தொகுதி 49 · கடிதம் 3803
கழக ஆட்சியில் மகளிர்க்கான மகத்தான திட்டங்கள்!
2013-09-08
உடன்பிறப்பே,
“முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு” என்று நாளேடுகளில் இன்று பரபரப்புடன் வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், திருமண உதவித் திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்புத் தொகையை ஜெயலலிதா உயர்த்தி அறிவித்திருக்கிறார் என்பதுதான். மேலும் 22 லட்சத்து 23 ஆயிரத்து 243 ரூபாய்ச் செலவில் சமையல் உபகரணங்கள் வாங்கி வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம். 2013-2014ஆம் ஆண்டில், மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் மாத்திரம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 580 கோடி ரூபாயாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் அமைச்சரின் இன்றைய அறிவிப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்புடையதுகூட அல்ல; வெறும் 22 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே உரியதாகும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய இரண்டு திருமண நிதி உதவித் திட்டங்களுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது என்று முதல் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் சார்பில் நடைமுறையில் ஐந்து திருமண உதவித் திட்டங்கள் உள்ளன. ஏற்கனவே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த ஐந்து திருமண உதவித் திட்டங்கள்தான் இப்போதும் உள்ளன. அதாவது 1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்; 2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்; 3. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்; 4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்; 5. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் என்று கழக ஆட்சியில் இயங்கி வந்தன.
தற்போது ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் இந்த ஐந்து திட்டங்களும் தொடர்கின்றன. ஆனால் ஒரே ஒரு மாற்றம். என்ன தெரியுமா? அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் என்பதை - அஞ்சுகம் அம்மையார் என்னுடைய தாய் என்ற காரணத்தால் - அந்தத் திட்டத்திற்கான பெயரை மாத்திரம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் என்று மாற்றி வைத்துக் கொண்டார்கள். எவ்வளவு பெரிய பதவி? எவ்வளவு சிறிய எண்ணம்?
அது எப்படியோ போகட்டும்; பெயரிலே என்ன இருக்கிறது? அந்த ஐந்து திட்டங்களில் மூன்று திட்டங்களுக்கு ஏற்கனவே வருமான வரம்பு என்பது கிடையவே கிடையாது. இரண்டு திட்டங்களுக்கு மட்டும் வருமான வரம்பு 24 ஆயிரம் ரூபாயாக இருந்ததை, இனி அறவே கிடையாது என்றுகூட அறிவிக்கவில்லை, வருமான வரம்பை 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். அவ்வளவுதான்!
இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம். இந்தத் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா? பெண் கல்வியை ஊக்குவித்து உயர்த்தும் நோக்கில், 8ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் திருமணத்திற்கென அவர்களின் பெற்றோருக்குத் திருமண நிதி உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 3-6- 1989 அன்று முதல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.
பின்னர் திருமண நிதி உதவி பெறுவதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பாகவும், திருமண நிதி உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் ஏற்பட்டதும், தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக 1-4-2002 முதல் நிறுத்தப்பட்டு விட்டது.
2006ஆம் ஆண்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தத் திருமண நிதி உதவி அளிக்கும் திட்டம் திரும்பவும் நடைமுறைப்படுத்தப் பட்டதோடு, திருமண நிதி உதவியும் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 20-3-2008 முதல் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயாகவும், 1-4-2010 முதல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவோரின் குடும்ப ஆண்டு உச்ச வருமான வரம்பு 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 24 ஆயிரம் ரூபாயாகவும் தி.மு.கழக ஆட்சியிலேயே உயர்த்தப்பட்டது.
2006க்குப்பின் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 756 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 880 கோடியே 55 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு, ஏழைக் குடும்பங்கள் தி.மு.கழக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் பயனடைந்துள்ளன.
2011ஆம் ஆண்டு முதல் தி.மு.கழக ஆட்சி தொடர்ந்திருக்குமேயானால், இந்த வருமான வரம்பு என்பதே மற்ற மூன்று திட்டங்களுக்கும் இல்லாமல் செய்திருப்பதைப் போல, ஐந்து திட்டங்களுக்கும் வருமான உச்ச வரம்பே இல்லை என்றாக்கப்பட்டிருக்கும். அதற்கு மாறாகத் தற்போது உச்ச வரம்பை 24 ஆயிரம் ரூபாய் என்பதை 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்.
மற்றொரு திட்டமான, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், இளம் வயது விதவைகள், மறுமணம் செய்து புது வாழ்வு பெறுவதை ஊக்குவிக்கும் சமுதாயச் சீர்திருத்தத்தினைக் கருத்திலே கொண்டு, 1975ஆம் ஆண்டு அடியேன் முதலமைச்சராக இருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேதான் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் நிதி உதவியாக வழங்கப்பட்டு வந்த 15 ஆயிரம் ரூபாய், 20-11-2008 முதல் 20 ஆயிரம் ரூபாயாகவும், பின்னர் 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியிலேதான்! இத்திட்டத்தின்கீழ் கழக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 910 ஏழை விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள 1 கோடியே 72 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ்க் கழக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 16,365 பெண்களின் திருமணங்களுக்காக 30 கோடியே 32 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ்க் கழக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 2220 பெண்களின் திருமணங்களுக்காக 4 கோடியே 58 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த ஐந்து திருமண நிதி உதவித் திட்டங்களின்கீழ் ஐந்தாண்டுகளில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 4 இலட்சத்து 95 ஆயிரத்து 634 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக மொத்தம் 937 கோடியே 50 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சமுதாயத்தில் காணப்படும் சாதி வேறுபாடுகளைக் களையும் பொருட்டும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கும் பொருட்டும், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்த, கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் 1-7-1967 முதல் தி.மு.கழக ஆட்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலந்தொட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில் 2006-2011ஆம் ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் 11 ஆயிரத்து 383 தம்பதியருக்கு 20 கோடியே 89 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான பெயரைத்தான் நீக்கிவிட்டு, ஏற்கனவே தி.மு. கழக ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த பெயரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரை அ.தி.மு.க. ஆட்சியிலே சூட்டியிருக்கிறார்கள். இந்தக் கலப்புத் திருமணத் திட்டத்தின்கீழ் பயனடைவோருக்கும் ஏற்கனவே வருமான உச்ச வரம்பு கிடையாது.
திராவிட இயக்கத்தின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று மகளிர் முன்னேற்றம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் குறித்த பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றிப் பெண்கள் அரசியல் சமூகப் பொருளாதார நிலைகளில் விடுதலை பெற்று வாழ்வில் படிப்படியாக முன்னேறவும், பட்டம், பதவிகள் பெற்றுச் சமுதாயத்தில் உயர்நிலை பெறவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
1973இல் தமிழகக் காவல் துறையில் முதல்முதலாகப் பெண்கள் நியமனம்; இன்று இலட்சக்கணக்கான ஏழை எளிய மகளிர் வாழ்வில் பொருளாதார விடுதலைக்கு வழிவகுத்துச் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி - 1989இல் தருமபுரியில் தொடங்கிவைத்த மகளிர் மேம்பாட்டுத் திட்டம்; ஏழைப் பெண்களுக்கு ஈ.வெ.ரா. நாகம்மையார் பெயரில் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள தற்போது 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம்; 1990இல் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு; முதல் தலைமுறையாகத் தொழில் முனையும் மகளிர்க்கு மானிய உதவி; தொழில் வளாகங்களில் தொழில்மனை ஒதுக்கீட்டில் மகளிர்த் தொழில் முனைவோர்க்கு முன்னுரிமை என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் கழக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டுப் பெண்கள் பல வழிகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
அடுத்து முதலமைச்சரின் அறிவிப்பில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1982ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டம் துவக்கப்பட்டது என்றும், அந்தத் திட்டத்தின்கீழ்க் கடந்த முப்பதாண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும், அதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா புதிய வகை உணவுகளை வழங்க உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற பெயரையும், அந்தத் திட்டத்தையும் தி.மு. கழக ஆட்சியிலும், அதே பெயரில்தான் தொடர வேண்டுமென்று கருதி நடைமுறைப்படுத்தியவன் நான். அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டம் ஆயிற்றே, அதற்கு எப்படி மூடு விழா நடத்தலாம், முட்டுக்கட்டை போடலாம் என்றெல்லாம் நான் கருதியது கிடையாது. மாறாக அந்தச் சத்துணவுத் திட்டத்தை மேலும் சிறப்பாக நடத்திட வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல் படுத்தியவனும் நான் என்பதைத் தமிழ்நாடே நன்கறியும்.
பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் 15.7.2006 முதல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டது. பின்னர் கழக ஆட்சிக் காலத்திலேயே 15.7.2007 முதல் வாரம் மூன்று முட்டை வழங்கப்பட்டு வந்தது. மேலும் 17.9.2010 முதல் வாரம் ஐந்து முட்டை வழங்கப்பட்டது. இதன்மூலம் 57 இலட்சத்து 74 ஆயிரத்து 673 பள்ளி மாணவ - மாணவியர்கள் பயன்பெற்றனர்.
முட்டை சாப்பிடாத 37249 குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாழைப்பழம் தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. மேலும் 15.7.2007 லிருந்து 1 முதல் 2 வயது வரை உள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ்ப் பயனடையும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை முட்டை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 4 இலட்சத்து 80 ஆயிரத்து 870 குழந்தைகள் பயன்பெற்றனர்.
பணியிலிருக்கும் பொழுது இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணியிடம் வழங்க 25.10.2007 முதல் வகை செய்யப்பட்டது. சத்துணவுப் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மூன்று மாதங்களுக்கு ஊதியத்துடன் வழங்க ஆணையிடப்பட்டது.
13.5.1996 முதல் 13.5.2001 இல் கழக அரசுக் காலத்தில் சத்துணவுப் பணியாளர்களுக்குக் குடும்பநல நிதித்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு; பணியிலிருக்கும்போது காலமான சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஒன்றரை இலட்சம் ரூபாய் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.
சத்துணவு சமையலர் - உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 55 லிருந்து 58 ஆக உயர்த்தியது. சத்துணவு - அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதித் திட்டம் தொடங்கப்பட்டு; அரசின் பங்குத் தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறைகூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கழக ஆட்சியிலேதான், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களில் பத்தாண்டுப் பணி முடித்தவர்களுக்கு, ஒரு ஊதிய உயர்வும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு மற்றொரு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே கழக ஆட்சியிலேதான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றுவருகின்றனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப் படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான், அவர்களுக்கு முதல்முறையாக 1.6.2009 முதல் மாதந்தோறும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவைகளும், 100 ரூபாய் மருத்துவப்படியும், 2000 ரூபாய் பண்டிகைக் கால முன்பணமும் வழங்கப்பட்டு வருகின்றன. சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மாதாந்திர ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கும், அங்கன்வாடிப் பணியாளர்களில் சமையலர்களுக்கும், முதல் நிலை அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் - சமையல் உதவியாளர்களுக்கும், இரண்டாம் நிலை அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் முறையே மாதந்தோறும் ரூபாய் 700, ரூபாய் 600, ரூபாய் 500 என்று முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் நலனிலும், குழந்தைகள் நலனிலும் அக்கறை கொண்டு கழக அரசு ஆற்றிய பணிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. மகளிர் மேம்பாட்டுக்காக இன்றைய ஆட்சியினர் நாங்கள் அதைச் செய்தோம்; இதைச்செய்தோம் என்று எதைச் சொல்லிக் கொண்டாலும், அவை அனைத்திற்கும் ஆணி வேராகத் தி.மு.கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்தான் அமைந்திருக்கிறது என்பதை மறைத்து விடமுடியாது. அந்த அளவுக்கு அனைத்து முனைகளிலும் அணி அணியாகப் பல்வேறு வகையான திட்டங்கள் வகுக்கப்பட்டு மகளிர் முன்னேற்றத் திற்காகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன என்பதைத் தமிழக நிர்வாக வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது!
அன்புள்ள, மு.க. 8-9-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗