தொகுதி 49 · கடிதம் 3784
இந்தியாவுக்கே இவர்தான் முன்னோடியாம்!
2013-07-29
உடன்பிறப்பே,
“சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று திறக்கப்படும்” என்று முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து நேற்று (27-7-2013) அறிவித்திருக்கிறார். இதிலிருந்து இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி “அம்போ” ஆகி விட்டது என்பது உறுதியாகிவிட்டது.
இதைத்தான் 12-6-2013 அன்றே நான் விடுத்த அறிக்கை ஒன்றில், “அ.தி.மு.க. அரசு இனியாவது விழித்துக்கொண்டு, இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றியும்; விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றியும் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று கேட்டிருந்தேன். நான் இவ்வாறு ஒரு மாதத்திற்கு முன்பு குறுவைச் சாகுபடி உண்டா? இல்லையா? என்று கேட்ட கேள்விக்குத்தான், முதலமைச்சர் நேற்றைய தினம் இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி கிடையாது; சம்பா சாகுபடி மட்டும்தான்; என்று பதில் கொடுத்திருக்கிறார்.
அம்மையாரின் அறிக்கை அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. அதன் முதல் பத்தியைப் படித்தவுடன்தான் இந்தக்கடிதமே எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அந்த அறிக்கையின் முதல் பத்தி வருமாறு :-
“தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வகையில், பாசன ஆதாரங்களை வலுப்படுத்துவதிலும், வேளாண் துறையில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துவதிலும், விவசாயி களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக எனது தலைமையிலான தமிழக அரசு விளங்கிவருகிறது”
இந்தியாவிற்கே முன்னோடியாகத் தனது தலைமையிலான தமிழக அரசு விளங்குகிறது என்கிறார் ஜெயலலிதா! இதைச் சொன்னால், உடனே நான் ஆதங்கப்படுகிறேன் என்றும், பொறாமைப்படுகிறேன் என்றும் கூறுவார். நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி, “எனது தலைமையிலான அரசு” என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதிலே ஜெயலலிதாவுக்கு ஒரு பெருமை! ஆனால் உங்கள் தலைமையிலான ஆட்சியில் நன்மை நடந்தால் பாராட்டிக் கொள்ளலாம். கடந்த ஆண்டும் சாகுபடி பொய்த்து விட்டது! இந்த ஆண்டு இதுவரையில் குறுவை கிடையாது. ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் தண்ணீரைக் கடந்த ஆண்டு எப்போது திறந்தார்கள் தெரியுமா? செப்டம்பர் 17ஆம் தேதி அன்றுதான் திறந்தார்கள். கடந்த ஆண்டு இவ்வாறு தாமதமாக அணை திறக்கப்பட்டதால், பிப்ரவரி மாதம் இறுதிவரை நீர் தேவைப்படும் என்று டெல்டா விவசாயிகள் கோரியிருந்தனர். பொதுவாக டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜனவரி 28ஆம் தேதிவரை மேட்டூர் அணை திறந்துவைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கும் “எனது தலைமையிலான ஆட்சி” என்று ஜெயலலிதா எப்போதும் சொல்லிக்கொள்ளும் ஆட்சியிலே என்ன செய்தார்கள் தெரியுமா? ஜனவரி மாதம் பிறப்பதற்கு முன்பாகவே கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு 8 மணியோடு பாசனத்திற்கு அணை திறப்பு நிறுத்தப்பட்டுக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன.
கடந்த ஆண்டு 2012இல் தான் ஜூன் 12ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் மேட்டூர் அணை திறக்கவில்லை என்றால், இந்த 2013ஆம் ஆண்டிலாவது ஜூன் 12ஆம் தேதியன்று வழக்கம் போலத் தண்ணீர் திறக்கப்பட்டதா என்றால், ஆகஸ்ட் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று ஜூலை 27ஆம் தேதியே முதலமைச்சர் கொடநாட்டிலிருந்து அறிவித்திருக்கிறார். இந்த இலட்சணத்தில்தான் வேளாண்மையில் இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பதாக முதல் பத்தியில் எழுதியிருக்கிறார்கள். இதுதான் “முன்னோடி” என்பதற்கான இலக்கணம் போலும்!
மேலும் முதலமைச்சரின் அறிக்கையில் 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீரினைத் திறந்து விடுவதற்குப் பதிலாக, முதன் முறையாக முன்கூட்டியே 2011ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதியே அதாவது ஆறு நாட்களுக்கு முன்பே நீரினைத் திறந்துவிடுமாறு ஆணையிட்டேன் என்றும் கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் தேதிவரை தமிழகத்திலே ஆட்சிப் பொறுப்பிலே இருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஜூன் மாதம்வரை அந்த ஆட்சியின் காலம் நீடித்திருந்தால் அப்போதும் தண்ணீர் திறந்துதான் விடப்பட்டிருக்கும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது மே மாதத்தில்; ஜூன் 6ஆம் தேதிக்குள் அதாவது ஆட்சிக்கு வந்த 23 நாட்களுக்குள் இவர்கள் என்ன அற்புதம் செய்து, மேட்டூர் அணையைத் திறக்கச் செய்துவிட்டார்கள் ? மேட்டூர் அணை நிரம்பிவிட்டது என்றால் திறந்துதானே ஆக வேண்டும். அதிலே என்ன புதிய சாதனை? தி.மு. கழக ஆட்சியில் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்திருந்த காரணத்தால்தானே, இவர்களால் ஜூன் 6ஆம் தேதியே மேட்டூர் அணையைத் திறக்க முடிந்தது. இவ்வாறு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக 2011- 2012ஆம் ஆண்டு உணவு உற்பத்தியில் தமிழ்நாடு 101.52 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டிச் சாதனை படைத்தது என்றும், இதற்காக மத்திய அரசின் விருதும் தமிழகத்திற்குக்கிடைத்தது என்றும் முதலமைச்சர் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே, 2011ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளின் காரணமாகத்தான் அந்தப் பெருமை கிடைத்தது என்பதை மறைக்க முயற்சிக்கலாமா? 2011ஆம் ஆண்டு பிள்ளை பெற்றது தி.மு.க. ஆட்சி. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி பெயரிட்டுப் பெருமைதேடிக் கொள்வது சரியானதுதானா?
முதலமைச்சர் ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையில் “காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடச் செய்ததுடன், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திடவும் எனது அரசு போராடி வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலும் “எனது அரசு” என்ற பெருமைப்படலம்தான்! நடுவர்மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட இவரது ஆட்சிதான் காரணமா? இவரது ஆட்சிக் காலத்திலே நடுவர்மன்ற இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு இவர் பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கலாமா? உச்ச நீதி மன்ற நீதிபதி அவர்கள்தான் வழக்கினை விசாரிக்கும்போது, நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசின் அரசிதழில் ஏன் இன்னும் வெளியிடவில்லை; அந்த இறுதி ஆணையை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டுமென்று தாமாகவே முன்வந்து உத்தரவு பிறப்பித்து, அதன் காரணமாக நடுவர்மன்ற இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதுதானே உண்மை! நடைபெற்ற வழக்கு வேண்டுமானால் ஜெயலலிதா தொடுத்த வழக்காக இருக்கலாம். ஆனால் அந்த வழக்கு நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொடுக்கப்பட்ட வழக்கா என்றால் கிடையாது. நீதிபதி அவர்கள் தன்னிச்சையாகத்தான், நடுவர்மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடும்படி உத்தரவிட்டார் என்பதே அசைக்க முடியாத உண்மை. இந்த உண்மையை ஜெயலலிதாவே 20-2-2013 அன்று அளித்த பேட்டியின்போது செய்தியாளர் “Madam, you have charged that the DMK has not done anything to get the Cauvery final Award published” என்று கேட்டதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா “I hold the same charge against them and what has compelled the Central Government to notify the Award is the Supreme Court. So we are grateful to the Supreme Court for giving us Justice” என்று ஆங்கிலத்தில் பதிலளித்து, அது அவர்களுடைய கட்சி ஏட்டிலேயே வெளிவந்துள்ளது.
அவரே மத்திய அரசின் இறுதி அறிக்கையை மத்திய அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். எனவே அந்த நீதியை வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதாவே செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, அதே ஜெயலலிதா மேலும் என்ன சொன்னார் தெரியுமா? “22 வருட கால இடைவிடாத அயராத போராட்டத்திற்கு எனக்கும், (ஜெயலலிதாவுக்கும்) எனது அரசுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி” என்று சொல்லிக்கொண்டார்.
நடுவர்மன்றத்தின் இறுதி ஆணை வெளி வந்ததே 5-2- 2007 அன்று; அது தி.மு.கழக ஆட்சியிலேதான், அதாவது 6 ஆண்டுகளுக்கு முன்புதான். ஆனால் “22 வருட கால இடைவிடாத அயராத போராட்டத்திற்கு எனக்கும், எனது அரசுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி” என்று முதலமைச்சர் “பாட்டும் நானே; பாவமும் நானே” என்ற பாணியில் பேட்டி அளித்துக்கொண்டார்.
அது மாத்திரமல்ல; தஞ்சை மாநகரிலே 9.3.2013 அன்று பாராட்டு விழா! எதற்காக? “தனி ஒருவராகப் போராடி” காவேரி நதி நீரைப் பெற்றுத் தந்ததற்காக முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள்; “பொன்னியின் செல்வி சிலை”யை முதல்வருக்குப் பரிசாக வழங்கினார்கள். கர்ணன், துரியோதனன் கதையை எல்லாம் ஜெயலலிதா கூறி, கர்ணனைப் போல, தான் கொடை வள்ளல், உதவி செய்கின்ற மனம் தனக்குத்தான் இருக்கிறது என்றெல்லாம் - ஜெயலலிதா அடிக்கடி சொல்வாரே அதைப்போல, தனக்குத்தானே “சுய தம்பட்டம் அடித்து” பாராட்டிக் கொண்டாரே, ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக அந்தப் பேச்சை வெளியிட்டனவே; இப்போது என்ன ஆயிற்று? காவேரி நதி நீரை நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி பெற்றுத் தந்துவிட்டாரா? காவேரித் தண்ணீர் சென்ற ஆண்டு வரவேண்டிய காலத்தில் வந்ததா? மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளில் திறக்கப்பட்டதா? சென்ற ஆண்டு குறுவைச் சாகுபடி நடைபெற்றதா? குறுவை பொய்த்துப் போனதால் அறிவிக்கப்பட்ட குழப்பமான நிவாரண உதவிகளாவது முறைப்படி அவர்களைச் சென்றடைந்ததா? காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைத்து விட்டதா? வெற்றி விழா எனும் வினோதத்தைத் தவிர வேறெதுவும் நடைபெறவில்லை என்பது தானே உண்மை.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட முதலமைச்சர் ஜெயலலிதாதான் காரணம் என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறவரைக் கேட்கிறேன்; 5-2-2007 அன்று நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியானபோது, அந்தத் தீர்ப்பை அ.தி.மு.க. வினரோ, ஜெயலலிதாவோ நல்ல தீர்ப்பு என்று ஏற்றுக்கொண்டார்களா? “கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான் நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது, இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று மைனாரிட்டி தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டது உண்டா இல்லையா?
அப்படியானால், தமிழகத்திற்குப் பாதகமான அந்தத் தீர்ப்பினைத்தான் மத்திய அரசின் அரசிதழிலே வெளியிட ஜெயலலிதா காரணமாக இருந்திருக்கிறார் என்பதையாவது ஒப்புக் கொள்கிறார்களா?
“நடுவர்மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால் தான் காவேரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும்; கர்நாடகம் சம்மதித்து ஒரு நியாயமான அனுகூலமான முடிவை மேற்கொண்டால்தான், நடுவர்மன்றத் தீர்ப்பு பயனுள்ளதாக அமைய முடியும்” என்று 21.3.1991இல், நடுவர்மன்றத்தை மிகவும் குறைத்து மதிப்பிட்டு, ஜெயலலிதா கூறியது உண்டா இல்லையா? “நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கினால் கூட அதை நிறைவேற்ற வேண்டுமென்ற கட்டாயம், கர்நாடக முதல்வருக்குக் கிடையாது” என்று ஜெயலலிதா எள்ளி நகையாடவில்லையா? ஏன், 2-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே, அ.தி.மு.க. ஆட்சியில் காவேரி நதிநீர் ஆணையத்தை, செயல்படாத ஆணையம் என் றும், பல் இல்லாத ஆணையம் என்றும், அந்த ஆணையத்தை ஏற்காமல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியது என்றும் பிரதமர் தலைமையிலான ஆணையத்தின் தரத்தைத் தாழ்த்தி ஜெயலலிதா பேசவில்லையா?
அதன் பிறகு, அதே அ.தி.மு.க. ஆட்சியில் 21.6.2002 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “காவேரி நதிநீர் ஆணையத்தின் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை” என்று ஆணையத்தையே அவமதித்திடும் வகையில் முடிவெடுத்து அறிவிக்கவில்லையா? பின்னர் அந்த முடிவினைத் தலைகீழாக
மாற்றிக் கொண்டு, அவரே அந்த ஆணையக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லையா?
ஏன், அதற்கு முன்பே, 21-9-1998 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “The Cauvery River Authority headed by the Prime Minister is a very big fraud perpetrated on the farmers of the Cauvery Delta in Tamil Nadu. This Authority headed by the Prime Minister has no such authority or power to order or implement anything regarding the release of Cauvery Water. I categorically state that the new Authority headed by the Prime Minister will not benefit Tamil Nadu even by an iota” என்று காவேரி நதிநீர் ஆணையத்தைக் கொச்சைப்படுத்திக் கூறவில்லையா?
மேலும், மேலும் இன்னமும் எவ்வளவோ எழுதிக் கொண்டே போகலாம்! ““இந்தியாவிற்கே முன்னோடியாகத் தனது தலைமையிலான தமிழக அரசு விளங்கிவருகிறது” என்று மேட்டூர் அணை திறப்பு பற்றிய அறிவிப்பில் குறிப்பிட்டுக் கொண்டதாலும், காவேரி நடுவர்மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட தானும், தனது அரசும்தான் காரணம் என்று அறிக்கையிலே கூறியதாலும், உண்மையில் என்ன நிலை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான்; கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்திடும் கட்டாயத்திற்கு நான் ஆளாகி இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேனே தவிர, யாரையும் குறை கூற வேண்டும் என்பது என் நோக்கமல்ல!
அன்புள்ள, மு.க. 29-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗