தொகுதி 50 · கடிதம் 3820
போனஸ் பற்றி “ஜெயா” தந்த விளக்கம்!
2013-10-24
உடன்பிறப்பே,
22-10-2013 தேதிய ஆளுங்கட்சியின் நாளேட்டிலும், அதன் ஆதரவு நாளேடுகளிலும் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளிவந்துள்ள தலைப்புச் செய்தி: “தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட தாயின் அன்புப் பரிசு ரூ. 240 கோடி - பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 விழுக்காடு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு” என்பதுதான்! இதைப் படித்தவுடன் சிரிப்புதான் வந்தது. அரசு அலுவலர்களுக்கு அம்மா அவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட அன்புப் பரிசாக 20 விழுக்காடு போனஸ் அறிவித்திருக்கிறார்களாம்! இந்தச் செய்தியைப் பார்த்தபோது, கடந்த காலத்தைப் பற்றிய நினைவுதான் வந்தது. அரசு அலுவலர்கள் பற்றியும், அவர்களுக்கு போனஸ் அளிப்பது பற்றியும் எப்படியெல்லாம் இதே ஜெயலலிதா விமர்சித்தார் என்று ஒருக்கணம் எண்ணிப்பார்த்தேன். அதைத் தவிர்த்திட இயலவில்லை.
போனஸ் பற்றி ஜெயலலிதா சட்டப்பேரவையில் 30-10- 2002 அன்று உரையாற்றும்போது, “போனசைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். போனஸ் என்பது என்ன? முதன் முதலாக போனஸ் என்பது எப்படி வந்தது? ஒரு நிறுவனம் நல்ல முறையில் இயங்கி லாபம் சம்பாதித்தால் அந்த லாபம் முழுவதுமே உரிமையாளர்களுக்குப் போவது நியாயம் அல்ல என்ற கருத்து இருந்தது. அந்த நிறுவனத்திற்கு அந்த லாபத்தை ஈட்டித் தருபவர்கள் யார்? அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.
ஆகவே போனஸ் என்பது ஒரு நல்லெண்ணத்தின் அடையாள மாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், அவ்வளவு லாபத்தை ஈட்டித் தந்த ஊழியர்களுக்கு அந்த லாபத்தில் பங்கு தருவதுதான் போனஸ். ஆனால் அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும்
பரவாயில்லை; எங்களுக்கு போனஸ் தந்தே ஆக வேண்டுமென்று கேட்டால் அது எப்படி நியாயம் ஆகும்?” என்றெல்லாம் கடும் விமர்சனம் செய்தவர்தான் ஜெயலலிதா என்பதை மறந்துவிட முடியாது.
“அரசு அலுவலர்களும் அம்மையார் ஜெயலலிதாவும்” என்ற தலைப்பிலே அனைத்து விபரங்களையும் இணைத்து, ஒரு பெரிய புத்தகமே எழுதலாமே! இருந்தாலும் அவர் போனஸ் அறிவிப்பு செய்திருக்கின்ற இந்த நேரத்தில் ஒரு சிலவற்றை நினைவுபடுத்துகிறேன்.
தி.மு. கழக ஆட்சி 1989ஆம் ஆண்டு நடைபெற்றபோது வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் 750 ரூபாய் மதிப்பூதியத்தில் கழக அரசு அமர்த்தியது. ஆனால் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் இந்த மக்கள் நலப் பணியாளர்களை யெல்லாம் டிஸ்மிஸ் செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார். ஆனால் 1996ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி மீண்டும் ஏற்பட்டதும், பதவியிழந்த மக்கள் நலப் பணியாளர்களுக்கெல்லாம் நான் மீண்டும் வேலை வாய்ப்பளித்து அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தேன். ஆனால் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும் அந்த மக்கள் நலப் பணியாளர்களையெல்லாம் இரக்கமேதுமின்றி மீண்டும் ஜெயலலிதா வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
அதைப்போல இளைஞர்களுக்கு மேலும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்பதற்காகப் பத்தாயிரம் இளைஞர்களுக்குச் சாலைப் பணியாளர்கள் வேலை அளித்தோம். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானதும், 10 ஆயிரம் சாலைப் பணியாளர்களையும் கருணை சிறிதுமின்றிக் கல்நெஞ்சத்தோடு “டிஸ்மிஸ்” செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
பல ஆண்டுக் காலம் வேலை பார்த்து ஊதியம் பெற்று குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர்களுக்குத் திடீரென வேலையில்லையென்றால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? பல பேர் தற்கொலை செய்துகொண்டு மாண்டார்கள். பல பேர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் திருமணமும் நிறுத்தப்பட்டு, அவர்களை மணக்கவிருந்த
பெண்கள் நிர்க்கதிக்கு ஆளானார்கள். உதாரணமாக நாகை மாவட்டம், கீழையூர் அருகேயுள்ள வைரவன்கட்டளை “காமேஸ்வரம்” கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் 11-6-2001 அன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மக்கள் நலப்பணியாளர் சி. கந்தசாமியின் வேலை பறிபோன காரணத்தால் அவருடைய மனைவி பிரபா என்பவர்
11-6-2001 அன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். 12-6-2001 அன்று நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களின் குடும்பத்திற்குத் தி.மு.கழகத்தின் சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி பணி பறிபோனதும் சோகத்தில் உணவு உண்ணாமல் பட்டினி கிடந்தே மாண்டார். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடியைச் சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன் வேலை போன காரணத்தால் பட்டினி கிடந்து உயிர்துறந்தார். இப்படி ஜெயலலிதாவின் இரக்கமற்றத்
தன்மையினால், சோக நிகழ்வுகள் தொடர்கதைகளாயின.
அரசு அலுவலர் வேலை நிறுத்தம் செய்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று சர்வாதிகாரரீதியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் அதே ஆணையில் போராட்ட நாட்களில் எந்தவிதமான விடுமுறையும் எடுக்கக் கூடாதென்றும், வேலைக்கு வராதவர்களின் பட்டியலை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அந்த நாட்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவித்தார்கள். அதுமட்டுமல்ல; 2002 ஆம் ஆண்டு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் “(எஸ்மா)” சட்டத்தின்கீழ், வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களின் தலைவர்களைக் கைது செய்ததோடு, தமிழ்நாடு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு (டெஸ்மா) சட்டம் என்ற புதிய அவசரச் சட்டம் ஒன்றை அமல்படுத்திப் பணியாளர்களை வேலை நீக்கமும் (டிஸ்மிஸ்) செய்தார்கள்.
இந்த ஆட்சியின் டிஸ்மிஸ் பட்டியலைப் பார்த்துவிட்டு தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிக்கு அருகே தலைமை ஆசிரியை ரேணுகா பெரியராசன், அந்தியூரைச் சேர்ந்த குமாரசாமி, கொடுமுடியில் உதவி தலைமை ஆசிரியை சரோஜினி, தொடக்கக் கல்வி உதவி அதிகாரி அழகம்மாள், டெங்கனிக்கோட்டை செங்கோட்ராஜ், கல்லூரிக் கல்வி இயக்கக் ஊழியர் சோலையப்பன், வில்லிவாக்கம் பச்சையப்பன், புள்ளம்பாடி அஞ்சுகம் என்று உயிரைப் பறிகொடுத்தவர்களின் பட்டியல் நீண்டது.
அரசு அலுவலர்களை டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்யக் கோரியும், கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்களை விடுவிக்கக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 6-7-2003 அன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில்,
“இந்தப் பிரச்சினையில் அரசு நல்ல முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அரசு எந்த முடிவும் அறிவிக்கவில்லை. மேலும் இதில் காலதாமதப் படுத்தியது. அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றுதான் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அரசு அதைக்கூட செய்யத் தவறிவிட்டது. அரசு அலுவலர்கள் தானாக முன்வந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். எனவே அதை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கிறேன். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அரசு இதில் காலதாமதப்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது. வேதனை அளிக்கிறது. நியாயமான விசாரணையே இல்லாமல் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது தவறானது, சட்ட விரோத மானது. அனைத்து அரசு ஊழியர்களையும் விடுதலை செய்கிறேன். “எஸ்மா” சட்டம் பிரிவு 4, 5இன்கீழ்க் கைதான அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். போலீஸ் டி.ஜி.பி. இதை உடனே அமுல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களை சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்த அனைத்து உத்தரவுகளையும் நிறுத்திவைக்கிறேன். அனைவரும் உடனடியாக வேலைக்குப் போக வேண்டும். புதிய ஆட்களைப் பணியில் நியமிக்கக் கூடாது ” என்றே நீதிபதி தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் இந்த உத்தரவை இரண்டு நாளைக்கு நிறுத்திவைக்க வேண்டுமென்று
கோரியபோது, நீதிபதி “இதை ஏற்க முடியாது, நள்ளிரவில் எதையும் செய்யாதவர்களைத் தூக்கத்தில் தட்டியெழுப்பிக் கைது செய்துள்ளது போல இன்று நள்ளிரவே விடுதலை செய்யுங்கள்”' என்றார்.
உயர்நீதிமன்ற நீதிபதி இந்த அளவிற்கு அரசு அலுவலர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததும், ஜெயலலிதா அரசு அதனையேற்காமல், இரவோடு இரவாகச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்திற்கே சென்று மேல்முறையீடு செய்து, அன்றையதினம் மாலையில் உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது. அந்த அளவிற்கு அரசு அலுவலர்களிடம் விரோதமும் வெறுப்பும் பாராட்டிய ஜெயலலிதாதான் தற்போது அவர்களிடம் அன்பு கொண்டவர்களைப் போலத் திசை திருப்பும் வேடமிட்டு, தீபாவளி போனஸ் அறிவித்திருக்கிறார்.
மேலும் ஒரு கொடுமையாக அலுவலர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு, அதுகுறித்த வழக்கிலே என்ன தீர்ப்பு வருமோ என்று கூடக் காத்திருக்காமல் புதிதாக 15,500 பேரை வேலைக்கு எடுப்பதாகக் கூறி, அதிலே பெரிய குழப்பம். அரசுப் பணிக்கு ஆட்களைத் தோரந்தெடுக்க வேண்டுமானால் “பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” மூலமாகத் தேர்வு நடத்தித்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எதுவும் முறைப்படி செய்யாமல் ஆளுங் கட்சிக்காரர்களின் பரிந்துரைப்படி தேர்வுசெய்தார்கள். பிறகு 2004ஆம் ஆண்டு ஜூன் திங்களில் திடீரென்று அ.தி.மு.க. அரசு அந்த அலுவலர்களையெல்லாம் நீக்குவதாக ஒரு ஆணை பிறப்பித்தது. உதவிக்கரம் நீட்டியவர்களின் வாழ்வைப் பறித்துப் பாழாக்குவது நல்லதல்ல என்று நான் ஒரு அறிக்கை விடுத்தேன். பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் அவர்களை பணியிலிருந்து அகற்றக் கூடாதென்று கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதன் பிறகு ஜெயலலிதா அரசு பணிந்து அவர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்காகப் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றது.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை எல்லாம் 12-8-2003 அன்று அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.
24-7-2001 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “அரசுக்குக் கிடைக்கின்ற மொத்த வரி வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கும், 24 சதவிகிதம் பென்ஷனுக்கும் செலவிடப்படுகிறது. ஆக மொத்தம் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே போய்விடுகிறது. வெறும் 6 சதவிகிதம்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிஞ்சுகிறது” என்று விதண்டாவாதமான வியாக்கியானம் செய்தவர்தான் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா.
தி.மு. கழக ஆட்சியில் 2000-2001ஆம் ஆண்டுவரை அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு “பொங்கல் பரிசு” என ஒரு தொகை வழங்கப்பட்டு வந்தது. 2001-2002 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபிறகு இந்தப் பரிசு நிறுத்தப்பட்டு விட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட 20 சதவிகித போனசை வழங்கிட, 2001இல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மறுத்துவிட்டது. 8.33 சதவிகித குறைந்தபட்ச போனஸ் மட்டுமே வழங்க முடியுமென்று அறிவித்தது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு ஒத்து வராததால், அனைத்துச் சங்கங்களையும் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் ஓடாததால், தமிழகமே ஸ்தம்பித்தது.
2006ஆம் ஆண்டு மீண்டும் கழக அரசு அமைந்தவுடன், அ.தி.மு.க. ஆட்சி நிறுத்திய இச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைஏற்று, அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும்வண்ணம் மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு ஆகியன மீண்டும் வழங்கப்படும் என்று 28-12-2006 அன்று அரசின் சார்பில் நான் அறிவித்தேன். அதன் காரணமாகத் தமிழக அரசுக்கு அப்போதே 248 கோடியே 68 இலட்ச ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுபோலவே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த செயல்திறன் ஊக்கத்தொகை, முந்தைய அ.தி.மு.க.
ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை ஐந்தாண்டுகளிலும் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. 2006இல் கழக ஆட்சி மலர்ந்த பிறகு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதனை மீண்டும் வழங்குவதென்று முடிவுசெய்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்குச் செயல்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த ஆணையின் காரணமாகப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 89 பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே 70 ஆயிரம்
ரூபாய் செயல்திறன் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்த ஊக்கத்தொகை போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்களுக்கும், ஏனைய பொதுத்துறை நிறுவன ஊழியர்களான தமிழ்நாடு நுகாபொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், அரசு இரப்பர் கார்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ஆகிய வற்றின் பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் போன்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதைப்போலவே “டாஸ்மாக்” நிறுவனத்தின்கீழ்ப் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள், “சி” மற்றும் “டி” பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் தி.மு. கழக அரசு 2006இல் பொறுப்பேற்ற பிறகு, 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸாக வழங்கிட ஆணையிடப்பட்டது.
எனவே தி.மு. கழக ஆட்சியில் எந்த அளவிற்குத் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட்டதோ, அதே அளவிற்குத்தான் தற்போதும் 20 சதவிகிதம் என்ற அளவிற்கு இந்த ஆட்சியில் போனஸ் அறிவிக்கப் பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு கழக ஆட்சியில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், மற்ற துறைகளின் தொழிலாளர்களுக்கும், 18 சதவிகித போனசும், 1991ஆம் ஆண்டு 19 சதவிகித போனசும்,
1998, 1999, 2000ஆம் ஆண்டுகளில் 20 சதவிகித போனசும் வழங்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. சார்பில் 20 சதவிகித போனஸ் போதாதென்றும்,
25 சதவிகித போனஸ் வழங்க வேண்டுமென்றும் கோரி வேலை நிறுத்தம் செய்தனர். ஆனால் தற்போது அவர்களுடைய ஆட்சியில் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட 20 சதவிகித போனசைத்தான் வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பினைக் கூட, உழைக்கும் வர்க்கத்தை மதித்திடும் வகையில் முக்கியமான தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அறிவிக்காமல்; “அனைத்துப் புகழும் அம்மாவுக்கே” என்பதைப் போலத் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறார்கள். தாங்கள் ஆட்சியிலே இல்லாதபோது ஒன்றைப் பேசுவதும், ஆட்சிக்கு வந்துவிட்டால் முன்பு பேசியதை மறந்தும், மறைத்தும் வேறொன்றைச் செய்வதும்தான் இந்த ஆட்சியின் வழக்கமாக இருந்துவருகிறது. அதைத்தான் பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ள போனஸ் பிரச்சினையிலும் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதே உண்மை.
அன்புள்ள, மு.க. 24-10-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗