உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3785

நிறைவேறட்டும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!

2013-07-30

உடன்பிறப்பே,

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பது கடந்த பதினாறு ஆண்டுகளாக அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு பிரச்சினையாகும். மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும், பிறகு ஏதோ ஒரு காரணத்தால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போய்விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் திருமதி ஜெயந்தி நடராஜன் அவர்கள் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது; கடந்த முறை பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டனர். ஆனால் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றிட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

2010ஆம் ஆண்டிலேயே, தமிழகத்தில் கழக ஆட்சி இருந்தபோதே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்படியும் நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்போடு 8-3- 2010 அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது உறுப்பினர்களுக்கு “கொறடா” உத்தரவு பிறப்பித்தது இயல்பான ஒன்று என்ற போதிலும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் தனது உறுப்பினர் களுக்குத் தீர்மானத்தை ஆதரிக்க “கொறடா” உத்தரவு பிறப்பித்தது.

“இந்த முறை நிறைவேறிவிடும்” என்று ஒவ்வொரு முறையும் பரவலாகப் பேசப்பட்டு, ஆனால் ஏதோவொரு காரணத்தால் தள்ளிப்போய் வந்த இந்தக் கோரிக்கை இந்த முறை எப்படியும் நிறைவேறிவிடும் என்ற எதிர்பார்ப்பு 2010 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் எழுந்தது.

இளம் தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோதுதான் மகளிர்க்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டது. அதற்கு முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான “பஞ்சாயத்து ராஜ்”சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பது கட்டாயமாக்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு நான்காவது முறையாக எனது தலைமையில் கழக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அதற்கு முன்பு பல ஆண்டுக்காலம் நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை அறிவித்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் தேர்தலை நடத்தி 1,16,747 மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்புகளையேற்கும் நிலையை உருவாக்கியபோது, மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துப் பதவிகளிலும் முதல்முறையாக, 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்து பெரும் சாதனை புரிந்ததின் வாயிலாக 44,143 மகளிர் அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்கும் நிலைமையைத் தமிழகத்தில் கழக அரசு செய்து காட்டியது.

அதே 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர்க்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா முதலில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அன்றைய பிரதமர் தேவகவுடா அவர்கள் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் 81வது அரசியல் சாசனத் திருத்தத்தின்கீழ் இந்த மசோதாவை அன்றைய மத்திய சட்ட அமைச்சராக இருந்த திரு. ராம்காந்த்காலப் அவர்கள் முன்மொழிந்தார். சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா - நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையானது அதே ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதியன்று பதினோராவது மக்களவையில் முன்மொழியப்பட்டது. பின்னர் அதற்கடுத்த பன்னிரண்டாவது மக்களவையிலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலே - 84வது அரசியல் சாசனத் திருத்தமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் - 26- 6-1998 அன்று மீண்டும் முன்மொழியப்பட்டபோதிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவை ஒத்திவைக்கப்பட நேரிட்டது. அதன்பிறகு பதிமூன்றாவது மக்களவையில், திரு.வாஜ்பய் அவர்கள் பிரதமராக இருந்தபோது 22-11-1999 அன்று மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த திரு. ராம் ஜெத்மலானி அவர்கள் மசோதாவை முன்மொழிந்த நேரத்தில் - சமாஜ் வாடி, ஆர்.ஜே.டி. கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து - சட்ட அமைச்சரின் கையிலே இருந்த மசோதாவின் நகலைப் பறித்துக் கிழித்தெறிந்தனர். அதன்காரணமாக அப்போதும் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஒரு முறையும் - 2003ஆம் ஆண்டில் இரண்டு முறைகளும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட போதிலும், அப்போதும் அதனை நிறைவேற்றிட இயலவில்லை. 2008ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே - சட்ட அமைச்சராக இருந்த திரு.பரத்வாஜ் அவர்கள் மாநிலங்களவையிலே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்த நேரத்திலும், அப்போது அவையிலே ஏற்பட்ட அமளியால் மசோதா நிறைவேறவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டங்களில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் ஒன்று. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியைத் தவிர்த்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளான இடது சாரிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. ஆனால் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெண்களுக்கான மசோதாவை நிறைவேற்ற லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாலும், கருத்து ஒற்றுமை ஏற்படாததாலும், பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவு குறித்து உடன்பாடு காண முடியவில்லை.

2005ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தி.மு.கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினையொட்டி, “தமிழக மகளிரே ஒன்று கூடுங்கள்” என்று நான் விடுத்த அறிவிப்புக்கிணங்க, அந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15இல் சென்னையில் மகளிர் பேரணி ஒன்று என் தலைமையில் நடைபெற்றது. மேலும் 2007ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக்குழு, மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டுமென்றுகோரி மாவட்டத் தலைநகரங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி அந்த ஆண்டு மகளிர் பேரணி நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி அவ்வாறே நடத்தப்பட்டது. அதே ஆண்டு ஜூலைத் திங்கள் 14, 15 ஆகிய இரு நாட்களில் கடலூரில் தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான், “பெண்கள் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் 33 சதவிகித தொகுதிகளில் பங்கேற்கும் வகையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றிட வேண்டும்” என்பதாகும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் - இன்று நேற்றல்ல, பல ஆண்டுக் காலமாக இந்த மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறைகொண்டு, ஒவ்வொரு மாநாட்டிலும், பொதுக்குழுவிலும் தீர்மானங்கள் நிறைவேற்றிடத் தவறியதில்லை. இன்றைக்கு இந்தியத் திருநாட்டின் பல இடங்களிலும் - மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற ஒலியைக் கேட்க முடிகிறது.

ஏன்; தனியாக மகளிர்க்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரவேண்டும்? இப்போது மகளிர் அந்தப் பொறுப்புகளுக்குப் போட்டியிட முடியாதா? சட்டம் ஏதாவது தடுக்கிறதா?

சட்டம் தடுக்கவில்லை! சட்டமன்ற வேட்பாளராகவோ, நாடாளுமன்ற வேட்பாளராகவோ; தேர்தலில் ஒரு ஆண் போட்டியிடுவதைப்போல; இப்போது ஒரு பெண்ணும் போட்டியிடலாம்; அரசியல் சட்டம் அதைத்தடுக்கவில்லை. ஆனால் ஆணாதிக்கம் அவர்களைப் போட்டியிட அனுமதிப் பதில்லை. ஆணாதிக்கத்தின் இந்தச் சனாதனச் சம்பிரதாயத்துடன் எவ்வளவு காலத்துக்குச் சண்டை போட்டுக்கொண்டிருக்க முடியும்; அதனால்தான் மகளிர்க்கு இத்தனை இடம் என்று ஒதுக்கீடு செய்து, அந்தச் சட்டப்படி அந்த இடங்களில் மகளிர் மட்டும்தான் போட்டியிட முடியும் என்று செய்துவிட்டால்; அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கான அடிக்கல் நாட்டும் திருப்பணி நிறைவேறத் தொடங்கிவிடும். ஏற்கனவே தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களை இந்த உரிமைகளைப் பெறக் கூடியவர்களாகக் கைதூக்கி விட இருக்கின்ற தனித்தொகுதி முறை எல்லா மட்டத்திலும் அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருப்பதை “மாதிரி” யாகக் கொண்டு; அந்தப் பழைய நிலைக்குப் பங்கமேதும் நேராமல்; இப்போது கோரிக்கையாக வைக்கப்படுகிற மகளிர் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு அதற்கான துவக்கத்தை நடத்த சமூகப்பிரக்ஞையுள்ள, உரிமைகள் வழங்கப்படுவதில் உள்ள நியாயங்களை நிலைநாட்டுவதற்கு நினைத்திடும் இயக்கங்கள் முன்வர வேண்டும். பொதுக்கருத்து (consensus) உருவாக வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருப்பது பொறுப்புடையோர் செயல் எனினும்; கோரிக்கையைத் தள்ளிப்போடுவதற்காகக் 'காத்திருப்பு' என்பது ஏற்க இயலாத ஒன்றாகி விடும். சட்டம் நிறைவேற்றிடத் தேவையான வாக்குகள் கிடைக்காவிட்டால்கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு தராதவர்களை மகளிர் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாம் அல்லவா? 2010ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினை தீவிரமாக விவாதிக்கப்பட்ட நேரத்திலேயே நான் கருத்து தெரிவித்தபோது, முதலில் மகளிர்க்கு 33 சதவிகிதம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதும்; பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்று படிப்படியாக “உள் ஒதுக்கீடு” செய்து கொள்வதும் சரியானதாகும். முதலில் விருந்துக்கான அழைப்பையேற்று வீட்டுக்குள் செல்வோம். பின்னர் விருந்தில் படைக்கப்படும் பண்டங்களில் நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடியது எது; ஒவ்வாதது எது என்பதைச் சொல்லி அதற்கேற்பப் பரிமாறச் செய்வோம் என்று கூறினேன்.

“Don’t fail the Women of India” (இந்திய நாட்டு மகளிரை ஏமாற்றிவிடாதீர்கள்) என்ற தலைப்பில் “இந்து” நாளிதழ் 2010ஆம் ஆண்டில் எழுதிய தலையங்கத்தில் “The United Progressive Alliance Government’s announcement of its intention to push forward the Women’s Reservation Bill without any dilution in the coming week is the best political news we have had for a long time. If all goes according to plan, the long-pending Bill will be adopted by both houses of Parliament on or around March 8. which marks the Centenary of International Women’s Day” என்று எழுதியிருந்தது.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் தனது தலையங்கத்தைத் தொடங்கும்போது, “The Government’s renewed efforts to push ahead with the women’s reservations bill underline the political value of the measure in its eyes rather than the possibility of enactment” என்று எழுதியது.

8-3-2010 அன்று பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டமசோதா, மாநிலங்களவையில் பெரும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான வாக்கெடுப்பு அதற்கடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் பலத்த சர்ச்சை மற்றும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும், எதிர்த்து ஒரே ஒரு வாக்கும் பதிவானது. மசோதா மீதான விவாதத்தில் கழகத்தின் சார்பில் கவிஞர் கனிமொழி பேசினார். மகளிர் இட ஒதுக்கீடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது,

9-3-2010 அன்று அதுபற்றி என்னிடம் கருத்து கேட்ட நேரத்திலேகூட, “இட ஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்தப் பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவது தான் உள் ஒதுக்கீடு. இப்போது நமக்குப் பழம் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனைச் சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம்” என்று கூறியதோடு, பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் வாழ்த்துத் தந்தியும் அனுப்பினேன்.

அதற்குப் பிறகுத் தலைமைச் செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் திருமதி சோனியாகாந்தியும் பிரதமரும் கலந்து கொண்டபோது, அவர்களுக்கு முன் நான் உரையாற்றிய நேரத்தில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டு முதன் முறையாக நமது மாநிலத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களும் வந்துள்ளனர். அந்த வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிவிட்டு முதன் முதலாக நமது தமிழகத்திற்கு வந்துள்ள அவர்களைப் பாராட்டி மகிழ்வதற்கு அடையாளமாக அனைவரும் ஒரு நிமிடம் தொடர்ந்து கைதட்ட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே விழா நடைபெற்ற பெரும் பந்தலே அதிரும் வண்ணம் வந்திருந்த அனைவரும் கைதட்டிப் பாராட்டி மகிழ்ந்தார்கள். அதன் பிறகு உரையாற்றிய திருமதி சோனியாகாந்தி அவர்கள், “கலைஞர் அவர்களே, இங்கு மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது பற்றிக் குறிப்பிட்டதால் நான் ஒன்றைச் சொல்கிறேன்; அவரது ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது” என்று குறிப்பிட்டார்.

மாநிலங்களவையில் நிறைவேறிய இந்த மசோதாவை, மக்களவையிலே நிறைவேற்ற முடியவில்லை. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவினைத் திரட்ட முடியவில்லை. இந்த நிலைதான் இப்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. நாடாளுமன்றம் கூடுகின்ற நேரத்தில் எல்லாம் அந்தக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா கொண்டுவரப்படும் என்றும், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிமொழிகள் தரப்படுகின்றன.

“பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை” என்று சட்டம் நிறைவேற்றிய நம்மைப் பொறுத்தவரையில், நம்முடைய இயக்கத்தின் முக்கிய கொள்கைகளிலே ஒன்று மகளிர்க்கு இட ஒதுக்கீடு. அந்த முறையில் வரும் ஆகஸ்ட் திங்களில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா அனைவரது ஒத்துழைப்போடும், நல்லாதரவோடும் நிறைவேறும் என்ற நம்பிக்கையையும், நிறைவேற்றப்பட வேண்டுமென்று வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். நிறைவேறட்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

அன்புள்ள, மு.க. 30-7-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗