தொகுதி 49 · கடிதம் 3802
ஒகேனக்கல் திட்டமும், முத்தியால்பேட்டை காவல் நிலையமும்!
2013-09-06
உடன்பிறப்பே,
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை “வீடியோ கான்பரன்சிங்” மூலமாக முதல் அமைச்சர் 29-5-2013 அன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே இருந்தவாறு திறந்துவைத்தார். அப்போது அவர் பேசிய நேரத்தில், கழகத்தின்மீது வழக்கம் போல் பல குற்றச்சாட்டுகளைக் கூறி, நான் அவற்றுக்கெல்லாம் 31-5-2013 அன்று விளக்கமாகப் பதில் அளித்திருந்தேன்.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் ஒகேனக்கல் திட்டம் முடுக்கிவிடப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். இந்தத் திட்டம் யார் ஆட்சிக் காலத்தில் விரைந்து திட்டம் தீட்டப்பட்டு, முடுக்கிவிடப்பட்டு, நிறைவேற்றப் பட்டது என்பதைப் பற்றியும், கழக ஆட்சியில் இந்தத்துறையின் அமைச்சராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் எந்த அளவிற்கு இந்தத் திட்டத்தை ஆர்வத்தோடு விரைவுபடுத்தினார் என்பதைப் பற்றியும், இந்தத் திட்டத்திற்காகக் கால அட்டவணை ஒன்றே தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டம் முடியக்கூடிய அளவிற்குக் கழக ஆட்சியில் முறைப்படுத்தப்பட்டு, அவ்வாறே பணிகள் நடைபெற்று வந்ததைப் பற்றியும் நான் தெளிவாகத் தெரிவித்திருந்தேன்.
ஒகேனக்கல் திட்டப்பணிகள் முழுமை பெறாமல் என்ன காரணத்தாலோ அவசர அவசரமாக இந்த ஆட்சியில் முதலமைச்சரைக் கொண்டு அதனைத் திறந்து வைத்ததைப் பற்றி நான் மாத்திரம் கூறவில்லை.
ஒகேனக்கல் திட்டப் பணிகள் முழுமை பெறவில்லை, பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு அடையாளமாக “தினமலர்” நாளேடு வெளியிட்டிருந்த புகைப்படத்தையே எடுத்துக்காட்டி, அவசர அவசரமாக இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்படுவது ஏன் என்று நான் கேட்டிருந்த கேள்விக்கு முதலமைச்சர் ஏனோ இதுவரை பதிலே அளிக்கவில்லை.
நான் கூறியது உண்மை என்பதை நிரூபிக்கத்தக்க வகையில், “இந்து” நாளேட்டிலேயே “People in many rural areas were upset that the water did not reach them” (கிராமப்புறங்கள் பலவற்றுக்குக் குடி நீர் சென்று சேராததால், மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்) என்று வெளியிடப்பட்டிருந்தது.
12-8-2013 தேதிய “தினமலர்” நாளேட்டில் வெளிவந்த செய்தியில், “தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கத் துவங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், முழுமை பெறாத நிலையில், கிராமப் பகுதிகளில், மீண்டும் “புளோரைடு” கலந்த நீரே, குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில், “புளோரைடு” அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக உள்ளது. இந்த நீரைச் சுத்திகரிக்க வழி இல்லாததால், குடிநீராகப் பருகுவோருக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோய்களும், பல் கறைபடிதல் உள்ளிட்ட நோய்த் தாக்கமும் அதிகரித்தது. இதையடுத்து, இரு மாவட்டத்துக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க, 2008ஆம் ஆண்டு (திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்) ஜப்பான் நிதி உதவியுடன், 1,928 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டப் பணி முழுமை பெறாத நிலையில், சில மாதங்களுக்கு முன், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, ஓசூர், தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் திட்டப் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ள நிலையில், திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் 15 முதல் 20 சதவிகிதப் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோதும், நகராட்சிப் பகுதியில், முழு அளவில் குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. ஒகேனக்கல் குடிநீரை, முதலில் திட்டமிட்டபடி முழு அளவில் இரு மாவட்ட மக்களுக்கும் வழங்கவில்லை. இதனால், “புளோரைடு” கலந்த நீரையே, மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. “போர்வெல்” தண்ணீர் மற்றும் ஒகேனக்கல் தண்ணீர் இரண்டும் கலந்தே கிராமப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது” என்று எழுதப் பட்டிருந்தது.
ஆனால் நான் எழுதியதற்கோ, “தினமலர்”, “இந்து” ஆகிய நாளேடுகள் எழுதியதற்கோ ஆளும் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா அவசர அவசரமாகத் திறந்துவைத்த, அந்தத் திட்டம் எந்த நிலையிலே உள்ளது என்பதைப் பற்றித் தற்போது கடந்த மாதக் கடைசியில் 24-8-2013 தேதிய “இந்து” நாளேடு, புகைப்படத்தோடு விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின் சுருக்கம் வருமாறு :-
“கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நீண்ட நாட்களுக்குப் பிறகு 1,928 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் துவங்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தத் திட்டத்தின்கீழ்ப் பயன்பெற வேண்டிய ஊரகப் பகுதிகளின் மக்கள் இன்னமும் அந்தத் திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியவில்லை என்கிற நிலைதான் இருக்கிறது. அதிகாரிகளைக் கேட்டால் நிலுவையில் இருக்கும் குழாய்ப் பதிப்புப் பணிகள் தான் காரணம் என்கிறார்கள். நிலத்தடி நீரில் அதிக அளவிலான “புளோரைடு” இருப்பதன் காரணமாக இம்மாவட்ட மக்கள் பலன் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில், அன்றாடம் 16 கோடி லிட்டர் தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்து பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டது. ஆனால் காவிரிக் கரையோரம் உள்ள மக்கள் இன்னமும் 3 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கும் ஒருகுடம் நீரை விலைக்கு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏறத்தாழ 33 லட்சம் மக்களை உள்ளடக்கிய கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய நகர மன்றங்களும், 15 நகரப் பஞ்சாயத்துக்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் வண்ணம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பாதி அளவுக்கு என்று சொல்லத்தக்க வகையில், 6,755 ஊரகக் குடியிருப்புகள் குடிநீர் பெற முடியாத பரிதாப நிலைதான் உள்ளது.”
இவ்வாறு எழுதியுள்ள “இந்து” நாளிதழின் செய்தியாளர், அந்தப் பகுதியிலே உள்ள ஒருசிலரைப் பேட்டிகண்டு அதையும் வெளியிட்டிருக்கிறார்.
பெண்ணாகரம் தாலுகா, நாகமறைப் பகுதியில் ஆற்றின் கரையோரம் தின்பண்டக்கடை வைத்துக் கொண்டிருக்கும் கே.சின்னப்பொண்ணு என்கிற விதவைப் பெண், “காவிரி என்னமோ கரை புரண்டுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களோ குடிநீர் இன்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் முறையாகத் தண்ணீர்க் குழாய் பதிக்காததுதான்” என்று சொல்லியிருக்கிறார்.
எரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர். சின்னம்மா, எம். மாலா ஆகியோர், “இந்தத் திட்டத்தின்கீழ் இன்னமும் குழாய்கள் கூடப் பதிக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக வண்டியில் நிலத்தடி தண்ணீர் எடுத்துவந்து விற்பனை செய்து வரும் ஏ.அன்பழகன் என்பவர், “தனியார் ஒருவரிடம் 1000 லிட்டர் நிலத்தடி நீரை 50 ரூபாய்க்கு வாங்கிவந்து விற்பனை செய்து வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் சிலருடைய பேட்டியையும் “இந்து” வெளியிட்டிருக்கிறது. தி.மு.கழக ஆட்சியில் பெரிதும் பாடுபட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட நல்ல குடிநீர் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை ஏதோ தாங்கள்தான் நிறைவேற்றினோம் என்பதைப் போலக் காட்டிக் கொள்வதற்காகத் திட்டம் முடிவடையாத நிலையிலேயே அவசர கதியில் அரைகுறையாக ஒகேனக்கல் திட்டம் தொடங்கப்பட்டது. அதைத்தான் அந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நேரத்திலேயே நான் விளக்கியிருந்தேன்.
முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று மாதம் ஆகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 90 சதவிகித இடங்களுக்கு அ.தி.மு.க. அரசால் இன்னும் குடிநீர் வழங்க முடியவில்லை. குறிப்பாகக் கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சிப் பகுதிகளில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தண்ணீரும் பழைய நீர்த் தேக்கத் தொட்டிகள், பழைய குழாய்கள் மூலம் “ப்ளோரைடு” கலந்த நீரே வினியோகிக்கப்பட்டு வருகிறதாம். அந்த மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடி, தாய்மார்கள் காலிக்குடங்களோடு சாலைக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு முழுமையாக ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத் தண்ணீரை வழங்கக்கோரி, அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 29-8-2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு, அதற்குக் காவல் துறையினரிடம் அனுமதி கோரிப் பத்து நாட்களுக்கு முன்பே மனு தரப்பட்டது. ஆர்ப்பாட்டம் குறித்துச் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் இதுபற்றிய செய்தியும் வெளியிடப்பட்டது.
ஆனால் போராட்டத்திற்கு முதல் நாள் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் காவல்துறை அனைத்து ஒன்றியங்களிலும் நோட்டீஸ் ஒட்டியது. எனினும், அதையும் பொருட்படுத்தாமல், கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பத்து இடங்களில் தாய்மார்கள் காலிக்குடங்களுடன் முழக்கமிட்டனர். மாவட்டம் முழுவதிலும் மாவட்டக் கழகச் செயலாளர் டி.செங்குட்டுவன் உட்பட பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர். நான் குறிப்பிட்ட இந்த விவரங்களிலிருந்து ஒகேனக்கல் திட்டப் பணிகள் முடிவடையாமலேயே அவசர அவசரமாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவே இதனைத் தொடங்கிவைத்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எதிர்க்கட்சிகள் உண்மையான நிலையை எடுத்துக் கூறினாலும் அதை ஏற்பதில்லை. ஏடுகள் விளக்கி ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்தாலும் அதையும் கவனிப்பதில்லை. யார் என்ன செய்ய முடியும்? முழுமை அடையவில்லை என்றாலும் நாங்கள் தொடங்கிவைப்பதுதான் திட்டம்; அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த நாட்டு மக்களின் தலைவிதி என்ற மனப்பான்மையோடு அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கான மற்றொரு சான்றுதான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்!
தி.மு.கழக ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டங்கள் என்றால் அதற்கு மூடுவிழா நடத்தப் பார்ப்பதும், வேகமாக நடைபெறும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கான பணிகளுக்குத் தடை போடுவதும், தவிர்க்க முடியாமல் ஒருசில திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டால், அந்தத் திட்டத்தை இப்படி அரைகுறையாக நிறைவேற்றுவதும் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதையாக நீண்டுகொண்டே போகிறது. முடிவு அடையாத திட்டங்களை அவசரப்பட்டுத் திறந்து வைத்ததற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உதாரணம் என்றால், முடிவடைந்த பணிகள் முதல் அமைச்சரின் தேதிக்காகக் காத்திருப்பதற்கும் உதாரணம் கூறுகிறேன்.
காவல் துறைக்கு இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களது ஆட்சியில் சென்னை மாநகரில் முத்தியால்பேட்டை காவல் நிலையம் - உபயோகத்தில் இல்லாத - மாநகராட்சிப் பள்ளி ஒன்றிலே நடைபெறுவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கடந்த மூன்றாண்டு காலமாக முத்தியால்பேட்டை காவல் நிலையம் இந்தப் பள்ளியிலேதான் செயல்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்காக ஒரு புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனைத் திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேதிக்காகக் காத்திருக்கிறதாம். தற்போது காவல் நிலையம் நடைபெறும் இரண்டு மாடிப் பள்ளிக் கட்டிடம் பொதுப்பணித் துறையினரால் ஆபத்தானது என்று கூறப்பட்டது. ஆனால் அங்கேதான் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையினர் பணியாற்றி வருகிறார்களாம். இந்தக் காவல் நிலையத்திற்கான மூன்று மாடி புதிய கட்டிடம், ஓராண்டு காலமாகப் பணி முடிந்த நிலையில் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. 80 லட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் 30 அறைகள் இருக்கிறதாம்.
இதைப் போலவேதான் செம்பியம் காவல் நிலையமும் கடந்த மூன்றாண்டு காலமாக வாடகைக் கட்டிடம் ஒன்றில் காலம் தள்ளுகிறதாம். அங்கேயும் காவல் துறை நண்பர்கள் 120 பேர் வசதிக் குறைவான இடத்தில் கடமை ஆற்றுகிறார்கள். ஆனால் புதிய காவல் நிலையக் கட்டிடம் திறப்பு விழாவிற்கான தேதி இன்னும் கிடைக்கவில்லையாம்.
என்னுடைய இந்தக் கருத்துக்குப் பிறகாவது முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு அன்றாடம் கடிதம் எழுதுவதோடு, ஐந்து நிமிட நேரத்தை ஒதுக்கி, “வீடியோ கான்பரன்ஸ்” மூலமாகமாவது இந்தக் காவல் நிலையக் கட்டிடங்களைத் திறந்துவைக்க முன்வருவார் என்று எதிர்பார்க்கிறேன். காவல்துறை அதிகாரிகள் அதுவரை இந்தப் புதிய காவல் நிலையக் கட்டிடங்கள் கழக ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டவை என்பதை முதலமைச்சரிடம் கூறாமல் இருப்பது நல்லது!
இந்த ஆட்சியில் எவ்வாறு முடிவடையாத பணிகளை அவசரப்பட்டுத் தொடங்கிவைக்கிறார்கள் என்பதற்கும், முடிந்த பணிகளைத் திறந்து வைக்காமல் எவ்வாறு காலம் கடத்துகிறார்கள் என்பதற்கும் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இனியாவது முதலமைச்சர் இதுபோன்ற குறைபாடுகள் எதிர்க்கட்சியினரால் கூறப்படும்போது, உடனே அவதூறு வழக்கு என்று காவல்துறையினரை ஏவிவிடாமல் உண்மையைப் புரிந்துகொண்டு மக்களுக்குத் தொண்டாற்ற முற்பட்டால் ஆட்சியிலே எஞ்சியுள்ள இரண்டரை ஆண்டுகளிலாவது தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரளவு பயன்பட்டோம் என்ற பெருமை அவருக்கு வந்துசேரக்கூடும்!
அன்புள்ள, மு.க. 6-9-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗