தொகுதி 49 · கடிதம் 3787
ஆகஸ்ட் 8: ஆர்ப்பாட்டத்தில் அலைகடலெனத் திரள்வீர்!
2013-08-01
உடன்பிறப்பே,
இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை தலைமைத் தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷபிரியா, தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 12-7-2013 அன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சுதந்திரமாக நடமாட முடிய வில்லை. அங்கு ராணுவத்தைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று கோரி வருகிறோம். வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கையை ஆணையம் நிராகரித்துள்ளது. எனினும், நிர்வாக நடவடிக்கைகளில் ராணுவம் தலையிடுவதைக் குறைத்துக் கொண்டு, அத்தகைய பணிகளில் போலீசாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், காமன்வெல்த் மற்றும் ஆசிய நாடுகளின் பார்வையாளர்களை வரவழைக்க தேர்தல் ஆணையர் ஒப்புக் கொண்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரோஹன் ஹெட்டியார்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தேர்தலை நியாயமாக நடத்துமாறு ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
வடக்கு மாகாணத்தில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதை, குறைக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகள் கூறி வருகின்றன. ஆனாலும், “பாதுகாப்புக்காக” என்று சாக்குச்சொல்லி, அந்த ராணுவத்தை விலக்கிக் கொள்ள இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்தச் சூழலில் சுதந்திரமாக அங்கே தேர்தல் நடைபெற வேண்டுமென்றால், அங்கே குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை அந்தப் பகுதியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் காவல் துறை மற்றும் நிலப் பகுதிகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் அதிகாரப் பரவல் சாத்தியமில்லை என்று இலங்கையின் வடக்கு மாகாணக் கவுன்சில் தேர்தலில் தமிழர் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் சி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான இவர், மாகாணக் கவுன்சிலுக்கான அதிகாரத்தில் காவல்துறை மற்றும் நில உரிமை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் முடிவானது தற்கொலைக்குச் சமமாக அமையும் என்றும்; மாகாணக் கவுன்சிலில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த கவுன்சில் வசமே அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள காவல் துறை மற்றும் ராணுவத்தினர் அனைவருமே சிங்களவர்களாவர். மொத்தம் 15 படைப் பிரிவு வீரர்கள் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள். அதாவது இரண்டு இலட்சம் வீரர்களைக் கொண்ட இலங்கை ராணுவத்தில், வடக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மிக அதிக அளவிலான இந்த ராணுவக் குவிப்பு மக்களிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமாக தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகளையும், தமிழர்கள் வாழும் வீடுகளையும் சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், வடக்கு மாகாணத்தில் பெருமளவுக்கு ராணுவ நடமாட்டம் இருப்பதைப் பற்றியும், “டெசோ” மாநாட்டில் 12-8-2012 அன்றே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியமானவையாகும். அந்தத் தீர்மானங்களில்,
“ஈழப் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும் வீடுகளும்
வன்பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்பூர், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளில் தமிழர்களுக்கு உரிமையான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட் டுள்ளன. இவ்வாறு, வழிவழியாக வாழ்ந்து வந்த பகுதிகளில் தமிழ் ஈழ மக்கள் நிலங்களைப் பறிகொடுத்த நிலையில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் கொடுமைக்கு முடிவு கட்டும் முயற்சிகளை ஐ.நா. மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது” என்றும்,
“இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளைக் கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் இராணுவம், அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது. இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சிகளும் நடத்த முடியாது. இராணுவத்தினரே அங்கு மாவட்ட ஆட்சியராகவும் அரசு நிர்வாகிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன்றையத் தமிழ் ஈழம் ஓர் இராணுவ முகாம் போலக் காட்சி யளிக்கிறது” என்றும் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.
இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் எழிலன் மனைவி உள்ளிட்டோர் போட்டியிடப்போவதாகவும் செய்தி வந்துள்ளது. திரிகோணமலை மாவட்டத்தின், விடுதலைப் புலிகள் தலைவராக இருந்தவர் தான் எழிலன். அவரது மனைவி ஆனந்தி, இந்தத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறாராம். ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணிக் கட்சி சார்பில் தற்போது அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவும் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகிறாராம். மேலும் முன்னாள் எம்.பி.க்கள் தர்மலிங்கம், சிவலிங்கம் உள்ளிட்டோரும் யாழ்ப்பாணத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்களாம். தமிழ்க் கட்சி களுக்குள் போட்டி அதிகரித்துள்ளதால், தகுதியான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன.
மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்திட வேண்டுமென்ற, இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும். இலங்கை ராஜபக்ஷே அரசின் ஆதரவோடு, சிங்களர் இயக்கம் 13-வது திருத்தத்தை எதிர்த்து வருகிறது; அந்தத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும் வருகிறது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம், இந்தியாவின் அச்சுறுத்தலினாலும், அழுத்தத்தின் காரணமாகவும் நிறைவேற்றப்பட்டதென்று, சிங்களர் இயக்கங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் நமக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும்; இந்திய அரசும், இலங்கை அரசும் 1985 ஆகஸ்ட் முதல் 1986 டிசம்பர் வரை ஓராண்டு காலத்திற்கும் மேலாகவே விவாதித்து, ஆழ்ந்து பரிசீலித்து, பல கலந்தாலோசனை களுக்குப் பின்னர்தான் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பதே உண்மையாகும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, பிரிட்டிஷார் ஆளுகையின் கீழ் இலங்கை இருந்தபோதே, 1940ஆம் ஆண்டில், “டொனோமோர் கமிஷன்” (Donoughmore commission) பரிந்துரை ஏற்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணக் கவுன்சில்கள் அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும் அது செயலாக்கத்திற்கு வரவில்லை.
இலங்கை விடுதலை அடைந்ததற்குப் பிறகு, 1955ஆம் ஆண்டு, “சோக்சி கமிஷன்” (Choksy Commission), வட்டாரக் கவுன்சில்கள் குறித்துப் பரிந்துரை செய்திருந்தது. 1957ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பண்டாரநாயக - செல்வ நாயகம் ஒப்பந்தத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரக் கவுன்சில்கள் பற்றிய அம்சமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
எனவே “தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணக் கவுன்சில்கள்” என்ற அம்சம், ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் 1987ஆம் ஆண்டு பிறந்த புதிய யோசனை அல்ல. 1940ஆம் ஆண்டிலிருந்தே விவாதிக்கப்பட்டு, இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு செயல் திட்டமாகும்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களையும், வீடுகளையும் சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டும், பெருமளவுக்கு ராணுவத்தை நிறுத்தி வைத்தும், 13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தும், தேர்தல் நடத்துவதற்கு ராஜபக்ஷே அரசு முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நிலைமையிலேதான், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைக்குச் செல்லவிருக்கிறார்.
இலங்கை பயணத்தின்போது தமிழர் பகுதிகளில் நடக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளை திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் ஆய்வு செய்யவிருக்கிறார். அவரது வருகையைக் குறித்து இலங்கை மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் பிரதிபா மகாநாமாகீவா, “இலங்கையில், போர் பாதித்த பகுதிகளில் நடக்கும் மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் வருகிறார்; நிலைமையைப் பார்வையிட்டு, ஜெனீவாவில், அடுத்த ஆண்டு நடக்கும் மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்” என்று கூறியிருக்கிறார்.
திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைக்குச் செல்லும்போது வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன்பே திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முறைகேடுகள் பற்றியும், தமிழர்களுக்குச் சென்றடைய வேண்டிய நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை என்ற குறை சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் நேரடியாகக் கண்டறிந்து அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளை ஐ.நா. அளவில் மேற்கொள்வார் என்று உலகத் தமிழர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிவாரண உதவிகளைப் பற்றி ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டுமேயானால், இந்தியாவின் நிதியில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் குறைந்தது நான்கு பேருக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கும் குடும்பத்தினர்க்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படும் என்று இலங்கையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் சிங்களர்களுக்கு; இந்தியாவின் நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்யும் நிலை
உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவதைப் பற்றி நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியான இணைப்பைத் துண்டித்திடும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரா மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும், “வெளிஓயா” என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை ராஜபக்ஷே அரசு உருவாக்கி அங்கே சிங்களவர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை “டெசோ” அமைப்பின் சார்பில் ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, பொதுத் தேர்தல் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களைப் புதிதாக உருவாக்குவதோ, எல்லைகளை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு செயல்பட்டு வருவதையும் “டெசோ” அமைப்பின் சார்பில் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும், “டெசோ” கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராகத் தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும்தான் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தமிழகம் முழுதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அணிவகுக்க தாய்த் தமிழகத்திலே உள்ள தமிழர்கள் எல்லாம் தயாராகிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர் களோடு இணைந்து, தலைநகர் சென்னையில் நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நானும் வருகிறேன்
என்பதையும் தெரிவித்து, நீயும் தவறாமல் வரவேண்டுமென்று
கேட்டுக் கொள்கின்றேன். இலங்கைத் தமிழர்களுக்காக எப்போதும்
இன எழுச்சிக் குரல் கொடுக்கத் தயங்காத கழகக் கண்மணிகளே;
ஆகஸ்ட் 8 ஆர்ப்பாட்டத்திற்கு அலைகடலெனத் திரண்டு வாரீர் வாரீர் என்று அழைக்கின்றேன்!
அன்புள்ள,
மு.க.
01-08-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗