தொகுதி 49 · கடிதம் 3792
உணவு மசோதா; நமது நிலை!
2013-08-10
உடன்பிறப்பே,
மக்களுக்கு உணவுரிமையை வழங்கி, வாழ்க்கை நிலையை உயர்த்திட வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படையிலும், ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு என்ற உரிமையை அங்கீகரிக்கும் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தின் அடிப்படையிலும் இயற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதன் வாயிலாக நாட்டிற்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதைப் பற்றி மத்திய அரசும், அந்தச் சட்டத்தினால் தமிழகத்திற்கு என்னென்ன பாதகங்கள் ஏற்படும் என்று நமது மாநில முதலமைச்சர் ஜெயலலிதாவும் கருத்துக்களை எடுத்துவைத்திருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் உரையிலேயே உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றிய குறிப்பு இடம்பெற்று; இப்போது நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்திருக்கிறது. நான் என்னுடைய 6-8-2013 தேதிய அறிக்கையிலே இந்த உணவு மசோதாவின் சாதக பாதகங்களைப் பற்றியும், இது தமிழ்நாட்டிற்குத் தேவையா என்பதைப் பற்றியும் விரிவாக எழுதுவதாகக் கூறியிருந்தேன்.
இந்தியாவில் அனைவருக்கும் உணவுகிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்பு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், நாடு முழுவதிலும் உள்ள 82 கோடி மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கி, வறுமையைப் போக்குவதுதான் இச்சட்டத்தின் நோக்கம் என்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறுகிறார். அங்கன்வாடிகள் மூலம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், மதிய உணவு அருந்தும் பள்ளிக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தேவையான கூடுதல் ஊட்டச்சத்து வழங்கு வதையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
இந்த மசோதா பற்றித் தமிழக அரசின் முக்கியக் குறைபாடுகள் 1) மத்தியத் தொகுப்பிலிருந்து வரக்கூடிய உணவு தானியங்களின் அளவை எந்தவிதத்திலும் குறைக்கவே கூடாது; 2) தேசிய அளவில் 75 சதவிகிதம் ஊரக மக்களும், 50 சதவிகிதம் நகர்ப்பகுதி மக்களும் மானிய உணவு தானியங்களைப் பெறத் தகுதி உடையவர்களாகச் செய்வதால், குழப்பம் ஏற்படும்; 3) நகர்ப் பகுதிகளில் உணவு உற்பத்திக்கு வழி ஏதுமில்லை என்பதால், அங்கே அளிக்கப்படும் ஒதுக்கீடு 100 சதவிகிதமாகவும், அல்லது குறைந்தபட்சம் 75 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும்; 4) தமிழ்நாட்டுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் 2.96 இலட்சம் டன்களிலிருந்து உணவு தானியங்களின் அளவு குறைந்தபட்சம் 1 லட்சம் டன்னாவது இந்த மசோதாவின் மூலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; 5) பொது விநியோகத் திட்டத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அரசுக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மேலும் 3000 கோடி ரூபாய் செலவாகும்; 6) உணவு தானியங்கள் வழங்க இயலாதபோது, உணவுப் பாதுகாப்புப் படியை மாநில அரசு வழங்க வேண்டும் என்பன போன்றவற்றைப் பட்டியலிட்டுவிட்டு;
தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமையாகும் என்றும்; மாநிலங்களோடு கலந்து விவாதித்த பிறகு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும்; இடையறாத விநியோகத்திற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும்; அந்தியோதயா அன்னயோஜனாவின்கீழ்க் கொடுக்கப்படும் இன்றைய விநியோகம் எந்தவிதத்திலும் குறையாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்; நகர்ப் பகுதி மக்கள் தொகையின் விகிதாச்சாரம் 50 சதவிகிதம் என்பதிலிருந்து முழுமையான நகர்ப் பகுதி மக்கள் என்று அதிகரிக்க வேண்டுமென்றும் கோரிக்கைகளை 2-8-2013 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் தற்போது 18 கோடிக் குடும்பங்கள்தான் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். ஆனால் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நகரங்களில் 50 சதவிகிதத்தினரும், கிராமங்களில் 75 சதவிகிதத்தினரும், ஆக நாட்டில் உள்ள மக்களுள் 67.5 சதவிகிதத்தினர் - அதாவது 82 கோடி மக்கள் இந்தப் புதிய சட்டத்தினால் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவிக்கின்றது. இச்சட்டத்தின்படி, ஒருவருக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய் என்ற விலையில் மாதந்தோறும் வழங்கப்படும். 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்குத் தலா 5 கிலோ வீதம் 25 கிலோ அரிசியோ, கோதுமையோ வழங்கப்படும்.
உணவுப் பாதுகாப்பு மசோதாவைப் பல மாநிலங்கள் வரவேற்றுள்ள போதிலும், தங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஐயப்பாடு தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்தச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை மானிய விலையிலான உணவு தானியங்களால் ஏற்படக்கூடியதாகும். இப்பொழுது செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தின்படி ஆண்டு ஒன்றுக்குத் தேவைப்படும் மொத்த உணவு தானியங்களின் அளவு 612.3 இலட்சம் டன்களாகும். 2013-14ஆம் ஆண்டு விலைகளின்படி இதற்கான மானியத் தொகை சுமார் ரூ. 1,24,747 கோடியாகும். தற்போது நடைமுறையில் உள்ள பொது விநியோக முறை மற்றும் மற்ற நலத் திட்டங்களுக்கான உணவு மானியத் தொகையுடன் ஒப்பிடுகையில், ஆண்டு ஒன்றுக்குக் கூடுதலாக ரூ. 23,800 கோடி செலவாகும். இந்தக் கூடுதல் செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து, ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் சில மாறுதல்களுடன் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த நியாய விலைக் கடைகள் 33,222. மொத்தக் குடும்ப அட்டைகள் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593. வழங்கிய மொத்த அரிசி அட்டைகள் 1 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 538. மத்திய அரசின் திட்டமான அந்தியோதயா அன்னயோஜனா மூலம் பயன்பெறும் மிக மிக ஏழ்மை நிலையிலே உள்ள குடும்பங்கள் 18 லட்சத்து 62 ஆயிரத்து 615. இவர்களையும் சேர்த்தால் மொத்த அரிசி அட்டைகள் 1 கோடியே 85 லட்சத்து 84 ஆயிரத்து 153.
மத்திய அரசு மாதந்தோறும் தமிழகத்திற்குச் செய்கிற அரிசி ஒதுக்கீடு 2 லட்சத்து 96 ஆயிரம் டன். அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் ஒரு கிலோ அரிசி ரூபாய் 3 விலையிலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழுகிற மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 5.65 விலையிலும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 8.60 விலையிலும், 2001ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு ரூ. 5.65 விலைக்கு வழங்கும் மத்திய அரசு, புதிய சட்டத்திற்குப் பிறகு, ஒரு கிலோ அரிசியை 3 ரூபாய் விலைக்கு வழங்க வுள்ளது. இதனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 2.65 குறைந்து விடுகிறது. இது தமிழக அரசுக்கு இத்திட்டத்தினால் கிடைக்கும் இலாபம் என்று கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவின் அடிப்படையில், தமிழக அரசு போன்ற மாநிலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தன. நிலைக் குழுவின் பரிந்துரைகளையும், மாநில அரசின் கருத்துகளையும் மனதிலே கொண்டு, மாநிலங்களின் பல்வேறு இடங்களுக்கு உணவு தானியங்களை அனுப்பிட ஆகும் போக்குவரத்துக் கட்டணம், கையாளும் செலவு, கடைக்காரர்களுக்கான விளிம்புத்தொகை போன்ற செலவுகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியளிக்க இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது. குறைகளைக் களைவதற்கான அமைப்பைப் பொறுத்தவரை, தனியான அமைப்பை ஏற்படுத்துவதா அல்லது தற்போதுள்ள ஏற்பாட்டைத் தொடர்வதா என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமையை இந்தச் சட்டம் மாநில அரசுகளுக்கே அளிக்கிறது. மத்தியத் தொகுப்பிலிருந்து ஒரு மாநிலத்திற்கு உணவு தானிய ஒதுக்கீடு அளவு குறையும் பொழுது, அதனால் ஏற்படக்கூடிய பொறுப்பை எதிர்கொள்ள, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க இந்தச் சட்டத்தின் 23வது பிரிவு வகை செய்கிறது. பயனாளிகளைக் கண்டறியும் பணியை இனிமேல் மாநில அரசுகளிடம் அளிக்கவே இந்தச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பொது விநியோக முறையை இந்த மசோதா பாதிக்குமா என்றால், பொது விநியோக முறை தற்போது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பில் உள்ளது. உணவு தானியக் கொள்முதல், சேமிப்பு, மாநிலங்களுக்கு மொத்த ஒதுக்கீடு போன்றவை மத்திய அரசின் அதிகாரத்திற்குள் அடங்கி உள்ளன. மாநிலத்திற்குள் ஒதுக்கீடு, பயன்பெறும் குடும்பங்களைக் கண்டறிதல், குடும்ப அட்டைகளை வழங்குதல், நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற நடைமுறைகளை மாநில அரசுகள் கவனித்து வருகின்றன. பொது விநியோக முறையில் தேவையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வகை செய்கிறது. இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம், எந்த மாநிலத்திலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உணவுப் பொருள்கள் வழங்கல் முறையினை மேம்படுத்துவதாக இருந்திட வேண்டுமே தவிர, சீர்குலைப்பதாக ஆகிவிடக் கூடாது.
இந்த உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் மாநில அரசுகள் கலந்துகொள்ளப்பட்டதா? இல்லையா? என்றால் 2011ஆம் ஆண்டே தமிழக அரசின் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கு விரிவாகப் பதில் எழுதியதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். மத்திய உணவுத்துறை அமைச்சரும் மாநிலங்களோடு பல கட்டங்களில் விவாதம் நடத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற நிலைக் குழு இந்த மசோதாவைப் பல முறை ஆய்வு செய்த பிறகு, மாநில உணவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மத்திய அரசினால் நடத்தப்பட்டு கலந்தாலோசனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது.
மத்திய அரசின் புதிய சட்டம் மொத்த மக்கள் தொகையில் 67.5 சதவிகித மக்களுக்குப் பயன்பட வழிவகுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பொது விநியோகத் திட்டத்தின் மூலம், மாநிலத்தின் மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் பயனடைந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்தப் புதிய சட்டம் பாதிப்பை ஏற்படுத்தி விடுமே என்று தமிழக அரசு கூறுகிறது.
தமிழக முதல் அமைச்சர் தெரிவித்துள்ள குறைபாடுகளும், கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தப்படக் கூடியவை அல்ல.
அவரும்கூட, இந்த உணவுப் பாதுகாப்பு மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்றும், அவை என்னென்ன என்றும்தான் பட்டியலிட்டிருக்கிறார். பிரதமருக்குக் கடந்த 2ஆம் தேதியன்று அவர் எழுதிய கடிதத்தை முடிக்கும்போதுகூட, “நாடாளுமன்றத்தின் முன்வைக்கக் கருதியுள்ள சட்ட முன்வடிவில், தமிழ்நாடு தெரிவித்துள்ளவாறு உரியவாறும், முறையாகவும் திருத்தங்கள் சேர்க்கப்பட வேண்டுமென்று நான் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, உணவுப் பாதுகாப்பு மசோதாவை முற்றிலுமாகப் புறக்கணித்திட வேண்டுமென்று கடும் எதிர்ப்பு எதையும் தெரிவித்துவிடவில்லை. ஆனால் நான்தான் ஏதோ மத்திய உணவு மசோதாவை ஆதரித்துத் தமிழகத்திற்கே துரோகம் செய்துவிட்டதாகத் தனது அறிக்கையில் ஜெயலலிதா தாண்டிக் குதித்துள்ளார்.
இந்த மசோதா குறித்து முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ.க. ஆறு மணி நேரம் விவாதம் நடத்த வேண்டுமென்று நிபந்தனை விதித்துள்ளது. சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் அவர்களும் விவசாயிகள் இந்த மசோதாவினால் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் நிபந்தனை விதித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7-8-2013 அன்று தெரிவித்துள்ள கருத்தில், இந்த மசோதா எல்லாப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்குமான பொது விநியோக முறையாக மாற்றப்பட வேண்டும்; உணவுப் பொருள் என்பதில் சர்க்கரை, பருப்பு வகைகள் இணைக்கப்பட வேண்டும்; ஒரு நபருக்கு 5 கிலோ என்பதை 7 கிலோவாக உயர்த்த வேண்டும்; மாநிலங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் குறையக் கூடாது; பொது விநியோக முறையோடு ஆதார் அடையாள எண், நேரடி பணமாற்றம் ஆகியவற்றை இணைக்கக் கூடாது; என்று ஐந்து திருத்தங்களை மசோதாவில் செய்ய வேண்டுமென்றுதான் கோருகிறார்கள். அதைப்போலவேதான் அ.தி.மு.க. அரசின் சார்பாக முதல் அமைச்சரும் ஒரு சில திருத்தங்களை முன்வைத்திருக்கிறார்.
நாடாளுமன்ற நிதிநிலைக் குழு இந்த மசோதா பற்றி விரிவாக ஆய்வு நடத்தியுள்ளது. அந்தக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவரும் இடம்பெற்றிருக்கிறார். அந்தக் கட்சியின் எதிர்ப்புகளையெல்லாம் அந்தக் குழுவிலே அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறாரா? ஏனென்றால் அந்தக் குழு அறிக்கை கொடுத்தபோது வேறு ஒரு உறுப்பினர்தான் எதிர்ப்பு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறாரே தவிர வேறு யாரும் எதிர்ப்பு அறிக்கை தாக்கல் செய்ததாகத் தெரியவில்லை.
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை இந்த மசோதா காரணமாகத் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும்; யாருக்கும் பாதிப்பு கூடாது என்பதிலும்; வேளாண்மையைத் தொடர்ந்து மேம்படுத்தி வேளாண் பெருமக்களின் நலன் காத்து, அவர் தம் விளை பொருள்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய உரிய விலை கிடைத்திட வேண்டும் என்பதிலும்; மாநில உரிமைகள் பறிபோய் விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது. அதேநேரத்தில் இந்த மசோதாவின் காரணமாகக் கிடைக்கக்கூடிய பயன்களையும் இழந்து விடக்கூடாது. ஒட்டு மொத்தமாக மாநில அரசுதான் இந்த மசோதாவினால் நடைமுறையில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்துக் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த மசோதாவினால் தமிழ்நாட்டிற்குப் பாதகம் தான் ஏற்படும், சாதகம் ஏற்படாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தால்; சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று அறிவித்ததைப் போல, இந்த உணவுப் பாதுகாப்பு மசோதாவைப் பொறுத்தவரை, தமிழகம் ஏற்காது என்று அறிவித்து விடலாம். ஆனால் முதல் அமைச்சரே தன் கடிதத்தில் திருத்தங்கள் தான் தேவை என்று கூறியிருக்கிறார். அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகிறார்களே தவிர; சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநிலங்கள் மீது திணிக்காமல், அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளையொட்டிய செயலாக்கத்திற்கான விருப்புரிமையை வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும். இந்தியத் திருநாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகாவது, தேசிய அளவில் உணவுக்கான உரிமையை வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்திட வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருப்பது ஆக்கபூர்வமானது. எனவே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்த்திடாமல் - அப்படியே ஆதரித்தும் விடாமல் அவசர அவசியமான திருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்பக் கொண்டுவர மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே இருக்கின்ற மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாமல், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் அதனை ஆதரிக்கும்!
அன்புள்ள, மு.க. 10-8-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗