உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3780

நுழைவுத் தேர்வு தீர்ப்பு - தேவையா எதிர்ப்பு?

2013-07-23

உடன்பிறப்பே,

எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.), வெளியிட்ட அறிவிப்பினை உச்ச நீதிமன்றமே 18-7-2013 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு, அரசியல் சாசனச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

மேலும் ஏற்கனவே பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் பாதிக்காது என்றும், இந்தத் தீர்ப்பு மூலம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்காக தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பிலே கூறியிருக்கிறார்கள். மூன்று நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில், இரண்டு நீதிபதிகள் அதாவது தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் இவ்வாறு தீர்ப்பு கூறியுள்ள போதிலும், இதே அமர்வில் இடம் பெற்ற மற்றொரு நீதிபதியான ஏ.ஆர். தேவ், மற்ற இரண்டு நீதிபதிகளின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்துவது என்பது சட்டப்படியானது, நடைமுறைக்குச் சாத்தியமானது மற்றும் சமூகத்துக்குத் தேவை யானது என்றும் தெரிவித்திருக்கிறார்.

என்றாலும் இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் இருவர், பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறிவிட்டதால், அந்தத் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக அமைந்துள்ளது.

எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து பல ஆண்டுக் காலமாகவே பிரச்சினை உள்ளது. தி.மு.கழக ஆட்சிக் காலத்திலேயே, இந்தியாவிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கு நுழைவுத்தேர்வு நடத்துவது என இந்திய மருத்துவக் கழகம் எடுத்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 18.2.2011 அன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர் திரு.கோபால் சுப்பிரமணியம் அவர்கள் - பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமான இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கைக்கு எந்த ஒப்புதலும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது எனக்கூறியுள்ளார். மேற்படி வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகமும் மத்திய அரசும் முரண்பாடான கருத்தைக் கொண்டிருப்பதால் இரு தரப்பினரும் அமர்ந்து கலந்தாலோசித்து இது குறித்து ஒருமித்த முடிவெடுப்பது நல்லது என்று அப்போதே தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கு மீண்டும் 7.3.2011 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மருத்துவப் படிப்பிற்காக மாற்றியமைக்கப்பட்ட சட்ட நெறிமுறைகள் 21.12.2010 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது என்றும், அந்த மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, மத்திய அரசின் முன் அனுமதியுடன் எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார். இந்திய மருத்துவக் கழகத்தின் மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகள் சட்டப்படி செல்லத் தக்கதா என்ற கேள்வி எழவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாயின் அவர்கள் அதனை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007-08ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது. இது தொடரப்பட வேண்டும் என்று நான் முதல்வராக இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 15.8.2010ல் கடிதம் எழுதினேன். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழக அரசு இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கு மேல்நிலைக்கல்வி தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அன்று கழக அரசால் பெறப்பட்டது.

11.01.2011 முதல் 13.01.2011 வரை ஐதராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவரப்படமாட்டாது என முடிவெடுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிவிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என்று 13.1.2011 அன்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 2012இல் மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாகச் செய்திகள் வந்தபோது, அதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்ற வகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அறவே இல்லை. இந்தப் பிரச்சினை பற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாகத் தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தும் நல்லதோர் முடிவு காணவேண்டுமென்றும் 29-9- 2012இல் நான் கேட்டுக் கொண்டேன். எம்.பி.,பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதுதான் வழக்கு நடைபெற்று, தற்போது உச்ச நீதிமன்றம் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பினை பெரும்பாலோர் வரவேற்று மகிழ்கிற இந்த நேரத்தில், மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உச்ச நீதி மன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று காத்திருந்தோம்; துரதிருஷ்டவசமாக, அத்தகைய தீர்ப்பு கிடைக்கவில்லை; இதனால், எங்களுக்குச் சிறிது மன வருத்தம்தான்; ஏனெனில், பலவற்றை சீர்படுத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. எனவே, இப்போதிருக்கும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு அல்லது வேறு எந்த முறையீடாவது செய்வதுதான், சரியாக இருக்கும். எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, முழுமையாகப் படித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது. சட்டப்படியான நடவடிக்கையை தவிர்த்து, வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை” என்று கூறியிருக்கிறார். மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வந்தபோது, இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

இதனை அறிந்ததும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கும் 15.8.2010 அன்று நான் எழுதிய கடிதத்தில்,

கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை, 2007- 2008ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும்; அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றும்; அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுமுறை; மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும்; தமிழக அரசு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும்; சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்துத் தெரிவித்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.குலாம் நபி ஆசாத் அவர்கள் இதற்குப் பதில் அளித்து, 27.8.2010 அன்று அவர் அனுப்பிய கடிதத்தில்,

“மருத்துவப் படிப்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த கருத்து அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையிலானதாகும். எனினும் இக்கருத்தின்மீது மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றுடன் விரிவாக ஆலோசனை செய்து அவர்களின் அக்கறையையும், உணர்வுகளையும் கருத்தில் கொண்டு முடிவு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. எனவே, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள அக்கறையைக் கருத்தில்கொண்டு, அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப் பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும் என இக்கடிதத்தின் வாயிலாகத் தங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என கடிதம் எழுதியிருக்கிறார். இந்தச் செய்தி தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகள் அனைத்திலும் அப்போதே விரிவாக வெளிவந்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து 20-7-2013 அன்று தலையங்கம் எழுதிய “தினமணி” நாளேடு, “மருத்துவக் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு, இந்திய மருத்துவக் குழுமத்தின் அதிகார வரம்பை வரையறுத்திருக்கிறதே தவிர, மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது கூடவே கூடாது என்று கூறவில்லை. அந்தந்த மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு மூலம் நடத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. நாடு தழுவிய நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது. ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தது கழக ஆட்சி. எனவே நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும்; மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இடமில்லை என்பதாலும்; அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரியமாகும் என்பதாலும்; இந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருப்பது, ஏற்றுக்கொள்ள இயலாதது மட்டுமல்லாமல்; அவர் ஏற்கனவே நுழைவுத் தேர்வு தொடர்பாக மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும் தற்போதைய அவரது அறிவிப்புக்கும் உள்ள முரண்பாட்டையும் சுட்டிக்காட்ட விழை கிறேன். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதையும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்!

அன்புள்ள, மு.க. 23-07-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗