உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3783

வெற்றி முகட்டை நோக்கி நமது முயற்சிகள்!

2013-07-27

உடன்பிறப்பே,

இன்று (26-7-2013) “தினத்தந்தி”, “தினமணி”, “ஜனசக்தி” போன்ற நாளேடுகளில் தமிழக முதல் அமைச்சருக்குப் பிரதமர், இலங்கைப்பிரச்சினையில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் இல்லை என்றும், தமிழர்களுக்குத் தன்னாட்சி கிடைக்கும் வரை பணி தொடரும் என்றும் உறுதியளித்துக் கடிதம் எழுதியிருப்பதாக, அரசின் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால், தமிழக முதல் அமைச்சருக்குப் பிரதமர் 16-7-2013 அன்று எழுதிய கடிதத்தில் “இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆம் திருத்தம் தொடர் பாக இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாத்தியமான மாற்றங்கள் குறித்த தங்களுடைய (முதல் அமைச்சருடைய) 14- 7-2013 அன்று தேதியிட்ட கடிதத்திற்கு நன்றி. இலங்கையில் அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் தன்னாட்சி உரிமை அளிப்பது குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் எல்லாச் சமுதாயத்தினரும், குறிப்பாக இலங்கைவாழ் தமிழர்கள் அங்கு ஒருங்கிணைந்து வாழும் வகையில் அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை அளித்து ஓர் உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய நாள்பட்ட கோரிக்கையாகும். இலங்கைவாழ் தமிழர்களுக்கு இத்தகைய தன்னாட்சி உரிமை அளிக்கும் வரையில் நம்முடைய பணி தொடரும்” என்று எழுதியிருக்கிறார்.

பிரதமர் கடிதத்தில் தெரிவித்திருக்கும் செய்திகள் நமக்கு ஆறுதலானவை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், அந்த நாட்டு அரசு 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையையே நீர்த்துப் போகச் செய்து, அதனை உயிரற்ற ஒன்றாக ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது நம் கவனத்திற்கு வந்தவுடனேயே, 9-6-2013 அன்று பிரதமருக்கு நான் எழுதிய விரிவான கடிதத்தில், “இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் நேரடி விளைவாக ஏற்பட்டது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். முந்தைய காலத்தில் சிங்களர்களுடன் இலங்கைத் தமிழர்கள் செய்துகொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற கசப்பான அனுபவத்தின் பின்னணியில் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமலாக்கப் படுவதற்கு இந்தியாவிலுள்ள நாம் இலங்கைத் தமிழர்களுக்கு உறுதியளித்துள்ளோம். 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமாறு அதிபர் மகிந்தாராஜபக்சேவின் சகோதரரும், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய்ய ராஜபக்சே ஏற்கனவே கூறியுள்ளார். தற்போது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய இந்தியா நேரடியாகத் தலையிடுவது இந்திய அரசின் கடமையும், பொறுப்புமாகும். இது மோதலுக்குத் தீர்வு மற்றும் இனச்சமரசம் ஆகியவற்றை நோக்கிய பாதையை இலகுவானதாக ஆக்கும். இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கையில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளுக்கு இந்தியா மவுனமான பார்வையாளராக இருக்கக் கூடாது. இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகளையும், வாழ்க்கையையும் பாதுகாக்கத் தங்களது தலையீட்டினைக் கோருகிறேன்” என்று எழுதியிருந்தேன்.

என்னுடைய இந்தக் கடிதத்திற்கு, 11-6-2013 அன்றே உடனடியாகப் பதில் எழுதிய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், “இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் தொடர்பான தங்களது ஜூன் 9ஆம் தேதி கடிதம் கிடைக்கப்பெற்றேன். இது இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றாலும், அதன் விளைவுகள் குறித்து நாங்கள், நிச்சயம் பரிசீலித்து இதுதொடர்பான எங்களது கருத்துக்களை இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்துவோம். இலங்கைவாழ் தமிழர்கள் உட்பட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று, நல்லிணக்கத்தோடு வாழ வேண்டு மென்ற கருத்தில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதைத் தாங்களும் அறிவீர்கள்” என்று எனக்கு எழுதியிருந்தார்.

அதாவது நான் எந்தப் பிரச்சினை குறித்துப் பிரதமர் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று விரிவாகக் கடிதம் எழுதி, அதற்கு 11ஆம் தேதியன்றே பிரதமர் விளக்கமாகப் பதில் எழுதியிருந்தாரோ, அதே பிரச்சினையைத்தான் நம்முடைய முதல் அமைச்சரும் 14-7-2013 அன்று பிரதமருக்குக் கடிதமாக எழுதி, அதற்கு 16-7-2013 அன்று பிரதமரும் பதில் எழுதி, அந்தக் கடிதம்தான் இன்று (26-7-2013) தமிழக நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

நம்முடைய கடிதம் மட்டுமல்ல; கடந்த மாதம் 18-6-2013 அன்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமரை டெல்லியில் சந்தித்து, 13வது சட்டத் திருத்தம் நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டுமென்று கேட்டபோது, “இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டுவிட மாட்டோம், பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்களிடம் பிரதமர் தெரிவித்த கருத்தும் அப்போதே ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

இந்தியப் பிரதமர் எனக்குக் கடிதம் எழுதியது மாத்திரமல்ல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர், தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து 21.6.2013 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்குப் பிரதமர் 10.7.2013 அன்று பதிலளித்து எழுதிய கடிதத்தில், இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் குறித்த யெச்சூரியின் கருத்துக்களைத்தான் அறிந்ததாகவும், அதுகுறித்து இலங்கையில் தமிழ்மக்களும் இதர சமூகங்களைச் சேர்ந்த மக்களும் சமமாகவும், சுயமரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எனக்கும், தோழர் யெச்சூரி அவர்களுக்கும், தற்போது தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன.

1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்யும் ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தற்போது இலங்கை அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சினையிலே மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுமையானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு காண்பதற்கான பாதையைச் செப்பனிடும் முயற்சியின் முதல் கட்டமாக ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றிடக் கடும் அழுத்தத்தைத்தர வேண்டுமென்றுதான் தி.மு.கழகம் வலியுறுத்துகிறது. பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, 16-7-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றிய முதல் தீர்மானத்திலேயே, “இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் சில நாட்களுக்கு முன் இலங்கைக்குச் சென்று, இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்களைச் சந்தித்ததின் தொடர்ச்சியாக இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமத்துவம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும்; இதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. அந்த வகையில் இலங்கையில் (இனப் பிரச்சினையில்) விரைவான அரசியல் தீர்வு காண்பதற்கு, 13வது அரசியல் சட்டத் திருத்தத்துக்கும் கூடுதலாக, இந்திய அரசுக்கும், சர்வதேசச் சமுதாயத்துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி, அதிகாரப்பகிர்வு வழங்குவது அவசியம்; இதை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் சிவசங்கர்மேனன் இந்தியாவின் சார்பில் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நம்பத் தகுந்த விதத்திலும் நடத்தப்படும் என நம்புகிறோம். இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசப் பட்டுள்ளது. எந்த நிலையிலும் வன்முறையில் இறங்காமல் மனிதநேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள், இலங்கையின் பூர்வக் குடிமக்களாக விளங்கிய போதிலும், அவர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதப்படுகிற இன்றைய நிலைக்கு எதிராக நடத்திய பல்வகை தொடர் போராட்டங்கள் பயன்தராத நிலையிலும், இலங்கை அரசின் அடக்குமுறை காரணமாகவும், இலட்சக்கணக்கானோர் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழவும், மேலும் பல இலட்சக்கணக்கானோர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து வாழவும் வேண்டியிருக்கிறது.

ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில், பிரிவு 2.14ன்படி “The Government of India will underwrite and guarantee the resolutions and co-operate in the implementation of these proposals” அதாவது, “இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்குப் பொறுப்பேற்கவும், உறுதியளிக்கவும், ஒத்துழைக்கவும் இந்திய அரசு ஒப்புக்கொள்கிறது” என்று இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திலேயே இந்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மீறுவதற்கோ திருத்தம் செய்வதற்கோ எந்த ஒரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது; காரணம், மேற்படி ஒப்பந்தத்தில் இந்திய நாட்டின் நலனும் அடங்கியுள்ளது; இந்தச் சூழ்நிலையில், பசில் ராஜபக்சேயின் அறிவிப்பு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு எதிராக அமைந்துள்ளது என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

இந்த நேரத்தில்தான் நேற்றையதினம் பிரதமரிடமிருந்து இந்தப் பிரச்சினை குறித்து, தமிழக முதல் அமைச்சருக்குக் கடிதம் வந்துள்ளது.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும்” என்று தமிழகச் சட்டப்பேரவையிலேயே ஒரு காலத்தில், ஏன் 16-4-2002 அன்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே தற்போது, அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இலங்கையிலே 13வது திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்று; பிரதமருக்கு அவசரக் கடிதம் எழுதி, அதற்குப் பிரதமர் அவர்களும் பதில் எழுதியிருக்கிறார் என்று ஏடுகளில் செய்தி வருவதைப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளலாம்.

அதே ஜெயலலிதா பேரவையில் இலங்கைப் பிரச்சினைக்காக, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழ் ஈழமே கிடைத்துவிட்டது என்பதைப்போல மகிழ்ச்சியடைந்து வானத்திற்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்தவர்கள், தற்போது ஜெயலலிதா 13வது சட்டத் திருத்தம் பற்றிப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றால் தாங்கள்தான் என்று அவர்கள் ஒரு காலத்தில் முந்திக்கொண்டு வந்ததையும், இப்போது அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தேட வேண்டிய நிலை இருப் பதையும் மறந்துவிடுவதற்கில்லை. 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதும்தான், “டெசோ” அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று “டெசோ” அமைப்பு கருதுகிறது” என்று முக்கியமான கருத்துகள் அனைத்தையும் எடுத்துக்காட்டியதோடு; இலங்கையில் நடைபெறவுள்ள “காமன் வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வலியுறுத்திடும் வகையில்தான்; “டெசோ” இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடத்துவதென்று முடிவெடுத்திருப்பதை யொட்டி; சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நானும், என்னுடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், மதுரையில் தமிழர் தலைவர் வீரமணி அவர்களும், திருச்சியில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலினும், திருவள்ளூரில் தொல்.திருமாவளவனும், மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கழக முன்னணியினரும் தலைமை தாங்கி நடத்திடவிருக்கிறோம். அதற்கான அறிவிப்புகளும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆகஸ்ட் 8ஆம் தேதிய ஆர்ப்பாட்டத்தை வழக்கம்போல வெற்றிகரமாக ஆக்கித் தரவேண்டிய கடமையை நிறைவேற்றுவதில் உடன்பிறப்பே, நீ கண்ணும் கருத்துமாய் ஈடுபட்டிருப்பாய் என்பதை நான் அறிவேன்!

அன்புள்ள, மு.க. 27-7-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗