தொகுதி 49 · கடிதம் 3800
உணவுப் பாதுகாப்புச் சட்டம் - இலாபமா? நட்டமா?
2013-09-03
உடன்பிறப்பே,
உண்மைகளைத் திரித்துக் கூறுவதும், பொய்யான தகவல்களை ஓங்கி உரைப்பதும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கைவந்த கலை. அந்த வகையில்தான் உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால், “தி.மு.க.வின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது” என்று அங்கலாய்த்து நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை ஜெயலலிதா விடுத்திருக்கிறார். அதில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு ஏதோ தமிழகத்திற்கு எதிராகவே இயற்றி உள்ளதைப் போலவும், அதனை தி.மு.க. ஆதரித்ததால், தமிழக மக்களுக்குப் பெரிய துரோகத்தை இழைத்து விட்டதாகவும் ஒரு மாயமான தோற்றத்தை உருவாக்கிட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம். மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ள புள்ளி விவரப்படி, தமிழகக் கிராமங்களில் 65.55 சதவிகிதமும், நகரங்களில் 37.79 சதவிகிதமும் ஏழையெளிய மக்கள் தொகையாகும். இந்த அடிப்படையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்த் தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களில் 232.70 லட்சம் பேரும்; நகரப் பகுதிகளில் 131.88 லட்சம் பேரும் பயனடைவார்கள். நகரங்களிலும், கிராமங்களிலுமாகச் சேர்த்துத் தமிழகத்தில் 364.58 லட்சம் ஏழை மக்கள் இந்த சட்டத்தின்கீழ் பயன்பெறுவார்கள்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் (AAY) சேர்க்கப்பட்டுள்ள, பரம ஏழைகளான 18.65 இலட்சம் பேருக்கு, தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ வீதம், மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரம் டன் என்ற அளவில் வழங்கப்படும் அரிசியில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது.
நகரங்களிலும், கிராமங்களிலுமாகத் தமிழகத்தில் உள்ள 364.58 லட்சம் ஏழைகளில், பரம ஏழைகளான 18.65 லட்சம் பேர் போக, எஞ்சியுள்ள 345.93 லட்சம் பேருக்கு, மாதம் ஒன்றுக்கு, ஒருவருக்கு 5 கிலோ வீதம் புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினால் வழங்கப்படவிருக்கும் அரிசியின் அளவு 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 டன் ஆகும்.
இதுவரை, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் (AAY) உள்ளப் பிரிவினருக்குக் கிலோ அரிசி ரூபாய் 3க்கு 65 ஆயிரம் டன் அரிசியும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள (BPL) பிரிவினருக்குக் கிலோ ரூபாய் 5.65 விலையில் 1 லட்சத்து 5 ஆயிரம் டன் அளவு அரிசியும் ஆக மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் டன் அரிசியினைத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கி வந்தது.
ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஏழைகள் மற்றும் பரம ஏழைகளுக்கு இதுவரை மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்த அரிசி, இனிமேல் மாதம் ஒன்றுக்கு அரிசியின் அளவு 2 லட்சத்து 37 ஆயிரத்து 900 டன் ஆகும். (1 லட்சத்து 72 ஆயிரத்து 900 டன் + 65 ஆயிரம் டன்). இந்த அரிசியின் விலை கிலோ 3 ரூபாய் மட்டுமே.
அதாவது தமிழகம் இந்தப் பிரிவுகளின் ழ் இதுவரை பெற்று வந்ததைவிட, கூடுதலாக 67 ஆயிரத்து 900 டன் அரிசி இந்தப் புதிய சட்டத்தின் காரணமாகப் பெற்றிடவிருக்கிறது.
இப்படிக் கூடுதலாகக் கிடைக்கவிருக்கும் அரிசியால் தமிழகத்திற்கு இலாபமா? நட்டமா? என்பதை யாரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். ஜெயலலிதா புரிந்துகொள்ளாவிட்டால், அதற்கு யார் என்ன செய்ய முடியும்?
புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மானிய விலையான கிலோ 3 ரூபாய் வீதம் மாதத்திற்கு 2 லட்சத்து 37 ஆயிரத்து 900 டன் அரிசியை, மத்திய அரசிடம் வாங்குவதற்கு, இனிமேல் ஆண்டு ஒன்றுக்கு ஆகும் செலவு 856 கோடியே 44 லட்சம் ரூபாய் மட்டுமே!
இதுவரை தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் (AAY) மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரம் டன் அரிசியை, கிலோ ஒன்றுக்கு ரூ. 3 வீதமும்; வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான திட்டத்தின்கீழ் (BPL) மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் டன் அரிசியை, கிலோ ஒன்றுக்கு ரூ. 5.65 வீதமும்;
வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கான திட்டத்தின் கீழ் (APL) மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் டன் அரிசியினைக் கிலோ ஒன்றுக்கு ரூ. 8.30 வீதமும் வழங்கி வருகிறது. இதுவரை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு, கிலோ ஒன்றுக்கு ரூ.3 வீதமும், ரூ. 5.65 வீதமும், ஆண்டு ஒன்றுக்கு மத்திய அரசு 20 லட்சத்து 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கி வந்துள்ளது. இனிமேல் புதிய திட்டத்தில், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு, கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றுக்கு 28 லட்சத்து 54 ஆயிரம் டன் அரிசியினை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும். அதாவது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இனிமேல் 8 லட்சத்து 14 ஆயிரம் டன் அரிசியை மத்திய அரசு தமிழகத்திற்குக் கூடுதலாகப் புதிய சட்டத்தின் கீழ் வழங்கவிருக்கிறது. இது தமிழகத்திற்கு இலாபமா? நட்டமா? என்பதை அரிச்சுவடிக் கணக்கு அறிந்திருப்போர் கூடப் புரிந்துகொள்ள முடியும். ஜெயலலிதா புரிந்துகொள்ளாவிட்டால் யார் என்ன செய்ய முடியும்? இதுவரை, வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காகத் தமிழக அரசு கிலோ ஒன்றுக்கு ரூ. 8.30 வீதம், மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் டன் வீதம், ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசிடம் வாங்கி, தமிழக மக்களுக்கு வழங்கிய அரிசியின் அளவு 15 லட்சத்து 12 ஆயிரம் டன்களாகும். இனிமேல், கிலோ ஒன்றுக்கு ரூ. 8.30 வீதம் மத்திய அரசிடம் தமிழக அரசு வாங்க வேண்டிய அரிசியின் அளவு மாதம் ஒன்றுக்கு 58 ஆயிரத்து 100 வீதம் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சத்து 97 ஆயிரம் டன்கள் மட்டுமே! இது தமிழகத்திற்கு இலாபமா? நட்டமா? என்பதையும் நடுநிலையாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
நேரடியான இந்தக் கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாகவே பதில் சொல்லட்டும்!
வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக வாங்க வேண்டிய அரிசிக்காக ஆண்டு ஒன்றுக்குத் தமிழக அரசுக்கு ஆகும் செலவு 578 கோடி ரூபாயாகும்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்காக வாங்க வேண்டிய அரிசிக்காக ஆண்டு ஒன்றுக்குத் தமிழக அரசுக்கு ஆகும் செலவு 856 கோடி ரூபாயாகும்.
இரண்டும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசிக்காகத் தமிழக அரசு கொடுக்க வேண்டிய மொத்த விலை 1,434 கோடி ரூபாயாகும்.
ஆனால் தற்போது மத்திய அரசின் ஒதுக்கீட்டின்கீழ் பெறப்படும் அரிசிக்காக, தமிழக அரசு கொடுக்கின்ற விலை 2,231 கோடி ரூபாயாகும்.
எனவே உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணமாகத் தமிழக அரசுக்கு ஆகும் செலவு ஆண்டு ஒன்றுக்கு 797 கோடி ரூபாய் குறையும். (2,231 - 1,434) இது தமிழகத்திற்கு இலாபமா? நட்டமா? புதிய சட்டத்தைத் தி.மு.க. ஆதரித்தது சரியா? தவறா? நேரடியான இந்தக் கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாகவே பதில் சொல்லட்டும்!
ஆனால் இதையெல்லாம் அப்படியே மறைத்துவிட்டு, உண்மைகளை யார் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விளக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்த் தமிழகத்திற்குக் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லுவது அப்பட்டமான பொய்யாகும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பதற்கு ஜெயலலிதா கூறுகின்ற ஒரே காரணம், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்காக வழங்கப்படும் அரிசியைக் கிலோ ஒன்றுக்கு ரூ. 8.30 விலையில்தான் வழங்க வேண்டும் என்பதுதான். இதைத்தான் அவர் கடந்த மாதம் 25-8-2013இல் வலியுறுத்தியிருந்தார்.
25-8-2013 இல் ஜெயலலிதா இந்தக் கோரிக்கையை வைப்பதற்கு முன்பாகவே 21-8-2013 அன்றே மத்திய உணவுத்துறை அமைச்சர் திரு.கே.வி.தாமஸ் அவர்களுக்கு, நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவரான தம்பி டி.ஆர். பாலு கடிதத்தின் மூலமாகவே கிலோ ஒன்றுக்கு ரூ. 8.30 என்று தான் விலை நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கு 22-8-2013 அன்றே அந்தத் துறையின் அமைச்சர், டி.ஆர். பாலுவின் கோரிக்கை ஏற்கப்படும் என்றும், அந்தக் கோரிக்கையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி யிருப்பதாகவும், விரைவில் அதுபற்றி முடிவெடுக்கப் படும் என்றும் தெரிவித்திருக்கிறார். (Dear Thiru T.R. Baalu, Please refer to your letter dated 21-8-2013 regarding National Food Security Bill, 2013. As regards the issue prices for additional allocations to be made to the State Governments over and above their entitlements under the Bill, my Ministry has sent a proposal for Cabinet Committee on Economic Affairs for fixing this price at the current APL prices, i.e., Rs. 6/10 per kg for wheat and Rs. 8/30 per kg. for rice. A decision in this matter will be taken shortly.) என்று மத்திய உணவு அமைச்சர் கையெழுத்திட்டுக் கடிதமே அனுப்பியிருக்கிறார். அதை மக்களவையில் அவர் பேசும் போதும் உறுதிப்படுத்தியிருக்கிறார். டி.ஆர்.பாலு 21-8-2013 அன்று மத்திய அமைச்சருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து, அவரும் 22-8- 2013 அன்றே உறுதி கூறி பதிலளித்த கோரிக்கையைத்தான் முதலமைச்சர் ஜெயலலிதா 25-8-2013 அன்று வலியுறுத்திப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, அமைச்சர் கூறிய உறுதிமொழி சட்டத் திருத்தமாக ஏன் கொண்டு வரப்படவில்லை என்று தற்போது கேள்வி எழுப்பி, அதனால் அந்தச் சட்டத்தையே எதிர்க்க வேண்டுமென்று ஜெயலலிதா கூறுகிறார். வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ள மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அரிசி விலை கிலோ ரூ. 8.30 என்பதை மத்திய அரசு உயர்த்திவிடவும் இல்லை. அதற்கான ஆணை எதையும் பிறப்பித்து விடவும் இல்லை. ஆனால் ஜெயலலிதா தி.மு. கழகம் துரோகம் செய்துவிட்டது என்கிறார். இந்த நிலையில், இதிலே எங்கே இருக்கிறது துரோகம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள்தான் கூறவேண்டும்.
“உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்துக்கு லாபமா? நட்டமா?” என்ற தலைப்பில் இந்த மசோதா பற்றி “தினமலர்” சிறப்பு நிருபர் 30-8-2013 அன்று எழுதிய கட்டுரையின் முடிவாக இறுதியில், “உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், தமிழக அரசுக்கு, அரிசி கொள்முதலில், மாதத்துக்கு 40.28 கோடி ரூபாய் மீதமாகும். இவ்வாறு அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன” என்று தெளிவாக எழுதியுள்ளது. மாதத்திற்கு 40.28 கோடி ரூபாய் என்றால் ஆண்டு ஒன்றுக்கு 483.36 கோடி தமிழக அரசுக்கு இந்த மசோதாவினால் மீதமாகும் என்று “தினமலர்” நாளிதழே குறிப்பிட்டிருக்கும்போது, தமிழகத்திற்குத் தி.மு. கழகம் துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கூறுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
தேவையில்லாமல் ஜெயலலிதா இந்த அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, கச்சத் தீவு பிரச்சினை, காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் நான் ஏதோ தமிழகத்திற்குத் துரோகம் செய்து விட்டதைப்போல எழுதியிருக்கிறார். இப்படி எழுதினால்தான் இந்தப் பிரச்சினைகளில் அவர் என்னென்ன துரோகங்களைத் தொடர்ந்துசெய்தார் என்பதை ஆதாரத்தோடு நான் பட்டியலிட்டுக்காட்டி, அதைப் படிப்பதிலே அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் போலும்! பிரச்சினைக்கு நேரடியாக அவரால் பதில் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் எல்லாம் இப்படித் தான் எழுதியதையே மீண்டும் எழுதித் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பார்.
“மாநில சுயாட்சி” பற்றி ஜெயலலிதா இப்போதெல்லாம் பேசத் தொடங்கியிருப்பது விந்தையிலும் விந்தையாகும். மாநில சுயாட்சி பிரச்சினைக்காக நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை பெற்று, அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்ததே தி.மு. கழக அரசுதான்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம், தமிழகம் ஏற்கனவே அனுபவித்து வந்த சலுகைகளும், உரிமைகளும் பாதிக்கப்படமாட்டா. மாறாக, ஆண்டுக்குத் தமிழ்நாட்டிற்கு ரூ. 797 கோடி அளவிற்குச் செலவு குறையும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பெற்றுத்தந்துள்ள உண்மையை மறைப்பதற்காகவும், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்ப்பதற்காகவும்தான் முதலமைச்சர் ஜெயலலிதா இப்படியெல்லாம் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது இவ்வளவு வக்கணையாக அறிக்கைவிடும் ஜெயலலிதா, உணவுப் பாதுகாப்புச் சட்டமும், மத்திய அரசின் கூடுதல் நிதி உதவியும் இல்லாத நிலையில் தி.மு.கழக அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியதை மறந்துவிட்டாரா? மாறாக, 2003ஆம் ஆண்டில்தான் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது “எச்” முத்திரையிட்டுக் குடும்ப அட்டை வழங்கி, இலட்சக்கணக்கான நடுத்தர ஏழையெளிய மக்கள் பெற்றுவந்த அரிசியைப் பறித்தாரே; அந்தக் கொடுமையைத் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதுகிறாரா? தமிழகத்திற்கு இதுவரை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக வழங்கிய 36 இலட்சத்து 78 ஆயிரம் டன் அரிசியின் அளவு எந்த நிலையிலும் குறைக்கப்பட்டுவிடக் கூடாது என்று தி.மு. கழகத்தின் சார்பிலும் நேரடியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே கோரிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் மூலம் எழுதியிருந்தார். மத்திய அரசினால் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மசோதாவில் அது அரசு திருத்தமாகவே கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும்போல ஜெயலலிதா, அந்தக் கோரிக்கை அவருடைய வலியுறுத்தல் காரணமாக மத்திய அரசு அந்தத் திருத்தத்தைச் செய்தது போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, அந்தச் சட்டத்தைத் தி.மு.க. ஆதரித்ததில் என்ன தவறு இருக்க முடியும்? இதுவரை தமிழகம் பெற்றுவந்த அரிசியின் அளவு சிறிதளவும் குறைக்கப்படவில்லை. வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கிய அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 8.30 என்பதிலும் எந்த மாற்றமும் இருக்காது. இது நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலுவுக்கு, மத்திய உணவு அமைச்சர் எழுதிய கடிதத்திலேயே உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள ஏழையெளிய மக்களின் பசியைப் போக்குவதற்காக இந்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறவில்லை; திருத்தங்களை ஏற்க வேண்டுமென்றுதான் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியான பா.ஜ.க.வே இந்தச் சட்டத்தை ஆதரித்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அ.தி.மு.க. சார்பில் இந்தச் சட்டத்தை ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? இரட்டை வேடம் போடுவது யார்? உணவுப் பாதுகாப்புச் சட்டம் - தமிழ்நாட்டிற்கு இலாபமா? நட்டமா?
அன்புள்ள, மு.க. 3-9-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗