உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3771

“நிலக்கரி நாயகி” என்ற பட்டம் பெறவா?

2013-07-02

உடன்பிறப்பே,

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் “கனி” மொழிக்குப் பதவி கிடைத்ததும், நான் நிலக்“கரி”யை மறந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். “கனி” - “கரி” என்றெல்லாம் வார்த்தை விளையாட்டு ஆட முனைந்துள்ளார். அறிக்கை “கொடநாட்டில்” இருந்து அல்லவா வருகிறது; அப்படித்தான் இருக்கும்! நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பற்றியும், அந்தத் தொழிலாளர்கள் பற்றியும் தி.மு.கழகம் மறந்துவிட்டது என்று ஜெயலலிதா சொல்வது உண்மையா?

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பற்றி கடந்த ஆண்டு 8-5- 2012 அன்றும் 25-5-2012 அன்றும் விரிவாக “முரசொலி”யில் உடன்பிறப்பு மடல் எழுதியிருக்கிறேன். மீண்டும் இந்த ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை பற்றியே கடந்த 26-5-2013 அன்று உடன்பிறப்பு மடலும், ஏன் கடந்த வாரம் 22-6-2013 அன்று விரிவானதொரு அறிக்கையும் எழுதியிருக்கிறேன். ஆனால் தமிழக முதலமைச்சர் நான் நிலக்கரியை மறந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நெய்வேலி நிறுவனத்தை நான் மறந்தவனா என்பதைப் பின்வரும் சில நிகழ்ச்சிகளே அனைவருக்கும் தெளிவாக்கிடும் என்று நம்புகிறேன்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, 8-5-2012 தேதிய “முரசொலி”யில், “மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இந்தப் பிரச்சினையிலே அக்கறையின்றி இருந்தாலும், மத்திய அரசும், இந்தத் துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு போராடுகின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை; அழைத்துப் பேசி சுமூக முடிவுகாண முன்வர வேண்டும்; அதற்கு பிரதமர் அவர்கள் ஆவன செய்திட வேண்டும்” என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டேன்.

3-5-2012 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நெய்வேலி தொழிலாளர்கள் பிரச்சினை பற்றிக் கேள்வியெழுப்பியபோது, “என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டப் பிரச்சினை தமிழக அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல, எனவே அதில் தலையிட முடியாது” என்று அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. நிலக்“கரியை” மறந்தது நானா? அ.தி.மு.க. அரசா?

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினை என்பது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தொடர்கின்ற ஒன்றாகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு பணி புரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினை 1994ஆம் ஆண்டில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் முயற்சியின் காரணமாக ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியில் நெய்வேலியில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆட்சியிலே இருந்த தி.மு. கழகம் மாநில அரசுக்கு இதிலே அக்கறை இல்லை என்று சொல்லாமல், முதலமைச்சராக இருந்த நானே இந்தப் பிரச்சினையிலே நேரடியாகத் தலையிட்டு, 16-6-2008 அன்று தொழிற் சங்கமும், நிர்வாகமும், டெல்லி தலைமை

தொழிலாளர் ஆணையர் முன்பாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால், வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். நிலக்கரியை மறந்திருந்தால் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்குமா?

2010ஆம் ஆண்டு மீண்டும் நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்பொழுதும் தமிழக முதலமைச்சராக இருந்த நான், 15-10-2010 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதன் பின்னர் நிர்வாகத்தை அழைத்துப் பேசி, மாதம் 1,040 ரூபாய் உயர்த்தப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுகோள் விடுத்தேன்.

இதனைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர்கள் மட்டும் ஏற்றுக் கொண்டார்கள். மற்றத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனே நான் அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும், 26-10-2010 அன்று தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வரச் செய்து அவர்களிடம் பேசினேன். நிர்வாகத்தையும் சம்மதிக்கவைத்து, மேலும் பல சலுகைகளையும் வழங்கச் செய்தேன். தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. மறுநாள் 23ஆம் தேதி காலையிலேயே தி.மு.க. தொழிற்சங்கம் (தொ.மு.ச.); சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அதிகாரிகள் சங்கம் ஆகிய சங்கத்தினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. 4-7-2006 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 25-6-2006 அன்று இந்தப் பிரச்சினை குறித்துப் பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில், “நெய்வேலியில் பத்து சதவிகிதப் பங்கினை விட்டுத் தருவது பற்றி, தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்க் கருத்துக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்திவிடக் கூடாது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் திட்டத்தில் இருந்து விலகிச் செல்வதற்கு; எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டினைத் தளர்த்துவதாகவே கருதப்படும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன். 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் திட்டத்தில், “இலாபகரமாக இயங்கும், அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படமாட்டா; “நவரத்தினங்களாக” விளங்கும் அரசு நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும்” என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. எனது இந்தக் கடிதத்திற்கு உடனடியாகப் பதில் வராத நிலையில், 4ஆம் தேதி முதல் நெய்வேலியில் வேலை நிறுத்தம் தொடங்கியது. 6-7-2006 அன்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, “நெய்வேலி பிரச்சினையில் தொழிலாளர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, மத்திய அரசினால் எடுக்கப்பட்டுள்ள அந்த முடிவுக்குத் தி.மு.க. அந்த அரசிலே இடம்பெற்று, இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இதை டெல்லியிலே உள்ள கழக அமைச்சர்கள் பிரதமரிடத்திலே அறிவித்திடுமாறு கூறியிருக்கிறேன்” என்று சொன்னேன். அவ்வாறே மத்திய அமைச்சராக இருந்த தம்பி தயாநிதிமாறனும் உடனடியாகப் பிரதமரைச் சந்தித்து எனது கருத்தைத் தெரிவித்தார். அதன் பின்னர் நெய்வேலி நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை விற்கும் முடிவை நிறுத்திவைப்பதாக அன்று இரவே மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தையும் திரும்பப் பெற்றனர். ஆனால் முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இதை யெல்லாம் அப்படியே மூடி மறைத்துவிட்டு, “மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசு தனது முடிவைக் கைவிட்டது” என்று திரித்துக் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் சார்பில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்ட நேரத்தில், உடனடியாக நான் விடுத்த அறிக்கையில், “நவரத்னா” தகுதி பெற்ற என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு மீண்டும் ஈடுபடக்கூடாது; அது தேவையின்றி தமிழர்களைக் குறிப்பாக நெய்வேலி தொழிலாளர்களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்; அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு மேலும் ஒரு எதிர்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டாமென்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதன்பிறகு கடந்த மாதம் 26-5-2013 அன்று நான் எழுதிய “உடன்பிறப்பு” மடலில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத்தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜெயலலிதா 23-5-2013 அன்று இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்ததை பெருந்தன்மையோடு நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அது என் வழக்கம். ஆனால் “கனி”மொழிக்காக நிலக்“கரி”யை மறந்துவிட்டேன் என்று என்னைக் குற்றஞ்சாட்டி அறிக்கை விடுவது அம்மையாரின் பெருந்தன்மை - வழக்கம் - கபடநாடகம்!

21-6-2013 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் என்.எல்.சி. யின் ஐந்து சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக செய்தி வந்தவுடனேயே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்து, தங்களது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டுகின்ற வகையில் போராட்டங்களில் இறங்க ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டதையும் எடுத்துக்காட்டி;

“மத்திய அரசு தனது 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய் தான் மத்திய அரசுக்குக் கிடைக்கக் கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப்படையிலே தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம் அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கிவிடலாம்” என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதையும் மத்திய அரசு கருத்திலே கொண்டும்; ஏற்கனவே இதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் தமிழகத்தின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினைத் தள்ளி வைத்ததை மனதிலே கொண்டும்;

தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அறிக்கை விடுத்திருந்தேன். நிலக்கரியை மறந்திருந்தால்; ஜெயலலிதாவின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி மத்திய அரசுடன் நான் வாதாட வேண்டிய அவசியம் என்ன?

நான் அறிக்கை விடுத்த 22-6-2013 அன்றுதான், தமிழக முதலமைச்சரும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதன் பிறகுதான் பத்திரிகையாள நண்பர் ஒருவர் 5 சதவிகித பங்கினைத் தனியாருக்கு விற்பதற்குப் பதிலாக மாநில அரசுக்கு விற்பனை செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தையே தமிழக அரசின் கருத்தாக ஏற்றுக் கொண்டு 25-6- 2013 அன்று முதல்வர் பிரதமருக்குத் தெரிவித்தார்.

நெய்வேலியில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இந்தப் பிரச்சினை பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஜூலை 3ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக முடிவெடுத்து, முறைப்படி அதனை நிர்வாகத்திற்கும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று 1-7-2013 “இந்து” நாளேடு “CM’s offer to be examined as per SEBI rules, says Jaiswal” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “Asked for reaction to Ms Jayalalithaa’s proposal, Mr. Jaiswal told The Hindu on Saturday evening that the question whether any State PSUs could pick up stake in a Central undertaking should also be examined” அதாவது ஜெயலலிதாவின் திட்டம் பற்றி மத்திய அமைச்சர் திரு. ஜெய்ஸ்வால் அவர்களிடம் கேட்டபோது, மத்திய நிறுவனத்தின் பங்குகளை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது பற்றிப் பரிசீலிக்கவேண்டும் என்று தான் பதிலளித்திருக்கிறார்.

இதற்கிடையேதான் சென்னையில் 29-6-2013 அன்று பேட்டியளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் “என்.எல்.சி.யின் 5 சதவிகித பங்குகளைத் தங்களுக்கு விற்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருக்கிறது. அதனைக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கூடுதலாக 5 சதவிகித பங்குகளைக்கூடக் கொடுக்கச் சொல்வோம். நம் சொத்து நம்மிடமே இருக்க வேண்டும். என்.எல்.சி. யின் பங்குகளைத் தமிழக அரசு வாங்கினால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்” என்றெல்லாம் கூறி அந்தச் செய்தியும் ஏடுகளிலே வெளி வந்திருக்கிறது. (At a press meet in Chennai on Saturday, Mr. Jaiswal’s colleague and Union Minister of State for Industry and Commerce E.M. Sudarsana Natchiappan said the Centre would happily sell five per cent stake to the State Government. - “The Hindu”, 1-7-2013) இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து விடுத்துள்ளதாக ஏடுகளில் வெளிவந்திருக்கும் அறிக்கையில், நெய்வேலி பங்கு விற்பனை உறுதி என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளதாகச் செய்தி வந்திருப்பதாகக் கூறி, ஜூலை 2ஆம் தேதியன்று இதற்காக அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். எனவே உண்மையில் ஜெயலலிதா அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் நெய்வேலி நிலக்கரிக்காகவா அல்லது 8ஆம் தேதியன்று தி.மு. கழகம் சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் தொடங்கிட வேண்டுமென்பதை வலியுறுத்தி நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவா? தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கே வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து ஏற்றுக்கொள்வதாக இருக்கும் நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் இணைந்து ஜூலை 3ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில், ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் இங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது ஊரை ஏமாற்றித் திசை திருப்பவா? அல்லது நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை விற்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்தது என்று வெற்றி விழா நடத்தி “நிலக்கரி நாயகி” என்ற பட்டம் பெற்றுக்கொள்ளவா? “கனி” - “கரி” என்றெல்லாம் ஒரு முதலமைச்சரே எழுதியிருப்பதால்தான், “நிலக்கரி நாயகி” என்று குறிப்பிட நேரிட்டது! என்ன செய்வது? கொண்டதே கோலம், கண்டதே காட்சி!

அன்புள்ள, மு.க. 2-7-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗