தொகுதி 49 · கடிதம் 3794
பெரியார், காமராசர் பெயரை மறந்த சுதந்திர நாள் உரை!
2013-08-17
உடன்பிறப்பே,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் (15-8-2013) செயிண்ட் ஜார்ஜ்கோட்டை முகப்பில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து “விடுதலை நாள் விழா” உரையாற்றியிருக்கிறார். அந்த உரையில் முதலமைச்சர் பல்வேறு புதிய அறிவிப்புகளையெல்லாம் செய்யப் போகிறார்; உரை தயாராகிக் கொண்டிருக்கிறது; டெல்லியில் பிரதமர் ஆற்றப் போகிற உரையை மிஞ்சக் கூடிய அளவிற்கும், இந்தியாவையே திரும்பிப் பார்த்திடச் செய்திடும் வகையிலும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிரடியான முன் அறிவிப்புகளையெல்லாம் கொண்டு, அவரது உரை அமையும் என்றெல்லாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது; அ.தி.மு.க. ஆதரவுப் பத்திரிகைகளெல்லாம் செய்தி வெளியிட்டு மக்களின் ஆர்வத்தைத் தூண்டின. ஆனால் முதலமைச்சரின் உரையைப் பார்க்கும்போது; கடந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் அரசுத் துறைகளில் என்னென்ன பணிகள் ஆற்றப்பட்டதாகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டதோ, அதன் தொகுப்பாகத்தான் இருக்கிறதே தவிர வேறல்ல; உரையின் முடிவில் மட்டும் ஒரேயொரு அறிவிப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக ஆளுங்கட்சிக்கு வேண்டிய நாளேடுகளில் எல்லாம் ஒரு பக்க விளம்பரங்கள்! அதிலும் சில நாளேடுகளுக்கு முதல் பக்கத்திலேயே ஒரு பக்க விளம்பரங்கள்! கழக ஆட்சிக் காலத்தில் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக கால் பக்கத்தில் தான் விளம்பரம் வெளியிடுவார்கள். தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்த ஒரு பக்க விளம்பரத்திலே என்ன செய்தி தெரியுமா? எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த அதாவது “தமிழக முதல் அமைச்சர் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார்” என்ற அறிவிப்பைத் தவிர அதிலே வேறு ஒன்றும் இல்லை. இந்த ஒரு பக்கத்தோடு விளம்பரம் முடியவில்லை. மற்றொரு அரைப் பக்கத்திலே முதல் அமைச்சரின் முழு உருவப் படத்தோடு மற்றுமொரு விளம்பரம். அது என்ன தெரியுமா? போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி. எந்த ஆண்டிலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததில்லை. திடீரென்று இந்த ஆண்டு அப்படியொரு நிகழ்ச்சி. அதற்கு அரைப் பக்க விளம்பரங்கள்! டெல்லியில் குடியரசுத் தலைவர் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி நடைபெறும்போது, நம்முடைய மாநிலத்தில் அப்படியொரு நிகழ்ச்சி இல்லாமல் இருக்கலாமா என்பதற்காக திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி; நிகழ்ச்சி நடைபெற்றது இரண்டு நிமிடம்; அதற்கு அனைத்து ஏடுகளிலும் அரைப் பக்க விளம்பரங்கள். மக்களுடைய வரிப்பணம்தானே? இரண்டு பக்கங்களுக்கு விளம்பரம் கொடுத்தால்கூட யாரும் கேட்க முடியுமா?
இந்த ஆண்டு இந்தப் புதுமைகள் மாத்திரமல்ல; ஒவ்வொரு ஆண்டும் கோட்டையிலே கொடியேற்றுகின்ற நிகழ்ச்சி காலை 8.30 மணி அளவிலேதான் நடைபெறும். ஆனால் என்ன காரணத்தாலோ கொடியேற்றுகின்ற நிகழ்ச்சி காலை 9 மணிக்குத்தான் நடைபெற்றது. இதற்கு முன்பு ஒருமுறை, அதுவும் அ.தி.மு.க. ஆட்சியிலேதான் “ராகு காலம்” என்பதால், அந்த நேரத்தில் முதலமைச்சர் கொடியேற்றுவது சரியல்ல என்று பஞ்சாங்கப்படி நல்ல நேரம் பார்த்து மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
கோட்டையிலே கொடியேற்றுகின்ற நேரத்தில் மாத்திரம் மாற்றம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் மாலையில் தமிழக ஆளுநர் முக்கியப் பிரமுகர்களுக்கு அவருடைய இல்லத்தில் வரவேற்றுத் தேநீர் விருந்தளிப்பார். அதிலும் இந்த ஆண்டு முதன்முறையாக மாற்றம். மாலையிலே நடைபெறும் தேநீர் விருந்தை, காலை 11 மணிக்கு என்று மாற்றிவிட்டார்கள். அதற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த விருந்தில், பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்றும் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மா.பா. பாண்டியராஜன், சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர் என்றும் “தினமணி” எழுதியுள்ளது.
25-12-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அரசு அலுவலர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்கள் மக்களுக்கான நற்பணி ஆற்றுவதிலும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு ஊழியர்கள் கையாண்ட புதிய உத்திகள், முயற்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று “நல் ஆளுமை விருது” என்ற ஒன்றினை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா முடிவெடுத்து, அந்த அறிவிப்பினை வெளியிட்டார். 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பதக்கமும் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் இது வழங்கப்படும். தமிழக அளவில் முதல்முறையாக அரசு நிர்வாகத்தில் ஊழியர்களுக்கு இடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன்மாதிரித் திட்டத்துக்கு, விருதுகளுக்காக 6 லட்ச ரூபாயும், அவற்றைத் தேர்ந்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் 8 லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆண்டுக்கு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று ஏடுகளில் எல்லாம் செய்தி வந்தது.
ஆனால் 2012ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் அறிவித்ததையொட்டி யாருக்கும் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை என்று “தினமணி”யே குறிப்பிட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்றோ எந்தவொரு அரசு அலுவலருக்கும் இரண்டாவது ஆண்டாக இந்த விருது வழங்கப்பட வில்லை. ஆனால் மூன்று அரசு நிறுவனங்களுக்கான நல் ஆளுமை விருது வழங்கப்பட்டதாகவும், அந்த விருது தனி நபருக்கு இந்த ஆண்டும் இல்லை என்றும் செய்தி வந்துள்ளது. ஒருவேளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது, எந்த அலுவலருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
அடுத்து, சுதந்திர தின விழா போன்ற முக்கியமான விழாக்களில் உரையாற்றும்போது, “புரோடகால்” என்பது மிகவும் முக்கியமாகும். அதுவும் முதலமைச்சர் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். முதல் அமைச்சர் இந்த முறை உரையாற்றும்போது பிரமுகர்களை விளிக்கையில், பேரவைத் தலைவரை விளித்து விட்டு, அதற்கடுத்து அமைச்சர்களை விளித்து விட்டு, அதற்கடுத்துதான் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் அவர்களே என்று விளித்திருக்கிறார். “புரோடகால்”படி, தலைமை நீதிபதியை விளித்து விட்டுத்தான் அமைச்சர்களை விளித்திருக்க வேண்டும். இனியாவது கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கிறேன். கடந்த ஆண்டு இதைவிட மோசம்; பேரவைத் தலைவரை அழைத்து விட்டு, அமைச்சர்களை விளித்து விட்டு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விளித்து விட்டு, அதற்குப் பிறகுதான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதியரசரை விளித்தார். இதைக் கூடக் கவனிக்காமல் முதல் அமைச்சரின் உரை தயாரிக்கப்பட்டு, அவரைப் படிக்க வைத்திருக்கிறார்களே என்றுதான் வேதனையாக உள்ளது.
நேற்றையதினம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை, கடந்த ஆண்டு அவர் ஆற்றிய சுதந்திர உரையின் மறு பிரதியாகவே ஒருசில மாற்றங்களோடு அமைந்துள்ளது என்று கருதும்படியாக உள்ளது. உதாரணமாக கடந்த ஆண்டு முதல் அமைச்சர் உரையில், தொடக்கத்தில், “ஆங்கிலேய அடிமைத்தளையை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. நெற்கட்டும் செவல் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், தில்லையாடி வள்ளியம்மை, வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமணிய சிவா, தீரன் சின்னமலை, மாவீரன் அழகு முத்துக்கோன், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் என இந்திய விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தியாக சீலர்களை போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டு நேற்றையதினம் முதலமைச்சர் ஆற்றிய உரையிலும், “சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பாளையக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமணிய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார், மாவீரன் வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும் உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்துள்ளனர்” என்று பேசியிருக்கிறார்.
சுதந்திர தின உரை என்பதால் அதற்காகப் பாடுபட்டவர்களின் பெயரைச் சொல்ல வேண்டுமென்பதற்காக கடந்த ஆண்டு சொல்லப்பட்டதையே இந்த ஆண்டும் சொல்ல நேர்ந்தது என்று சமாதானம் கூறலாம். ஆனால் எனக்குள்ள வருத்தம் எல்லாம் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் போன்ற முக்கியமான தலைவர்களின் பெயர்கள் இந்த ஆண்டு முதல்வரது உரையில் விடுபட்டது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறோ என்றுதான் எண்ணிடத் தோன்றுகிறது.
தொடர்ந்து முதலமைச்சரின் கடந்த ஆண்டு உரையிலும், இந்த ஆண்டு உரையிலும் பல்வேறு துறைகளின் மூலமாக இந்த அரசின் சார்பில் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் திட்டங்களின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. பொதுவாக விடுதலை நாள் விழா உரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியின் சார்பில் செய்யப்பட்ட சாதனைகளைத் தொகுத்து கூறுகின்ற ஒன்றாக அமைவது இயற்கைதான். அதைப்போலத்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிதிநிலை அறிக்கையின் போதும், மானியக் கோரிக்கைகளின் மீதும் நடைபெற்ற விவாதத்தின்போது கூறப்பட்டவைகள் தான் பெரும்பாலும் முதலமைச்சரின் இந்த ஆண்டு சுதந்திர தின உரையிலும் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக 21-3-2013 அன்று பேரவையில் படிக்கப்பட்ட அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் பக்கம் 49இல் 2011ஆம் ஆண்டு, “இந்த அரசு நிர்வாகப் பொறுப்பேற்ற பின்னர் 51,757 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. அதையேதான் முதலமைச்சரின் நேற்றைய உரையிலும், “கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து இந்த ஐந்து மாத காலத்தில் ஒரு ஆசிரியரைக்கூட இவர்கள் ஆட்சியிலே நியமிக்கவில்லை என்பதை முதல்வரின் உரையிலிருந்தே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வைக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம்
3-4இல் 2011-2012இல், 49,869 ஆசிரியர் பணி இடங்களையும், 2012-2013இல் 13,756 ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப ஆணையிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த இரண்டையும் கூட்டினாலே, 63,125 ஆசிரியர் பணி இடங்கள் என்றாகிறது. ஆனால் 51,757 ஆசிரியர்கள் என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். எனவே ஆணையிட்ட இடங்களைக் கூட இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் 2011-2012 என்று கூறும்போது, 2011ஆம் ஆண்டு மே திங்கள் வரை தி.மு.கழக ஆட்சி தான் தமிழகத்திலே இருந்தது என்பதையும், அந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் காரணமாகத்தான் 49,369 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப முடிந்திருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதைக் கழித்து விட்டால், இந்த அரசின் முயற்சி காரணமாக வெறும் 2,388 ஆசிரியர்களை மட்டுமே புதிதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றுதான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இதுகுறித்து உண்மை நிலையை அரசுதான் தெளிவுபடுத்திட வேண்டும்.
மற்ற துறைகளின் மூலமாகச் செய்யப்பட்டு வருவதாகச் சொல்லிக் கொள்ளும் பல திட்டங்களைத்தான் அந்த உரையிலே முதலமைச்சர் வரிசைப்படுத்தி யிருக்கிறார்.
“சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது”
என்று கடந்த ஆண்டு விடுதலை நாள் விழா உரையிலே குறிப்பிட்ட அதே முதலமைச்சர் நேற்றைய உரையிலும், “சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் ஓய்வூதியத்தை
1000 ரூபாயாக எனது அரசு வழங்கி வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதே வகையில்தான் கடந்த ஆண்டு கூறப்பட்டவைகளைத்தான் இந்த ஆண்டிலும் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்.
அடுத்து முதலமைச்சர் தனது உரையில் “கச்சத் தீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசியிருக்கிறார். அதைத்தான் மாலைப் பத்திரிகை ஒன்று கூட முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இதேபோல்தான் 1991ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய உரையை அனைத்து நாளேடுகளும் வெளியிட்டபோது அதற்குத் தலைப்பு “கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சூளுரை” என்பதாகும். இருபதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதற்குப் பிறகு மூன்று முறை முதலமைச்சராக இருந்துவிட்டார். 15-8-1991 அன்று ஜெயலலிதா என்ன பேசினார்? “கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது” என்று முழங்கிய ஜெயலலிதாதான், தற்போது “கச்சத் தீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
இறுதியாக முதலமைச்சர் விடுதலை நாள் விழா உரையில் செய்துள்ள ஒரே அறிவிப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தையும், குடும்ப ஓய்வூதியத்தையும் ஓரளவிற்கு உயர்த்தியிருப்பதுதான்! அதைக்கூட அவர் கடந்த ஆண்டு உரையிலிருந்துதான் “காப்பி” அடித்திருக்கிறார். ஆமாம், கடந்த ஆண்டு அவர் ஆற்றிய உரையிலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தையும், குடும்ப ஓய்வூதியத்தையும் ஓரளவுக்கு உயர்த்தினார். இந்த ஆண்டு அதைவிட மேலும் உயர்த்தியிருக்கிறார். எனவே இதுகூட வழக்கமாகச் செய்யப்பட்டு வரும் அறிவிப்புதான்.
ஆக மொத்தத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட முதல் அமைச்சரின் சுதந்திர தின உரை, எப்படி தற்போது விலை மிகவும் உயர்ந்துள்ள வெங்காயத்தை உறிக்க உறிக்க அதில் ஒன்றும் இருக்காதோ, அது போலவே இந்த உரையிலும் ஊன்றிப் படிக்கப் படிக்க உப்பும் இல்லை, இனிப்பும் இல்லை, வெறும் காரம் மட்டுமே இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் வெங்காயத்தை உறிக்க உறிக்கக் கண்ணீர் வருவதைப்போல, இந்த உரையைப் படித்தாலும், நாட்டு மக்களின் நிலையை நினைத்துக் கண்ணீர்தான் வரும்!
அன்புள்ள, மு.க. 17-08-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗