தொகுதி 49 · கடிதம் 3779
ஆபத்தின் உச்சக்கட்டம்; அன்னிய நேரடி முதலீடு!
2013-07-21
உடன்பிறப்பே,
நான் ஏற்கனவே கடந்த ஆண்டு எழுதிய கடிதத்திலேயே இலட்சக்கணக்கான சில்லரை வணிகர்களையும், நுகர்வோர் என்னும் நிலையிலே இருந்து பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களையும் ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடிய அளவுக்குச் சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பது ஆபத்து என்பதையும் - நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு, அதுவும் ஒரு மூலகாரணமாக ஆகிவிடும் என்பதையும், மத்திய அரசு அந்த முடிவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பதையும், எடுத்து விளக்கியதோடு; சில்லரை வாணிபத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை மாநிலங்களிலும் அமல்படுத்துவது என்ற நிலையை வற்புறுத்தாமல்; வற்புறுத்தாதது மட்டுமல்ல: ஆலோசனையாகக் கூடக் கூறாமல்; இதுகுறித்து, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கருத்துக்கும் - வணிகப் பெருமக்களின் ஒருமித்த கோரிக்கைக்கும் இசைவளித்து உடனடியாக இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை நான் கேட்டுக் கொண்டதை 28.11.2012 தேதியன்று நான் விடுத்த அறிக்கையைப் படித்துப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்! சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே நேரடி அன்னிய முதலீடுகளை 100 சதவிகித அளவிற்கு அதிகரிக்க வழிவகுத்த மத்திய அரசு, தற்போது இந்திய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரகசியங்களுக்கு மிகவும் இன்றியமையாத துறைகளான தொலைத் தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி ஆகிய இரண்டு துறைகளிலுமே அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கூடுதலாக அனுமதி அளித்திருக்கிறது.
16-7-2013 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதுள்ள 74 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 100 சதவிகிதமாக உயர்த்தப்பட ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதில் 49 சதவிகித அளவிலான முதலீட்டை அரசின் முன்ஒப்புதல் இல்லாமலே நிறுவனங்கள் பெறலாம்.
பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தற்போதுள்ள 26 சதவிகித உச்ச வரம்பு தொடரும் என்றாலும், நவீனமயமான தயாரிப்புத் திட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாகப் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கும். காப்பீட்டுத் துறையில் 26 சதவிகித அளவில் நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. விமான போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள 49 சதவிகித உச்ச வரம்பு அப்படியே தொடருகிறது. கட்டுமானக் கம்பெனிகளின் எப்.டி.ஐ. முதலீடு 49 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது. ஒரே “பிராண்டை”ச் சேர்ந்த பொருள்களின் சில்லரை வர்த்தகத்தில் தற்போது உள்ள 49 சதவிகித அன்னிய நேரடி முதலீடு 100 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 12 துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டிற்கான வரம்பை உயர்த்திட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொலைத் தொடர்புத் துறையில் இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்த 74 சதவிகித அன்னிய நேரடி முதலீடு, இனி 100 சதவிகிதம் என உயர்ந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளதால்; இதுவரை இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வந்த சில பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள், இனிமேல் தாங்களாகவே முழு முதலீட்டோடு நடத்துகிறோம் என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்கு இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்புத் தேவையில்லை என்ற நிலை ஏற்படும். வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவோடு இயங்கி வந்த இந்திய நிறுவனங்களும் தனித்துப் போட்டியிட முடியாமல் தவிக்க நேரிடும். ஓரளவு முதலீட்டோடு இயங்கி வந்த இந்திய நிறுவனங்களின் கதி, நிர்க்கதியாக முடியும். பல இலட்சம் ஊழியர்களின் நலனும் நட்டாற்றில் கை விட்டதைப் போலாகி விடும்.
தொலைத் தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் இணைந்து கூட்டாக நடத்தி வருகின்ற நிறுவனங்கள் எல்லாம் தற்போது லாபம் அடைகின்ற நிலையில்; இந்திய அரசின் பி.எஸ்.என். எல். நிறுவனத்தின் தணிக்கை நிறைவுபெறாத கணக்கைப் பார்த்தால், 2008-2009ஆம் ஆண்டில் 525 கோடி ரூபாய் இலாபம் என்பதற்கு மாறாக, 2009-2010 ஆம் ஆண்டு நட்டம் 1,823 கோடி ரூபாய்; 2010-2011ஆம் ஆண்டு நட்டம் 6,384 கோடி ரூபாய்; 2011-2012ஆம் ஆண்டு நட்டம் 8,851 கோடி ரூபாய்; 2012- 2013ஆம் ஆண்டு நட்டம் 8,198 கோடி ரூபாய் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நமது மத்திய அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் மேலும் அதிக அளவில் இலாபம் அடைவதற்குத் தேவையான வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறது. தொலைத் தொடர்புத் துறையில் இவ்வாறு 100 சதவிகித அன்னிய முதலீட்டிற்கு இந்திய அரசு அனுமதி அளித்து எடுத்துள்ள முடிவினை, பி.எஸ்.என்.எல். தேசிய சம்மேளனம் மிகவும் கடுமையாக எதிர்த்துள்ளது. மேற்கு நாடுகளின் விருப்பத்திற்கேற்பவே இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாக அந்தச் சம்மேளனம் குறை கூறுகிறது. இந்த முடிவின் காரணமாக, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல் ஆகியவை நேரடியாகப் பாதிப்புக்கு ஆளாகும் என்ற கருத்தில் நியாயம் நிரம்பவே இருக்கிறது. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவிகிதமாக அதிகரிக்கும் முடிவினை எதிர்த்து அந்தத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பினை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி அதிகரிக்க முடியாது என்ற போதிலும், குறுக்கு வழியில் அதற்கான ஏற்பாட்டினை மத்திய அரசு செய்ய முயற்சிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தக் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கான 26 சதவிகித அனுமதியை மேலும் உயர்த்த வேண்டியதில்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்கனவே கூறியிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அதைப் பொருட்படுத்தாமல், 49 சதவிகித அளவிற்கு உயர்த்த அனுமதிக்கப்படுகிறது என்றால் பிறகு எதற்காக நாடாளுமன்ற நிலைக்குழு என்ற கேள்வி எழுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கில்லை.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் எல்லாம் 35 சதவிகிதத்திற்கு மேல் தொலைத் தொடர்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் இந்த அளவிற்கு உயர்த்தப்படுவது ஏன்? தொலைத் தொடர்புத் துறையில் இந்த அளவிற்கு அன்னிய நிறுவனங்களுக்கு அதிக ஆதிக்கம் செலுத்திட அனுமதி கொடுத்து விட்டால், அது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்புடையதுதானா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாமா என்ற கருத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது. அமெரிக்கா, தனது உளவுத் துறை இணையத் தொடர்புகள் மூலமாக இந்தியா போன்ற நாடுகளை உளவு பார்க்கிறது என்ற செய்தி வெளியானதற்குப் பிறகும், இந்தியா இப்படிப்பட்டதொரு முடிவினை எடுப்பது எங்கே போய் முடியப் போகிறது என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அதிகரித்து வரும் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காகவும் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்க வேண்டிய நெருக்கடியான அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
இந்த முடிவுகளை அறிவித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. ஆனந்த் சர்மா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, வெளிநாட்டு முதலீட் டாளர்களின் “கவலைகளில்” அக்கறை செலுத்தும் வகையில்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். அப்படியென்றால் இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் “கவலைகளில்”தான் அக்கறை செலுத்துமா? உள்நாட்டு முதலீட் டாளர்களைப் பற்றியோ, அரசின் பொது நிறுவனங்களைப் பற்றியோ நமது இந்திய அரசுக்கு “கவலை” இல்லையா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க இயலாது.
இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நோயைப் போக்கவும், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்கவும் தேவையான மருந்துகளாக இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென நியாயம் கற்பிக்கப்படுகிறது. “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி”ச் செயலாற்ற வேண்டும். நோய்க்குத் தரப்படும் மருந்து நோயைத் தணிப்பதாகவும், குறைப்பதாகவும், முழுதுமாய்க் குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கண்டுபிடித்துள்ள மருந்துகள், நோயைத் தணித்திட உதவாது என்பதோடு, பக்க விளைவுகளையும் ஏற்படுத்திப் பாதிப்பைப் பன்மடங்கு பெருக்கிவிடும் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவிருக்கின்ற நிலையில், இதுபோன்ற மிகக் கடுமையான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமா என்பதும் எண்ணிப்பார்த்திட வேண்டிய ஒன்றாகும். மத்திய அரசின் இந்த முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையை வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்ல வழி வகுக்கும். அன்னிய நேரடி முதலீட்டினை இவ்வாறு பல்வேறு முக்கியத் துறைகளில் உயர்த்துகின்ற மத்திய அரசின் முடிவுகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் முழுவதுமாக எதிர்க்கின்றது.
அன்புள்ள, மு.க. 21-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗