உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3791

இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதய வாழ்த்துகள்!

2013-08-08

உடன்பிறப்பே,

நாளை (9.8.2013) இஸ்லாமியப் பெருமக்களுக்கான இரமலான் திருநாள். அவர்களுக்கெல்லாம் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளும் நேரத்தில் கழக ஆட்சியில் அந்தச் சிறுபான்மைச் சமுதாயத்தின் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் செய்யப்பட்ட சாதனைகளைச் சற்றே நினைவுகூர்ந்திட வேண்டுமென்பதற்காகத் தொகுத்துத் தர விரும்புகிறேன். தமிழக அரசின் செய்தித்துறை 4-8-2013 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஹஜ் யாத்திரைக் குழுவுக்கு மானியத்தை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தச் செய்தியின் தொடக்கத்தில் உலமா ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது பற்றியும், மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த அ.தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் இந்தச் சாதனைகள் வெளிவந்திருக்கும் நேரத்தில், கழக ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியச் சமுதாயத்தினர்க்குச் செய்யப்பட்ட பல்வேறு சலுகைகளில்; 25-7-2013 அன்று சென்னையில் நடைபெற்ற “இஃப்தார்” நிகழ்ச்சியில் - “வாழ்த்துச் செய்தி” அனுப்பி அல்ல; நானே நேரில் கலந்து கொண்ட போது, காலத்தின் அருமை கருதி ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். தற்போது அரசின் செய்திக் குறிப்பினைப் பார்த்த பிறகு இஸ்லாமியர்களுக்கு கழக ஆட்சியில் செய்யப்பட்ட ஏனைய சாதனைகளையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சிறுபான்மை மக்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்ற நிலைகளை மேம்படுத்தவும், நலத்திட்டங்களைச் செம்மையாகச் செயலாற்றிடவும், சிறுபான்மையினர் நல இயக்குனரகம் 2007ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டு 1.8.2007 முதல் இயங்கி வருகின்றது. இத்திட்டங்களை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் (திருப்பூர் நீங்கலாக) 30 கண்காணிப்பாளர், 30 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர்க்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கெனத் தனியே 3.5 சதவீத இட ஒதுக்கீடு (சட்ட முன் வடிவு எண்.9/2008) தி.மு.கழக ஆட்சி யில் வழங்கப்பட்டு 15.9.2007 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய சமுதாயத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழகத்தில் “உருது அகாடமி” 15 இலட்ச ரூபாய் தொடக்க முதலீட்டுடன் அமைக்கப்பட்டு, அதனை தி.மு.கழக ஆட்சியில் 21-7-2000 அன்று நான் தொடங்கி வைத்தேன்.

உருது மொழியைப் பாடமாகப் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் 3 மாணவர்களுக்கும், மற்றும் 3 மாணவியர்களுக்கும் முதல், இரண்டு மூன்று எனப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில் 37 மாணவ / மாணவியர் பயனடைந்தனர்.

திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 250 பள்ளி, கல்லூரி இஸ்லாமிய மாணவியர்கள் பயனடையும் 5 புதிய விடுதிகள் 2008ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவியர்கள் கணினி பழகும் வகையில் ரூ.10.13 இலட்சம் செலவில் 25 கணினிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 2009-2010ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் 5 விடுதிகளுக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரு இலட்ச ரூபாய்ச் செலவில் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 7090 மாணவ மாணவியர்களுக்கு 18 கோடியே 53 இலட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

மத்திய அரசு நிதி உதவியுடன் பதினோராம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்புவரை பயிலும் மாணவ / மாணவியர்க்குக் கல்வி உதவித் தொகை 2007-08ஆம் ஆண்டு முதல் தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 67 ஆயிரத்து 683 மாணவ மாணவியர்க்கு 22 கோடியே 22 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மைய - மாநில அரசுகளின் நிதி (75:25) உதவியுடன் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை 2008- 2009 ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டு, முதற்கட்டமாக 15,340 மாணவ, மாணவியர்க்குக் கல்வி உதவித் தொகைகள் தமிழகத்திற்கெனப் பெற்று வழங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து தமிழக அரசால் சிறுபான்மை யின மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக, 2009-2010 ஆம் ஆண்டிற்கு 1 இலட்சத்து 54 ஆயிரத்து 264 மாணவ / மாணவியர்களுக்கு ரூ.18.90 கோடியும்; 2010-2011ஆம் ஆண்டிற்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 301 சிறுபான்மையின மாணவ / மாணவியர்க்கு ரூ.28.62 கோடியும்; கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு முதல் ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட, இஸ்லாமிய வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரைப் பதவிவழித் தலைவராகக் கொண்டு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் தொடக்கப்பட்டது. இச்சங்கங்கள் தொடங்குவதற்கு விதைத் தொகையாக தலா ஒரு ரூ.30 இலட்சம் நிதியினை வழங்கியதே தி.மு.கழக ஆட்சிதான். சங்க வளர்ச்சிக்காக இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு இணையாக பட்சம் ரூ.10 இலட்சம் இணை மானியம் வழங்கிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு, கழக ஆட்சியில் 14 மாவட்டங்களுக்கு ரூ.44.37 இலட்சம் வழங்கப்பட்டது.

வேலையில்லாத சிறுபான்மையின மாணவ / மாணவியர் தனியார்த் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும், அவர்களது திறனை மேலும் மேம்படுத்தும்வகையிலும் தகவல் மற்றும் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, காலணிகள் வடிவமைப்பு போன்றவற்றில் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சித் திட்டம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தமிழக அரசின் நிதியுதவி பெற்று ரூ.2.50 கோடி செலவில் 2007-2008 முதல் தி.மு.கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நான்கரை ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்ச் செலவில் 41 ஆயிரத்து 316 பேர் பயனடைந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவு அடங்கியுள்ள அறிக்கையில் உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது பற்றிப் பெருமையாகச் சொல்லியிருக்கிறார். ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் 24.8.2009 அன்று தி.மு.கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டு, 11 ஆயிரத்து 274 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன; 704 பயனாளிகளுக்கு ரூ.12.93 இலட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வாரியத்தில் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. 2010-2011ஆம் ஆண்டில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் இலவசமாக வழங்கிட ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 28.2.2011 அன்று சென்னையில் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

உலமா ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.200 என்பது 2006இல் தி.மு. கழக ஆட்சியில் ரூ.400 எனவும்; 1.12.2010இல் மாதம் ரூ. 500 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டது. அந்தத் தொகையைத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் மேலும் அதிகமாக உயர்த்தினார்கள். ஓய்வூதியம் பெறும் உலமாக்கள் எண்ணிக்கை 1998-1999இல் 2000 பேர் என்பது 2200 ஆகவும்; 2007-2008இல் 2400 ஆகவும் தி.மு.கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியத் திட்டம் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் தி.மு.கழக ஆட்சியில் நீட்டிக்கப்பட்டது.

மதவழி மற்றும் மொழிவழிச் சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் 1989இல் மாநில சிறுபான்மையினர் ஆணையம் ஒன்று முதன்முதலில் 13.12.1989 அன்று தி.மு. கழக ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாணையம் 14.3.1990 முதல் செயல்படத் தொடங்கியது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்துடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்திற்கு, சட்டப்படிக்கான அங்கீகாரம் அளித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 2010 தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. 1.8.2010 முதல் சட்டப்படிக்கான அதிகாரத்துடன் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அவர்கள் தலைமையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டது.

2006இல் தி.மு.கழக அரசு பொறுப்பேற்றவுடன், அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலே கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தினை ரத்து செய்தது. மேலும் அச்சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் முந்தைய அரசு பிடித்தம் செய்திருந்த ஒரு நாள் சம்பளத்தைத் திரும்ப வழங்கியது.

சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தி.மு. கழக ஆட்சியில் 27.12.1999 முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இக்கழகத்தின்மூலம் கடந்த கழக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த 7208 பேருக்கு 29 கோடியே 68 இலட்ச ரூபாய் தனிநபர் கடனாக வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளில் 966 பேருக்கு 10 கோடியே 67 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஆட்டோ கடன் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் கறவை மாடுகள் வாங்கிட 146 பேருக்கு 27 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

34,589 பேருக்கு 46 கோடியே 46 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஹஜ் குழு பற்றியும் விரிவாக ஜெயலலிதாவின் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். முஸ்லிம் மக்கள்தொகை அடிப்படையில், ஹஜ் பயணத்திற்கு ஒவ்வொரு நாட்டிற்கான ஒதுக் கீட்டைச் சவூதி அரசு நிர்ணயிக்கிறது. இவ்வொதுக்கீட்டில் இருந்து 2001ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநில முஸ்லிம் மக்கள் தொகைக்கேற்றவாறு மாநிலங் களுக்கு ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தி.மு.கழக ஆட்சியில் ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், கூடுதல் ஒதுக்கீடு வழங்கக்கோரி கழக அரசு இந்தியப் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய அரசு தமிழகத்திற்கு 5 ஆண்டுகளில் நிர்ணயித்த 13 ஆயிரத்து 626 பேருக்கும் அதிகமாக 5611 பேரைக் கூடுதலாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இஸ்லாமிய மக்களுக்குத் துணைநின்றது தி.மு.கழக அரசு.

தமிழக அரசு சிறுபான்மையினர் நலனுக்காகச் செயல்படுத்திவரும் திட்டங்களை ஆய்வு செய்த மத்திய அரசின் தேசிய சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.எம். எஸ்.ஏ. சித்திக் அவர்களும், அவரது தலைமையில் வருகைபுரிந்த குழுவினரும், சிறுபான்மையினருக்கான தமிழகத் தி.மு.கழக அரசின் திட்டங்களில் முழு மனநிறைவுகொண்டு, கழக அரசு, “சிறுபான்மையினருக்காகப் பாடுபடும் அரசு’ (Pro-Minority) என்று பாராட்டினார்.

இஸ்லாமிய மக்களுக்காகக் கழக அரசு செய்தவை இவை மாத்திரம்தானா? 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியிலேதான்.

1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது.

2001இல் “காயிதே மில்லத் மணிமண்டபம்” 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று தி.மு.கழக ஆட்சியிலே அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்யப்பட்டது. இவை எல்லாம் தி.மு.கழக ஆட்சி இஸ்லாமிய சமுதாயத்திற்கு செய்த சாதனைகளுக்கான சான்றுகளாகும். இஸ்லாமிய சமுதாயம் “இப்தார்” நிகழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்தச் சமுதாயத்திற்காகத் தி.மு.கழகம் மேற்கொண்ட இந்தப் பணிகளை நினைவுபடுத்துவதில் பெருமை கொள்கிறேன். “இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி” என்றார் அண்ணா. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொதுவாகப் பொருந்தும் வாழ்க்கை நெறிகளைப் போதித்த அண்ணல் நபிகளார், ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அன்புடன் பழகி, உறவை வளர்க்க வேண்டும் என்றார். மற்றவர்களைப் பற்றிக் குற்றம் குறைகள் கூறும் மனப்பான்மையை விட்டுவிட வேண்டும் என்று போதித்த அண்ணல் நபிகளார், “பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள்; நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள்; பிறர்மீது பொறாமை கொள்ளாதீர்கள்; பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள்; பிறரிடம் முகம் சுளிக்காதீர்கள்” என்கிறார். நபிகள் பெருமானின் மணிவாசகங்களை மனதில் பதித்து, எளியோர்க்கு ஈந்து - ஈகைத் திருநாளாக இரமலான் திருநாளை குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தார், நண்பர்கள் சூழக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.

அன்புள்ள, மு.க. 8-8-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗