உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3795

இலங்கையை, இந்தியா இனியாவது புரிந்துகொள்ளுமா?

2013-08-19

உடன்பிறப்பே,

இலங்கையில் நடைபெறும் “காமன்வெல்த்” நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்றையதினம் நான் வெளியிட்ட அறிக்கையைப் படித்திருப்பாய்! அதில் “இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் இராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண்ணோட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை” என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்த வரலாற்று ரீதியான நிகழ்வுகளை நினைவுபடுத்தவே இந்தக் கடிதம்.

1920ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து மலையாளிகள் கொழும்புக்குச் செல்லத் தலைப்பட்டு, பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். 1920இல் 1000 என்ற அளவிற்கு இருந்த மலையாளிகள் 1930இல் 30 ஆயிரம் என்ற அளவிற்குப் பெருகினர். 1935இல் மலையாளிகளுக்கு எதிராகச் சிங்களவர்கள் குரல் கொடுத்தனர். சிங்களவரின் வேலை வாய்ப்பை மலையாளிகள் கெடுப்பதாக ஏ.இ. குணசிங்கா பேசினார். 1939இல் கொழும்பு சென்ற பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் இடதுசாரிகளிடையே பிணைப்பை ஏற்படுத்த முயன்றார். 1-5-1939 அன்று வெள்ளவத்தையில் நூற்பாலை ஒன்றில் அவர் உரையாற்றியபோது சிங்களவர் குழப்பம் ஏற்படுத்தினர். இவற்றின் விளைவாக, 1940களில் மலையாளிகள் கொழும்பை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

அதே 1939இல் 15 ஆயிரம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு ஏ.ஈ. குணசிங்கா முன்மொழிந்ததை, தமிழ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கை சட்டசபை தீர்மானமாக்கியது. அரசுப் பணிகளில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களை நீக்குமாறு டி.எஸ். சேனநாயகா முன்மொழிந்ததை, தமிழ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டசபை தீர்மானமாக்கியது.

26-7-1939 அன்று கொழும்பு காலிமுகத் திடலில் நேரு பேசிய பொதுக் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த, ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் சிங்களவர்கள் புகுந்து எதிர் முழக்கங்களை எழுப்பினர். சிங்களவர்களின் இந்தச் சலசலப்பைக் கண்டு நேரு அஞ்சவில்லை. மேடையை விட்டு இறங்கி, குழப்பம் ஏற்படுத்த முயன்ற குண்டர்களை நோக்கிச் சென்றார். கூட்டத்தில் ஏற் படுத்தப்பட்ட குழப்பத்தின் விளைவாக நேருவால் தொடர்ந்து பேச இயலாமல் போய்விட்டது. - 1987இல் இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாட்டில் கையொப்பமிட்ட இராஜீவ் காந்தி புறப்படுமுன், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த மரியாதை அணிவகுப்பில், கடற்படையைச் சேர்ந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் துப்பாக்கிக் கட்டையால் இராஜீவ் காந்தியைத் தாக்கினான். காயங்களின்றி இராஜீவ் காந்தி தப்பினார். ராஜீவ் காந்தியைத் தாக்கிய அந்தக் கடற்படைச் சிப்பாய் அண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், தான் இராஜீவ் காந்தியைத் தாக்கியதற்காக வருத்தப்படவில்லை என்று பெருமையாகக் கூறினான் என்றால், எந்த அளவிற்குச் சிங்களவர் உள்ளத்தில் இந்தியர்கள் மீது வெறுப்புணர்வு வேரூன்றிப் பரவி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

2000ஆம் ஆண்டு முதலாக நார்வே நாடு முன்னெடுத்து, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, 2002ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு உடன்பாடும் போர் நிறுத்த உடன்பாடும் ஏற்பட்டன.

2008 ஜனவரி 8ஆம் நாள் இலங்கை அரசு இந்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறித்தது. நார்வே சார்ந்த நடுநிலையாளரையும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளரையும் சிங்கள அரசு இலங்கையை விட்டு வெளியேற்றியது.

தமிழருக்கு உறுதிமொழிகளை வழங்குவது, தமிழரோடு உடன்பாட்டில் ஒப்பமிடுவது, பின்னர் உடன்பாட்டில் இருந்து விலகுவது, அதை மதிக்காமல் மீறி நடந்து கொள்வது என்பது சிங்களவர்களின் பாரம்பரியமான பழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே உறவுகள் மோசமடைவது மட்டுமன்றி, இந்த இரு இனங்களுக்கிடையே நல்லெண்ணமும் இணக்கமும் ஏற்படுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

1925ஆம் ஆண்டு முதலே, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் செய்யப்பட்ட உடன்பாடுகள் ஒவ்வொன்றையும் மதிக்காமல் மிதித்து மீறிய துரோக வரலாறு சிங்களவர்க்குச் சொந்தமானது. அந்த விவரத்தையும் இங்கே சுருக்கமாகத் தருகிறேன். - 1925ஆம் ஆண்டு சூன் 28ஆம் நாள் இலங்கைத் தமிழர் மகாசன சபை சார்பாக வைத்திலிங்கம் துரைசாமியும், இலங்கைத் தேசிய காங்கிரசின் ஆட்சிக்குழு சார்பாக சி.ஈ. கொரியாவும் யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட “மகேந்திரா உடன்பாட்டை” சிங்களவர் ஒருதலைப்பட்சமாக முறித்தனர்.

பிரிட்டிஷார் வழங்கிய அரசியலமைப்பில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்புக்குரிய 29ஆம் பிரிவுக்கு முரணாக, 1948 இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1949 இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் இரண்டையும் இயற்றி, மலையகத் தமிழர் பத்து இலட்சம் பேரின் குடியுரிமையை சிங்களவர் பறித்தனர்.

1930களில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும் எனப் பேசியவர் ஜெயவர்த்தனா. 1954இல் கொக்குவில் இந்துக் கல்லூரி வளாகத்தில் சிங்களத்தையும், தமிழையும் ஆட்சிமொழியாக்குவேன் எனச் சூளுரைத்தவர் பிரதமர் ஜான் கொத்தலாவலை. இந்த இருவரும் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, அவர்கள் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக, 1955இல் களனி என்ற இடத்தில் நடத்திய கட்சியின் மாநாட்டில் “சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி” என்று தீர்மானம் இயற்றியது.

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாகப் பிரிட்டிஷார் வழங்கிய அரசியல் அமைப்பின் 29வது பிரிவிற்கு முரணாகச் “சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி” எனும் சட்டத்தை 1956 சூன் 5ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர், இலங்கைச் சுதந்திரக் கட்சியைச் சார்ந்த பிரதமர் பண்டார நாயகா.

சூலை 26ஆம் நாள் செல்வநாயகத்துடன் பண்டாரநாயகா ஏற்படுத்திய பிரதேச சபைகள் அமைக்கும் உடன்பாட்டை, 1958 மே மாதத்தில் சிங்களத் தீவிரத் தேசியவாதிகளின் தொல்லை தாங்காமல் ரத்து செய்தவர் அதே பிரதமர் பண்டார நாயகா.

ஐந்து இலட்சம் மலையகத் தமிழரின் விருப்பத்தைக் கேட்காமலேயே, 1964இன் சிறீமாவோ சாஸ்திரி உடன்பாட்டை மதிக்காமல், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தியவர் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா.

1965 மார்ச் 25ஆம் நாள் செல்வநாயகத்துடன் எட்டிய அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை, சிங்களத் தீவிரத் தேசியவாதிகளின் எதிர்ப்பு ஊர்வலங்களுக்குப் பயந்து (அதில் 8-1- 1966 அன்று புத்தபிக்கு ஒருவர் கொல்லப்பட்டார்) ரத்து செய்தவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த பிரதமர் டட்லி சேனநாயகா.

தமிழர்களின் பங்களிப்பின்றி, பிரிட்டிஷாரின் ஒப்புதல் இன்றி, ஒருதலைப்பட்சமாகக் குடியரசு என இலங்கையை அறிவிக்கும் அரசியலமைப்பை 1972 மே 22இல் உருவாக்கியவர் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகா. ஒரு மொழி இருநாடு, இரு மொழிகள் ஒரு நாடு எனச் சோசலிசவாதியாய் 1956இல் நாடாளுமன்றத்தில் பேசிய கெல்வின் ஆர்.டி. சில்வா, பின்னர் சிங்கள இனவெறியராகிப் புத்த மதத்துக்கு முதலிடம், சிங்களமே ஆட்சி மொழி என ஆட்சியில் தமிழர் பங்கு பெற முடியாமல் அரசியல் அமைப்பு சாசனத்தைத் தயாரித்தார்.

ஆட்சி அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் என்ற ஆட்சி முறையைப் புகுத்திய 1978இன் அரசியலமைப்பைத் தயாரித்தவர் பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. சிங்கள அரசுக்கு நெருக்கமான வர்கள்தான் 1981இல் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாண நூலகத்தைக் கொளுத்தினர். 1983இல் இனக் கலவரத்தை அரசே திட்டமிட்டு நடத்தியதால் தமிழர் பல்லாயிரக்கணக்கில் நாட்டை விட்டு ஓடினர்.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தூதுவர் 3-1-1984 முதலாகக் கொழும்புக்குப் பலமுறை சென்று அரசுடனும் தமிழர் தரப்புடனும் கலந்து தயாரித்த வரைவுகளை குடியரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, அனைத்துக் கட்சி மாநாட் டின் பார்வைக்கு அனுப்பி, அம்மாநாடு தந்த கருத்துரைகளை முற்றிலும் புறக்கணித்து (26 ஆகஸ்ட் 1984) பிரதமர் இந்திரா காந்தியின் அமைதி முயற்சியை முறியடித்தார்.

பிரதமர் இராஜீவ் காந்தி கூட்டிய திம்புப் பேச்சு வார்த்தைகள் இலங்கை அரசின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமையால் தோல்வி கண்டன (17 ஆகஸ்டு 1985).

1986 சூன் 25இல் கொழும்பில் அனைத்துக் கட்சி மாநாடு, 18 நவம்பர் 1986இல் பெங்களூருவில் இராஜீவ் - ஜெயவர்த்தனா உச்சி மாநாடு யாவும் இலங்கை அரசின் பிடிவாதக் கொள்கையால் தோல்வி கண்டன.

1987 சூலையில் இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு கொழும்பில் ஒப்பமிடப்பட்டது. இலங்கையின் வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் மரபு வழித் தாயகம் என்ற கொள்கை அந்த உடன்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வடகிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சி அலகாக இணைந்து, ஒரே மாகாண சபையின்கீழ், ஒரே ஆளுநர், ஒரே முதல்வர், ஒரே அமைச்சரவையின்கீழ் இயங்கும் என உடன்பாடு ஏற்றுக் கொண்டது.

இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாட்டின் விளைவாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கும் இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் 14 நவம்பர் 1987இல் அமைந்தது. தற்போது அந்தத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்து, ஆட்சி அதிகார உரிமைகள் இல்லாத மாகாண அரசை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நான் இங்கே பட்டியலிட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளிலிருந்து தமிழர்களுடனும் இந்திய அரசுடனும் கொண்ட உடன்பாடுகள் அனைத்தையும், சிங்களவர் ஒருதலைப்பட்சமாக உடைத்தெறிந்த நம்பகத் தன்மையற்ற போக்கினை உணர்ந்து கொள்ளலாம்.

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நாம் ஏதோ உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே புகார் கூறுவதாகவோ, அவரைத் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போர்க்குற்றவாளியாக உலகின் முன் நிறுத்திச் சர்வதேச விசாரணை வேண்டுமென்று அடிப்படையின்றி நினைப்பதாகவோ கருதிடத் தேவையில்லை. சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பி என்று அழைக்கப்படுபவரும், தற்போதைய பிரதமரின் அருமைத் தந்தையாருமான லீ குவான் யூ அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஒரு பேட்டியில் என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்றால்;

“இலங்கையில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ, அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன்மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஆனால் தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது. இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முயலுகிறார்கள். இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு. நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.”

- என்றெல்லாம் திட்டவட்டமாக லீ குவான் யூ தெரிவித்திருக்கிறார்.

1983 ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்திலேயே, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்று தெரிவித்ததை இன்றைய மத்திய அரசு மறந்து விடக்கூடாது.

இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் யுத்தங்களின் போது, இலங்கை அரசு, இந்தியாவின் பக்கம் நிற்கவில்லை. இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்றது. ஈழத் தமிழர்கள்தான் உணர்வுப்பூர்வமாக இந்தியாவை ஆதரித்தனர். இலங்கை அரசும், சிங்கள இனமும் இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் எதிரான செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும், நட்பு நாட்டுக்கான எந்த குணாதிசயங்களையும் இலங்கை கொண்டிருக்கவில்லை என்பதையும் இந்திய மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டு; எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி இலங்கை அரசைத் தட்டிக் கேட்கவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு உறுதியான அழுத்தத்தைத் தரவும் முன்வரவேண்டும். இந்தியாவின் தரப்பில் மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி எத்தகையதாயினும், அதைத் தனது சாகசச் சாதனையாகவே இலங்கை அரசு எடுத்துக் கொள்ளும் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இந்தியா பின்னர் வருந்த நேரிடும்!

அன்புள்ள, மு.க. 19-08-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗