தொகுதி 49 · கடிதம் 3798
அன்னை இந்திரா வழியில் தீர்வு காண்போம்!
2013-08-26
உடன்பிறப்பே,
22-8-2013 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், திரு. சல்மான் குர்ஷித் கூறும்போது, “இலங்கைச் சிறைகளில் 106 இந்திய மீனவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும். நமது மீனவர்களை இலங்கை அரசு சிறையில் அடைப்பது, இந்திய மக்களின் உணர்வுப்பூர்வ, சமூகம் சார்ந்த அரசியல் ரீதியான பிரச்சினையாக உள்ளது. அதனால், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் மனக்கசப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். இந்திய மீனவர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்திய மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை எவ்விதத்தி லும் நியாயப்படுத்த முடியாது. இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிறநாட்டு மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அங்கே வலியுறுத்தப்பட்டு வருவதால், இந்திய மீனவர்களை விடுவிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இரு நாடுகளின் மீனவர்களின் கூட்டத்தை நடத்தவும் இலங்கை அரசுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. இந்தியாவினால் இலங்கை மீனவர்கள் யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அது பலவீனத்தின் அடையாளம் கிடையாது, நியாயத்தின் அடையாளமே! இதுபோல நியாயமாக இலங்கையும் நடந்துகொள்ள வேண்டுமென்று இந்தியா எதிர்பார்க்கிறது. நமது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இப்பிரச்சினையை இலங்கையும் கவனிப்பதால், இதன் முக்கியத்துவத்தை அந்நாட்டு அரசும் புரிந்து செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம். அண்மையில் டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசிய போதும் இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தப் பட்டுள்ளது” என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது நமக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது.
இவ்வாறு குறிப்பிட்ட மத்திய அமைச்சர், “மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காண, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; ஆனாலும், இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இணைந்து பேச வேண்டும். இருதரப்பும், பேச்சுவார்த்தை நடத்தினால் இணக்கமான சூழ்நிலையையும் தீர்வையும் எட்ட முடியும். இந்த யோசனையைச் செயல்படுத்த, இலங்கை அரசு தயாராக உள்ளது. தமிழக அரசும், மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார். இந்தச் செய்தியை வெளி யிட்டுள்ள “எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளேடு, “Khurshid felt that for a long-term solution to the problem, there should be a third round of meeting between the fishermen associations of India and Sri Lanka. He appealed to the Tamil Nadu Government to give “final approval” for the fishermen to travel to Sri Lanka for a “face-to-face” meeting” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது. இதையேதான் சில நாட்களுக்கு முன்புகூட மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறும்போது, தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதைப் போலக் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் குர்ஷித் அவர்கள் நேற்றையதினம் “தினமணி” செய்தியாளரிடம் கூறும்போது, “இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு மாநில அரசின் ஆதரவுடன் இலங்கை சென்று திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு உரிய அனுமதியைத் தமிழக அரசு தரவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தித் தமிழக மீனவர்கள் இலங்கை சென்று திரும்ப ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்த உடனேயே இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
எனவே இந்த முக்கியமான பிரச்சினையில் உண்மை யிலேயே தமிழ்நாடு அரசு சுமூகப் பேச்சுவார்த்தைக்குத் தாமதம் செய்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், இதுவரை மத்திய அரசு மீதே பழிசுமத்திக் காலம் கடத்தி வந்ததைப் போலச் செய்யாமல், தற்போதாவது தாமதத்தைத் தவிர்த்து மீனவர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
நமது மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்திருக்கும் அதே நாளில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதாசேனரத்னே என்பவர் கொழும்பில் அளித்த பேட்டியில், “இலங்கை மீனவ சமுதாயத்தினர், இந்திய மீனவ சமுதாயத்தினர், இரு தரப்பினரும் ஒருவர் கடல் பகுதியில் மற்றவர்கள் 70 நாட்கள் மீன் பிடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர். இதற்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறிவிட்டேன். அனைத்து நாடுகளும் சர்வதேச கடல் பகுதி என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளுக்குத்தான் இது பொருந்தும். தமிழக அரசோ அல்லது அவர்களது மீனவர்களோ இந்த விதி முறையை மீற முடியாது. இந்த ஏற்பாட்டை (அதாவது தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியிலும், இலங்கை மீனவர்கள், இந்தியக் கடல் பகுதியிலும் மீன் பிடிக்க) அனுமதித்தால், அது இலங்கையின் வட பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்” என்றெல்லாம் கூறியிருப்பது பிரச்சினையை மேலும் மோசமாக ஆக்குவதாகவும், திசை திருப்புவதாகவும் உள்ளது.
இந்த அமைச்சர்கூடப் பரவாயில்லை. கடந்த வாரம் டெல்லிக்கு வந்திருந்த இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் அளித்த பேட்டி குறித்து இந்த வார “ஆனந்தவிகடன்” இதழ் “இது யார் கொடுத்த துணிச்சல்?” என்ற தலைப்பில் ஒரு தலையங்கமே எழுதியுள்ளது.
அந்தத் தலையங்கத்தில், “எங்கள் நாட்டு வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்கள் அரசின் கடமை. இதற்குமுன் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களைக் கைது செய்தால், உடனே விடுதலை செய்து வந்தோம். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனால், இப்போது இலங்கைச் சிறையில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும் உத்தேசம் இல்லை. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை வாங்கித் தரப் போகிறோம்” - இந்தியா வந்திருக்கும் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், ஒவ்வொரு வார்த்தையிலும் திமிர் தொனிக்க இந்தியத் தலைநகரில் அளித்த பேட்டி இது!
இனப் படுகொலை தொடங்கி, “இந்திய” மீனவர்கள் படுகொலை வரை பல காரணங்களை முன்வைத்து இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற வாதங்கள் வலுப்பெற்றுவரும் நேரத்தில், அந்தக் காமன்வெல்த் மாநாட்டுக்கான அழைப்பிதழை அளிக்க வந்திருக்கும் இந்த இலங்கை அமைச்சர், “இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு பற்றிய மற்ற நாடுகளின் கருத்துகளுக்கும், அவை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கும் தொடர்பு இல்லை” என்று இந்தியாவுக்கும் சேர்த்துச் கருத்துச் சொல்லியிருப்பது உச்சகட்ட அதிர்ச்சி! இந்தியா எந்தெந்த மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும், பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதையெல்லாம் அடுத்த நாட்டில் இருந்து வந்த அமைச்சர் ஒருவர், இந்தியப் பிரதமரின் இல்லத்துக்கு அருகில் அமர்ந்துகொண்டு பேசுகிறார் என்றால், அவருக்கு இந்தத் துணிச்சலைக் கொடுத்தது யார்? மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம்தான் எனில்... வெட்கக் கேடு!” என்று நொந்துகொண்டு “ஆனந்தவிகடன்” எழுதியுள்ளது.
“ஆனந்த விகடன்” இந்த அளவிற்கு வேதனைப்பட்டு தலையங்கம் எழுதியிருக்கிறது என்றால், இந்த மீனவர்கள் பிரச்சினை என்பது தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது வரையிலான இரண்டாண்டுகளில் 400 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போர் முடிவடைந்த பிறகு இந்த நான்காண்டுகளில் 1200 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 1983ஆம் ஆண்டு இலங்கையில் இனப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து 362 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 90 மீனவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2009 மே மாதத்திற்குப் பிறகு 9 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 11 மீனவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் 100 மீனவர்களும், 2011ஆம் ஆண்டில் 500 மீனவர்களும், 2012ஆம் ஆண்டில் 300 மீனவர்களும், 2013ஆம் ஆண்டில் இதுவரை 253 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தாலே, இலங்கை அமைச்சரின் திமிரான பேட்டிக்கும், போர் முடிவுக்கு வருவதற்கு முன்னரும், போர் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கை அரசின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள வேறுபாட்டையும், அவற்றிற்கான பின்னணியையும் புரிந்துகொள்ள முடியும்! இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தமிழக மீனவர்களுக்காக இந்திய அரசும், தமிழக அரசும் நடந்துகொள்ளும் விதத்தையும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் கேரள மீனவர்களுக்காகக் கேரள அரசும், இந்திய அரசும் நடந்துகொள்ளும் விதத்தையும் ஒப்பிட்டு நோக்குவதற்காக ஒரு உதாரணத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவில் நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இத்தாலிக் கப்பல் பாதுகாவலர்கள் எந்தக் காரணமுமின்றி, அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, இத்தாலிக் கப்பலில் பாதுகாவலர்களாக வந்த கடற்படை அதிகாரிகள் இரண்டு பேரைக் கைதுசெய்தனர். அவர்கள் மீது இந்தியச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் கேரள அரசும் திட்டவட்டமாகத் தெரிவித்தன. அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ராஜ்ய ரீதியில் இத்தாலி அரசு பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்தும், அவை வெற்றி அளிக்கவில்லை. இதுதொடர்பாக இத்தாலி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலி அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அம்மையாரும் இத்தாலி அரசு துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
இத்தாலிக் கடற்படையினரால் கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த நிகழ்வில் மத்திய அரசும், கேரள மாநில அரசும் செலுத்திய அக்கறையில் நூறில் ஒரு பங்காவது தமிழக மீனவர்களுக்காகவும் செலுத்திட மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வருமேயானால், பல்வேறு பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுவிடும்.
மேலும் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்தபோது, சிங்களக் கேப்டன் ஒருவர், அடிக்கடி தமிழக மீனவர்களை, தமிழக எல்லைப் பகுதிக்குள்ளேயே வந்து தாக்கி வருவதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், அந்தக் கேப்டனைக் கைது செய்ய நமது கடற்படைக்கு உத்தரவிட்டார். நமது கடற்படை வீரர்களும் சிங்களக் கேப்டனைப் பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர். அதன் பிறகு அந்தக் கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்புக் கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்பப் பெற்றது.
இந்தச் சம்பவத்தை இந்திய அரசும் தமிழக அரசும் நினைவிலே கொண்டு, இந்திராகாந்தி அம்மையார் காலத்திலே எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போலத் தீவிரமான நடவடிக்கை தற்போதும் எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும், இலங்கை அமைச்சர்களும் தங்கள் மனம் போனபடி பேசுவதை நிறுத்திக்கொள்ள முன்வருவார்கள், தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவார்கள்!
தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாகச் சந்தித்து வரும் பிரச்சினைகள் நிரந்தரமான முறையில் தீர்க்கப்பட வேண்டுமென்ற நோக்கில்தான், கடந்த ஆண்டு 12-8-2012 அன்று சென்னையில் “டெசோ” சார்பில் நடைபெற்ற “ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக,
“இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பையும், நிவாரணத்தையும் உறுதி செய்யும்போது, இலங்கைக் கடற்படையினால் இந்திய மீனவர்கள் மீது தொடுக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கடமையாகிறது. இலங்கைக் கடற்படையால் நிராயுத பாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக்கப்படுகின்றன; அவர்கள் பிடித்த மீன்கள் கைப்பற்றப்படுகின்றன. தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டிருந்த கச்சத்தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக்கப்பட்டதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்துகிறார்கள். இந்தக் கொடுமைக்கொரு முடிவுகட்ட, கச்சத் தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின்கீழ்க் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” - என்று நிறைவேற்றப்பட்டதையும் இந்த நேரத்தில் நினைவிலே கொண்டு, இந்திய அரசும், தமிழக அரசும் இந்திய மீனவர்களை சிங்களக் கடற்படையினரின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உடனடியாக இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றினை தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் அமைத்திடவும், அன்னை இந்திராகாந்தி அம்மையாரின் அணுகுமுறையைப் பின்பற்றவும் முன்வர வேண்டுமென்றும், மீனவர் பிரச்சினைக்கு இது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையுமென்பதால் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
அன்புள்ள, மு.க. 26-8-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗