உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3770

வாலறுந்த பல்லி போல் ஆவதா?

2016-06-30

உடன்பிறப்பே,

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர் கனிமொழிக்குக் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுப் பெற்றதையொட்டி, தி.மு.கழகம் இலங்கைப் பிரச்சினையையே மறந்து விட்டதாகவும், கைவிட்டு விட்டதாகவும் ஒருசிலர் பேச முற்பட்டிருக்கிறார்கள். தி.மு. கழகத்தின் மாநிலங்களவை வேட்பாளருக்கு முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், பின்னர் தே.மு.தி.க.விடமும், மனிதநேய மக்கள் கட்சியிடமும், புதிய தமிழகம் கட்சியிடமும், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டதுதான் உண்மை. இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் இந்தத் தேர்தலை யொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியோடு உடன்பாட்டை முறித்துக்கொண்ட தி.மு. கழகம், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டுவிட்டது, இலங்கைப் பிரச்சினையையே கைகழுவிவிட்டது என்றெல்லாம் ஆரம்பத்திலிருந்தே தி.மு. கழகத்தின்மீது பகையுணர்ச்சியோடு வெறுப்பு அரசியல் நடத்தி வரும் ஒருசிலர் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இதற்கிடையே இலங்கைத் தமிழர் விவகாரத்தில், அந்த நாட்டு அரசு 13வது சட்டத் திருத்தம் செய்து, அதன் அடிப்படையையே நீர்த்துப் போகச் செய்து, அதனை உயிரற்ற ஒன்றாக ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை நாம் மனதிலே கொள்ளவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை மனதிலே கொண்டுதான், இந்தத் திங்கள் தொடக்கத்தில், அதாவது 9-6-2013 அன்று பிரதமருக்கு நான் எழுதிய விரிவான கடிதத்தில், “இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் நேரடி விளைவாக ஏற்பட்டது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு முந்தைய காலத்தில் சிங்களர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் கசப்பான அனுபவம் காரணமாக, இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படுவதற்கு இந்தியாவிலுள்ள நாம் இலங்கைத் தமிழர்களுக்கு உறுதியளித்துள்ளோம். 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமாறு ஏற்கனவே அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய்யா ராஜபக்சே கூறியுள்ளார். தற்போது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய இந்தியா நேரடியாகத் தலையிடுவது இந்திய அரசின் கடமையும், பொறுப்புமாகும். இது மோதலுக்குத் தீர்வு மற்றும் இனச் சமரசம் ஆகியவற்றை நோக்கிய பாதையை இலகுவானதாக ஆக்கும். இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கையில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளுக்கு இந்தியா மவுனமான பார்வையாளராக இருக்கக் கூடாது. இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகளையும், வாழ்க்கையையும் பாதுகாக்கத் தங்களது தலையீட்டினைக் கோருகிறேன்” என்று எழுதியிருந்தேன்.

என்னுடைய இந்தக் கடிதத்திற்கு, 11-6-2013 அன்றே உடனடியாக பதில் எழுதிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், “இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் தொடர்பான தங்களது ஜூன் 9ஆம் தேதி கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து எடுக்கப்படவேண்டிய முடிவு என்றாலும், அதன் விளைவுகள் குறித்து நாங்கள், நிச்சயம் பரிசீலித்து இது தொடர்பான எங்களது கருத்துக்களை இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்துவோம். இலங்கைவாழ் தமிழர்கள் உட்பட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று, நல்லிணக்கத்தோடு வாழ வேண்டுமென்ற கருத்தில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பதைத் தாங்களும் அறிவீர்கள்” என்று எழுதியிருந்தார். என்னுடைய கடிதமும், பிரதமர் எனக்கு எழுதிய கடிதமும் திராவிட முன்னேற்றக் கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிய பிறகுதான் எழுதப்பட்டது. கூட்டணியிலே இல்லாத போதுதான், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தி.மு. கழகம் மறந்து விடாமல் இந்தக் கடிதத்தை எழுதியது. பிரதமரும் அதற்கு உடனடியாகப் பதில் எழுதினார்.

அதன்பிறகு 18-6-2013 அன்று இலங்கை யின் தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமரை டெல்லியில் சந்தித்து, 13வது சட்டத் திருத்தம் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டுமென்று கேட்டபோது, “இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டுவிட மாட்டோம், பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்களிடம் பிரதமர் தெரிவித்த கருத்தும் ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

மேலும் இலங்கையிலே உள்ள இடதுசாரி அமைச்சர்கள், அதிபர் ராஜபக்சே 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளை எதிர்த்து, “13வது திருத்தத்தில் நிலம் மற்றும் போலீஸ் தொடர்பான அதிகாரங்களை நீக்காமல் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்தித் தமிழர்களின் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும், அதை விடுத்து 13வது திருத்தத்தில் கைவைத்து இந்தியாவை எதிர்த்தால் கச்சத் தீவு பறிபோய் விடும்” என்று பேசியிருக்கிறார்கள்.

13வது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இலங்கை ஆளுந்தரப்பின் இடதுசாரி அமைச்சர்களின் மாநாடு கொழும்பில் உள்ள இலங்கை சமசமாஜக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றிருக்கிறது. இதில் இலங்கை அமைச்சர்களான வாசுதேவநாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, ராஜிதசேனாரத்னா, ரெஜினால்ட்கூரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களில் அமைச்சர் திஸ்ஸவிதாரண கூறும்போது, “போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, தமிழ் மக்களின் மனங்களை வென்று, தேசிய நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான தகுந்த சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், கடந்த 26 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாகாண சபை முறையை இல்லாது ஒழிக்குமாறு சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர். 13வது திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்குப் போலீஸ், நிலம் அதிகாரங்களை வழங்கியிருந்தால் நாட்டில் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. 13வது திருத்தத்தினூடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுபான்மையினருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்களுடன் இணைந்து நாம் செயல்படுகின்றோம் என்பதை நாம் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று சொல்லி யிருக்கிறார்.

அமைச்சர் டியூ குணசேகர கூறும்போது, “13ஆவது திருத்தச்சட்டம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்பக் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல எனக் கூறுகின்றனர். 1978ஆம் ஆண்டு முதல் 18 அரசமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் 13வது திருத்தச் சட்டத்துக்கு மட்டும் ஏன் எனக் கேள்வி எழுப்புவது நல்லதல்ல. நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தமது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இனப்பிரச்சினை தொடர்பில் அவர்களால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசின் சார்பில் இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதியபோதும், அது எந்தவிதமான தாக்கத்தையோ அல்லது நிர்பந்தத்தையோ இலங்கை அரசுக்கு ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. 13வது சட்டத் திருத்தத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை செய்ய நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைத்தார்கள். அதில் தமிழ் தேசியக் கூட்டணி உட்பட பல கட்சிகள் இடம்பெற விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்களாம். தற்போது 13வது சட்டத் திருத்தத்தின் உட்பிரிவுகள் திருத்தம் குறித்த கருத்துரு இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள், முஸ்லிம்கள் என, எந்தச் சிறுபான்மையினருக்கும் மாகாண அளவில் முழு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக 13வது சட்டத் திருத்தத்தில் உட்பிரிவுகள் மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறுகின்ற செயலாகத்தான் இருக்கும். இந்தியாவும், இலங்கையும் இணைந்து ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் உட்பிரிவு களில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவின் ஒப்புதல் பெறாமல் இத்தகைய திருத்தம் செய்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி, 13வது சட்டத் திருத்தத்தில் இலங்கை தன்னிச்சையாக மாற்றங்கள் செய்தால், அது உலக அரங்கில் இந்தியாவுக்குத்தான் பெருத்த தலைகுனிவாகிவிடும்.

இதற்கிடையே 28-6-2013 தேதிய “தீக்கதிர்” நாளிதழில், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத் தேர்தலை அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே திடீரெனத் தள்ளிவைப்பதாக அறிவித்திருக்கிறார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 13 ஏ விதியில் திருத்தம் கொண்டு வர ராஜபக்சே முடிவுசெய்தார். ஆனால் இதற்கு எட்டு மாகாண கவுன்சிலின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்தச் சட்ட நுணுக்கங்களால் குடியரசுத் தலைவரின் முடிவு தடைப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளான தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் 13 ஏ திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

1987ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்யும் ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தற்போது இலங்கை அரசு 13 ஏ வில் திருத்தம் கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சினையிலே மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதல் கட்டமாக ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிடக் கடும் அழுத்தத்தைத் தர வேண்டுமென்றுதான் தி.மு. கழகம் இப்போதும் வலியுறுத்துகிறது. எனவே இலங்கைப் பிரச்சினை வேறு, மாநிலங்களவைத் தேர்தல் வேறு, கூட்டணி வேறு. ஆனால் அனைத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பம் விளைவித்திட சிலர் முயற்சிக்கிறார்கள். தி.மு.கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகியபோது, மத்திய அரசிலே கழகத்தின் சார்பில் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் விலகினார்கள். இப்போது மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு. கழக வேட்பாளருக்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த காரணத்தால், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே சேர்ந்து விடவில்லை. இதையெல்லாம் மறைத்துவிட்டு, தி.மு.கழகத்தின் மீது ஏதாவது பழி சுமத்த வேண்டுமென்ற எண்ணம் உடையவர்கள்தான், கழகத்தின்மீது சேற்றை வாரித் தூற்றிட முயலுகிறார்கள்.

ஆனால் “இந்து” போன்றதொரு நாளேடே; மாநிலங்களவை கழக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது பற்றி ஒரு தலையங்கமே எழுதியிருக்கிறது. “அடைந்தது ஒன்று; இழந்தது ஏராளம்” (For one more, a lot lost) என்ற தலைப்பில் அது எழுதப்பட்டுள்ளது. அதில் தி.மு. கழகமும், காங்கிரசும் ஏதோ சந்தர்ப்பவாதிகள் போலவும், அ.தி.மு.க.வின் தலைவி மிகவும் தந்திரமாகக் காயை நகர்த்தினார் என்பது போலவும் எழுதியிருப்பதன் மூலம் “இந்து” யார் என்பதையும், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தத் தலையங்கத்தில் எழுதியிருப்பதைப் போல, ஜெயலலிதா கடந்த தேர்தலில் அவர்களோடு ஒன்றாக இருந்த தோழமைக் கட்சிகளையெல்லாம் தொடர்ந்து ஒவ்வொன்றாகக் கழற்றிவிட்டது சந்தர்ப்பவாதமாக “இந்து”வுக்குத் தெரியவில்லையா? ஏன்; இறுதியாக அ.தி.மு.க. ஆதரித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் டெல்லியில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு கேட்டபோதே, அவர்களை அங்கேயே மதித்து ஆதரிப்பதாகக் கூறாமல், சென்னைக்கு வந்த பிறகு, எங்கே தே.மு.தி.க.வும், தி.மு.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து இரண்டு இடங்களிலே வெற்றி பெற்று, அ.தி.மு.க. நிறுத்திய ஐந்து வேட்பாளர்களில் ஒருவர் தோற்க நேர்ந்துவிடுமே என்பதைப் புரிந்துகொண்டு தனது வேட்பாளர்களில் ஒருவரைத் திரும்பப் பெற்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தாரே, அதற்குப் பெயர் என்ன? டெல்லியிலே இருந்தபோது பிடிக்காமல் இருந்த எந்தக் கம்யூனிசக் கொள்கை, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அம்மையாருக்குப் பிடித்துவிட்டது? ஜெயலலிதா செய்தால் அதற்குப் பெயர் ராஜதந்திரம்; அதையே தி.மு.க. செய்தால் 'இந்து'வுக்கு அது சந்தர்ப்பவாதமா? இப்படி இடையிலே உள்ள சிலர்; தேவையில்லாமல் வாலறுந்த பல்லியைப் போலத் துள்ளுவதேன்? துடிப்பதேன்?

அன்புள்ள, மு.க. 30-6-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗