தொகுதி 49 · கடிதம் 3772
மாநிலங்களவைத் தேர்தல் - ஓர் ஆய்வு!
2013-07-03
உடன்பிறப்பே,
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியோடு முடிவடைவதால், அதற்கான தேர்தல் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது தமிழகத்தில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் கட்சிவாரி விவரம் வருமாறு :-
அ.தி.மு.க. அணி 151 இடங்கள் (அ.தி.மு.க. 147, சமத்துவ மக்கள் கட்சி 2, குடியரசுக் கட்சி 1, கொங்கு முன்னேற்றக் கழகம் 1) - தி.மு.க. 23 இடங்கள் - தே.மு.தி.க. 22 இடங்கள் - சி.பி.எம். 10 இடங்கள் - சி.பி.ஐ. 8 இடங்கள் - தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் 7 இடங்கள் - காங்கிரஸ் 5 இடங்கள் - பா.ம.க. 3 இடங்கள் - புதிய தமிழகம் 2 இடங்கள் - மனித நேய மக்கள் கட்சி 2 இடங்கள் - பார்வர்டு பிளாக் 1 இடம்.
மாநிலங்களவைத் தேர்தல் தொடக்கத்தில், தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க. தவிர்த்த எஞ்சிய இடங்களான 181 இடங்கள் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாகத்தான் இருந்தன. அந்த 181 இடங்களைக் கொண்டு ஐந்து இடங்களில் அவர்களின் கூட்டணி சுலபமாக வெற்றி பெற முடியும் என்ற நிலையே இருந்தது. ஆனால் காலியான ஆறு இடங்களில்; அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவின் இடமும் ஒன்று. எனினும் உண்மையில் அந்த இடத்தை டி. ராஜாவிற்கு வழங்கிடும் எண்ணம் ஜெயலலிதாவுக்கு தொடக்கத்தில் இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன் தொடர்ந்து ஜெயலலிதாவிற்குத் தீவிர ஆதரவாளராகப் பேசி வருகின்ற காரணத்தால், அவருக்கு அந்த இடத்தைப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்று ஜெயலலிதா எண்ணினார். ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையோ, அந்த ஒரு இடத்தில் டி.ராஜாதான் நீடிக்க வேண்டுமென்று நினைத்தது. எனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் இடத்தைக் கொடுத்திட ஜெயலலிதா முதலில் விரும்பவுமில்லை, அறிவிக்கவுமில்லை. அறிவிக்காதது மட்டுமல்ல; அந்தக் கட்சியின் சார்பில் முதலமைச்சரைப் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து பரதன், சுதாகர் ரெட்டி போன்றவர்கள் நாள் கணக்கிலே காத்திருந்தபோதும் அரசியல் நாகரிகம் கருதி மரியாதைச் சந்திப்புக்குக்கூட நேரம் கொடுக்காமல், அலட்சியம் செய்துவிட்டு, அவர்களை டெல்லியிலே சந்திப்பதாகக் கூறி விட்டார். அவர்களை டெல்லியிலே சந்திப்பதாகக் கூறிவிட்டு, ஜெயலலிதா டெல்லி புறப்படுவதற்கு முன்பாகவே அ.தி.மு.க. ஐந்து இடங்களிலே போட்டியிடும் என்றும், வேட்பாளர்கள் யார் யார் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏமாற்றம் தரும் வகையில் சென்னையிலேயே அறிவித்துவிட்டார். டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான பரதனும், சுதாகர் ரெட்டியும் ஜெயலலிதாவைச் சந்தித்து, காலியாகும் இடங்களில் ஒரு இடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் “சிட்டிங் சீட்” என்பதை ஞாபகப்படுத்தி, அந்த இடத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கேட்டபோது, “சிட்டிங் சீட் என்றால் தந்துவிட வேண்டுமா? அ.தி.மு.க. சார்பில் ஐந்து வேட்பாளர்களை அறிவித்து விட்டேன், மாற்ற முடியாது” என்று அழுத்தமாகக் கூற, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்க, “வேறு இடத்தில் நின்று வெற்றி பெற்றுக் கொள்ளுங்கள், வாழ்த்துக்கள்” என்று கூறிப் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், யாருடனும் கூட்டணி இல்லை என்றும் ஜெயலலிதா டெல்லியில் பகிரங்கமாகவும், பரபரப்பாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் நெளிந்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம்கொடுக்காமல், 5 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிட்டால், ஏற்கனவே தே.மு.தி.க.விலிருந்து அதிருப்தி கொண்டு வெளியே வந்தவர்கள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, மேலும் சிலரைத் தே.மு.தி.க.விலிருந்து ரகசியமாக வாக்களிக்கச் செய்வதின் மூலம், ஐந்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடலாமென்று முதலில் எண்ணித்தான் ஐந்து இடங்களிலே அ.தி.மு.க. போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.
அ.தி.மு.க.விலிருந்து கம்யூனிஸ்ட்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான், தொடக்கத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்காமல் இருந்த தி.மு.கழகம், டெல்லியிலே உள்ள சி.பி.எம். தலைவர்களிடம் மாநிலங்களவைத் தேர்தல் பற்றிப் பேசுவதற்கு முற்பட்டது. டெல்லியில் தோழர்கள் யெச்சூரி, பிரகாஷ் காரத் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசியபோது, “ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகளில் எங்களுக்கும் அதிருப்திதான்; மேலும் ஜெயலலிதா அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் தாங்களே போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார்; ஆனால் சி.பி.ஐ. தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டால் எங்களுக்குள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நாங்கள் அவர்களைத்தான் ஆதரிக்க நேரிடும்” என்று நிலைமைகளை விளக்கினார்கள்.
13-6-2013 அன்று சென்னையில் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு. கழகத்தோடு கூட்டணி வைக்கத் தயாராக இருப்பதாக தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுவதாகவும், அவருடைய மைத்துனரும் அதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்தார்கள். அன்றையதினம் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தபோது, “மாநிலங்களவைத் தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எல்லாக் கட்சிகளிடமும் பேசுவோம்” என்று கூறினேன்.
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஐந்து பேரில் ஒருவராக இருந்த சரவணப் பெருமாளைக் கழற்றிவிட்டு, அவருக்குப் பதிலாகத் தஞ்சாவூர் கு.தங்கமுத்துதான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிலும் உறுதியாக இல்லாமல், கு.தங்கமுத்து அவர்களையும் திரும்பப் பெற்றுவிட்டு, அந்த இடத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான டி.ராஜாவிற்கு அளிப்பதாக அ.தி.மு.க. அறிவித்தது.
“40 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம், யாருடனும் கூட்டணி இல்லை” என்று டெல்லியிலே முதல் வாரம் பரபரப்பாக அறிவித்த அதே ஜெயலலிதா, ஒரே வார காலத்திற்குள் மனம் மாறி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்குத் தங்களுடைய ஆதரவு என்று அறிவித்தார்.
இந்த முரண்பாடுகளைப்பற்றித் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் யாராவது ஏதாவது விமர்சனம் செய்தார்களா? தி.மு. கழகத்தையும், காங்கிரஸ் கட்சியையும் “சந்தர்ப்பவாதிகள்” என்று தலையங்கம் தீட்டிய “இந்து” நாளேடு ஏதாவது விமர்சனம் செய்ததா? என்றால் இல்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்த பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு வழியில்லாமல், சி.பி.ஐ. வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.
அ.தி.மு.க. இவ்வாறு ஒரு முடிவெடுக்கக் காரணம், தி.மு.கழகமும், தே.மு.தி.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து முடிவெடுத்துப் போட்டியிட்டால், அவர்களே இரண்டு இடங்களில் சுலபமாக வெற்றி பெற்று, அ.தி.மு.க.வின் வேட்பாளர் ஒருவர் தோற்கடிக்கப்பட நேரிடும் என்ற உண்மைதான்.
கம்யூனிஸ்ட் கட்சியோடு உறவு இல்லை என்று முடிவான பிறகுதான், தே.மு.தி.க. - தி.மு.க., பேச்சுவார்த்தை நடைபெற்றது.
15-6-2013 அன்று தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார். கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினும் தே.மு.தி.க.வின் சுதீஷ் உடன் பேசினார். நல்ல முடிவு காணலாம் என்று முதலில் கூறிய போதிலும், தே.மு.தி.க. கட்சியின் கூட்டம் நடைபெற்ற பிறகு, அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதென்று திடீரென்று முடிவெடுத்து அறிவித்து விட்டார்கள். அந்தக் கட்சியின் சார்பில் சேலம் திரு.ஏ.ஆர். இளங்கோவன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவர்களுடைய வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் கோரி டெல்லிக்குச் சென்றார்கள். தி.மு.கழகம்; - பா.ம.க., காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளைத் தொடர்புகொள்ள முனைந்தது.
18-6-2013 அன்று மனித நேய மக்கள் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு தொடர்பு கொண்டார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களையும் கழகத்தின் சார்பில் தொடர்புகொண்டு பேசியபோது, அவரும் கழகத்திற்கு ஆதரவாக உறுதியளித்தார். தே.மு.தி.க. வும் அவர்களுடன் தொடர்பு கொண்டது. அ.தி.மு.க. தரப்பிலும் பேசப்பட்டது. அதேநேரத்தில் பா.ம.க. வின் அன்புமணி ராமதாசை ஸ்டாலின், துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் சந்தித்தனர். அவர் உறுதியளித்ததோடு 21-6-2013 தேதிய கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் பா.ம.க. தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. எனினும் மனித நேய மக்கள் கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் தி.மு. கழக வேட்பாளருக்கு வாக்களிப்பதாக என்னை நேரில் சந்தித்து உறுதி தெரிவித்தார்கள்.
இதற்குப் பிறகுதான், திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசுடன் பேசியது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூலமாக ஆதரவு கேட்டுக் கடிதம் கொடுத்து, அந்தக் கடிதமும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை தனது ஆதரவைத் தி.மு.கழக வேட்பாளருக்குத் தெரிவித்தது. இதுதான் இந்த மாநிலங்களவைத் தேர்தலில் கட்சிகள் காட்டிய உறவும், மேற்கொண்ட நிலையும்!
ஆனால் இதுபோன்ற மாநிலங்களவைத் தேர்தல்களில் கடந்த காலங்களில் தி.மு. கழகம் காட்டிய அணுகுமுறை எப்படி இருந்தது என்பதையும் நான் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஏனென்றால், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் உதவி கேட்கும் தி.மு.க., ஈழப் பிரச்சினையை மறந்துவிட்டதா என்பதை நான் விளக்க வேண்டுமென்று பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி கேட்டிருக்கிறார். அவருக்கு நான் விளக்கம் தர வேண்டாமா?
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அடுத்து வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 28-6-2004 அன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது - தி.மு.கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஒரு இடத்தில் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்த போதிலும் - அவ்வாறு தி.மு.கழகம் தனக்கொரு இடத்தை எடுத்துக் கொள்ளாமல், தனது 30 வாக்குகளையும் பா.ம.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வழங்கி, அந்த இரண்டு கட்சிகளின் சார்பில் இன்று என்னைக் கேள்வி கேட்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும், மற்றும் சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) அவர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட மனப்பூர்வமாக ஒத்துழைத்தோம். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி அவர்களைத் தி.மு.கழகம் வெற்றி பெறச் செய்ததால்தான் அவர் பின்னர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணியாற்ற முடிந்தது. எந்த அளவிற்குத் தி.மு.கழகம் தனது இடத்தை இணக்கமாக விட்டுக்கொடுத்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நேரத்திலேகூட, ஒவ்வொரு கட்சியுடனும் உடன்பாடு செய்து கொண்டபோது, பா.ம.க. வுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் 31 சட்டமன்ற இடங்கள்தான் அவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளப்பட்டதே தவிர, மாநிலங்களவை உறுப்பினர் ஒன்று தரப்பட வேண்டுமென்று எந்தக் குறிப்பும் கிடையாது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தங்களைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியபோது, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக, அடுத்து வரும் மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடம் அவர்களுக்குத் தருவதாகத் தி.மு.க. ஒப்புக் கொண்டது. அந்த வார்த்தையைக் காப்பாற்றிடும் வகையில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தி.மு.கழகத்தின் உறுதியான, கண்ணியம் மிக்க ஆதரவோடு வெற்றி பெற்றார்.
2008ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, தி.மு.கழகம் சட்டப் பேரவையில் 96 இடங்களைப் பெற்றிருந்தது. தி.மு. கழகம் மூன்று இடங்களில் மாநிலங்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தபோதிலும், தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் இடத்திலும் போட்டியிடலாம் என்று முடிவு செய்தோம். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தோழர் டி.கே. ரெங்கராஜனின் வேட்பு மனுவை நான்தான் முன்மொழிய வேண்டுமென்று தோழர் வரதராசனும், தோழர் ஜி. ராமகிருஷ்ணனும் கேட்டு, என்னுடன் புகைப்படமே எடுத்துக் கொண்டார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தம்பி ஜி.கே.வாசனும், சகோதரி ஜெயந்தி நடராசனும் வெற்றி பெற்றார்கள். இன்னொரு உதாரணத்தையும் கூற விரும்புகிறேன். 1996ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க.வுடன் உறவு வைத்துக் கொள்ள முடிவெடுத்தபோது, மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரசை உருவாக்கி, தி.மு.க.வுடன் உறவுகொண்டு, அந்தத் தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றோம். அந்த வெற்றிக்குப் பின்னர், மூப்பனார் அவர்களும், திருமதி ஜெயந்தி நடராசன் அவர்களும், பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் த.மா. கா.வில் இருந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பாகத் தாங்கள் பெற்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்களில் நீடிப்பது சரியல்ல என்ற கருத்துடன், மூவரும் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை 9-9-1997 அன்று ராஜினாமா செய்தார்கள். காலியாகிவிட்ட அந்த மூன்று இடங்களை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் வந்தது. அப்போது தி.மு.க.விற்கு 165 இடங்கள் இருந்தன. அதன் காரணமாக மாநிலங்களவை இடைத் தேர்தலில் மூன்று இடங்களிலும் தி.மு.க. சார்பில் மூன்று பேரை நிறுத்தி வெற்றி பெறலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால் தி.மு.க. அப்படிச் சுயநல எண்ணத்தோடு நடந்துகொள்ளவில்லை. மூப்பனார் அவர்களிடம் பேசி, தி.மு. கழகம் ஒருவரைக்கூட நிறுத்தாமல், த.மா.கா. சார்பிலேயே மூன்று பேரை நிறுத்திக் கொள்ளலாம், அவர்களுக்குத் தி.மு.க. வெற்றியைத் தேடித் தரும் என்று கூறி, பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராசன், அப்துல் காதர் ஆகியோர் த.மா.கா. சார்பில் வெற்றி பெற வழிவகுத்தோம். இதுவும் தி.மு.க. தோழமைக் கட்சிகளிடம் எந்த அளவிற்கு உறவோடும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடும் இருந்தது என்பதற்கான உதாரணம்தான்.
மேலும் தி.மு.கழகம் தற்போது எடுத்த முடிவு காரணமாக ஈழப் பிரச்சினையை மறந்து விடவும் இல்லை; விட்டுவிடவும் இல்லை; எப்போதும் விடவும் மாட்டோம்.
மாநிலங்களவைத் தேர்தல் வேறு, இலங்கைப் பிரச்சினை வேறு, கூட்டணி வேறு என்று நான் தெளிவாகக் கூறிய பிறகும், ஒருசில பத்திரிகைக்காரர்கள் தி.மு.கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை விட்டுவிட்டதைப் போலவும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.
தி.மு. கழகம், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளோடு இணைந்து இந்த மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் எழுதி, தங்கள் மனப்புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள முயலுகிறார்கள். “தினமணி” நாளேடு அந்த எண்ணத்தோடு தான் மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி அவர்களிடம், “காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி என்று கூற முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளாரே?” என்று கேட்ட நேரத்தில், அவர் மிகத் தெளிவாக, “மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் ஆதரவை தி.மு.க. கேட்டது. காங்கிரசும் கொடுத்தது. அந்த அளவில்தான் இது இருக்கிறது. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியின் மேலிடம்தான் பதில் கூற முடியும்” என்று சொல்லியிருக்கிறார்.
மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு வாக்களித்ததற்காக அந்தக் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும் கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார். அதுபற்றி “தினமணி”; “மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவளிக்கும், மன்மோகன்சிங், சோனியாவிடம் கனிமொழி உறுதி” என்று அரைப் பக்கத்திற்கு தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவு அளித்ததற்காகத் தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்தேன்” என்று மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் “தினமணி” காங்கிரஸ் மேலிட வட்டாரங்களும், பிரதமர் அலுவலக வட்டாரங்களும் கூறியதாக “நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டுவரும் சட்ட மசோதாக்களுக்கும், மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கும் தி.மு.க. ஆதரவு அளிக்கும்” என்று கனிமொழி உறுதியளித்தார் என்று எழுதியுள்ளது. ஒரு காலத்தில் “தினமணி”க்கு “தினப் புளுகு மணி” என்று பெயர் உண்டு. அதை மீண்டும் மீண்டும் “தினமணி” மெய்ப்பித்து வருகிறது.
இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் திரு. முகுல் வாஸ்னிக் அவர்கள் சென்னையில் பேட்டி யளித்துள்ளார். அப்போது, “மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கும் முடிவு, எல்லாத் தலைவர்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் ஆலோசித்துத்தான் எடுக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்றவற்றைத் தி.மு.க. ஆதரிக்கும் என்று கூறியதன் காரண மாகத்தான் மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழியை ஆதரித்தோம் என்று கூறுவதெல்லாம் பொய்யானவை” என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
ஏன்; இன்னமும் ஓர் உதாரணம் கூறுகிறேன். அண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பீகார் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் அரசு வெற்றி பெற்றது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் முதல்வர் நிதீஷ்குமார் வெற்றி பெற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அந்தக் கட்சிக்கு 118 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு; இதுவரையில் அவர்களோடு கூட்டணியில் இல்லாத, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் 4 பேரும், சுயேச்சைகள் 4 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவரும் ஆதரவளித்தனர். அதன் காரணமாக எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியோடும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துவிட்டது என்று அர்த்தமா? இது பற்றிய விவரத்தை தம்பி டி.கே.எஸ். இளங்கோவன் “முரசொலி” யில் எழுதிய தன் கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.
எனவே தி.மு.கழகம் ஏதோ கொள்கைகளையெல்லாம் விட்டுவிட்டது என்றோ, சந்தர்ப்பவாதத் தன்மையோடு நடந்து கொண்டது என்றோ, மற்ற கட்சிகளையெல்லாம் புறக்கணித்து விட்டுக் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டுவிட்டது என்றோ, இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைக் கைவிட்டுவிட்டது என்றோ, மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடத்தைப் பெறுவதற்காக ஏதோ தவறு செய்துவிட்டது என்றோ ஒரு சிலர், குறிப்பாக ஒரு சில ஏடுகள் உள்நோக்கத்துடன் செய்கின்ற பிரச்சாரங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது கறை பூசுவதற்காகவும், புழுதிவாரித் தூற்றுவதற்காகவும் ஜெயலலிதாவிடம் ஆதாயம் பெறுவதற்காகவும் செய்யப்படுகின்ற மாய்மாலங்களே தவிர வேறல்ல!
அன்புள்ள, மு.க. 3-7-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗