உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3789

கொடுத்ததையும் பறித்துக் கொண்ட கொடுமை!

2013-08-05

உடன்பிறப்பே,

26-7-2013 அன்று காலை ஏடுகளில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு - அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு” என்ற தலைப்போடு கொட்டை எழுத்துக்களில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அ.தி.மு.க. அரசு புதிதாக எந்த ஊதியக் குழுவையும் நியமிக்கவில்லையே; அகவிலைப்படி உயர்வும் இப்போது நிலுவையில் இல்லையே; என்ன ஊதிய உயர்வு? அதுவும் இன்றுதானே அறிவிக்கப்படுகிறது, அதற்குள் அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்றிருக்கின்றனவே; என்றெல்லாம் கருதிக் கொண்டே அந்தச் செய்தியை முழுவதுமாகப் படித்தேன்.

மத்திய அரசின், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி, தி.மு. கழக ஆட்சியிலேதான் 2009ஆம் ஆண்டு, தமிழக அரசு அலுவலர்களுக்குப் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஏன் அதற்கு முன்பே, 1989-ஆம் ஆண்டு தி.மு. கழக அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்ற போது; மைய அரசு அலுவலர்களுக்கான ஊதிய விகிதங்களை விடக் குறைவான ஊதிய விகிதங்களே தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டில் முதன்முறையாக மைய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்களுக்கு தி.மு. கழக அரசுதான் வழங்கியது. இதுபோன்றே 1996ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், ஐந்தாவது மைய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி தி.மு. கழக அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர் திருத்தப்பட்ட மைய அரசின் ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் 2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில்தான் மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையொட்டி, 1-1-2006 முதலே முன் தேதியிட்டு, திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதங்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூபாய் 5,155.79 கோடி தொடர் செலவினம் ஏற்பட்டது. மேலும் அரசு அலுவலர்களுக்கு திருத்திய ஊதிய நிர்ணய நிலுவைத் தொகை வழங்கும் வகையில் தமிழக அரசுக்கு 11,093 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டது.

வழங்கப்பட்ட ஊதிய உயர்விலே ஒருசில முரண்பாடுகள் இருப்பதாக அரசு அலுவலர் சங்கங்களின் சார்பாக என்னிடம் கோரிக்கை வைத்த போது, அதனையும் ஏற்றுக்கொண்டு, அந்த முரண்பாடுகளை விசாரித்து அறிக்கை கொடுக்க திரு. ராஜிவ் ரஞ்சன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழுவும் கழக ஆட்சிக் காலத்திலேயே அமைத்து, அவரது பரிந்துரையின் பேரில் பல முரண்பாடுகள் கழக ஆட்சிக் காலத்திலேயே களையப்பட்டன. அதன் காரணமாக தமிழக அரசுக்கு 223 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்பட்டது.

பின்னர், 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, மேலும் சில முரண்பாடுகள் இருப்பதாகச் சில அலுவலர் சங்கங்கள் கூறியதன் அடிப்படையில், அ.தி.மு.க. ஆட்சியில் 2012ஆம் ஆண்டு திரு. கிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நிதித் துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் உமாநாத் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் அளித்த பரிந்துரைப்படிதான் ஒருசில அரசு அலுவலர்களுக்கு ஓரளவு ஊதிய விகிதம் உயர்த்தப்பட்டு, அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தான் அனைத்து நாளேடுகளும் வெளியிட்டிருந்தன.

இந்தச் செய்தியைப் படித்து யார் யாருக்கு என்னென்ன ஊதிய உயர்வு என்பதைத் தெரிந்து கொள்வதற்குக்கூட நேரம் இல்லாமல், இந்த அறிவிப்பு வெளிவந்த அந்தச் செய்தியோடு இணைத்து, ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைந்து புதிய ஊதிய உயர்வை அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுத் தணிக்கைத் துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படைப் பணியாளர் மாநில மைய சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வந்தன. அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே, எப்படி இந்தச் சங்கங்களுக்கெல்லாம் விவரங்கள் தெரிந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள் என்று வியப்பாகவும் இருந்தது.

அறிவிப்பினையும், அரசாணைகளையும் முழுமையாகப் படித்து விட்டு அடுத்தடுத்த நாள் ஏடுகளில் சிலர் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் ஊதிய முரண்பாடுகளைக் களைய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் முன் வைத்த பல்வேறு கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட வில்லை. உதாரணமாக, பதவி உயர்வு பெறும்போது, பத்து சதவிகிதம் பணப் பயன் வழங்கப்பட வேண்டும்; உதவியாளர்களின் தர ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்; சிறப்பு ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலர், கிராமப் பணியாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் போன்றோருக்கு, முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசாணை வெளியிடப்படவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்தபடி புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி ஆணையாக வெளியிடப்படவில்லை. எனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 2ந்தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாண்டியன் அறிக்கையே விடுத்தார். 26-7-2013 அன்று அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு என்று பெரிய தலைப்பிட்டு வெளியிட்ட “தினமலர்” நாளேடே, 31-7-2013 அன்று அரைப்பக்க அளவிற்கு வெளியிட்ட செய்திக்கு “போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாசில்தார் சம்பளம் குறைப்பு - அரசு நடவடிக்கையால் கடும் அதிருப்தி” என்று தலைப்பிட்டுள்ளது. அந்தச் செய்தியில் முக்கியமாக,

“புதிய அரசாணை மூலம் பலருக்கு ஏற்கனவே பெற்ற சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இது; சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் துறையில் - வேளாண் அலுவலர், தோட்டக்கலைத் துறை அலுவலர்; வேளாண் பொறியியல் துறையில் - உதவிப் பொறியாளர்; கால்நடைத் துறையில் - உதவி இயக்குனர், ஆராய்ச்சி உதவி அலுவலர், மீன்வளத் துறையில் - ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர்; நெடுஞ்சாலைத் துறையில் - உதவிப் பொறியாளர், எலெக்ட்ரானிக் பொறியாளர்; ஊரக வளர்ச்சித் துறையில் - உதவிப் பொறியாளர்; தொழில் துறையில் - உதவிப் பொறியாளர்; தொழிற்சாலை ஆய்வுத் துறையில், தொழிற்சாலை உதவி ஆய்வாளர்; மாநில சுகாதார போக்குவரத்துத் துறையில் - உதவிப் பொறியாளர், பணிமனை கண்காணிப்பாளர்; மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் - தொழில் நுட்ப உதவியாளர், ஜெனரல் போர்மென்; பட்டு வளர்ச்சித் துறையில் நிர்வாக அலுவலர்; பொதுப்பணித் துறையில் - இளநிலைப் பொறியாளர், மாவட்ட மறுவாழ்வுத் துறை அலுவலர்; பேரூராட்சி உதவிப் பொறியாளர்; இளநிலை எலெக்ட்ரிகல் ஆய்வாளர்; சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர், வனக் காப்பாளர்

ஆகியோருக்கு தற்போது சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

இவர்கள், ஆறாவது ஊதிய உயர்வுக்கு முன் அடிப்படைச் சம்பளமாக 6,500 ரூபாய் பெற்றனர். ஆறாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டபோது (தி.மு.கழக ஆட்சியில்) அடிப்படைச் சம்பளம் 9,300 ரூபாயாக உயர்ந்தது. முதலில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு பரிந்துரைப்படி அடிப்படை சம்பளம் 15,600 ரூபாயாக (தி.மு.கழக ஆட்சியில்) உயர்த்தப்பட்டது. தற்போது இது தவறு எனக் கூறி, அடிப்படைச் சம்பளம் 9,300 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும். அதேபோல், தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரின் அடிப்படைச் சம்பளம், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன் 7,500 ரூபாயாக இருந்தது. ஊதிய உயர்வின் போது (கழக ஆட்சியில்) 9,300

ரூபாயாக உயர்ந்தது. ஒரு நபர் குழு பரிந்துரைத்த பின் 15,600 ரூபாயாக (கழக ஆட்சியில்) உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 9,300 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப் பட்ட ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்திலேயே துணைச் செயலாளர்களாக உள்ளோருக்கும் இணைச் செயலாளர்களாக உள்ளோருக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தைக் களைய வேண்டுமென்று துணைச் செயலாளர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்களும் அதிருப்தியிலே இருக்கிறார்களாம்.

இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் (?) விவரங்களாகும். இதைத்தான் பல்வேறு அலுவலர் சங்கங்கள் ஊதிய உயர்வு என்று அரசு அறிவித்ததும், முதல்வருக்கு நன்றி, நன்றி என்று அறிக்கை விட்டு விட்டார்கள்.

இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ள 31-7-2013 தேதிய “டெக்கான் கிரானிகல்” ஆங்கில நாளேடு கூட, “A volcano seems simmering in the Tamil Nadu bureaucracy, involving almost all the departments. Thousands of employees, including Police Inspectors, now face steep salary cuts and several of their unions are readying petitions to the Chief Minister for merciful review”, according to PWD Engineers’ Association President K. Mohanraj” என்று எழுதியுள்ளது. அதே நாளேட்டில், “Government staff are facing prospect of deep salary cuts following latest order - Asst. Engineers to be hit by Government Order” என்ற தலைப்பிலும் இதுபற்றி விவரமாக எழுதியுள்ளது.

தற்போது அ.தி.மு.க. அரசினால் எடுக்கப்பட்ட முடிவுகளினால் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்களை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். “டெக்கான் கிரானிகல்” நாளேட்டில் “Unions representing the affected officials pointed out that the “Law of Natural Justice” prescribes emoluments and perks given to an employee should not be reduced” என்று தெரிவித்திருப்பதை மனதிலே கொண்டு அரசு அலுவலர் ஊதியப் பிரச்சினையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

அ.தி.மு.க. அரசின் புதிய அறிவிப்பு குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் பிச்சையப்பா, “ஒருவனுக்கு 2 வேளை சாப்பாடும், இன்னொருவனுக்கு 1 வேளை சாப்பாடும் அரசு போடுகிறது என வைத்துக் கொள்வோம். அவனுக்குப் போடுவது போல எனக்கும் 2 வேளை சாப்பாடு கொடுங்கள் என 1 வேளை சாப்பாடு சாப்பிடுபவர் கோரிக்கை வைத்தால், அவனுக்கு 2 வேளை தருவதால்தானே நீயும் கேட்கிறாய், இதோ அவனுக்கு 1 வேளையாகக் குறைத்து விடுகிறேன் என்று முடிவெடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, இந்தச் சம்பள குறைப்பு விவகாரம்” என்று கூறியிருக்கிறார்.

அதுபோலவே அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, “எந்தக் குறைபாடுகளையும் சரி செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. அடிப்படை சம்பளத்தையும் குறைத்திருக்கிறார்கள். தர ஊதியத்தையும் குறைத்திருக்கிறார்கள். பதவி உயர்வு பெற தர ஊதியம் உயர வேண்டும். அது உயர்த்தப்படவே இல்லை. போக்குவரத்துப்படி, கல்விப்படி, வாடகைப்படி எதுவும் கவனிக்கப்பட்டதாகவே தெரியவில்லை. மொத்தத்தில் குறைபாடுகள் களையப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

ஊதியக்குழு பற்றிய அரசு உத்தரவில் ஏமாற்றம் அடைந்த தமிழக ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மூன்று கட்டப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

ஆனால், சில அரசு அலுவலர் சங்கங்களும், சில நாளேடுகளும் கண்ணை மூடிக் கொண்டு அ.தி.மு.க. அரசு அறிவிப்பு என்றால் அதிலே என்ன இருக்கிறது என்பதைப் பற்றி அமைதியாக ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்காமல், அதனை அவசரப்பட்டு ஆதரித்து அறிக்கை தருவதும், பின்னர் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்து ஆவேசம் கொள்வதும் நல்லதல்ல!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் - “அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், “ரிங் மாஸ்டர்” செய்வதைப் போல சாட்டையடி கொடுத்து வேலை வாங்கி வருகிறேன்” என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையிலேயே முழங்கியதையும், “அரசின் மொத்த வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே சென்று விடுவதால் வளர்ச்சிப் பணிகளுக்கு என்ன இருக்கிறது?” என்று ஜெயலலிதா கேட்டதையும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை அ.தி.மு.க. ஆட்சியிலே இரவோடு இரவாக “எஸ்மா” சட்டத்தின்கீழ் வீடு புகுந்து போலீசாரால் கைது செய்யப்பட்டதையும், ஒரு இலட்சத்து எழுபதாயிரம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலை நீக்கம் செய்ததையும்;

தி.மு. கழக ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கு வாரி வாரி

வழங்கியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தி.மு. கழக ஆட்சிதான்

அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொற்காலமாக

இருந்தது என்பதையும் அரசு அலுவலர்களே நன்றாக அறிவார்கள்!

அன்புள்ள,

மு.க.

05-08-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗