உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3793

மத்திய அரசு தருவதை மாநில அரசு மறுப்பதா?

2013-08-14

உடன்பிறப்பே,

2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தைத் தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால்தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.

முக்கியமான இந்த நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டம் என்னதான் ஆயிற்று என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.பெர்னாண்டஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட நேரத்தில், “Banks were refusing to finance the project in the absence of clear-cut information from the State Government about its stand and a delay in clearing encroachments” என்று தெரிவித்திருக்கிறார். அதாவது மாநில அரசு அதன் நிலை பற்றித் தெளிவாகத் தெரிவிக்காததாலும், நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலே ஏற்படும் தாமதத்தைப் போக்காததாலும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்காக நிதி அளிக்க மறுத்து வருகின்றன என்று சொல்லியிருக்கிறார்.

மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து ஒப்புதல்பெற்ற பின், திட்டப் பணிகள் துவங்கப்பட்டன. ஆட்சி மாறிய பின், மாநில அரசின் துறைகளில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நில ஆர்ஜிதம் மற்றும் பாதிக்கப்பட்டோர்க்கான மறுவாழ்வுப் பணிகளில், மாநில அரசிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு இல்லை. இதற்குக் காரணம் என்னவென்றும் தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஜனவரியில், பொதுப் பணித்துறையின் நீர்ஆதார அமைப்பின், தலைமைப் பொறியாளர் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சில பணிகளை மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெறவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் எந்த நியாயமும் இல்லை. உள்நோக்கம் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது நலனுக்கு எதிராக உள்ளது. இந்தத் திட்டத்துக்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதுபோல உள்ளது. எனவே, தலைமைப் பொறியாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அதற்குத் தடை விதிக்க வேண்டும்; மேம்பாலத் திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தி, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்திகளைத் தொடர்ந்து கடந்த இரண்டு மூன்று நாட்களாக “டைம்ஸ் ஆப் இந்தியா”, “இந்து”, “தினகரன்”, “தினத்தந்தி”, “தினமணி”, “தினமலர்” போன்ற நாளேடுகளில் 1,815 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ் பறக்கும் சாலை திட்டத்தையே கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், செயலாக்கம் நிறுத்தப்பட்டு, அதனால் ஏற்படுத்தப்பட்ட தாமதத்திற்காகக் காண்ட்ராக்டர் அதிக இழப்பீடு கேட்பதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்படிப்பட்ட முடிவினை எடுக்கும் நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் தமிழகத் தலைநகரிலே நிறைவேற்றப்பட வேண்டிய இவ்வளவு பெரிய திட்டம் கைவிடப்பட்டு விடுமோ, பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட திட்டம் ஆயிற்றே, இந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுத் தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குப் பெரும் பயன் ஏற்படுமே என்று அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை. ஏன் இங்கே ஒரு அரசு செயல்படுவதாகவே தெரியவில்லை.

எவ்வாறு சேது சமுத்திரத் திட்டத்திற்கு மூடு விழா நடத்த எண்ணுகிறார்களோ - எப்படிப் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை மூன்றாண்டுக் காலமாக இழுத்து மூடி வைத்திருக்கிறார்களோ - பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களோ - எப்படிச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும், பாவேந்தர் ஆய்வு நூலகத்தையும் சரியாக இயங்கவிடாமல் செய்திருக்கிறார்களோ - அதைப் போலவே இந்த மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்திட அ.தி.மு.க. ஆட்சியினர் நினைக்கிறார்கள். இந்தச் செய்தியினை வெளியிட்ட “தினத்தந்தி” நாளேடே, “சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 1,815 கோடியில் செயல்படுத்தப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ் பறக்கும் சாலைத் திட்டம் முற்றிலும் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது. பணிகளை மேற்கொள்வதில் உண்டான கால தாமதத்திற்கு காண்ட்ராக்டர் 872 கோடி ரூபாய் அளவுக்கு அதிக இழப்பீடு கேட்பதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்தைக் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி தொடங்கியது. எக்ஸ்பிரஸ் சாலைக்கான ராட்சதத் தூண்கள் ஒவ்வொன்றாக எழுப்பப்பட்டன. மொத்தம் 889 தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அதில் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டு விட்டது. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15 தூண்களும் ஆற்றில் நீரோட்டத் தன்மையைப் பாதிக்கும் என்று சொல்லி, தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடை விதித்தது.”

“ஓராண்டு காலமாகப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. மொத்த திட்டப் பணியில் 30 சதவீதத்தை முடித்துவிட்டதாகவும், ரூ.500 கோடி செலவு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலை ஆணையத்திற்கு 872 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க விருப்பமில்லை. எனவே இந்தத் திட்டத்தை முற்றிலும் கைவிட்டுவிடலாமா என்ற முடிவுக்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஓரிரு நாளில் வெளியிடும் அபாயம் உள்ளது”

“இந்தத் திட்டம் கைவிடப்பட்டால் ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதோடு சென்னைத் துறைமுகத்தின் வருவாய் அடியோடு குறையும். தற்போது ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர்களை தென் மாவட்டங்களிலிருந்து கொண்டுவரும் டிரக்குகள் சென்னை புறவழிச் சாலை, மதுரவாயல், மாதவரம், புழல், நூறடி சாலை வழியாகத் துறைமுகத்தை வந்தடைகின்றன. அதேபோல் வட மாவட்டங்களில் இருந்து வரும் டிரக்குகள், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ரோடு, எண்ணூர் நெடுஞ்சாலை வழியாகத் துறைமுகத்திற்கு வருகின்றன. மீஞ்சூர், மாதவரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த டிரக்கு வண்டிகள் ஊர்ந்தபடிதான் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரிக்கிறது. மணலி நெடுஞ்சாலையில் இருந்து துறைமுகத்தை வந்தடைவதற்குச் சில நேரங்களில் டிரக்கு வண்டிகளுக்கு இரண்டு நாள்கூட ஆகிவிடுவதுண்டு. இதன் காரணமாகக் கால தாமதம் ஏற்படுவதுடன் எரி பொருளும் வீணாகிறது என்பது டிரக்கு வண்டி உரிமையாளர்களின் தொடர் குற்றச்சாட்டாகும். துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலை தான் மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இந்தத் திட்டம் கைவிடப்படும் அபாயம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “உகந்த சூழ்நிலை வந்தால் இந்தத் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்” என்று “தினத் தந்தி” இவ்வாறு விரிவாக வெளியிட்டுள்ள செய்தியைத்தான் மற்ற நாளிதழ்களும் பக்கம் பக்கமாக எழுதிப் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் நல்ல திட்டம் ஒன்று கைவிடப்பட்டு விடுமே; அதனால் சென்னை மாநகருக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விடுமே என்று பதற்றத்தை வெளியிட்டுள்ளன..

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் இது பற்றிக் கூறும்போது, “It was the “motivated, tainted” action of the State Government which had led to the situation of stalling of the project work” என்று தெரிவித்திருக்கிறது. இந்தத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவோடு இணைக்கப்பட்ட மற்றொரு ஆவணத்தில் தமிழகத்திலே உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்குத் தேவையான நிலத்தைப் பெறுவதில் எப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன என்பதைத் தெரிவித்து, அந்த இடர்ப்பாடுகள் தாமதமின்றித் தீர்க்கப்படாதவரை, தற்போதுள்ள திட்டங்களை நிறைவேற்று வது மிகவும் சிரமம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக “இந்து” நாளேட்டில் எழுதியிருக்கிறார்கள். இத்தகைய செயற்கையான பிரச்சினைகளால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் புதிய திட்டங்களை எடுத்துக்கொள்ளத் தயங்குகிறார்களாம். மேலும் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை ஒதுக்குவது பற்றித் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கூறும்போது, “மாநில அரசு தனது ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, அதன்படி, உதவிட முன்வராதவரையில், மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்க இயலாது” என்று தெரிவிப்ப தாகவும் அதே “இந்து” இதழ் எழுதியிருக்கின்றது.

மதுரவாயல் - துறைமுகம் சாலையை நம்பி, ஏராளமான நிறுவனங்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சென்னைத் துறைமுகம்; திருப்பெரும்புதூர் அருகே 3,600 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய “கண்டெய்னர் டெர்மினலை” அமைக்கத் திட்டமிட்டிருந்தது. மேலும் 500 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு உலர் துறைமுகப் பணிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இரண்டு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதாம். இந்தச் செய்தியினை “இந்து” நாளிதழில் ஆனந்த் என்ற செய்தியாளர், “Two Chennai Port Trust Projects in Limbo” என்று எழுதியிருக்கிறார்.

சென்னை துறைமுகக் கழகத்தின் அதிகாரி ஒருவர், “The stoppage of Maduravoyal Project is ruining us. We will be losing crores of rupees every year” என்று கூறியிருக்கிறார். இந்தத் துறையின் மத்திய அமைச்சர் தம்பி ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், “மதுரவாயல் சாலைத் திட்டம் மாநில அரசினால் தடை செய்யப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கும், மாநகரத்திற்கும் அது ஒரு முக்கியமான திட்டம். அந்தத் திட்டத்தை விரைவுபடுத்தும்படி மாநில அரசைப் பலமுறை கேட்டுக் கொண்டோம். அண்மையில் இந்தத் துறையின் மத்திய அரசு செயலாளர் மாநில தலைமைச் செயலாளரிடமும் இதுபற்றி விவாதித்தார்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை நீக்கக்கோரி மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கு 12-8-2013 அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் அகர்வால், நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு “இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குப் பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அவர்கள் அவகாசம் கேட்டு வருகின்றனர். இது கண்டிக்கத் தக்கது. வரும் 19ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கப்படுகிறது. அன்று அரசு பதில் அளிக்க வேண்டும். தவறினால் நாங்களே முடிவெடுப்போம்” என்று கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சென்னை துறைமுகக் கழகத்தின் தற்போதைய தலைவர், அதுல்ய மிஸ்ரா, ஐ.ஏ.எஸ்., அவர்கள் கூறும்போது, “The port will take a big hit if the proposed 19 km Port - Maduravoyal project is to be dropped. Any more delay or cancellation of the project would put in jeopardy projects worth Rs.4,000 crore the port had embarked on, keeping the elevated highway in mind. It was the expected lifeline for the port. It was meant to be the solution for congestion faced by containers”. “The project was compared to other similar projects such as Mumbai trans-harbour project and the Hosur Road elevated expressway. Besides decongesting city roads, the project was to reduce the distance travelled by container trucks from 52 km to 33 km.” என்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே வேதனையோடு தெரிவித்திருக்கிறார். மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக “டைம்ஸ் ஆப் இந்தியா” (10-8-2013) வெளியிட்ட செய்தியில் இந்தத் திட்டம் செயலாக்கம் பெற்றால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்; ஒவ்வொரு நாளும் தற்போது 30 விபத்துகள் அங்கே நடைபெறுகின்றன; இந்தப் புதிய திட்டம் வருமானால், இந்த விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது. இதைப் போலவே வியாபார நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் துறைமுகத்திற்குச் செல்வதற்கும், தங்கள் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் இந்தப் புதிய திட்டம் மிக மிக அத்தியாவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு சகல தரப்பினரும், அதிகாரிகளும், அனைத்து நாளேடுகளும், மத்திய அரசும் இந்தப் புதிய திட்டம் எவ்வளவு அவசர அவசியமானது என்று சொல்கின்ற நேரத்தில்; தமிழக முதல் அமைச்சரின் முடிவு காரணமாகப் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட ஒரு திட்டம் இன்றைக்கு முடங்கிக் கிடக்கின்றது. இந்தியாவின் பிரதமரும், தமிழக முதல் அமைச்சராக இருந்த நானும் பங்கேற்று இத்திட்டத்தைத் தொடங்கினோம் என்ற காரணத்திற்காக இந்தச் சாலைத் திட்டம் நிறுத்தப்பட்டுத் தற்போது உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று, அதற்குத் தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்கத் தக்க அடிப்படை இல்லாததால் தாமதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இத்தகைய வெகு மக்கள் விரோதப் போக்கினைக் கண்டிக்கும் வகையிலும், மதுரவாயல் - துறைமுகம் சாலைப் பணிகளுக்குத் தமிழக அரசு நியாயமின்றி விதித்துள்ள தடையை உடனடியாக நீக்கிக் கொண்டு, அந்தத் திட்டத்திற்காக மாநில அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டக் கழகங்களின் சார்பில் 17-8-2013 அன்று கழக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அவர்கள் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஆர்.டி.சேகர், எஸ்.சுதர்சனம் ஆகியோர் முன்னிலையில் நெற்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனைக் கருதி கழகம் தொடர்ந்து நடத்தி வரும் பல்வேறு அறப்போராட்டங்களைப் போலவே, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்காகத் தி.மு.கழகம் நடத்தவிருக்கும் இந்த அறவழிப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடக் கழகத் தோழர்களும், பொதுமக்களும், தோழமைக் கட்சியினரும், வணிகப் பெருமக்களும் முன்வர வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள, மு.க. 14-8-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗