தொகுதி 49 · கடிதம் 3790
ஆகஸ்ட் 8; ஆர்ப்பாட்டம்; அகிலமே வியக்கட்டும்!
2013-08-07
உடன்பிறப்பே,
16-7-2013 அன்று சென்னை - அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்ற போது நிறைவேற் றப்பட்ட நான்கு தீர்மானங்களின் அடிப்படையில்;
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,
இலங்கையில் நடைபெறவுள்ள “காமன் வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும்
நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களையும், தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், “டெசோ” இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வியாழக்கிழமை காலை
10 மணியளவில், தமிழகம் முழுதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடத் துவதென “டெசோ” இயக்கத்தின் சார்பில் முடிவெடுத்து அறிவித்ததற்கிணங்க;
நாளையதினம் சென்னையில் என்னுடைய தலைமையிலும், மதுரையில் தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி தலைமையிலும், திருச்சியில் கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையிலும், திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நம்முடைய இயக்கங்களின் முன்னணியினர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காக நான் இதுவரை மூன்று கடிதங்களை எழுதியிருக்கிறேன்.
இருந்தாலும் இந்தக் கடிதத்தில் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என்பதைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, 16ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களின் சுருக்கத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தீர்மானம் 1 :- இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்களும், இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே அவர்களும் கையெழுத்திட்ட உடன்பாட்டின்படி, மாகாணக் கவுன்சில்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழிவகை செய்யும் வகையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு அதை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை உருக்குலைத்திட நடக்கும் முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாகவும், இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் இதர சமூகங்களைச் சேர்ந்த மக்கள் சமமாகவும் சுயமரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் உறுதி மொழியையும் காப்பாற்றாத இலங்கை அரசு, தற்போது சிவசங்கர மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதிமொழியை எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் கேள்விக்குறியாகும்.
1987ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தில், தற்போதைய இலங்கை அரசு இந்தியாவின் அனுமதியின்றித் தன்னிச்சையாகத் திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாக, இலங்கை அதிபர் இராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை அமைச்சருமான பசில் இராஜபக்சே தெரிவித்திருக்கிறார். மேலும், 13வது சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தினை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது சகோதரரும் - இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்சேவும் வெளிப்படையாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மீறுவதற்கோ திருத்தம் செய்வதற்கோ எந்த ஒரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது. காரணம், மேற்படி ஒப்பந்தத்தில் இந்திய நாட்டின் நலனும் அடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பசில் ராஜபக்சேயின் அறிவிப்பு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு எதிராக அமைந்துள்ளது.
13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பது தான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதும்தான், “டெசோ” அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று “டெசோ” அமைப்பு கருதுகிறது.
இந்திய அரசு, ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு, எந்தவிதத் திருத்தங்களும் இல்லாமல் 1987 ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று “டெசோ” அமைப்பின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2 :- இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், “டெசோ” அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தமிழகத் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்திய பிறகும்; இலங்கையிலே அந்த மாநாடு நடைபெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் - காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகிவிடக் கூடுமென்றும்; வலிமையான கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருவதால், இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா ஏற்றுக்கொள்வது போலாகி விடும். அம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது எனும் அழுத்தமான வேண்டுகோளை தொடர்ந்து நாம் “டெசோ” சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்ய வேண்டுமென இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 :- இந்திய மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் நின்றபாடில்லை. இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் கடந்த பல ஆண்டு காலமாகவே தொடர் கதையாக நீடித்துக் கொண்டே வருகின்றன.
ஒவ்வொரு முறை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படும் போதெல்லாம், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், “டெசோ” அமைப்பின் சார்பில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே மத்திய அரசு இனியாவது உறுதியானதொரு நடவடிக்கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டுமொத்தமாகத் தீருகின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4 :- இலங்கையில் பன்னெடுங் காலமாகத் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியேற்றும் கொடுமை தொடர்வதைப் பற்றியும், தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவதைப் பற்றியும், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை நிரூபித்திடும் வண்ணம், வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டித்திடும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரா மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும், “வெளிஓயா” என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்களவர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெறுவதை, “டெசோ” இயக்கம் சுட்டிக்காட்டி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, பொதுத் தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் இதுபோன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லைகளை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு செயல்படுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள், மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்திட வேண்டுமென்று, இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
உடன்பிறப்பே, இந்த நான்கு தீர்மானங்களை வலியுறுத்தித் தான் நாளைய தினம் நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக “டெசோ” இயக்கத்தின் சார்பில் நாம் நடத்துகின்ற முதல் ஆர்ப்பாட்டம் இதுவல்ல. “டெசோ” சார்பில் ஈழத் தமிழர்களுக்காக
29-4-1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ஆம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8ஆம் தேதி வட ஆரக்காட்டில் 2500 பேரும், 13ஆம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3000 பேரும், 17ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18ஆம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ஆம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைது ஆயினர்.
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க
16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நானும் மற்றும் ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து டெசோ அமைப்பின் சார்பில் 3-10-1985 அன்று கோவையிலும், 4-10-1985 அன்று திண்டுக்கல்லிலும், 5-10-1985 அன்று தூத்துக்குடியிலும்,
6-10-1985 அன்று திருச்சியிலும், 7-10-1985 அன்று சேலத்திலும், 13-10-1985 அன்று வேலூரிலும் மிகப் பெரிய பேரணிகள் நடத்தப்பட்டன. 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடே நடைபெற்றது.
கடந்த ஆண்டு 12-8-2012 அன்று சென்னையில் “டெசோ” இயக்கத்தின் சார்பில் “ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு” நடைபெற்றது.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதைக் கண்டித்து 18-2-2013 அன்று ராமேஸ்வரத்திலும், 19-2-2013 அன்று நாகப்பட்டினத்திலும், “டெசோ” இயக்கத்தின் சார்பில் “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவ்வாறே அந்த அறவழி ஆர்ப்பாட்டங்களும் தமிழ் மக்களின் பேராதரவோடு நடைபெற்றுள்ளன.
மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்திடும் வகையில் மார்ச் 5ஆம் தேதியன்று “டெசோ” இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை “முற்றுகையிடும் போராட்டம்”
நடைபெற்றது. மேலும் மார்ச் 7ஆம் தேதியன்று “டெசோ” இயக்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாடு மற்றும் கருத்தரங்கில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மனிதநேய அமைப்பினரும் கலந்து கொண்டனர். இலங்கை அரசின் இனப் படுகொலையைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி
12-3-2013 அன்று தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.
15-4-2013 அன்று நடைபெற்ற “டெசோ” கூட்டத்தில், கச்சத் தீவினை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை என்றும், எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் என் பெயரிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாகத்தான் நாளை ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தமிழகம் முழுவதிலும் “டெசோ” இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். இதற்கிடையே செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையில் வடக்கு, வட மேற்கு, மத்திய மாகாணக் கவுன்சில்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 2-8-2013ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது. அதனையொட்டி பேசிய இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்னே, “மாகாணக் கவுன்சில்களுக்கான காவல் துறை அதிகாரம் மற்றும் நிலம் சம்பந்தமான உரிமைகள் பறிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து இவருடைய பேச்சின் மூலம் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்து, வடக்கு மாகாணத்தில் உரிமைகள் ஏதும் தராத “பொம்மை” அரசு ஒன்றை உருவாக்க எண்ணிடும் சூழ்ச்சிதான் தெரிகிறது. இதனை எதிர்க்கும் வகையிலேதான் நாளை நம்முடைய ஆர்ப்பாட்டம் அமையவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. சென்னையிலே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நானே தலைமை தாங்குகிறேன். அங்கே ஆர்ப்பரித்து வரும் அடலேறுகளாம் உடன்பிறப்புகளைச் சந்திக்கிறேன். நாளை ஆகஸ்ட் 8 ஆர்ப்பாட்டம்; தமிழர் பெருந்திரள் கண்டு தரணியே வியக்கட்டும்!
அன்புள்ள,
மு.க.
07-08-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗