தொகுதி 48 · கடிதம் 3762
உவகை ஊட்டும் ஒகேனக்கல் தொடக்கம்!
2013-05-27
உடன்பிறப்பே,
25-5-2013 தேதிய “தினமணி” நாளிதழில் “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் - மே 29இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட மற்றும் தரமான குடிநீர் வழங்குவதற்காக ஒகேனக்கல் குடிநீர் மற்றும் ஃப்ளோரைடு பாதிப்புக் குறைப்புத் திட்டத்தை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் கழக ஆட்சியிலேதான் நடைபெற்றன.
இத்திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 3 நகராட்சிப் பகுதிகள்; தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த
பொ.மல்லாபுரம், அரூர், கடத்தூர், கம்பை நல்லூர்,
காரிமங்கலம், மாரண்ட ஹள்ளி, பாலக்கோடு,
பாப்பிரெட்டியப்பட்டி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி; கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
பருகூர், காவேரிப்பட்டினம், நாகோஜன
ஹள்ளி, ஊத்தங்கரை, மத்தகிரி, கெலமங்கலம்,
தேன்கனிக்கோட்டை -ஆகிய 17 பேரூராட்சிப் பகுதிகள்; தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டியப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி;
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பருகூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், மத்தூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, கெலமங்கலம், தளி, சூளகிரி, ஓசூர்
-ஆகிய 18 ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள்; இவை அனைத்திலும் வாழும் 6 ஆயிரத்து 755
குடியிருப்புகளைச் சேர்ந்த ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள்
பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வசதியைப் பெற்றுப் பயனடையத் தக்க வகையில் இந்தத் திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தினால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க் கைத் தரம் மேம்படும். தற்போது கிடைக்கும் குடிநீரால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்தும் இம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விடுதலை பெற்று மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேதான் 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் 576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு - பின்னர் சுகாதார வசதிகளை உள்ளடக்கி இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு
- ஜப்பானிய நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியைப் பெறு
வதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1998ஆம்
ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்திற்கான களஆய்வுப் பணிகள் தொடங்கின. 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் காவிரி ஆற்றி லிருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் தடையில்லாச் சான்றை வழங்கியது. ஆனால், 1998ஆம் ஆண்டு மே மாதம் பொக்ரானில் நடைபெற்ற அணுசக்தி சோதனையின் காரணமாக, ஜப்பான் நாட்டு நிதி நிறுவனம் இந்திய நாட்டின் எந்தவொரு புதிய
திட்டத்திற்கும் நிதி உதவி வழங்குவதை நிறுத்திவிட்டது. - 2001
முதல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்
திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 2006, மே மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகுதான் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 11.8.2006 அன்று தி.மு.கழக ஆட்சியில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தினையொட்டி காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவையில் 27.1.2007 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றியபொழுது, “ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இந்த வாரம்தான் ஜப்பான் நாட்டு நிபுணர்கள் தர்மபுரி மாவட்டம் சென்று திட்ட ஆய்வை மேற்கொண் டுள்ளார்கள். மைய அரசு இந்தத் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதியுதவியைப் பெற மிகுந்த முன்னுரிமை அளித்து ஜப்பான் அரசுக்குத் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசுக்குத் தெரிவித்துள்ள இந்தச் செய்தி, ஜப்பான் நாட்டு நிதியுதவி கிடைக்க வாய்ப்புகளை அதிகமாக்கி இருக்கிறது. எனினும், ஜப்பான் நிதியுதவி ஏதேனும் ஒரு காரணத்தால் கிடைக்காவிட்டால் அரசு வேறு நிதி ஆதாரம் பெற்று இத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2007-2008ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 23.3.2007 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் அளித்த பொழுது, “தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரே தீர்வான ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவிக்காக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கியின் வல்லுநர் குழு, இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுகளை அண்மையில் இந்த மாவட்டங்களில் நடத்தியுள்ளது. இத்திட்டத்தை ஒரு அறைகூவலாக ஏற்று, இந்த அரசு செயல்படுத்தும்” - என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, கழக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் குழுவுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் செயல் இயக்குநர் திரு. டிசியோகுசி அவர்களை 6.2.2008 அன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்விளைவாக, 9 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகரில் நிறைவேற்றப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய 1330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் நிதியுதவி அளிப்பதாக ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி ஒப்புதல் தெரிவித்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான் 26.2.2008 அன்று தருமபுரியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் இத்திட்டத்திற்கான அடிக்கல் என்னால்தான் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப் பட்டது மட்டுமல்லாமல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை முறைப்படி செயல்படுத்து வதற்கான கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
1334 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட நிர்வாக ஒப்புதல் வழங்கி 25.2.2008 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான் ஆணைகள் வெளி யிடப்பட்டன. பின்னர், இத்திட்டத்திற்கான செலவு அதிகரிக்கும் என்பதால் 28.1.2010 அன்று வழங்கப்பட்ட திருத்திய நிர்வாக ஒப்புதல் ஆணையின்படி இத்திட்டத்தின் மதிப்பீடு 1928 கோடியே 80 இலட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
3.10.2008 அன்று திட்ட மேலாண்மை குறித்த கலந்தாலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மொத்தம் 5 கட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதல் கட்டப் பணிகளுக்கு 10 நிறுவனங்களிடமிருந்து தகுதிகாண விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது கட்டப் பணிகளுக்கு பல நிறுவனங்களிடமிருந்து தகுதி காண் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை மதிப்பிடப்பட்டன. அதேநேரத்தில் ஒப்பந் தப்புள்ளிப் படிவங்களும் தயாரிக்கப்பட்டன. ஜப்பானிய நிதி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள கால அட்டவணைப்படி, 2009 ஜூலை மாதத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 2009 டிசம்பர் மாதத்தில் களப்பணிகள் தொடங்கப்பட்டு, 2012 டிசம்பர் மாதத்தில் திட்டம் முழுமையடைந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அந்த கால அட்டவணைப்படி எந்தவிதத் தொய்வும் தி.மு. கழக ஆட்சியில் இன்றி பணிகள் நடைபெற்று வந்தன.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் குறித்து கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலத்திற்குள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டு மென்பதற்காக மிகுந்த அக்கறையோடு இந்தப் பணிகளை நிறைவேற்றி வந்ததை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாழும் மக்களே நேரில் அறிவார்கள்.
தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்திய அ.தி.மு.க. ஆட்சியினர் நல்லவேளையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத் திற்கு எந்தவிதமான இடைஞ்சலையும் செய்யாமல், தாமதமாகவாவது இந்தக் குடிநீர்த் திட்டத்தினை நிறைவேற்ற முன்வந்துள்ளார்கள் . ஆனால் பணிகள் இன்னும் முழு அளவிற்கு நிறைவேற்றப்படாமலே, அவசர அவசரமாக முதல் அமைச்சரைக் கொண்டு இதனைத் தொடங்கி வைக்கும் முயற்சியிலே ஈடு பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்திட்டம் தி.மு. கழக ஆட்சியிலே விரைவுபடுத்தப்பட்டது என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு மறைக்க முயற்சித்தாலும், “தீக்கதிர்” நாளேடு இன்று வெளியிட்ட செய்திக் கட்டுரையில் கழக ஆட்சியில் இத்திட்டத்திற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக “தி.மு. கழக ஆட்சியில் 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 1,200 கோடி செலவு செய்து 90 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன” என்று எழுதியுள்ளது.
தற்போது அரசு சார்பில் வரும் 29ஆம் தேதியன்று முதலமைச்சர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார் என்ற செய்தி கூட, திட்டம் இன்னமும் முழுமை அடையாத நிலையில், ஓரளவுக்கு பணிகள் முடிந்திருக்கும் நிலையில்தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கவிருக்கிறார் என்றும், பின்னர் படிப்படியாக இந்தத் திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் செய்து முடிக்கப்படும் என்று தெரிகிறது. எப்படியோ, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெரு முயற்சி எடுத்துத் தொடங்கப்பட்ட திட்டம் ஒன்று முடிவுற்று, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான நல்ல குடிநீர் கிடைக் கப் போகிறது என்பதில், அந்தத் திட்டத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டவன் என்ற முறையில் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள, மு.க. 27-05-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗