உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3801

மூடுவிழா நடத்திட முனைப்பு காட்டும் முதலமைச்சர்!

2013-09-04

உடன்பிறப்பே,

மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்டப் பறக்கும் சாலைத் திட்டம் குறித்து நான் பலமுறை தெரிவித்திருக்கிறேன். மதுரவாயல்-துறைமுகம் உயர்மட்டப் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு 8-1-2009 அன்று மாண்புமிகு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களே நேரில் வந்து என்னுடைய முன்னிலையில் அடிக்கல்நாட்டி, திட்டம் வேகமாக நடைபெற்று வந்தபோது, தமிழக அரசினால் அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது பற்றியும், அந்தச் சாலைத் திட்டம் நடைமுறைக்கு வருமேயானால், அதன் காரணமாக எத்தனை கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அந்தப் பகுதியிலே தொடங்கப்படும் என்பது பற்றியும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அந்தத் திட்டத்தைத் தொடருவதற்காக எப்படிப்பட்ட முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டது என்பது பற்றியும், அந்தத் திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தி வந்த ஒப்பந்ததாரர், 873 கோடி ரூபாய் இழப்பீடு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்திருப்பது பற்றியும் கடந்த மாதம் 14ஆம் தேதியன்று “முரசொலி”யில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

நான் அதிலே எழுதியவாறு திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை மாவட்டக் கழகங்களின் சார்பில் கடந்த 17-8- 2013 அன்று நெற்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஆளுங்கட்சி அனுமதி தராமல் கைது செய்ததையும் மீறி, அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிமன்றத்திலும் தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்ததால், உயர் நீதிமன்றம் கெடுவிதித்த பிறகு, முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தத் திட்டம் பற்றி அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாக, ஏடுகளில் எல்லாம் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த ஆய்வுக்குப் பிறகும் அந்தத் திட்டம் தொடரப்படுவதைப் போல எந்த அறிவிப்பும் அரசின் சார்பில் தரப்படவில்லை. மாறாக ஏற்கனவே திட்டமிட்ட வழித்தடத்தில் மழைக் காலங்களில் வெள்ள நீர் செல்வதைத் தடுக்காத வகையில் மாற்று வாய்ப்புகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆராய வலியுறுத்த, முடிவு செய்தார்கள்.

“சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டம் என்பது, துறைமுக வளர்ச்சிக்கான திட்டம் மட்டுமல்ல; மாநகரின் நெரிசலுக்குத் தீர்வு காண்பதோடு, மாநிலத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதால், மாநில அரசு தடையை நீக்கவேண்டும்” எனச் சுங்க முகவர்கள், வர்த்தக அமைப்புகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

சென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு 15 இலட்சம் கன்டெய்னர்களைக் கையாண்டு வருகிறது. அன்றாடம் 4,000 கன்டெய்னர் லாரிகள் வந்து போகின்றன. போதிய சாலை வசதி இல்லாததால், நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று காவல் துறை அதிகாரிகளே கருதுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வாகத்தான் இந்தத் திட்டமே தீட்டப்பட்டது. பிரதமரின் ஆலோசகர் திரு. டி.கே. நாயர், மத்திய அரசின் செயலாளர் திரு. ஏ.கே. உபாத்தியாயா ஆகியோர் நேரில் சென்னைக்கு வந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன.

இந்த ஒரு திட்டம் மாத்திரமல்ல; அ.தி.மு.க. அரசு, கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இதுபோன்ற எத்தனை திட்டங்களையெல்லாம் முடக்கிப்போட்டு வைத்திருக்கிறது என்பதைப் பற்றியும் நான் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருக்கிறேன்.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 617 கோடி ரூபாயில், நான்கு வழிச்சாலை அமைக்க, 2012 ஜூலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்கான முதற்கட்டப் பணி நடந்து வந்தது.

இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழக அரசு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும். ஆனால் தமிழக அரசு உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இருந்தது. இதன் காரணமாக, நிலம் ஆர்ஜிதம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சுங்கச் சாவடி அமையும் இடத்தை வேறுஇடத்திற்கு மாற்ற வேண்டுமென மாநில அரசு வலியுறுத்தியது. பின், மற்றொரு எல்லையில் அமைக்க வேண்டுமென்று கூறியது. மேலும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோவை - மேட்டுப் பாளையம் நான்கு வழிச் சாலைத் திட்டத்தையே கைவிடுவதென முடிவு செய்தது.

28-8-2013 தேதிய “இந்து” நாளிதழிலே இந்தக் கோவை - மேட்டுப்பாளையம் பற்றி 5ஆம் பக்கத்தில் விரிவான செய்தி வெளிவந்திருந்தது. அதில், “In what could be its first salvo at the State Government, the National Highways Authority of India on Tuesday withdrew from a Project to extend National Highway-67 in Coimbatore District between Kangeyampalayam to Mettupalayam. A top NHAI official described it as the first step towards the national agency withdrawing from Tamil Nadu. This decision could have a bearing on major projects in Tamil Nadu, where the NHAI alleges it is encountering a series of hurdles from the State Government” என்று தொடங்கி விரிவாக எழுதியுள்ளது.

(காங்கேயம்பாளையம் - மேட்டுப்பாளையத்திற்கு இடையேயான சாலை அமைக்கும் திட்டத்தை, மாநில அரசுடன் உள்ள பிரச்சினை காரணமாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தமிழகத்திலிருந்து தேசிய நிறுவனம் பின் வாங்குவதற்கான முதல் படி இது என்று தெரிவித்தார். இந்த முடிவு தமிழகத்திலே நடைபெறும் முக்கியத் திட்டங்களைப் பாதிக்கும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாநில அரசிடமிருந்து தொடர்ந்து பல தடைகளைச் சந்தித்து வருவதே காரணமாகும்)

மாநில அ.தி.மு.க. அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் தற்போது கைவிடப்பட்டு விட்டது.

இதுபோலவே சிங்கப்பெருமாள் கோவில் - திருப்பெரும்புதூர் சாலையும், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையும் சந்திக்கும் ஒரகடம் கூட்டுச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 620 மீட்டர் நீளம் உள்ள ஒரு மேம்பாலத்தைக் கட்டுவதற்காக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவெடுக்கப்பட்டது. 20.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலத்தைக் கட்டி முடிக்கும் பணி, கிழக்குக் கடற்கரை சாலை கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கேயும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகச் செய்திகள் வந்துள்ளன. இதற்கும் காரணம்; இந்த மேம்பாலம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதுதானா?

அடுத்து, திருச்சி - காரைக்குடி இடையே சுமார் 107 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணியை 374 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. 12-7-2010இல் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், இந்த ஆண்டு மே மாதத்திலேயே முடிந்திருக்க வேண்டும். இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குத் தமிழக அரசு ஏற்கனவே தடையில்லாச் சான்றிதழ் வழங்கியிருந்தது. 90 சதவிகிதம் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழைத் திரும்பப்பெறும் உத்தரவை அ.தி.மு.க. அரசு பிறப்பித்தது. மக்கள் நலன்களுக்கு எதிராக இந்த உத்தரவு உள்ளதால், இதனை ரத்து செய்ய வேண்டுமென்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகளால் வழி நெடுகிலும் உள்ள நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால், தடையில்லாச் சான்றிதழைத் தமிழக அரசு திரும்பப் பெற்றதில் தவறில்லை என்றார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பாக வாதாடிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி. வில்சன், இந்தச் சாலைத் திட்டத்தால் நீர்நிலைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கருத்துத் தெரிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழுவும் மக்களுக்குப் பல நலன்களை அளிக்கும் திட்டம் இது என்றும், இந்தத் திட்டத்தால் நீர்நிலைகள் பாதிக்கப்படாது என்றும் அறிக்கை அளித்துள்ளது. எனவே இலட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் இந்தத் திட்டத்துக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழைத் திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி, 2009ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடந்தது. 136 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 19 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்குரிய நிவாரணமாக நெடுஞ்சாலைத் துறை 250 கோடி ரூபாய் ஒதுக்கியது. சந்தை மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கைவைத்துச் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.

2012 டிசம்பர் மாதத்திற்குள் உரிய இழப்பீடு வழங்க சேலம், விழுப்புரம் மாவட்டக் கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று உத்தரவிடப்பட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்திலேயே சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் 30 சதவிகி தம் கமிஷன் கேட்பதாகப் புகார் கூறினார்கள். இந்த வழக்கில் கலெக்டருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. விவசாயிகள் கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியின் மற்றொரு சாதனையாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் பற்றி இன்றைய (3-9-2013) “இந்து” நாளிதழ், “Proposal for flyover on Pantheon Road scrapped - Decision taken as consultant says it would be unfeasible; Proposed flyovers at PH Road, Arcot Road to be re-designed with more ramps” என்று தலைப்பிட்டுச் சென்னை மாநகரில் பாந்தியன் சாலையில் திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலம், சாத்தியக் கூறானதல்ல என்று “கன்சல்டண்ட்” தெரிவித்த காரணத்தால், அந்தத் திட்டம் கை விடப்படும் என்றும், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில், ஆற்காடு சாலையில் திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலங்களும் திரும்ப வடிவமைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே “இந்து” நாளிதழில் வெளிவந்துள்ள மற்றொரு செய்தியில் “கடந்த இரண்டாண்டு காலத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த மாநிலத்தில் எந்தப் பெரிய திட்டத்தையும் தொடங்கவில்லை. அதிலே முக்கியமாக, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்தான் நிறுத்தப்பட்ட முதல் பெரிய திட்டமாகும். மதுரவாயலில் இருந்து கன்டெய்னர்களை விரைவாகக் கொண்டு வருவதற்காக 1,815 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது. ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட திட்டத்திற்கு மாறாக இந்தப் பணி நடைபெறுவதாகக் கூறிப் பொதுப்பணித் துறையினால் கடந்த ஆண்டு இந்தத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதற்கிடையே ஒப்பந்ததாரர் 873 கோடி ரூபாய் தனக்கு இழப்பீடு தர வேண்டுமென்று கோரியிருக்கிறார். சென்னைத் துறைமுகத்திலே உள்ள நெருக்கடியைத் தீர்க்கக்கூடிய ஒரு நல்ல திட்டம் இது. மாநிலத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்” என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், மாநில அரசு இந்தத் திட்டத்தை எடுத்துக்கொள்ள விரும்பினால், மீண்டும் திட்டத்தைத் தொடரத் தயாராக இருப்பதாகவும், விரைவில் கருத்து மாறுபாடுகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்ததாக “இந்து” நாளிதழ் எழுதியுள்ளது.

எனவே இந்தச் சூழ்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்பது எந்தத் தனிப்பட்ட யாருடைய பொறுப்பிலும் உள்ளதல்ல. மத்திய அரசின் சார்பு நிறுவனம்தான் அது. அதன் சார்பில் பல கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்கள் தமிழகத்திலே நடைபெற்றாக வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும்; அதுவும் அந்தத் திட்டத்திற்காகப் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட பிறகு, ஏதோ காரணத்தைக் கூறி முடக்கிப் போடுவது சரியல்ல. தமிழகத்தை ஆளுகிற பொறுப்பிலே உள்ளவர்கள் மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களைக் கேட்டு, வாதாடிப் பெற்று, அதனை மாநிலங்களிலே நிறைவேற்ற முன்வர வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் ஒவ்வொரு திட்டத்தையும் காழ்ப்புணர்வோடு நிறுத்துவது என்பது நல்லதல்ல. தி.மு. கழக ஆட்சியிலே ஓமந்தூரார் வளாகத்திலே கட்டப்பட்டது என்பதால் மூன்றாண்டுக் காலமாக அந்தக் கட்டிடங்கள் மூடப்பட்டு, முதலமைச்சரின் பிடிவாதம் காரணமாகப் பழைய தலைமைச் செயலகத்திலே நீடிப்பதால் என்ன பயன்? அங்கே கடந்த மாதம் மேலே இருந்த சுவர் கீழே விழுந்து ஒரு பெண்மணி காயப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட செய்தி வந்தது. நேற்றையதினம் தலைமைச் செயலகத்திலே மின்சாரக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்படுவது நல்லபடியாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் முதலமைச்சர் இனியாவது யோசித்துப் பார்த்து நல்ல முடிவெடுப்பது அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது! மாறாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று கூறுவாரானால், பின் விளைவுகளைத் தமிழ்நாடு சந்தித்தே தீரவேண்டும்!

அன்புள்ள, மு.க. 4-9-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗