உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3788

அமர்த்தியா சென்னும் - அவர் விடுக்கும் அறைகூவலும்!

2013-08-04

உடன்பிறப்பே,

“நோபல்” பரிசு பெற்ற அமர்த்தியா சென் (Amartya Sen) மற்றும் ஜீன் டிரெஸ் (Jean D Reze) ஆகிய இருவரும் இணைந்து எழுதி, Goverflouisleiro “An Uncertain Glory-India and its contradictions” என்ற நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார். அமர்த்தியா சென் அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறந்த புகழ் வாய்ந்த பொருளாதாரப் பேராசிரியர். 1998ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான “நோபல்” பரிசினைப் பெற்றவர். உலகம் போற்றிடும் மிகச் சிறந்த பொருளாதார நூல்களை எழுதியவர். இவருடன் இணைந்து ஜீன் டி ரெஸ் என்பவர் கடந்த காலத்திலும் ஒரு சில நூல்களை எழுதியிருக்கிறார். ஜீன் டி ரெஸ் 1979ஆம் ஆண்டு முதல் இந்திய நாட்டில் வாழ்ந்து வருபவர். 2002ஆம் ஆண்டு இந்தியக் குடிமகனாக அங்கீகாரம் பெற்றவர். பல பெரிய பல்கலைக் கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிய பழுத்த அனுபவமிக்கவர்.

இவர்கள் எழுதிய “நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்” என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72இல், “A number of Indian States - Kerala and Tamil Nadu, for example - would be at the top of the South Asian Comparisons if they were treated as separate countries, and others - Uttar Pradesh and Madhya Pradesh, for example - would do enormously worse. But what is most powerfully apparent from these inter-State comparisons within India is just how much this diverse country can learn from the experiences of the more successful States within it.” (தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் பார்ப்போமேயானால், கேரளாவும், தமிழ்நாடும் மற்றெல்லா மாநிலங்களை விடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும்; உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்; இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான இந்த ஒப்பீடுகளில் இருந்து தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், பன்முகம் கொண்ட ஒரு நாடு, மிக வெற்றிகரமான செயலாக்கம் மிக்க அந்த நாட்டு மாநிலங்களிலிருந்து உருவாகும் அனுபவங்களிலிருந்தே படிப்பினைகளைப் பெற முடியும்) என்று எழுதியுள்ளார்கள்.

இந்தியாவிற்குள்ளேயே ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிய அம்சங்களைப் பற்றியும், அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள இந்த நூலின் ஆசிரியர்கள் சர்வதேச அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன என்றாலும்கூட; இந்தியாவிற்குள்ளேயே பலவகைப்பட்ட அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியவையும் அதிகமாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்திய மாநிலங்களின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று பெரிதும் வேறுபட்டதாகும்.

இந்தக் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில்தான்; “நமது நாட்டில் பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவை ஒருங்கிணைந்த நிலையில் உள்ளன. இந்தப் பன்முகம் நமது வலிமையே தவிர, வலுவின்மை அல்ல. பல்வேறு மக்கள் பிரிவினர் வளர்ந்து செழிக்க விரும்பும் ஆவலை நாம் அதிகரிக்க வேண்டும்” என்று நான் முதலமைச்சராக இருந்த போது, தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் 2008ஆம் ஆண்டு பேசியிருக்கிறேன். தொடர்ந்து தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும், தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்திலும், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டதாகும்; வளர்ச்சியடைந்த மாநிலங்களையும், வளர்ந்து வரும் மாநிலங்களையும், வளர்ச்சி குன்றியிருக்கும் மாநிலங்களையும் ஒரே நிலையில், ஒரே அளவில் வைத்து மத்திய அரசு மதிப்பிடக்கூடாது; மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது இணக்கமானதொரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமேயல்லாமல், வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதற்காக ஒரு மாநிலம் தண்டிக்கப்படுதல் கூடாது என்றெல்லாம் நான் விளக்கியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக 9-12-2006 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் “பாரத் நிர்மாண்”

திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைப்போன்று செம்மையாகச் செயல்படும் மாநிலம், அது அடைந்த வெற்றிக்காக மறைமுகமாகத் தண்டிக்கப்படுகிறது என்பதையே இது உணர்த்துகிறது. பாரத் நிர்மாண் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு விலக்கு அளித்திடுமாறு இந்தியப் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழகத்தின் நியாயத்தை விளக்கிப் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறேன்.

இந்திய மாநிலங்களுக்கு இடையிலான வளர்ச்சி வேறுபாடுகளுடையது என்பதை விளக்குவதற்காக, ஏராளமான புள்ளிவிவரங்களை அமர்த்தியா சென் தனது நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். மகளிர் கல்வியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 69.4 சதவிகிதம் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ராஜஸ்தானில் 36.2 சதவிகிதம் பேரும், ஆந்திராவில் 49.6 சதவிகிதம் பேரும், ஒடிசாவில் 52.8 சதவிகிதம் பேரும், கர்நாடகாவில் 59.7 சதவிகிதம் பேரும், மேற்கு வங்கத்தில் 58.8 சதவிகிதம் பேரும்தான் கல்வியறிவு பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள் என்றும் அமர்த்தியா சென்னின் அந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.

அதைப்போலவே, 6 வயதிலிருந்து 14 வயதிற்குள்ளாக பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் 93.9 சதவிகித மாகும். கேரளாவில் 97.7 சதவிகிதமாகும். இமாசலப் பிரதேசத்தில் 96.2 சதவிகிதமாகும். இவை தவிர இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இந்த மூன்று மாநிலங்களை விட குறைந்த சதவிகிதத்தினரே பள்ளி செல்கிறார்கள் என்றும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

8 வயதிலிருந்து 11 வயது வரையில் உள்ள குழந்தைகளில் நன்கு படிக்கத் தெரிந்தவர்கள் என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால், தமிழகத்தில் 79 சதவிகிதம்; இதிலும் கேரளா மாநிலத்தையும், இமாசலப் பிரதேச மாநிலத்தையும் தவிர மற்ற மாநிலங்களில் இதை விடக் குறைவான சதவிகிதத்தினரே படிக்கத் தெரிந்தவர்களாகும்.

5 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு

விகிதத்தைப் பொறுத்து, தமிழ்நாட்டில் 35.5 சதவிகிதம்தான்! கேரளாவில் மட்டும் 16.3 சதவிகிதம்! மற்ற மாநிலங்கள் அனைத் திலும் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. உதாரணம் கூறவேண்டுமேயானால், மத்தியப் பிரதேசம் 94.2 சதவிகிதம்; ஒடிசாவில் 90.6 சதவிகிதம்; உத்தரப்பிரதேசத்தில் 96.4 சதவிகிதம்; மேற்கு வங்கத்தில் 59.6 சதவிகிதம்; கர்நாடகாவில் 54.7 சதவிகிதம்.

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் தமிழகத்தில் 29.4 சதவிகிதம் பேராகும். கேரளாவில் 19.6 சதவிகிதம். மத்தியப் பிரதேசம் 48.6 சதவிகிதம்; உத்தரப்பிரதேசம் 40.9 சதவிகிதம்; மேற்கு வங்கம் 34.2 சதவிகிதம்.

மனித வளர்ச்சிக் குறியீடு தமிழகத்தில் 0.749. தமிழகத்தைக் காட்டிலும் கேரள மாநிலத்திலும், இமாசலப் பிரதேசத்திலும்தான் மனித வளர்ச்சிக் குறியீடு அதிகம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்த மூன்று மாநிலங்களை விடக் குறைவு.

இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதியாக அதாவது 54.5 கோடி மக்கள் தொகை கொண்ட 7 பெரிய மாநிலங்களான பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் ஏழ்மை நிலை மிக அதிகமாக இருந்து வருகிறது. இவற்றில் சில மாநிலங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலவி வரும் வறுமை நிலைமையை விட, மிகக் கொடுமையான நிலையே நீடித்து வருகிறது.

நான் இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் அமர்த்தியா சென் அவர்களின் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன என்று எடுத்துக்காட்டியதும், நமது தமிழக முதல் அமைச்சர் அவர்கள் “பார்த்தீர்களா, பார்த்தீர்களா, என்னுடைய இரண்டு ஆண்டு கால ஆட்சியிலே தமிழ்நாடு எந்த அளவிற்கு முன்னேறிவிட்டது என்பதை கருணாநிதியே எடுத்துக்காட்டிவிட்டார்” என்று கூறிக் கொள்ளலாம். ஆனால் அமர்த்தியா சென் அவர்கள் இந்தப் புள்ளி விவரங்களை அ.தி.மு.க. ஆட்சி 2011 ஆம் ஆண்டு வருவதற்கு முந்தைய ஆண்டுகளிலேயிருந்து தொகுத்துத்தான் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.

இரண்டு நூற்றாண்டு காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு இந்திய நாடு 1947இல் விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற உடனேயே ஜனநாயக அரசியல் வழிமுறையை இந்தியா பின்பற்றத் தொடங்கியது. அதில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், பேச்சு சுதந்திரத்திற்கும், விரிவான அரசியல் உரிமைகளுக்கும் இடம் உண்டு. பிரிட்டிஷ் காலத்தில் இருந்த பஞ்சம் மறைந்து, விடுதலைக்குப் பின் படிப்படியாகப் பொருளாதார முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்றுவரும் நாடாகும். ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளில் போதிய கவனமின்மை, பெண்கள் முன்னேற் றத்திற்குத் தேவையான பொறுப்பின்மை, இந்தியாவின் தற்போதைய மிகப் பெரிய பிரச்சினைகளாக இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

மக்களுடைய வாழும் சூழ்நிலைகளில் மேம்பாடு காண்பதற்குத் தேவையான இயற்கை வளங்களை மிக அதிக அளவில் பயன்படுத்துதல், மக்களின் ஈடுபாட்டை அதிகரித்தல் போன்றவற்றில் போதுமான முன்னேற்றம் இல்லை என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான மின்சாரம், கழிவுநீர் வசதிகள், போக்குவரத்து மற்றும் சுகாதாரம் ஆகிய பிரச்சினைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன என்று அமர்த்தியா சென் அவர்கள் குறைபட்டிருக்கிறார்.

ஜப்பான், தென்கொரியா, சைனா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் மனித வளங்களின் மேம்பாடும், வளர்ச்சியும், பயன்பாடும் இந்தியாவில் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற அடிப்படை சவால்களிலிருந்து இந்திய நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால், திட்டமிடுதலில் மறு சிந்தனை தேவைப்படுகிறது. சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் ஏற்பட்டு வரும் பின்னடைவைப் பற்றிய விழிப்புணர்ச்சி மக்களிடையே உருவாக்கப்படுதல் வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் பொது விவாதம் என்பது வசதி மிக்கவர்கள் மத்தியிலே மட்டும் நடைபெறும் ஒன்றாக மாறி வருகிறது;

பொது விவாதம், வசதியற்ற மக்களிடையேயும் உருவாக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படுதல் வேண்டும். அரசியல் ஜனநாயகத்தை முழுமையாகப் பின்பற்றுவதன்மூலம் இந்தியாவின் அடிப்படை நிலைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

“பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது எனினும், சர்வதேச ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கில்லை. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே அருந்தி வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும், இந்தியாவின் எதிரே உள்ள சவால்களாகும்” என்றும்;

“இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய நுட்பமான ஆய்வு இந்த நூலில் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவற்ற வளத்தைப் பற்றியும், இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்திய நாட்டுப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆழ்ந்த சரியான விமர்சனமாக இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். இந்த நூலில் இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், அரசியல், வரலாறு மற்றும் சட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களும் விரிவாக கையாளப்பட்டுள்ளன” என்றும்;

இந்த நூலைப் பற்றி சில விற்பன்னர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

“தற்போது குறைந்து கொண்டே வரும் வளர்ச்சிக் குறியீட்டைப் பற்றிய விவாதம் பெருகி வரும் காலகட்டத்தில் இந்த நூல் வெளி வந்திருப்பது பொருத்தமான ஒன்றாகும். குறைந்து வரும் வளர்ச்சிக் குறியீடு நமக்குள்ள கவலையை அதிகரிப்பதைவிட, வளர்ச்சிக் குறியீடு வளர்ந்து வரும்போது சமுதாயத்தில் வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வருவதுதான் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமூக - பொருளாதாரக் களங்களில் தோன்றியுள்ள சவால்களை இந்திய ஜனநாயகம் சமாளிக்கத் தவறிவிட்டது. சமூக சமன்பாடின்மை அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாட்டில் காணப்படுவதை விட சற்றே அதிகமாகத்தான் கல்வி, சுகாதாரம், பெண்கள் எழுத்தறிவு, சத்துணவு போன்ற துறைகளில் இந்தியா வளர்ந்திருக்கிறது. வங்காள தேசம்கூட இந்தியாவைவிட சிறந்த சமூகக் குறியீடுகளைப் பெற்றிருக்கிறது. இந்தியா அமெரிக்கப் பாதையைப் பின்பற்றி வளர்ச்சி அடைந்து விடலாம் என்று எண்ணி விடக் கூடாது. பொதுத் துறை மற்றும் தனியார் துறை பொருளாதாரம் பற்றிய தவறான அணுகுமுறைகளே தொடக்கத்திலிருந்து பின்பற்றப் பட்டு வருகின்றன. மாற்றம் என்பது உடனடியாக ஏற்பட்டு விடாது; கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது உருவாக முடியும்” என்பது போன்ற கருத்துக்களை இந்த நூலாசிரியர் அமர்த்தியா சென் விவரித்திருப்பதையெல்லாம் தொகுத்து, “இந்து” நாளிதழில் திரு. ரகுவீர் சீனிவாசன் அவர்கள் கட்டுரையாகத் தீட்டியிருக்கிறார்.

இன்றைய (3-8-2013) “எகனாமிக் டைம்ஸ்” ஆங்கில நாளேட்டில் இந்த நூலைப் பற்றி சிறப்பானதொரு தலையங்கமே எழுதியிருக்கிறார்கள். அதில், “வளர்ச்சியை ஏற்படுத்தி அதனை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டுமேயானால், சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு, கல்வி மற்றும் முதலீடு ஆகியவற்றின் முக்கியத்துவம் உணரப்படுதல் வேண்டும் என்ற கருத்தை இந்த நூலில் வலியுறுத்தியிருக்கிறார். மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யாமல், எந்த ஒரு நாடும் ஏழ்மை நிலையிலிருந்து மீண்டு, செழிப்பான நிலைக்கு உயர்ந்துவிட முடியாது என்பதையும் விளக்கியிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் இப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம் தொகுத்திருந்த போதிலும் நம்மைப் பொறுத்தவரையில் நான் முதலில் எழுதியவாறு; கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால், எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற கருத்தும்; மாநிலங்கள் அனைத்தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும்தான் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன.

குறிப்பாக சேது திட்டம் போன்றவற்றை தடுக்க நினைக்காமல்; ஒட்டுமொத்தமாக அவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறைவேற்றிட அனைத்துத் தரப்பினரும் முன் வருவார்களேயானால் அமர்த்தியா சென் எழுதியிருப்பதைப் போல, நமக்கு எதிரே உள்ள சவால்களை சாமர்த்தியமாகப் புறந்தள்ளி முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வேகமாக அடியெடுத்து வைத்திட முடியும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அன்புள்ள, மு.க. 04-08-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗