை அப்படியே வைத்திருப்பது, அதளபாதாளத்திற்கே இட்டுச்சென்று விடும் என்பதை மறந்து விடக்கூடாது. தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள்மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் கோபத்தைத் தணித்துக்கொண்டு, அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிட அரசே முன்வர வேண்டும்.

அன்புள்ள, மு.க. 14-11-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗