தொகுதி 49 · கடிதம் 3786
தாமதமே; உன் பெயர்தான் தமிழக அரசா?
2013-07-31
உடன்பிறப்பே,
அ.தி.மு.க. ஆட்சி எந்த அளவிற்கு விரைந்து செயல்படுகிறது (?) என்பதற்கு உதாரணமாக அண்மையில் அதாவது இந்தத் திங்கள் 28ஆம் தேதியன்றும், 29ஆம் தேதியன்றும் வெளிவந்துள்ள முதல் அமைச்சரின் இரண்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
28-7-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இராமனாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் ஈரான் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க நான் தலையிட வேண்டுமென்று மீனவர்களின் குடும்பத்தினர் 24ந்தேதி மனு அளித்த பிறகே இந்தப் பிரச்சினை எனக்குத் தெரியவந்தது. அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரான் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குச் சட்ட உதவி கிடைக்காத சூழ்நிலையில் ஈரான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆறு மாத காலம் சிறையும், 5,750 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்தும், அபராதத் தொகையைச் செலுத்த முடியாததால், ஏழை மீனவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழக மீனவர்களால் அங்குள்ள இந்திய தூதரகத்தைக்கூடத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, அபராதத் தொகையைச் செலுத்த சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தை அறிவுறுத்த வேண்டும். சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெயலலிதா எழுதியுள்ளார். அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றடைந்ததோ இல்லையோ, தமிழகத்தில் உள்ள ஏடுகளில் கொட்டை எழுத்துக்களில் வெளிவந்துள்ளது.
மீனவர்கள்பால் அக்கறையோடு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். ஈரான் சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களையும் மீட்க மத்திய அரசும், பிரதமரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை மத்திய அரசு செலுத்திட முன்வராவிட்டாலும்கூட, அதற்காகக் காத்திருக்காமல் தமிழக அரசே அபராதத் தொகையைச் செலுத்தி, 16 மீனவர்களையும் உடனடியாகத் தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று மீனவர் சமுதாயம் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பதால் அதனை நானும் வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சர் தனது கடிதத்தில், மீனவர்களின் குடும்பத்தினர் 24ந்தேதி மனு அளித்த பிறகே இந்தப் பிரச்சினை தனக்குத் தெரியவந்தது என்று எழுதியிருக்கிறார். மீன் வளத்துறைக்கென அமைச்சரும், அந்தத் துறைக்கென அதிகாரிகளும் இருக்கிறார்களா; இல்லையா? அவர்கள் ஏன் இந்தத் தகவலை முதலமைச்சரின் கவனத்திற்குக் கடந்த ஆறு மாத காலமாகக் கொண்டுசெல்ல வில்லை? 27-7-2013 தேதிய “தினமலர்” நாளிதழிலேயே “தமிழக மீனவர்கள் 16 பேர் ஈரான் சிறையில் தவிப்பு - மீட்கக்கோரி குடும்பத்தினர் அமைச்சரிடம் மனு” என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியிலேயே, “ஈரான் சிறையில் வாடும், 16 மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்கக்கோரி, கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர்களிடம் ஏற்கனவே மனுக் கொடுத்துள்ளனர். அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் மனுக் கொடுத்துள்ளனர். மனுவின் நகலை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளனர். எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று அமைச்சரைச் சந்தித்தனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், அந்தத் தொகுதியின் தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹெலன் டேவிட்சன், மீனவர்களைப் பற்றிய தகவல் அவருக்குத் தெரிந்தவுடன், 28-7-2013 அன்று மத்திய அமைச்சர்கள் திரு.வயலார்ரவி அவர்களுக்கும், திரு.சல்மான் குர்ஷித் அவர்களுக்கும், ஈரானில் உள்ள இந்தியத் தூதுவருக்கும் எழுதிய கடிதத்தில், அந்த மீனவர்கள் பற்றி 13-3-2013 அன்றே அந்த மத்திய அமைச்சர்களுக்கே கோரிக்கை வைத்ததையும் நினைவூட்டியிருக்கிறார். மேலும் அந்த அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்திட விரும்புகிறேன். மத்திய அமைச்சர்களுக்கு நமது நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதத்தில், “I am representing on behalf of the Indian Fishermen of my Constituency who are in Jail from 14th December 2012 to till date, which I have already intimated on via mail on 13-3-2013 regarding below mentioned. And I have received an acknowledgement letter from the Embassy on 23-5-2013. This is to inform you that till now the persons who are in the jail, they were unable to contact their family members for the past four months and I am not getting any progress related to the case. As they are the only earning member of the family, their family members are very much worried about them. Hence, I request your goodself to take immediate action for the immediate repatriation of Indian fishermen who are in Iran Jail” என்று எழுதியிருப்பதையும், தி.மு.கழகம் இதுபோன்ற பிரச்சினைகளில் எந்த அளவிற்குச் செயல்படுகிறது என்பதற்கும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எந்த அளவிற்குத் தாமதமாக நடைபெறுகின்றன என்பதற்கும் எடுத்துக்காட்டாக இவை விளங்குகின்றன. அமைச்சரிடம் மீனவர்கள் கொடுத்த மனுவிலேகூட, “மீனவர்கள் வருமானம் இல்லாமல் சிறையில் உள்ளதால், அவர்களை மீட்பதற்கான செலவு, தாயகம் திரும்புவதற்கான செலவு ஆகியவற்றைத் தமிழக அரசு ஏற்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக அரசு இந்தச் செலவினை ஏற்கத் தானே முன் வந்து சிறையிலே உள்ள மீனவர்கள் விரைவில் தங்கள் ஊருக்குத் திரும்பிட உதவி செய்தால், “மீனவர்கள் வாழ்வில் விளக்கேற்றிய அம்மா அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி” என்று அந்தத் துறையின் அமைச்சரும், மற்றவர்களும் பக்கம் பக்கமாகப் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்க வாய்ப்பு ஏற்படும். அ.தி.மு.க. வினர் செய்யும் விளம்பரத்தைப் பற்றிக் கூறும் போது ஒன்றைக் கூற வேண்டும். முதலமைச்சர் சென்னையிலே இருக்கும்போது, அவருடைய வீட்டின் அருகே நடந்து செல்வதற்குக்கூட இடம் இல்லாமல் வரிசையாக “விளம்பரத் தட்டிகள்” முதலமைச்சரைப் புகழ்ந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக முதலமைச்சர் சென்னையிலே இல்லாத காரணத்தால், அம்மையார் ஒவ்வொரு நாளும் ஓர் அறிவிப்பினைச் செய்துகொண்டிருந்த போதும், ஒரு விளம்பரத் தட்டிகூட அந்தச் சாலையில் வைக்கப்படவில்லை என்பதைக் காணும்போது, அவர்கள் எல்லாம் எந்த அளவிற்கு உள்ளன்போடு அவைகளை வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?
இந்த நேரத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி மாதம், இதுபோன்ற ஒரு பிரச்சினையில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் என் நினைவுக்கு வருகிறது. 9-1- 2013 அன்று நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், “கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஈரான் நாட்டிலுள்ள எக்கிஸ் தீவு சிறையில் வாடிவரும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் கேரளா மீனவர்கள் 29 பேரின் துயரத்தைத் தங்களது கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக இக்கடிதத்தை அனுப்புகிறேன். அவர்கள் ஏராளமான சிரமங்களுக்கும், அவலங்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஜெ. ஹெலன் டேவிட்சன் எழுதியுள்ள கடிதத்தில் அந்த மீனவர்களின் கொடுமையான அனுபவங்களை விளக்கியுள்ளார். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவவசதிகள் போன்றவை மறுக்கப் பட்டுள்ளன. ஈரான் சிறை நிர்வாகத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகின்றனர். இந்த மீனவர்கள் வெளிநாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்குச் சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். இப்பிரச்சினை குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளபோதும், சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க அதன் முயற்சிகள் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை. எனவே அந்த 29 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும், கூடிய விரைவில் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வருவதையும் உறுதிசெய்ய இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உத்தரவிடும்படி தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நான் பிரதமருக்கு எழுதியிருந்தேன்.
நான் அனுப்பிய இந்தக் கடிதத்தின் அடிப்படையில்
பிரதமர் அலுவலகம் அப்போது எடுத்துக்கொண்ட முயற்சிகள் காரணத்தாலும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹெலன் டேவிட்சன் பிரதமர் அலுவலகத்தில் நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நேரில் வலியுறுத்தியதாலும், ஈரான் சிறையிலே இருந்த 29 மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். அந்த மீனவர்கள் விமானத்தின் மூலமாகத் திருவனந்தபுரம் வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினரும், அவர்களின் விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டவருமான திருமதி. ஹெலன் டேவிட்சன் அவர்கள் நேரில் சென்று அவர்களையெல்லாம் வரவேற்றதோடு, அந்த மீனவர்கள் சார்பாக ஹெலன் டேவிட்சன் அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்ட புகைப்படமும் அப்போதே “முரசொலி”யில் வெளிவந்துள்ளது. இந்த முன்மாதிரியைப் பின்பற்றி, இப்போது இந்த 16 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க மத்திய அரசும், மாநில அரசும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
அடுத்து 29-7-2013 அன்று, பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மருத்துவப் படிப்புக்குக் கடந்த 18ந்தேதி நுழைவுத் தேர்வினை எங்களுடைய கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்புக் கூறினார்கள். ஆனால் மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வற்புறுத்தி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்று கூறியிருக்கிறார். இது தவறான முடிவாகும். பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு செய்யும் முடிவைக் கைவிடவேண்டும்” என்று பிரதமரைத் தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தக் கடிதமும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புவந்தது இந்த மாதம் 18ஆம் தேதி. அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து 21ஆம் தேதியன்று மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் சீராய்வு மனு தாக்கல் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறி, அந்தச் செய்தி ஏடுகளிலே வெளிவந்தது. அதைப் படித்தவுடன், 22ஆம் தேதியன்று நான் எழுதிய “உடன்பிறப்பு” மடலில், நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து கடந்த பல ஆண்டுகாலமாக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் விவரமாக எழுதியதோடு, கழகம் ஆட்சியில் இருந்தபோது 27-8-2010 அன்று குலாம் நபி ஆசாத் அவர்களே நுழைவுத் தேர்வு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கு ஆதரவாக எழுதிய பதில் கடிதத்தையும் அப்படியே வெளியிட்டிருந்தேன். மேலும் அந்தக் கடிதத்தின் இறுதியில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று என்றும், அந்தத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக மத்திய அமைச்சர் அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது என்றும், தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்கும் என்றும் விரிவாக எழுதியிருந்தேன். 22ஆம் தேதியன்று நான் எழுதியது 23ஆம் தேதிய நாளிதழ்களில் வெளிவந்தது.
நான் 22ஆம் தேதி எழுதிய அந்தக் கருத்தினைத்தான், அதாவது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கருத்தினைத்தான் நம்முடைய அ.தி.மு.க. அரசு 29ஆம் தேதியன்று பிரதமருக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்திருக்கிறது. இதைத்தான் தமிழக அரசு எந்த அளவிற்கு அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் விரைந்து செயல்படுகிறது என்பதற்கான உதாரணமாகக் காட்டிட விரும்புகிறேன். இடையிலே ஒரு சிறுசந்தேகம். நுழைவுத் தேர்வே கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற தமிழக அரசு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைத் தமிழக அரசே கடந்த ஆண்டு எடுத்துக்கொண்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரியைத் தனி அதிகாரியாக நியமித்து நிர்வாகத்தை அரசே எடுத்துக்கொண்ட போதிலும், இந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வினை நடத்த முற்பட்டது ஏன்? எப்படியோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும், ஈரானில் அவதிப்படும் மீனவர்களை விடுவிப்பதிலும், தாமதமாக எழுதியிருந்தாலும், சரியான கருத்தினைத் தெரிவித்திருப்பதற்காக; தமிழக அரசின் இந்த இரண்டு முடிவுகளையும் நான் வரவேற்கிறேன். தாமதமே; உன் பெயர்தான் தமிழக அரசா?
அன்புள்ள, மு.க. 31-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗