தொகுதி 49 · கடிதம் 3782
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
2013-07-26
உடன்பிறப்பே,
“சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ. 2,950 கோடி நிதி ஒதுக்கீடு - ஜெயலலிதா உத்தரவு” என்ற தலைப்பில் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் முதலமைச்சரின் அறிக்கை ஒன்றைக் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டிருக்கின்றன. ஆகா; நம்முடைய முதலமைச்சர் கொடநாட்டில் இருந்து கொண்டே, சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைச் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகவே ஒதுக்கியிருக்கிறாரே; எவ்வளவு பெரிய அறிவிப்பு; என்றெல்லாம் வியந்திடத்தான் தோன்றும்!
ஏனென்றால் கடந்த 21-3-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பாக நிதியமைச்சர் படித்த நிதிநிலை அறிக்கையில், “2012-2013ஆம் ஆண்டில் 5,615.71 கோடி ரூபாயாக இருந்த நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை, 2013-2014ஆம் ஆண்டில் 6,452.77 கோடி ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது” என்று அறிவித்தார். மேலும் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2,032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டது. இந்தத்துறையின் அமைச்சர் ஏப்ரல் திங்களில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போதும் எந்தெந்த திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
8,580 கோடி ரூபாய்ச் செலவில் முதல் கட்டமாக 1,678 கிலோ மீட்டர் நீளச் சாலைகளை மேம்படுத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருப்பதாகவும், 1,088 கோடியில் இந்த ஆண்டு 5000 கிலோ மீட்டர் நீளச்சாலைகள் புதுப்பிக்கப்படும் என்றும், 41 ரயில்வே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் 1,062 கோடி ரூபாயில் நடந்து வருவதாகவும், சென்னை நகரில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சுரங்க நடைபாதைகள் அமைக்க 385.68 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் கிடைத்து விட்டதாகவும், திருப்பெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சாலைகள் அமைக்க 549 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தனது பதிலிலே பேரவையில் கூறினார்.
இந்தத் துறைக்கான மானியக் குறிப்புகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக முதலமைச்சர் 1-4-2013 அன்று பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், திருநின்றவூர் முதல் பாடி வரையில் ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த 168 கோடி ரூபாய்; தஞ்சாவூர் புறவழிச் சாலை அமைக்க 98 கோடி ரூபாய்; அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளில் 131 பாலங்கள் அமைக்க 300 கோடி ரூபாய்; 67 அரசு சாலைகள் அமைக்க 100 கோடி ரூபாய்; 11 மாவட்டங்களில் 18 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க தல ஆய்வு போன்ற ஆரம்பக் கட்டப் பணிகளுக்காக 202 கோடி ரூபாய் என்று பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். முதலமைச்சர் 110வது விதியின்கீழ் அறிவித்த திட்டங்கள் எல்லாம் நிதி நிலை அறிக்கையிலும், மானிய கோரிக்கையிலும் இடம்பெற்ற திட்டங்களா? அல்லது புதிய திட்டங்களா? என்றே தெரியவில்லை.
இதுதவிர 15-4-2013 அன்று முதலமைச்சர் பேரவையில் 110 வது விதியின்கீழ்ப் படித்த அறிக்கையில் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி, ஒன்றிய தார்ச்சாலைகளைப் பராமரிக்க 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் ஏற்படுத்தப்படும் என்று ஓர் அறிவிப்பினைச் செய்தார்.
2013-2014 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, பத்தி 76இல், 168 கிலோ மீட்டர் நீளமுள்ள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள் இருவழித்தடச் சாலைகளாகவும், 1000 கிலோ மீட்டர் நீளம் உள்ள ஒருவழித்தட முக்கிய மாவட்டச் சாலைகள், இடைவழித் தடங்களாகவும், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்த் தரம் உயர்த்தப்படும் என்றும், 3,500 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், 2013-2014ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த சாலைக்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2,032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில், 2,032 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கிவிட்டு, நான்கு மாதங்கள் முடிவதற்குள்ளாக 24-7-2013 அன்று, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்ச் சாலை அகலப்படுத்துதல், சாலைக் கட்டமைப்பின் தரம் மற்றும் திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக 2,950 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றால்; இது புதிய அறிவிப்பா? அல்லது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாக எழுதியிருந்தார்களே, அதே அறிவிப்பினை மீண்டும் ஒரு முறை செய்திருக்கிறார்களா? புதிய அறிவிப்பு இல்லை என்றால், நிதிநிலை அறிக்கையிலே இவ்வாறு அறிவித்திருந்தோம், அதற்கான அறிவிப்பு என்று கூறியிருக்க வேண்டாமா? இது புதிய அறிவிப்பு என்றால், நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட திட்டங்கள் எல்லாம் இந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விட்டனவா? எல்லாமே முதலமைச்சர் அறிக்கையை முக்கியத்துவம் கொடுத்து வெளி யிட்ட பத்திரிகைகளுக்குத்தான் வெளிச்சம்! மேலும் முதல் அமைச்சர் 110வது விதியின்கீழ்ப் பல அறிவிப்புகளைச் செய்தாரே; அதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்து அரசாணைகள் பிறப்பிக் கப்பட்டு விட்டனவா? இது புதிய அறிவிப்பு இல்லை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்ற ஆணைதான் என்றால், அனைத்து ஏடுகளும் இவைகளை ஏதோ முதலமைச்சர் புதிதாக அறிவித்திருப்பதைப்போல செய்தி வெளியிட்டிருக்கிறார்களே, இதிலே எது உண்மை என்பதை அரசுத் தரப்பில் மக்களுக்கு விளக்கிட வேண்டாமா?
புதிய அறிவிப்பாகவே முதலமைச்சர் 2,950 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களைப் புதியதாக அறிவித்திருக்கிறார் என்பது உண்மையானால், இந்த நிதி ஒதுக்கீட்டிற்குப் பேரவையின் ஒப்புதல் பெறவேண்டாமா? நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் மே திங்களில்தான் முடிவுற்றிருக்கின்ற நிலையில் இரண்டே மாதங்களில் இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பது முறையானதுதானா? இதற்கெல்லாம் இந்த ஆட்சியினரின் விளக்கம் என்ன? அதுமாத்திரமல்ல; இவ்வளவு பெரிய தொகைக்கான திட்டங்களை அறிவிக்கின்றபோது, அந்தத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்பெற வேண்டாமா? அவ்வாறு அமைச்சரவையில் இந்தத் திட்டங்கள் பற்றி எப்போது விவாதிக்கப்பட்டது? விவாதிக்கப்பட்டது என்றால், அந்த அமைச்சரவையின் கூட்டம் முடிவுற்றவுடனேயே ஏடுகளுக்கு அறிவித்திருக்க வேண்டாமா?
இந்த அழகில், நெடுஞ்சாலைத்துறையின் அமைச்சர் பேரவையில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில், கடந்த ஆண்டு,
2012-2013இல் இந்தத் துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் இன்னமும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். உதாரணமாக, 2012-2013ஆம் ஆண்டில், ரூ.1,136 கோடி மதிப்பில் சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பாலங்கள் மற்றும் சிறுபாலப்பணிகள் ஆகியவை நிலுவைப் பணிகளாகச் செயலாக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து 2012-2013ஆம் ஆண்டிற்கான பல திட்டங்கள் இன்னும் முடிவடையாத நிலையில் இருக்கின்றன என்பதையும், அந்த நிலையில்தான் இந்த அளவிற்குப் புதிய திட்டங்களை மேலும் மேலும் தொடர்ந்து அறிவிக்கிறார்கள் என்பதும் நன்றாகவே விளங்குகிறது அல்லவா?
2013-14ஆம் ஆண்டிற்கு, சாலைப் பராமரிப்பிற்காக 1,088 கோடி ரூபாய் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று இந்தத் துறையின் அமைச்சர் பேரவையிலே அறிவித்தார். இப்போது முதலமைச்சர் மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 1,021 கோடியே 26 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்தத் தொகை அமைச்சரின் அறிவிப்பின்கீழ் வருமா? அல்லது அமைச்சர் ஒதுக்கியதாக அறிவித்ததை அன்னியில் வேறு கூடுதலான ஒதுக்கீடா?
முதல் அமைச்சரின் நேற்றைய அறிக்கையில் “இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2950 கோடி ரூபாய்” என்று குறிப்பிட்டிருப்பதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டதை அன்னியில் இது புதிய அறிவிப்பாகத் தோன்றவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதையே தான் “புதிய மொந்தையில் பழைய கள்” என்பதைப்போல - ஏடுகள் புதிய அறிவிப்பு என்பதைப்போல - வெளியிட்டிருக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சர் இந்த அறிவிப்பினைச் செய்திருக்கின்ற இந்த நேரத்தில்; 1-8-1996 முதல் தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை எனத் தனித் துறை ஒன்றையும், 1998 மார்ச் 26ஆம் நாள் முதல் தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கென தனி அமைச்சகத்தையும் உருவாக்கியதே தி.மு.கழக ஆட்சிதான் என்பது எனது நினைவுக்கு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிட்டு ஒரு புள்ளி விவரம் கூற வேண்டுமேயானால்; 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 5,569 கோடி ரூபாய்ச் செலவில் 46 ஆயிரத்து 17 கி.மீ. நீளச் சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன என்றால், தி.மு.கழக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் 13,529 கோடி ரூபாய்ச் செலவில் 65 ஆயிரத்து 886 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன. 2001-2006ஆம் ஆண்டுவரை 497 கோடி ரூபாய்ச் செலவில் 871 பாலங்கள் மற்றும் 814 சிறிய பாலங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதற்கு மாறாக; 2006-2011ஆம் ஆண்டுவரை தி.மு.க. ஆட்சியில் 1,385 கோடி ரூபாய்ச் செலவில் 4,019 சிறிய பாலங்கள் கட்டப்பட்டன. 2001-2006ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட புறவழிச் சாலைகள் 6 மட்டுமே! 2006-2011இல் தி.மு. கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட புறவழிச் சாலைகள் 48. இவ்வளவு ஏன்? சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல்வரை புதிய நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டத்திற்குக் கழக ஆட்சியில் முயற்சி எடுத்துத் தொடக்க விழாவும், பிரதமரை அழைத்து, என் முன்னிலையில் நடைபெற்று, பல கோடி ரூபாய் செலவழித்த பிறகு, அந்தச் சாலையை முடக்கிப்போட்டு வைத்திருப்பதே, அ.தி.மு.க. ஆட்சி தான்! இந்த அரசினால் அறிவிக்கப்படுகின்ற திட்டங்களில் பல நடைமுறைக்கே வருவதில்லை என்றும், ஒரு சில திட்டங்கள் நீண்ட தாமதத்திற்கு உள்ளாவதாகவும் சொல்லப்படுகிறது. உதாரணமாக “டைம்ஸ் ஆப் இந்தியா”, ஆங்கில நாளேடு கடந்த 15ஆம் தேதியன்று, பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்குக் கடற்கரைச் சாலையையும் இணைக்கும் மேம்பாலம் ஒன்றுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் தரப்பட்டது என்றும், ஆனால் அதற்கான இடத்தை முடிவு செய்ய இத்தனை மாதங்கள் ஆயிற்று என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 400 கோடி ரூபாயாகும். மேலும் அதே ஏட்டில், போரூர், மூலக்கடை மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களிலே கட்டுவதற்குத் திட்டமிடப்பட்ட மேம்பாலங்கள் நில ஆக்கிரமிப்பு காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் எழுதியுள்ளது.
முதலமைச்சர் மூவாயிரம் கோடி ரூபாய்க்குச் சாலைகளை மேம்படுத்தப் போவதாக அறிவிப்பு செய்கிறார். ஆனால் சென்னையைச் சுற்றியுள்ள நகரங்களில் சாலைகள் எவ்வாறு இருக்கின்றன என்று “இந்து” நாளிதழே விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
12-7-2013 தேதியிட்ட “இந்து”, “Roads in Tondiarpet, New Washermenpet, Perambur and Moolakadai were completely inundated. Kilpauk, Villivakkam and Mogappair West also suffered with Balfour Road and Barnaby Road among those flooded. Residents of Kilpauk said roads in the area became flooded even after a brief spell of rains, forcing them to walk on the road as pavements were completely encroached by parked vehicles. Several roads in north Chennai already in bad shape, have worsened now. In Moolakadai, road users had to battle not just rain-ravaged roads but also traffic snarls. Walking on Madhavaram High Road requires real skill. There are no pavements and the roadside is either slushy or waterlogged” என்றெல்லாம் எழுதியுள்ளது.
இதைப்போலவே 17-7-2013 அன்றும் “இந்து” நாளிதழ் தமிழகத்திலே உள்ள சாலைகள் எந்த இலட்சணத்திலே உள்ளன என்பதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளது. “இந்து” நாளிதழே இவ்வாறு இரண்டு நாட்கள் எழுதிய காரணத்தினால்தானோ என்னவோ முதலமைச்சர் அவர்கள் அவசர அவசரமாக சுமார் 3000 கோடி ரூபாய் திட்டத்திற்குச் சாலைகளின் மேம்பாட்டிற்காக நிதி
ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை பற்றி, மத்திய அரசின் “இந்தியத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம்” என்ன சான்றிதழ் கொடுத்துள்ளது என்பதை 14-7-2013 அன்று “இந்து” ஆங்கில நாளிதழ் பெரிதாக வெளியிட்டுள்ளது. முதலமைச்சரைப் பாராட்டி ஒரு சிறிய செய்தி வெளிவந்தால் கூட, அதைப் பெரிதுபடுத்தி வெளியிடும் தமிழ் நாளேடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை வாரியம் என்ன கூறியது என்பதை வெளியிடவே இல்லை. “இந்து” செய்திக்கு தலைப்பே, “NHAI blames State for delay in ongoing projects” என்பதாகும். அந்தச் செய்தியில், “As many as seven ongoing important road widening works valued over Rs. 3,000 crore were moving at a snail’s pace in Tamil Nadu due to lack of support from the State Government, said National Highways Authority of India (NHAI) officials” என்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அரசின் ஒத்துழைப்பு முறையாக இல்லாத காரணத்தால், தமிழ்நாட்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகளை அகலப்படுத்துகின்ற முக்கியமான ஏழு திட்டங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை வாரிய அதிகாரிகள் தெரிவித்தார்கள் என்று செய்தி வந்துள்ளது. “மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, முன்னர் இருந்த தி.மு.க. ஆட்சி ஆகியவற்றைக் காட்டிலும் பலவகையிலும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி” என்று போற்றிப் புராணம் எழுதிய “இந்து” நாளேடுதான், அ.தி.மு.க. ஆட்சியில் சாலைகளைப் பற்றிய அவலங்களை இவ்வாறெல்லாம் விவரித்துள்ளது! இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டுத்தான், புதிய புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு நாளேடுகளும் அந்த அறிவிப்புகளையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரே அறிவிப்பை நிதி நிலை அறிக்கையில் ஒரு முறை - மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஒருமுறை - முதலமைச்சர் 110வது விதியின்கீழ்ப் படிக்கும் அறிக்கையில் ஒருமுறை - இத்தனையும் போதாதென்று அறிவிப்பு என்ற பெயரால் பல கோடி ரூபாய்த் திட்டங்களைப் புதிது புதிதாக அறிவிப்பதைப் போலச் செய்து நாட்டு மக்களைத் திசை திருப்பி நம்ப வைத்து ஏமாற்றுகின்ற முயற்சி செய்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று “மலைக்கள்ளன்” படத்தில் பாடப்பட்ட பாடல் தான் நினைவுக்கு வருகிறது!
அன்புள்ள, மு.க. 26-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗