தொகுதி 50 · கடிதம் 3818
அம்மா ஆட்சியின் அவலங்களைக் கூறிட ஒரு நாள் போதுமா?
2013-10-22
உடன்பிறப்பே,
கூறிட ஒரு நாள் போதுமா?
உடன்பிறப்பே,
23ஆம் தேதியன்று தமிழகச் சட்டப் பேரவைக் கூடப் போவதாகவும், ஒரு வார காலம் பேரவை நடைபெறும் என்றும், 25- 10-2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 189(1)- ன்கீழ் 2013-2014 ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதி நிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படுமென்றும் துறையின் சார்பில் அறிவிப்புகள் வந்துள்ளன பேரவை ஒரு சில நாட்கள் நடைபெறும் என்ற போதிலும் முக்கியமான பல முடிவுகள் எடுக்கப்படலாம் என்று ஏடுகள் எல்லாம் எதிர்பார்த்துக் கட்டியம் கூறியுள்ளன.
இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றித் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் சுட்டிக்காட்டியும், 2009ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியதைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று “டெசோ” இயக்கத்தின் மூ லமாகப் பேரழுத்தம் கொடுத்திடும் வகையில் கடுமையாகவே தெரிவித்திருக்கிறோம். நம்மைப் போலவே தமிழகத்திலே வேறு சில முக்கியமான கட்சிகளும், மாணவர் இயக்கங்களும், குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 15-10-2013 அன்றும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் 16-10-2013 அன்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும் விடுத்த அறிக்கைகளில், இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும், அந்த மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். தமிழக அரசின் சார்பிலும் 18-10-2013 அன்று முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு
இதே வேண்டுகோளை கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார். ஏன் அதற்கு முன்பே 25-38-2013 அன்றும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டுமென்று வலியுறுத்தி யிருந்தார். கனடா இந்த மாநாட்டைப் புறக்கணித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருப்பதும், இங்கிலாந்து நாட்டிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலே இந்த மாநாடு நடைபெறுவதற்குக் கண்டனம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்க திருப்பங்களாகும்.
தோழர் தியாகு அவர்கள் இதே வேண்டுகோளையும் இணைத்து சாகும்வரை உண்ணா விரதம் இருந்த நேரத்தில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், “I wish to inform you that a decision on the issue of my participation in the CHOGM Conference will be taken only after considering all relevant factors, including the sentiments of your Party and the Tamil People. I therefore request you to use your good offices to persuade Thiru Thiagu to call off his fast” என்று தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை இந்தப் பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வும் ஒருமுகப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் வகையிலும் - தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்சினைகளில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உலகச் சமூகத்திற்கு நிரூபிக்கும் வகையிலும் தமிழகச் சட்ட மன்றத்தின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது சிறப்புடையதாக இருக்கும். எனவே சட்டமன்றத்தில் அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
தமிழகச் சட்டப்பேரவை கூடவிருப்பதாக ஆளுநர் அவர்கள் நாள் குறிப்பிட்டு, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த பிறகு, அரசின் சார்பில் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடுவது வழக்கமுமல்ல; மரபுமல்ல; அப்படி வெளியிடுவது பேரவையின் மாண்புக்குப் பெருமை சேர்ப்பதும் ஆகாது. ஆனால் பேரவை 23ஆம் தேதியன்று கூடப் போவதாக 14ஆம் தேதியன்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும், முதலமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டதாகத் தெரிவித்து - நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தை மேம்படுத்த நான்கரை கோடி ரூபாய் - எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு ஒரு கோடி ரூபாய் - பூண்டியில் 20 லட்சம் ரூபாய் செலவில் தொல் பழங்காலப் பூங்கா - பத்து மாவட்டங்களில் 16 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க 180 கோடி ரூபாய் - 15 மாவட்டங்களில் 232.30 கோடி ரூபாய்ச் செலவில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் - சென்னை தேசிய கலைக்கூடத்தைப் புதுப்பிக்க 11 கோடி ரூபாய் - வனத்துறைப் பணியாளர்களுக்குப் புதிய சலுகைகள் - கூட்டுக்குடிநீர்த் திட்டங் களுக்காக 717 கோடி ரூபாய் ஒதுக்கீடு - அண்ணா பல்கலைக் கழக மண்டல அலுவலகங்களுக்கு புதிய விடுதிக் கட்டிடங்கள் - ஏன் இன்றைய தினம் கூட, பணிபுரியும் மகளிருக்கு 24 கோடி ரூபாய்ச் செலவில் பத்து புதிய அரசு விடுதிகள் - நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - 19,500 மனைகளுடன் புதிதாக துணைக்கோள் நகரம் - சோழிங்கநல்லூரில் 1500 குடியிருப்புகள் கட்ட 379 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - போன்ற பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டிருப்பது மரபுக்கு மீறிய அறிவிப்புகளாகும். ஆனால் அரசின் சார்பில் நாங்கள் இவ்வாறு செய்வது இது முதல் முறையல்ல, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்த பிறகு கூட இதுபோல் பல அறிவிப்புகளை அரசின் சார்பில் செய்திருக்கிறோம் என்று கூறுவார்களானால், ஒரு பிழையை நியாயப்படுத்திட, இன்னொரு பிழையைச் சுட்டிக்காட்டிடும் இருட்டடிப்பு வேலையாகவே இருக்கும். இன்னும் சட்டப் பேரவையில் 110வது விதியின் கீழ் எத்தனை அறிவிப்புகள் படிக்கப்பட இருக்கிறதோ?
அடுத்து, அ.தி.மு.க. ஆட்சியின் சார்பில் ஏதாவது புதிய அறிவிப்புகள் என்றால், அதனை அறிவிக்க எந்த அமைச்சருக்கும் இதுவரை அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த அறிவிப்பு வெறும் ஒரு கோடி ரூபாய்க்கான அறிவிப்பாக இருந்தாலும்கூட, அதனை முதலமைச்சர் பெயரில்தான் அறிவிக்கப்படுகிறது. பேரவை நடைபெற்றால் அந்த அறிவிப்பு விதி 110இன் கீழ் முதலமைச்சரால் அவையிலே படிக்கப்படும். அந்த விதியின் கீழ் அறிக்கை படித்தால் அதைப்பற்றி எதிர்க்கட் சிகள் எந்தக் கேள்விகளும் கேட்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த அறிவிப்பினை, அதை வெளியிட்ட முதல் அமைச்சரைப் பாராட்டவும், நன்றி தெரிவிக்கவும் மாத்திரம் அனுமதி உண்டு.
ஆனால் பேரவைக் கூட்டம் இல்லாத நேரத்தில் எந்த அறிவிப்புகளும் முதல் அமைச்சர் உத்தரவு என்ற பெயரால் அரசின் செய்திக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன. அப்படி வெளியிடப்படும் அறிவிப்புகளில் சில ஏற்கனவே முதல் அமைச்சரால் பேரவையில் படிக்கப்பட்டு, ஆளுங்கட் சியின் தோழமைக் கட்சிகள் பாராட்டிய அதே அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்ட பிறகு, ஏதோ புதிய அறிவிப்புகளைப்போல, முன்பொரு முறை அதை முதல் அமைச்சர் அறிவித்ததையே அப்படியே மறைத்து வெளியிடுகிறார்கள். ஒரே திட்டத்திற்கு, திரும்பத் திரும்ப வெளியிடும் வெற்று அறிவிப்புகளின் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ளலாமே தவிர, அதனால் நன்மை எதுவும் நாட்டு மக்களுக்கு விளைந்திடப் போவதில்லை!
உதாரணமாக 15-10-2013 அன்று 180 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் 16 சாலை மேம்பாலங்களை அமைக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாக ஓர் அறிவிப்பு ஏடுகளுக்குத் தரப்பட்டது. 7-9-2011 அன்று முதலமைச்சர் பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில் 740 கோடி ரூபாய் மதிப்பில் 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்ப் பாலங்கள் கட்டும் பணிகள் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்று படித்தார். அந்தப் பாலங்களின் கதி என்ன? கட்டி முடிக்கப்பட்டுவிட்டதா? என்று கூட நான் கேட்டிருந்தேன். அதிலே இன்னும் ஒரு வேடிக்கை! இந்த ஆண்டு 1-4-2013 அன்று பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா 1 10வது விதியின் கீழ் ஓர் அறிக்கையைப் படித்திருக்கிறார். அந்த அறிக்கையில் 948 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம் 11 மாவட்டங்களில் 18 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், ஆரம்பக் கட்டப் பணிகள் 201 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் படித்தார். அவருடைய அணியினரின் பாராட்டுகளையும் பெற்றார்.
1-4-2013 அன்று பேரவையில் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையிலே குறிப்பிட்டிருந்த மேம்பாலங்களைக் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலைத்தான் - சுமார் ஆறு மாதங்கள் கழித்து முதல் அமைச்சர் அளித்து,
அதுபற்றிய அறிவிப்பினையே புதியதோர் அறிவிப்பினைப் போலச் செய்து, அதை அனைத்து நாளேடுகளும் “முதலமைச்சர் உத்தரவு” என்று வெளியிட்டிருக்கின்றன. மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக - நினைவாற்றலை இழந்தவர்களாகக் கருதி, அவர்களை மூளைச் சலவை (Brain- Wash) செய்து, ஏமாற்றுகின்ற வகையில் ஒரு அரசே நடந்துகொள்வதை மக்கள் நலனிலும், மக்களாட்சியிலும் ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டோர் ஏற்றுக்கொள்ள முடியுமா; முடியவே முடியாது.
அதுபோலவேதான் 4-4-2013 அன்று 110வது விதியின் கீழ் முதலமைச்சர் 3500 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 280 கோடி ரூபாய் செலவில் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும் என்று அறிக்கை படித்தார். அதே அறிவிப்புக்கு கடந்த செப்டம்பரில் நிர்வாக ஒப்புதல் வழங்கினார். அப்போதும் ஒரு முறை அதை ஒரு புதிய அறிவிப்பினைப் போலச் செய்து, ஏடுகளில் எல்லாம் முதலமைச்சர் உத்தரவு என்று பெரிதாக வெளியிடப்பட்டிருந்தது.
21-10-2013 தேதிய நாளேடுகளில் “ஜெயலலிதா உத்தரவு” என்ற தலைப்பில் அனைத்து வசதிகளுடன் மதுரையில் 587 ஏக்கரில் துணைக்கோள் நகரம் என்ற அறிவிப்பு மிகப் பெரிய அளவில் வெளிவந்துள்ளது. அது போலவே சோழிங்கநல்லூரில் 1500 பன்னடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்ட 379.51 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் அம்மா உத்தரவு என்றும் இன்று காலையில் செய்தி வந்துள்ளது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பே, 4-4-2013 அன்று முதல் அமைச்சர் சட்டப் பேரவையில் மதுரையில் 587 ஏக்கரில் துணைக் கோள் நகரம் உருவாக்கப்படும் என்றும், சோழிங்கநல்லூரில் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். அதற்கான நிர்வாக ஒப்புதலைத் தான் ஆறு மாதங்கள் கழித்து, நாளைக்கு பேரவை கூடினால் யாராவது தி.மு.க. எம்.எல்.ஏ. பேரவையில் எங்கே அந்தத் திட்டங்கள் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவசர அவசரமாக இன்று நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏடுகளில் புதிய அறிவிப்பினைச் செய்வதைப் போல செய்திருக்கிறார்கள். கழக ஆட்சியில் திருமழிசையில் துணைக்கோள் நகரம் ஒன்றினை எழுப்பிட முயற்சித்தபோது, இதே ஜெயலலிதா அதற்கு எதிராக
எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார் என்பதை அவரே தற்போது எடுத்துப் பார்த்து தெரிந்துகொள்வது நல்லது. இவற்றைப் பற்றியெல்லாம் இந்தக் கூட்டத் தொடரில் அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்படலாம்.
ஓய்வூதியதாரர்கள் இறக்கும்பொழுது அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்பப் பாதுகாப்பு நிதியை 50 ஆயிரம் ரூபாயாக முதலமைச்சர் ஜெயலலிதா உயர்த்தியிருப்பதாக 8-8-2013 அன்று ஏடுகளில் செய்தி வெளிவந்தது. ஆனால் இதிலே உண்மை என்ன தெரியுமா? முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு முன்பேயே கடந்த ஏப்ரல், மே திங்களில் தமிழகச் சட்டப்பேரவை நடைபெற்றதல்லவா? அப்போதே கொள்கை விளக்கக் குறிப்பில் இரண்டு இடங்களில் அதாவது பக்கம் 2லும், பக்கம் 18லும் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? “ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த தற்போது அரசு முடிவு செய்துள்ளது” என்று மே திங்களிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டு, நிதித்துறை சார்பிலும் அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தைப் பற்றி நான் 11-8-2013 அன்று எழுதியிருந்தேன். அரசு தரப்பில் இன்று வரை இதைப்பற்றி வாயே திறக்கவில்லை.
அடுத்து தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் போன்றவர்களைக் கைது செய்தது பற்றியும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும், அவர்களைப் பிடித்த காவல் துறையினருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது பற்றியும் பல குழப்பமான தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் யார் யாரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பது பற்றிக் காவல் துறை சொல்வதும், அதே குற்றத்தை வேறு சிலர் செய்ததாக ஏற்கனவே காவல் துறைத் தலைவரே அறிக்கை கொடுத்ததும், ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. அதைப் பற்றிய உண்மைகளும் பேரவையில் விளக்கமாகச் சொல்லப்பட்டால் மக்களுக்கு இதுகுறித்துத் தெளிவு பிறக்கும். இல்லாவிட்டால் திசை திருப்பும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துவிடும்!
தமிழகத்தில் மத்திய தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் சரியாகச் செயல்படவில்லை என்றும், பணி செய்யாமலேயே பலர் பெயரில் ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஒருவரே தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவரை அரசின் சார்பில் அந்தக் கடுமையான குற்றச்சாட்டு பற்றிய எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத் தொடரிலாவது அதற்கு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்படலாம்.
அதைப்போலவே தமிழக அரசின் தாமதம் காரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் பல நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், அதைப்பற்றி தமிழக முதல் அமைச்சரிடம் நேரம் பெற்றுச் சந்திக்க விருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் பற்றியும் அவர் பேச விரும்புவதாகச் செய்தி வந்துள்ளது. அதைப் பற்றி தமிழக அரசின் கருத்து என்ன என்பதையும் பேரவையில் அரசின் சார்பில் கூறலாம். அப்படிக் கூறவில்லை என்றால், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுக்கு ஒப்புதல் இல்லை என்ற பொதுவான கூற்று நிரூபணமாகிவிடும்!
கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், சிமெண்ட் போன்றவை இந்த ஆட்சியில் விலை உயர்ந்துள்ளது. கழக ஆட்சியில் சிமெண்ட் விலை உயர்ந்தபோது அதைக் கண்டித்து அறிக்கை விட்ட இன்றைய முதலமைச்சர் தற்போது அவற்றின் விலை இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு விளக்கமாவது பேரவையில் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்து இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊருக்கு ஊர் சிரிப்பாய்ச் சிரிக்கின்றது. இதுவரை பா.ஜ.க.வைச் சேர்ந்தோர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கொலை செய்யப் பட்டுள்ளார்கள். அன்றாடம் கொலை, கொள்ளைச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் குண்டு வெடித்து 7 சப் இன்ஸ்பெக்டர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையிலே சிகிச்சை பெறுவதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த ஆட்சியில் காவல்துறையில் எந்த அளவுக்கு எச்சரிக்கை உணர்வு காப்பாற்றப்படுகிறது என்பதற்கு இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவமும் எடுத்துக்காட்டாகும்.
மணல் கொள்ளை பற்றியோ கேட்க வேண்டியதில்லை. உயர் நீதிமன்ற நீதிபதியே அது பற்றிக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரையே “சஸ்பென்ட்” செய்கின்ற அளவிற்கு நிலைமை முற்றியுள்ளது. மணல் கொள்ளைகள் நடைபெறுவதை புகைப்படங்களோடு ஏடுகள் செய்திகளாக வெளியிட்டுள்ளன. தாதுமணல் கொள்ளை பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. அதிகாரிகள் சோதனை, விசாரணை என்ற செய்திகள்தான் வருகின்றன. உருப்படியான நடவடிக்கை குறித்து எந்தச் செய்தியும் இதுவரை இல்லை. இதுவரை நடைபெற்ற விசாரணை பற்றி வெள்ளை அறிக்கை பேரவையில் வைக்கலாம்.
வீட்டு வசதி வாரியத்தில் சந்தை மதிப்பைக் குறைத்துக்காட்டி மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அந்தத் துறையிலே பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் “தி இந்து” (தமிழ்) போன்ற நாளேடுகளே செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகையில் குறிப்பிட்ட ஒருவர், 50 வயதுகூட ஆகாத பொறியாளர், அந்தச் செய்தியைப் பார்த்தவுடன் தற்கொலை செய்துகொண்டு நேற்று இறந்திருக்கிறார். இதற்குப் பேரவையில் விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மத்திய அரசு கொண்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு என்று முதலமைச்சரே தெரிவித்தார். ஆனால் மத்திய அமைச்சர் 600 கோடி ரூபாய் தமிழகத்திற்குக் கூடுதலாகக் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றிய விளக்கத்தையும் பேரவையில் அரசின் சார்பில் அளிக்கவேண்டும்.
தமிழகத்திலே உள்ள மருத்துவமனைகள் பற்றியும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. மதுரை, திருச்சி, சேலம், திருவொற்றியூர், நாகை போன்ற நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று செய்தி வந்திருக்கின்றது. அந்தத் துறைக்காக அமைச்சர் ஒருவர் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.
விவசாயிகளின் பிரச்சினையோ கேட்கவே வேண்டியதில்லை.
குறுவை சாகுபடியை அறவே இழந்துவிட்டு, சம்பாவிலாவது ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள்
ஏமாற்றமடையும் அளவிற்கு கடைமடைப் பகுதிக்கு தண்ணீரே சென்றடைய வில்லை என்று அவர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையும் முறையாக அவர்களைச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. “தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க முயற்சிப்பதைப் போல” சாகுபடி காலம் முடிந்த பிறகு நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற் காக ரூ.287 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் இன்று அறிவித்திருக்கிறார். நெல்லுக்கும் கரும்புக்கும் கொள்முதல் விலை போதாது என்று தொடர்ந்து விவசாயிகள் குரலெழுப்பி வருகிறார்கள். இதுபற்றியும் இந்தக் கூட்டத் தொடரில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கல்வித்துறை பற்றி வேதனையைத்தான் வெளிப்படுத்த வேண்டும். இதுவரை நான்கைந்து பேர் இந்த இரண்டரை ஆண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில் இந்தத் துறைக்கான அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதிலிருந்தே, இந்தத் துறையின் செயல்பாடுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கின்ற சான்றுகளே இந்த ஆட்சியின் தரத்திற்கு சரியான சாட்சிகளாகும். கல்விக் கட்டணத்தை ரத்து செய்து இந்த அரசு அறிவித்தது. ஆனால் அந்தக் கல்லூரிகளுக்கு அரசின் நிதி இதுவரை தரப்படவில்லை. அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு என்று 26-7-2013இல்
ஓர் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன் காரணமாக பல அலுவலர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தைவிடக் குறைவாகப் பெறக்கூடிய அளவிற்கு நிலைமை ஏற்பட்டு, அதை விளக்கி நான் அப்போதே கடிதமே எழுதினேன். அதற்கு அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஒருவேளை பேரவையில் விளக்கம் தரலாம் என்றிருந்திருக்கலாம். தற்போது அளிப்பார்கள் என்று நம்புவோம்.
இந்த ஆட்சியில் எந்த அளவிற்கு விளம்பரங்கள், ஆட்சியாளர்கள் விரும்புகின்ற ஏடுகளுக்குத் தரப்பட்டுள்ளன என்பதைப் பற்றி விரிவாக நான் எழுதி எத்தனையோ நாட்களாகிவிட்டன. இந்த அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. எந்தெந்த பத்திரிகைகளுக்கு இந்த இரண்டரை
ஆண்டுக் காலத்தில், எவ்வளவு ரூபாய் விளம்பரக் கட்டணமாகத் தரப்பட்டுள்ளது என்பது பற்றிப் பேரவையில் வெள்ளை அறிக்கை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் தாக்கப்படும் கொடுமை நின்றபாடில்லை. என்னதான் தமிழக மக்களின் சார்பில் அனைத்துக் கட்சிகளும் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த போதிலும், அந்தக் கொடுமை நீங்கவில்லை. மத்திய அரசிடம் அதற்காக எத்தனையோ முறை குரல் கொடுத்தாகிவிட்டது. நேற்றையதினம் கூட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியக் கடற்படையினர் இனி துணைக்கு வர வேண்டுமென்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போனஸ் பேச்சுவார்த்தை, ஊதிய உயர்வு பிரச்சினை போன்றவைகளில் அ.தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை. விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்த துணிகள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகச் செய்தி வந்துள்ளது. நாளை கூடுகின்ற சட்டப்பேரவையில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அரசின் சார்பில் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். மேலும் மேலும் இப்படி அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களைப் பற்றி எடுத்துரைக்க வேண்டுமென்றால் அதற்கு இடமும் போதாது; ஒரு நாளும் போதாது! அன்புள்ள, மு.க. 22-10-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗