தொகுதி 49 · கடிதம் 3781
காழ்ப்புணர்வோ, ஆதங்கமோ எனக்கு அல்ல!
2013-07-24
உடன்பிறப்பே,
“என்.எல்.சி. பிரச்சினையில் தமிழக அரசுக்கு வெற்றி - பத்திரிகைகள் பாராட்டுகின்றன - கருணாநிதி புகாருக்கு ஜெயலலிதா பதில்” என்ற தலைப்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை வெளிவந்துள்ளது. நான் 19ஆம் தேதி விடுத்த அறிக்கைக்கு முதலமைச்சர் இவ்வளவு விரைவாக நான்கே நாட்களில் பதில் தந்துள்ளது ஆச்சரியத்தைத் தருகிறது. மகிழ்ச்சி, நன்றி. ஆனால் அந்த நீண்ட பதிலில் ஆத்திரமும், அவசரமும்தான் பிரதிபலிக்கிறதே தவிர, காரண காரிய விளக்கத்தோடு கூடிய வாதம் இருப்பதாகத் தெரியவில்லை. அம்மையாரின் அறிக்கையையும், என்னுடைய அறிக்கையையும் படிக்கின்ற நடுநிலையாளர்களாவது உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் எனது விளக்கங்களை மீண்டும் அளித்திட விரும்புகிறேன்.
“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டதே என்ற பொறாமையில்” - “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக” நான் அறிக்கை வெளியிட்டிருப்பது “ஆதங்கத்தின் உச்ச கட்டம்” என்று முதலமைச்சர் தன் அறிக்கையின் துவக்கத்தில் எழுதியிருக்கிறார்.
22-6-2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் “நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டுவரலாம் அல்லது என்.எல்.சி. நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கிவிடலாம் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதை மத்திய அரசு கருத்திலே கொண்டு மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டும்” என்று முதல் அமைச்சரின் கருத்தை எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறேன் என்றால் இது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான அடையாளமா?
ஏன், அதற்கு முன்பே 26-5-2013 அன்று நான் “முரசொலி”யில் எழுதிய கடிதத்தைத் தொடங்கும் போதே, “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-5-2013 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத் தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்வதாகவும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது” என்று எழுதியிருக்கிறேன் என்றால், இதுதான் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும், ஆதங்கத்திற்குமான எடுத்துக்காட்டா?
நெய்வேலி நிறுவனப் பங்கு விற்பனை தொடர்பாக முதலமைச்சரின் செயல்பாடுகள் பற்றி எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்வோ, ஆதங்கமோ சிறிதும் கிடையாது. 600 கோடி ரூபாய் செலவழித்துக் கழக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மூன்றாண்டுகளாக மூடியே வைத்திருப்பது - செம்மொழி நிறுவனத்தையே தலை தூக்காமல் செய்திருப்பது - மதுரவாயல், துறைமுகம் “எக்ஸ்பிரஸ் ஹைவே” சாலையை முடக்கிப் போட்டிருப்பது - சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தூங்க வைத்திருப்பது - பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகச் செயல்படவிடாமல் செய்திருப்பது போன்றவைதான் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் செய்யப்படும் நடவடிக்கைகள். நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பிரச்சினையில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள் எதுவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கேட்கப்பட்டது அல்ல.
“2006ஆம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு எடுத்தபோது, அதைத் தடுத்து நிறுத்தியது தான்தான் என்று கருணாநிதி தம்பட்டம் அடித்திருக்கிறார்” என்று ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறி, அ.தி.மு.க. வின் கடுமையான எதிர்ப்பையும், நெய்வேலி தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தையும் கருத்திலே கொண்டுதான் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது என்று மீண்டும் தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொண்டு பாராட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.
சுருக்கமாக நான் கேட்கிறேன்; நெய்வேலி பங்குகளை விற்க முதலில் மத்திய அரசு முடிவு செய்து, பின்னர் மத்திய அரசே அதைத் திரும்பப் பெற்றது தி.மு. கழக ஆட்சிக் காலத்தில்தானே; தற்போது அதுபோல மத்திய அரசின் முடிவினைத் திரும்பப் பெறச் செய்யவில்லையே? இது யாருக்கு வெற்றி? யாருக்குத் தோல்வி?
முதலமைச்சர் அவர்களே, நீங்கள் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் மத்திய அரசு நெய்வேலி பிரச்சினையில் தன் முடிவைத் திரும்பப் பெற்றது என்று 29-6-2013 தேதிய அறிக்கையில் கையெழுத்திட்டுச் சொல்லியிருக்கிறீர்களே, அந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எந்தத் தேதியில் நடத்தப்பட்டது என்பதை அறிவிக்க இயலுமா? அ.தி.மு.க. சார்பில் 2006 ஆம் ஆண்டு நெய்வேலி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவே இல்லை. ஒரு முதலமைச்சர் இவ்வாறு உண்மைக்கு மாறான தவறான தகவலைத் தரலாமா?
2006ஆம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்னதான் நடைபெற்றது?
23-6-2006 நாளிட்ட “தினமணி”யில் “தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆட்சேபத்தையும் மீறி, என்.எல்.சி. பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்திருக் கிறது” என்று செய்திவந்துள்ளது. 24-6-2006 நாளிட்ட அதே தினமணியில் என்.எல்.சி. பங்குகள் விற்பனையைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் - நெய்வேலி தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு” என்று தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் ராசவன்னியன் தெரிவித்த செய்தி வெளிவந்துள்ளது. அதே தினமணியில், என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க. சார்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. அதற்கடுத்த நாள் 25-6-2006 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பினைத் தெரிவித்த செய்தியும், 4-7-2006 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டச் செய்தியும் வெளிவந்துள்ளது. மேலும் அதே தினமணியில், தே.மு.தி.க. தலைவர், திரு. விஜயகாந்த், என்.எல்.சி. பங்குகளைத் தமிழக அரசே வாங்கலாம் என்று யோசனை தெரிவித்து, அதுவும் செய்தியாக வெளிவந்துள்ளது. எனவே என்.எல்.சி. பங்குகளைத் தமிழக அரசே வாங்கலாம் என்ற முடிவுகூட 2006ஆம் ஆண்டே தே.மு.தி.க. தலைவர், விஜயகாந்த் தெரிவித்த கருத்துதான்; இன்றைய முதல் அமைச்சரின் சொந்தக் கருத்து அல்ல! நம்முடைய முதலமைச்சருக்கு இந்தக் கருத்து ஏற்கனவே தே.மு.தி.க. தலைவரால் சொல்லப்பட்ட கருத்து என்று தெரிந்திருந்தால், அதே கருத்தை இப்போது மத்திய அரசுக்கு எழுதியே இருக்கமாட்டார்! 25-6-2006 அன்று என்.எல்.சி. பங்கு விற்பனை
முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு முதல்வராக இருந்த நான் கடிதம் எழுதினேன். 4-7-2006 அன்று தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திலும் தி.மு.க. பங்கேற்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினேன். அன்றைய தினமும் ஜெயலலிதா நெய்வேலி பிரச்சினை குறித்து வாய்திறக்கவில்லை.
இவ்வளவிற்கும் பிறகுதான்; 22-6-2006 அன்று மத்திய அரசு எடுத்த முடிவினைப்பற்றி 27-6-2006 அன்றுதான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வாய் திறக்கிறார். அப்போதுகூட, “என்.எல்.சி. விவகாரம் குறித்து தி.மு.க. அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்கிறார். மேலும், “என்.எல்.சி. ஊழியர்களின் போராட்டத்தில் தி.மு.க. தொழிற் சங்கம் பங்கெடுக்கும் என்று கருணாநிதி கூறியிருப்பது நகைப்புக்கு இடமானது. அந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் கலந்துகொள்ளும்” என்று அறிவிக்கிறார். அந்தச் செய்தி 28-6-2006 “தினமணியில் வெளிவந்துள்ளது.
26-6-2006 அன்று தொழிற்சங்கத் தலைவர்கள் சென்னையில் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கும் சென்று தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாகத் தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் 28-6-2006 அன்று ஜெயலலிதாவையும் சந்தித்துத் தங்களின் போராட்டத்தைத் தொடங்கிவைக்க வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் அவர்கள் அப்போதும் நெய்வேலி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதிலிருந்து பின் வாங்கமுடியாத நிலை இருப்பதாகத் தெரிவித்த போது; “தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன; பத்து சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும்; விற்பதிலே மத்திய அரசு உறுதியாக இருந்தால், அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கே வழங்கலாம்” என்று 2-7-2006 அன்று நான் பிரதமருக்கு எழுதினேன். இப்போது போலவே அப்போதும் நான் எழுதிய கருத்துக்குப் பிரதமர் இணங்கிவரும் நிலையிலே இருந்தாலும், அதை அப்போது தொழிலாளர்கள் ஏற்க முன் வரவில்லை. அதனால் 4-7-2006 அன்று மத்திய நிதியமைச்சர் நண்பர் ப. சிதம்பரம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் இதைப் பற்றிப் பிரதமரிடம் பேசுவதாக உறுதியளித்தார். அதே நாளில் நான் பிரதமருக்கு எழுதிய அவசரக் கடிதத்தில், பணியாற்றும் ஊழியர்களுக்குப் பங்குகள் விற்பனையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்தை ஊழியர்கள் ஏற்கவில்லை, எனவே நெய்வேலி பங்கு விற்பனையைக் கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தேன். 3-7-2006 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், தான் போராட்டத்தில் கலந்து கொள்ள நெய்வேலிக்கு வர இயலவில்லை என்றும், போராட்டத்திற்குத் தனது ஆதரவு உண்டு என்றும் தெரிவித்தார். 4-7-2006 அன்று நான் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து பதில் வராத நிலையில், நெய்வேலியில் தொழி லாளர்களின் போராட்டமும் தொடங்கிவிட்டதையடுத்து, 6-7- 2006 அன்று முதலமைச்சர் என்ற முறையில் செய்தியாளர்களைச் சந்தித்த நான் “நெய்வேலி பிரச்சினையில் தொழிலாளர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, மத்திய அரசினால் எடுக்கப்பட்டுள்ள அந்த முடிவுக்கு, தி.மு.க. அந்த அரசிலே இடம்பெற்று, இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இதை டெல்லியிலே உள்ள தி.மு.க. அமைச்சர்கள் பிரதமரிடம் அறிவிப்பார்கள்” என்று கூறினேன். (தினமணி 7-7-2006) இந்த என்னுடைய அறிவிப்புக்குப் பிறகு, என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவினை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. 7-7-2006 தேதிய தினமணியில் முதல் பக்கத்தில் “தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் மத்திய அரசு இருந்ததால், மத்திய அரசிலிருந்து விலகுவது என்ற முடிவை தி.மு.க. எடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி சென்னையில் 6-7-2006 காலை கடுமையாக எச்சரித்த சில மணி நேரங்களுக்கெல்லாம் இந்த முடிவு டெல்லியில் அறிவிக்கப்பட்டது” என்றும் அதுபற்றிப் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டதாக வும் செய்தி வெளிவந்திருக்கிறது.
இவ்வளவு செய்திகளும் முரசொலியில் வெளிவந்தவை அல்ல. “தினமணி”யில் வெளிவந்தவை ஆகும். ஆனால் இவ்வளவையும் மறைத்துவிட்டு, 2006 ஆம் ஆண்டு நெய்வேலி பங்கு விற்பனையை மத்திய அரசு திரும்பப்பெற்றது, தான் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் என்று ஒரு முதலமைச்சரே 29- 6-2013 தேதியிட்ட தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் என்றால்; அது எவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான தகவல் என்பதைப் பத்திரிகையாளர்களும், நடுநிலையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவையும் குறிப்பிட்டு இங்கே எழுதியிருக்கிறேன்.
அடுத்து அம்மையார் தனது அறிக்கையில், தான் எடுத்த முயற்சியை அரசியல் கட்சிகள் பாராட்டி வருவதைக் கண்டு பொறுக்க முடியாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் விதமாக, தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டுள்ளார் என்று எழுதியிருக்கிறார்.
இப்படி நான் எழுதியதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கேற்ற பதிலாக எந்தெந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்மையாரின் முயற்சியைப் பாராட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலை எழுதியிருப்பார் என்று தேடித் தேடிப் பார்த்தால், அம்மையாரின் அந்த நீண்ட அறிக்கையில் யாருடைய பெயரும் இல்லை.
அவர்களுடைய கட்சி நாளேட்டிலேயே, ஒருசில தலைவர்களின் பெயர்களை மட்டும் வெளியிட்டு அவர்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்று செய்தி வந்திருக்கிறதே தவிர, 52 பக்கங்கள் கொண்ட அவர்களின் கட்சி ஏட்டில் (17-7-2013) அரசியல் தலைவர்களின் பாராட்டு அறிக்கைகள் கூட வெளிவர வில்லையே? ஆளுங்கட்சியின் நாளேட்டிலேயே இதற்காக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர் என்று தான் வெளிவந்துள்ளது. இவர்கள்தான் அவர்களின் அகராதிப்படி தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களா? இவ்வளவையும் எழுதிய முதலமைச்சர், “ஜெயலலிதாவிற்கு இமாலய வெற்றிகிடைத்திருப்பதாகக் கூறி, ஆளுங்கட்சி நாளேட்டில் (16-7-2013) மட்டும் 55 பக்கங்களுக்கு விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள், மற்ற ஏடுகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்” என்று நான் எழுதியதற்கு ஏன் பதில் அளிக்கவில்லை? அது உண்மை என்பதால்தானே? . 15-7-2013 அன்று மாலையில்தான் நெய்வேலி பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டு அன்றிரவு 7 மணிக்குத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள். 16ந்தேதிய காலை ஏடுகளில்தான் அந்தச் செய்தியே வெளிவருகிறது. ஆனால் 16-7-2013 அன்று காலையில் வெளிவந்த ஆளுங்கட்சி நாளிதழில்தான் முதலமைச்சர் “எனது தனிப்பட்ட முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” என்று விடுத்த அறிக்கையே முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதே பத்திரிகையில் 55 பக்கங்களுக்கு முதலமைச்சரைப் பாராட்டியும், நன்றி தெரிவித்தும் விளம்பரங்கள் வந்தது எப்படி? கால அவகாசமே இல்லாத நிலையில் வெளியிடப்பட்ட அவை உண்மையான பாராட்டுகள்தானா? ஆனால் 2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் நெய்வேலி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முதலில் முடிவெடுத்து, பிறகு அந்த முடிவினைத் திரும்பப் பெற்றது குறித்து அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் நினைவூட்டுகிறேன். சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் சிட்டாப்ரதா மஜூம்தார், எம்.பி., 6-7-2006 அன்று வெளியிட்ட அறிக்கையில் “இந்த முடிவை மத்திய அரசு எடுக்க, உடனடியாகத் தலையிட்டு செயல்பட்டதற்காகத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எங்களின் பாராட்டுதல்களைத் தெரிவித்து, அதைப் பதிவு செய்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என். வரதராசன் 6-7-2006 அன்று மதியமே என்னை நேரில் சந்தித்துப் பாராட்டியதோடு, “நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்கு விற்பனை குறித்த முதல்வர் கலைஞரின் அறிவிப்பு கண்டு ஆறு கோடித் தமிழ் மக்களும் மகிழ்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். கலைஞரின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான உந்து சக்தியாக இருக்கும்” என்றார். மேலும் அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 6-7-2006 அன்று வெளியிட்ட அறிக்கையில் “பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது என்று தமிழக முதல்வர் கலைஞர் எடுத்த நிலைப்பாட்டிற்கு எங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நெய்வேலி பிரச்சினையை நேர்த்தியாக நான் கையாண்டதாகப் பாராட்டி மகிழ்ந்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், தோழர் தா. பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் “தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்திய முதல்வர் கலைஞரின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது” என்றார்.
7-7-2006 அன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் “முதலமைச்சர் கலைஞர் அவர்களும் இந்த முடிவை மாற்றுவதற்குப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். இவற்றின் பலனாக மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளர் ஜி. தேவராசன் பாராட்டி அறிக்கை விடுத்தார். இதுதவிர ஐதராபாத்தில் கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் என்னைப் பாராட்டித் தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.
7-7-2006 அன்று அண்ணா அறிவாலயத்தில் நெய்வேலித் தொழிலாளர்களின் 18 சங்கங்களைச் சேர்ந்த 36 பேர் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். ஆனால் அப்போது “என் தனிப்பட்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி” என்று நான் கூறிக் கொள்ளவில்லை. மாறாக செய்தியாளர்கள் கேட்ட போது “இது வியர்வைக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி” என்று அடக்கத்தோடு கூறினேன். இன்னும் சொல்லப்போனால் எங்கள் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் ஒரு பக்கம் கூட பாராட்டு விளம்பரம் அப்போது வெளிவரவில்லை. இப்போதும் கூறுகிறேன். முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதைப்போல எனக்கு ஆதங்கமோ, அரசியல் காழ்ப்போ, பொறாமையோ, விரக்தியோ நிச்சயமாகக் கிடையாது. ஆனால் நமது முதலமைச்சருக்கு எப்போதும் தன்னாலதான் நடந்தது என்று சொல்லிக்கொள்வதில் ஒரு ஆர்வமும் ஆசையும் உண்டு என்பதை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், “எனது தலைமையிலான அரசு” - “என்னுடைய தனிப்பட்ட முயற்சி” - “முதலமைச்சரின் உத்தரவு” - என்றுதான் கூறிக்கொள்வார். அதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, பெருமை. பேரவை நடைபெறும்போது கூட, அரசின் எந்த அறிவிப்பாக இருந்தாலும், எந்தத்துறை அறிவிப்பாக இருந்தாலும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர்தான் படிப்பார். வேறு எந்தத் துறை அமைச்சருக்கும் அந்த அனுமதியே கிடையாது. ஏன், அ.தி.மு.க. சார்பில் யாராவது ஒரு “போஸ்டர்” அல்லது விளம்பரத் தட்டி வைக்க விரும்பினால்கூட, ஏடுகளில் விளம்பரம் செய்ய விரும்பினால்கூட, அவரவர்களும் தங்கள் புகைப்படங்களை வெளியிடக் கூடாது. முதலமைச்சர் ஒருவரது படங்கள் மட்டும்தான் வெளிவரும். இதிலே நான் குறைசொல்ல முடியாது. அது அவர்கள் விருப்பம். எனவே அதற்காக நான் பொறாமைப்படுகிறேன், ஆதங்கப்படுகிறேன் என்று கூறுவது கடைந்தெடுத்த பொய்; அவரது அறிக்கையை முழுமையாக வெளியிட்டு மகிழ்ந்த அத்தனை ஏடுகளும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளைத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக்கொள்ளத் தயார் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், நெய்வேலித் தொழிலாளர்களின் ஒற்றுமையான, ஒட்டுமொத்தப் போராட்டம் காரணமாகவே, மத்திய அரசு தானாகவே முன்வந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை 2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் திரும்பப் பெற்றதைப் போலவே தற்போதும் திரும்பப் பெற்றிருக்கும் என்பது உண்மையா? இல்லையா? இந்த வாய்ப்பு முதலமைச்சர் எழுதிய அவசரக் கடிதம் காரணமாகத் தவறிப் போய்விட்டது என்பது தான் பலரின் கருத்து! முதலமைச்சர் தனது நீண்ட அறிக்கையை முடிக்கும்போது “திருக்குறள்” ஒன்றைச் சொல்லி முடித்திருக்கிறார். அவருக்கு வள்ளுவர் எழுதியுள்ள மற்றொரு குறளையும் நினைவு படுத்துகிறேன். “நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.” ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்துகொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும் என்பதுதான் இதன் பொருள்!
அன்புள்ள, மு.க. 24-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗