உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3799

இந்தச் சோதனையிலும் இந்தியா வெற்றி பெறும்!

2013-08-30

உடன்பிறப்பே,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் டாலரின் மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும், அதன் விளைவாகத்தான் இந்தியா, இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற நாடுகளின் நாணயங்களின் மதிப்பு வேகமாகச் சரிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பண்டித ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுக் காலம் இந்தியப் பிரதமராக இருந்தார். அப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4.76. இந்திராகாந்தி 15 ஆண்டுக் காலம் பிரதமராக இருந்திருக்கிறார். அப்போது ரூபாயின் மதிப்பு 11.36 என்பதைத் தாண்டவில்லை. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ரூபாயின் மதிப்பு 16.22 ஆகவும், பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது ரூபாயின் மதிப்பு 35.43 ஆகவும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரூபாயின் மதிப்பு 45.31 ஆகவும் இருந்ததுதான், தற்போது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் ஒன்பதாண்டுக்கால ஆட்சியில் ரூபாயின் மதிப்பு 68.80 என்ற அளவிற்கு வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டிய அதிர்ச்சியூட்டும் நிலை உருவாகி இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, 23-8-2013 அன்று சரிவில் இருந்து லேசாக மீண்டு ரூபாயின் மதிப்பு 64 ஆகி இருந்தது, 26-8-2013 அன்று 64.31 ரூபாய் என்றாகி, 27-8-2013 அன்று 66.24 என்ற அளவிற்கு ஒரே நாளில் 193 காசுகள் ரூபாயின் மதிப்பில் இழப்பு ஏற்பட்டது. அதாவது பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 3 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது.

28-8-2013 அன்றும் நிலைமையில் முன்னேற்றமில்லை. மேலும் சரிவுதான் ஏற்பட்டது. காலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 67.06 ஆகச் சரிந்து, பிறகு 67.18, 67.35, 67.37, 67.40 என்றெல்லாம் ஆகி, 68.80 ரூபாய் என்ற அளவிற்கு மதிப்புக் குறைந்தது. தொய்வடைந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி வலுவூட்டாவிட்டால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 75 ஆகச் சரியும் நிலைமை உள்ளது என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். மொத்தத்தில், நடப்பாண்டு, ஜனவரி முதல், இதுவரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 19.50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் இதுவரை கண்டும் கேட்டுமிராத காரிருளாகும். அமெரிக்க டாலரின் நிலைமை இவ்வாறிருக்க, இங்கிலாந்து பணமான “பவுண்டு”க்கு நிகராகவும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு “பவுண்டு”க்கு நிகரான ரூபாயின் மதிப்பு 106 ஆகக் குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய பணமான “யூரோ” வுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 92 ஆகவும், சுவிஸ் “பிராங்க்” மதிப்பில் ரூ.75 ஆகவும், கனடா டாலர் மதிப்பில் ரூ. 65 ஆகவும், ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ரூ. 60 எனவும், நியூசிலாந்து டாலர் மற்றும் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரூ. 50க்கும் சரிந்துள்ளது. குவைத் “தினார்” மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.240க்கு அதிகம் என்ற நிலையை எட்டியுள்ளது. சர்வதேசச் சந்தையில் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி தற்போது இந்திய ரூபாய்தான் என்று “தி எகானமிஸ்ட்” ஏடு குறிப்பிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சங்கிலித் தொடர் போன்ற விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கடந்த சில நாட்களாகப் பங்குச் சந்தையிலும் சரிவு ஏற்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு 170 லட்சம் கோடி குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும், எதுவும் உடனடியாகப் பயனளிப்பதாகத் தெரியவில்லை. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், இறக்குமதி நிறுவனங்களும் டாலரை அதிக அளவில் கொடுத்தே கொள்முதல் செய்கின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் அமெரிக்க டாலர்களை வாங்குவதால், அன்னிய நாடுகளில் வெளிச்சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. சிரியா நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்தால் 27-8-2013 அன்று லண்டன் வர்த்தகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.4 சதவிகிதம் உயர்ந்தது. விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவிகிதத்தை வெளிநாடுகளிலே இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வ தால், இறக்குமதிக்கான செலவு அதிகரித்து டாலர் மேலும் அதிகமாக நமது நாட்டிலிருந்து வெளியேறும். அதன் காரணமாக மத்திய அரசின் பெட்ரோலிய மானியச் சுமை அதிகரிக்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல பொருள்களுக்கான உதிரி பாகங்களை வெளிநாடுகளிலே இருந்துதான் வாங்க வேண்டும். இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவால் டி.வி., செல்போன், லேப்- டாப், பிரிண்டர்கள் போன்றவற்றின் விலை உயரும். மின்னணுச் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இவற்றின் விலையை 5 முதல் 7 சதவிகிதம்வரை உயர்த்த முடிவு செய்திருக்கிறதாம். “சோனி” நிறுவனம், தனது தயாரிப்புகளின் விலையை 4 முதல் 6 சதவிகிதம்வரை உயர்த்த முடிவு செய்திருக்கிறதாம். கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங்களோ 8 சதவிகிதம் விலையை உயர்த்த முடிவு செய்திருக்கின்றன.

நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களுக்குத் தேவையானவற்றில் பாதியை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கின்றன. கச்சா எண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய், உரம், நிலக்கரி போன்றவற்றின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துப் பணவீக்கம் மேலும் உயரும். ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 5.79 சதவிகிதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் 9.64 சதவிகிதமாகவும் உயர்ந் துள்ளது.

மெட்ரோ ரெயில் பணிகள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில்பணிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதால், இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக, ஏற்கனவே இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களுக்கும், பொறியாளர்கள் போன்ற பணியாளர்களுக்கும் டாலர்களில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

மத்திய முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்கா அவர்கள், “ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்து வருவதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும், அரசு பதவி விலகினால் மட்டுமே நெருக்கடியைச் சமாளிக்க முடியும், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து செல்ல வேண்டிய நேரம் இது, அப்போதுதான் பொருளாதாரம் சீரடையும், இந்தியப் பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்” என்றெல்லாம் கூறியிருக்கிறார். மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் பொருளாதார ரீதியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது, இந்த அரசுக்குப் பதவியில் நீடிக்க அருகதை இல்லை என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொருளாதார “சுனாமி” தாக்கியுள்ளதாகவும், இதற்கு மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மாண்டெக்சிங் அலுவாலியா ஆகியோர்தான் பொறுப்பு என்றும் அவர்கள் குற்றஞ் சாட்டியிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் நிறைவான பொருளாதார அறிவு படைத்தவர்தான். அவர்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். பழைய பொருளாதார உத்திகள் பலனளிக்காது என்றால், புதிய முறைகளைக் கையாண்டு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும்.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவிகிதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரூபாயின் மதிப்பு இலக்கைக் கடந்து சென்றுள்ளது; ரூபாய் மதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது; நாம் பொறுமையாக இருக்க வேண்டும்; உறுதியாக இருக்க வேண்டும்; என்ன தேவையோ அதைச் செய்து கொண்டிருக்கிறோம்; ரூபாய் அதன் சரியான மதிப்பை எட்டும்” என்றும் தெரிவித்திருக்கிறார். தான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது என்றும்; முன்னாள் நிதியமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அரசின் பொருளாதார சுமை அதிகரித்து விட்டதாகவும்; ஆனால் அதேநேரத்தில் தொழில் வளர்ச்சியோ, அல்லது வேளாண் மேம்பாடோ எதிர்பார்த்த அளவுக்கு நிகழவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் ரூபாயின் மதிப்பு எப்போது வலுவடையும் அல்லது உயரும் என்பதற்குக் காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய நிதியமைச்சர் முன்மொழிந்துள்ள பத்து அம்சத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவிகிதத்திற்குள் அடக்க வேண்டும்; நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 7 ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்கிட வேண்டும்; நிதி ஆதார நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்; மூலதனத்தை அதிகரிக்க வேண்டும்; முடங்கிக் கிடக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை உயர்த்த வேண்டும்; மூலதனச் செலவை அதிகரிக்க வேண்டும்; பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை உயர்த்த வேண்டும்; ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்; தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார்.

இவருக்குப் பதிலளிக்கும் வகையில் இன்று “தினமணி”யில் கட்டுரை தீட்டியிருக்கும் எஸ். குருமூர்த்தி, “இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கப்போவதாக ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்” என்று சாடியிருக்கிறார்.

நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 7 ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்க வேண்டுமென்று நம்முடைய நிதியமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது Current Account Deficit என்றால் என்ன என்பதைச் சற்றுப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அன்னியச் செலாவணி கொடுத்து, இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அல்லது நடப்புக் கணக்கு உபரி. நாம் அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்தால் நடப்புக் கணக்கில் உபரி ஏற்படும். நாம் அதிக அளவுக்கு இறக்குமதி செய்தால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறை அதிகமாக ஏற்படும்போது, பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பதுதான்; தற்போது 8900 கோடி டாலர் பற்றாக்குறையாக அதிகரித்துள்ளது.

இந்த அளவிற்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாகக் காரணம், கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதுதான் என்று அரசு தெரிவிக்கும் காரணம் மட்டுமே உண்மையானதல்ல.

நாம் இறக்குமதியைப் பற்றிப் பேசும்போது, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப் பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி. அப்படி மூலப் பொருளை இறக்குமதி செய்து, புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

2004-2005இல் மூலப் பொருள்களின் இறக்குமதி 2550 கோடி டாலர் அளவுக்கு இருந்தது. தற்போது 58700 கோடி டாலருக்கு மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதுபோன்ற காரணங்களால்தான் டாலர் மதிப்பு மிகவும் உயர்ந்து, அதற்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறுகாணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை ரூபாய் மதிப்பு 18 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும் கீழே செல்லும் என்று கூறப்படுகிறது.

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்”

அதாவது, “இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும் கூட இல்லாமல் மறைந்து போய்விடும்”

(திருக்குறள்-கலைஞர் உரை) என்ற அய்யன் வள்ளுவரின் எச்சரிக்கையைக் கருத்திலே கொண்டு பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். நமது இயற்கை வளங்கள் எல்லையற்றவை. நமது மனித வளம் ஈடுஇணையற்றது. இந்தியா விடுதலை அடைந்ததற்குப் பின்னர் எத்தனையோ சவால்களைச் சந்தித்து முன்னேறி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதாரச் சோதனையிலும் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்ப்போம்!

அன்புள்ள, மு.க. 30-8-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗