தொகுதி 50 · கடிதம் 3819
நடப்பது ஆட்சியா; வெறும் காட்சியா?
2013-10-23
உடன்பிறப்பே,
நேற்றைய தினம் நான் எழுதிய “உடன்பிறப்பு மடலில்” இந்த அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மதுரை துணைக்கோள் நகரம் பற்றியும், சோழிங்க நல்லூர் மாடிக் குடியிருப்புகள் பற்றியும் ஒரு பத்தி எழுதியிருந்தேன். அதைப்பற்றி சற்று விரிவாக உனக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதம்.
அ.தி.மு.க. அரசின் சார்பில் 20-10-2013 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், சோழிங்க நல்லாரில் கட்டப்பட உள்ள 1,500 பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகள் திட்டத்தினைச் செயல்படுத்த 1379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு முதலமைச்சர் நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார் என்றும்; மதுரை அருகே ஒருங்கிணைந்த ஒரு துணைக்கோள் நகரத்தை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட் டூள்ளார் என்றும், அந்தத் துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும் என்றும், மேலும் அங்கே பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் 19,500 மனைகள், காவல் நிலையம், பள்ளி வளாகம், தீயணைப்பு நிலையம் என்றெல்லாம் கூறிவிட்டு, கடைசியாக அடிப்படை வசதிகளை அமைக்க முதற்கட்டமாக 120 கோடி ரூபாய்க்கு மட்டுமே நிர்வாக ஒப்புதலாம்! இந்த நிர்வாக ஒப்புதலுக்குக்கூட எத்தனை மாதங்கள் ஆயிற்று என்பதைக் கூறுகிறேன்.
இந்த ஆண்டு 4-4-2013 அன்று சட்டப் (பேரவையில் முதலமைசசா 110வேது விதியின் கீழ் படித்த அறிக்கையிலேயே,
“மதுரை மாவட்டத்தில், தற்போது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்திற்கு அருகில் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிப்பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த “துணைக்கோள் நகரம்” ஒன்று உருவாக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும்” என்றெல்லாம் அந்த அறிக்கை நீண்டு கொண்டே போகிறது.
இந்த மகத்தான அறிவிப்பினை முதலமைச்சர் அவையிலே படித்துவிட்டு அமர்ந்ததுதான் தாமதம். உடனே இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பிலும், பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பிலும், அகில இந்தியச் மத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும், இந்தியக் ம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் முதலமைச்சருக்கு பாராட்டுகள்
தெரிவிக்கப்பட்டன.
பேரவையில் இத்தகைய அறிவிப்பினைச் செய்து, ஆறு மாதங்கள் ஓடி விட்ட பிறகு, தற்போதுதான் அடிப்படை வசதிகளுக்காக அதுவும் முதற்கட்டமாக 120 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி யிருக்கிறார்கள் என்றால் எப்படிப்பட்ட ஏமாற்று நாடகம் இந்த ஆட்சியிலே நடைபெற்றிருக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா?
2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 8-9-2011 அன்று சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா ஓர் அறிக்கை படித்தார். அதில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 2,160 கோடி ரூபாய்ச் செலவில், 311 ஏக்கரில், திருமழிசை துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கே 12 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக்கூடிய விலையில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பெருத்த ஆரவாரத்திற் கிடையே அறிவித்தார்.
அறிவித்து இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. எங்கே 12 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள்? இதிலே இன்னும்
ஒரு வேடிக்கை. முதலமைச்சர் 8-9-2011 அன்று திருமழிசை துணைக்கோள் நகரத்தைப் பற்றி அறிவித்தார் அல்லவா, அதற்கு முன்பே 25-8-2011 அன்று பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதையே முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அவையிலே படித்தார். இதனைக் குறிப்பிட்டு நான் அப்போதே எழுதியிருந்தேன். வழக்கம் போல யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை. பொதுமக்கள் நலன் கருதியும், மாநிலத்தின் முன்னேற்றம் கருதியும் நான் எழுப்பி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அ.தி.மு.க. அரசு உரிய பதிலளிப்பதே இல்லை. இதிலிருந்தே பதிலளித்திடத் தேவையான அடிப்படை, அவர்களிடம் இல்லை என்பதும்; நாட்டு நலனில் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதும் புலனாகிறதல்லவா?
சென்னையையொட்டி துணைக்கோள் நகரம் அமைக்கும் இந்த யோசனை இந்த அ.தி.மு.க. ஆட்சியிலே அல்ல, அதற்கு முன்பே தி.மு. கழக ஆட்சியிலும் வந்தது. அதாவது; 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1-9-2006 அன்று பேரவையில் செய்யப்பட்ட அறிவிப்பில், “வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்கு தென் பகுதியில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உத்தேசமாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தேர்வு செய்துள்ள து. இப்பகுதியில் 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. 270 சதுர கிலோ மீட்டரில் உள்ள இந்நிலப்பரப்பு மாசற்ற, நல்ல சுற்றுப்புறச் சூழலில் இருக்கிறது. புதிய நகர அமைப்பிற்கு இது உகந்த பகுதியாகும். இப்பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகவே உள்ளன. இவற்றைக் கையகப்படுத்தும் போது நீர் வளப் பகுதி, குடியிருப்புப் பகுதி, காடுகள் உள்ள பகுதி ஆகியவற்றை நீக்கிவிட்டு தரிசாகவும், புஞசையாகவும் உள்ள நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளன. நிலங்களைக் கையகப் படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு நியாயமான “மார்க்கெட்” விலை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தந்த இடங்
களிலேயே தொடர்ந்து வாழலாம். புதிய நகரம் அமையும்போது உருவாகும் வேலை வாய்ப்புகள் இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்ல பலனை வழங்கி அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைய வழிவகுக்கும்” என்றெல்லாம் கழக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது.
தி.மு கழக ஆட்சியில் பேரவையில் இந்த அறிக்கை படிக்கப்பட்டதற்கு மறுநாளே 2-9-2006 அன்று ஜெயலலிதா அவசர அவசரமாக ஓர் அறிக்கையினை வெளியிட்டார். அதில்,
“ ஆணவம் கொண்ட அற்ப ஜீவராசிகளின் பொறுப்பில் ஆளும் அதிகாரம் சிக்கிக் கொண் டிருப்பதால, ஜனநாயக மக்கள் விரோத அலங்கோலங்கள், பாரம்பரியம் மிக்க தமிழகத்தில் தொடர் நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு, சென்னையை ஒட்டி அமைக்க இருப்பதாக மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கும் துணை நகர அறிவிப்பும் ஓர் உதாரணமாகிவிட்டது. ஓர் முதலமைச்சருக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லாதபோது இதுபோன்று தான்தோன்றித் தனமாகச் செயல்படுகின்ற நிகழ்வுகள் நெஞ்சை நடுங்க வைக்கும் நீசச் செயல்களாக அமைந்து விடுகின்றபோது அதற்கான விலையை கருணாநிதியும் அவரது கட்சியும் கொடுத்துத்தான் ஆக வேண்டும். சென்னை மாநகரத்தில் உள்ள மக்களின் இட நெருக்கத்தைக் குறைப்பதற்காக இந்தத் துணை நகரம் ஏற்படுத்தவிருப்பதாக கருணாநிதி சொல்கிறார். முதலில் அவர் வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழிவந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள், ஏற்படுத்திக் கொண்ட துணைவியின் வழிவந்த உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தை விட்டும், சி.ஐ.டி. காலனியை விட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தை மேற்படி பகுதிகளில் குறைக்கட்டும். மக்கள் நெருக்கடியைப் பற்றி மிகவும் கவலைப்படும் கருணாநிதி
தனது குடும்ப உறுப்பினர்களால் உருவாகியுள்ள ஜன நெருக்கடியை உணர்ந்து அவர்களை முதலில் சென்னை மாநகரத்தை விட்டு வெளியிலே அனுப்பி வைக்கட்டும். கருணாநிதிக்கு “துணை” என்றால் மிகவும் பிடிக்கும்போலும், அதனால்தான் சென்னை மாநகருக்கும் ஒரு “துணையைத் தேடுகின்றார். துணை நகரம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனே அலறித் துடிக்கும் மக்களின் வேதனை, சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்குத் தெரிய வாய்ப்பில்லை. தனது குடும்பத்தார், சுற்றத்தார் மற்றும் பேரன்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் பயன்பெறவே சென்னை துணை நகரத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ளது என்ற
செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன “
என்றெல்லாம் அந்த அறிக்கையில் ஜெயலலிதா தாறுமாறாகவும், தான்தோன்றித்தனமாகவும் என் மீது வசைபாடி எழுதியிருந்தார். தற்போது எதிர்க்கட்சிகள் மீதெல்லாம் எத்தனை அவதூறு வழக்குகள்? ஆனால் முன்பு முதலமைச்சராக இருந்த என் மீது ஜெயலலிதா எப்படிப்பட்ட அருவருப்பான வார்த்தைகளை அவருக்கே உரிய நாகரிகத்தோடு அள்ளி வீசியிருந்தார். எனினும் பண்பாடற்ற நாலாந்தரச் செயலுக்காக அப்போது கழக அரசு அவர் மீது அதற்காக அவதூறு வழக்கு போடவில்லை. நியாயமான அடிப்படை இருந்தும்; அரசியலில் அவரவர் தரத்திற் கேற்ற விமர்சனம் சகஜம்தானே என்று வழக்கு போட எண்ணவில்லை.
ஆனால் ஜெயலலிதா அப்போது விடுத்த அந்த அறிக்கையையே மறந்து விட்டு, அவரே திருமழிசையில் “துணை நகரம்” அமைக்கப்போவதாக அறிவித்தார். அதன் பிறகு மதுரையிலே “துணை நகரம்” அமைக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். அம்மையார் அறிக்கை யிலே கேட்டதைப் போல அவருக்குத் தற்போது, துணை என்றால் மிகவும் பிடிக்கும் போலும், அதனாலதான் ஒரு துணை நகரத்திற்கு மேல் இரண்டாவது துணைக்கோள் நகரம் அமையும் என்று துணைக்கு மேல் துணை தேடி அறிக்கை விடுத்திருக்கிறாரா என்றெல்லாம் ஜெயலலிதா போல நான் கேள்வி கேட்கத் தயாராக இல்லை.
ஜெயலலிதா தி.மு.க. அறிவித்த துணை நகரத்தை அப்போது எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கு முன்பாகவே; அப்போது எங்களுடன் தோழமைக் கட்சியாக இருந்த பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இந்த துணை நகரம் வருவதால் விவசாய நிலங்கள் எல்லாம் பாதிக்கும், அங்கே வசிக்கின்ற மக்கள் சிரமப்படுவார்கள் என்று நாகரிகமாகச் சொன்னதன் பேரிலேயே இரண்டே நாட்களில், அதாவது 2-9-2006 அன்றே நான் விடுத்த அறிக்கை யில், “தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டு சென்னையை ஒட்டிய துணை நகர அமைப்பு உருவாக்கப்படுமென நான் குறிப்பிட்டிருந்த திட்டம்;
நல்லெண்ண அடிப்படையிலும் தோழமைக் கட்சி வழங்கிய அறிவுரையைச் சிந்தித்துப் பார்த்தும், சில சுயநல தீய சக்திகள் திட்டமிட்டுள்ள பகிரங்க வன்முறை வெறியாட்டத்துக்கு அப்பாலிப் பொதுமக்கள் பலியாகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடனும் கைவிடப்பட்டுள்ளது” என்று அறிவித்துவிட்டேன்.
அறிக்கை பற்றி 3-9-2006 அன்றே பா.ம.க.வின் அதிகாரபூர்வ ஏடான “தமிழ் ஓசை”யில், “ஜெயலலிதா வின் அறிக்கை - அநாகரிகத்தின் உச்சக்கட்டம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்கள், தற்போது ஏற்காடு இடைத்தோர்தலில் அ.தி.மு.க. வை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான “தீக்கதிர்”, 4-9-2006 அன்று எழுதிய தலையங்கத்தில், “சென்னை அருகே துணைநகரம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் தோழமைக் கட்சியினரின் உணர்வுகளை மதித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் ராணிமேரிக் கல்லூரியை இடித்து விட்டு அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட முந்தைய (அ.தி.மு.க.) ஆட்சி முயன்றபோது மாணவிகள் போராடினர். அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத்
தெரிவித்தனர். ஆனாலும் ஆணவத்தோடு அந்தத் திட்டத்தைக் கைவிட அடாவடியாக மறுத்த ஜெயலலிதா அரசின் செயலோடு முதல்வர் கலைஞரின் இந்த அறிவிப்பை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. துணை நகரத் திட்டம் கூடாது என்று ஜெயலலிதா விடுத்த அறிக்கை அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருந்தது வேதனையளிக்கிறது. அரசின் ஒரு திட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதில் அரசியல் நாகரிகம் பேணப்பட வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குடும்பத் தினர் குறித்து அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தைகளை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார். அவரது வன்மத்தையும், வக்கிரத்தையுமே இந்த சட்டமன்றத்தில் இந்த அறிக்கையை முதல்வர் (கலைஞர்) படித்துக் காட்டியபோது, அ.தி.மு.க. வினரால் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை போலும். சட்டமன்றமும், அரசியல் அரங்கமும் நாகரிகமான விவாதம் நடைபெற வேண்டிய இடங்களேயன்றி ஆத்திரத்தையும் அவதூறையும் வெளிப்படுத்தும் இடங்கள் அல்ல. ஜெய லலிதாவோ, அவரது கட்சியினரோ மக்களின் தீர்ப்பிலிருந்து இன்னமும் பாடம் கற்றுத் திருந்த வில்லை என்பதையே அவர்களது வார்த்தைகளும் செயல்பாடுகளும் நிரூபிக்கின்றன”
என்று “தீக்கதிர்” எழுதியிருந்ததை இந்த நேரத்தில் எண்ணிப் பார்த்து மார்க்சிஸ்ட் தோழர்களுக்கு நினைவுபடுத்தாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் தற்போது இந்த ஆட்சியில் 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைக்கோள் நகரம் என்ன ஆயிற்று? இரண்டாண்டுகள் முடிந்த பின்னரும் அடிக்கல் நாட்டியதாகவே தெரிய வில்லையே? இந்த அழகில் ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவித்த மதுரை துணைக்கோள் நகரத்திற்கு ஆறு மாதத்திற்குப் பிறகு நிர்வாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசின் மற்ற பல திட்டங்களைப்
போலவே ஆமை வேகத்தில் நகரும் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? திட்டத்தை வெளிக்கொணர ஒருமுறை அறிக்கை; நிர்வாக ஒப்புதலுக்கு ஒருமுறை அறிக்கை என்ப தெல்லாம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளா? மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களை மறந்து, அறிக்கைகள் மூலமே விளம்பரம் தேடிக் காலத்தைக் கழித்திடும் அதிசயம்தான் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? அல்லது வெறும் காட்சிதான் நடக்கிறதா? அதையாவது தெரிவித்துவிடலாமே? அன்புள்ள, மு.க. 23-10-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗