தொகுதி 48 · கடிதம் 3761
நிலக்கரி நிறுவனப் பங்குகளை மீண்டும் விற்க முயற்சியா?
2013-05-26
உடன்பிறப்பே,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-5-2013 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத்தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்வதாகவும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.
தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதும் 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. மறுநாள் 23ஆம் தேதி காலையிலேயே தி.மு.க. தொழிற்சங்கம் (தொ.மு.ச.) சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அதிகாரிகள் சங்கம் ஆகிய சங்கத்தினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. 4-7- 2006 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
25-6-2006 அன்று இந்தப் பிரச்சினை குறித்துப் பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில், “நெய்வேலியில் பத்து சதவிகிதப் பங்கினை விட்டுத் தருவது பற்றி, தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்க்கருத்துக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தி விடக்கூடாது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் திட்டத்தில் இருந்து விலகிச் செல்வதற்கு; எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டிலிருந்து தளர்வதாகவே கருதப்படும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்திட வேண்டு கிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் திட்டத்தில், “இலாபகரமாக இயங்கும், அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது; நவரத்தினங்களாக விளங்கும் அரசு நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும்” என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.
எனது இந்தக் கடிதத்திற்கு உடனடியாகப் பதில் வராத நிலையில் 4ஆம் தேதி முதல் நெய்வேலியில் வேலைநிறுத்தம் தொடங்கியது. 6-7-2006 அன்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, “நெய்வேலி பிரச்சினையில் தொழிலாளர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, மத்திய அரசினால் எடுக்கப்பட்டுள்ள அந்த முடிவுக்குத் தி.மு.க. அந்த அரசிலே இடம்பெற்று, இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இதை டெல்லியிலே உள்ள கழக அமைச்சர்கள் பிரதமரிடத்திலே அறிவித்திடுமாறு கூறியிருக்கிறேன்” என்று சொன்னேன். அவ்வாறே மத்திய அமைச்சராக இருந்த தம்பி தயாநிதிமாறனும் உடனடியாக பிரதமரைச் சந்தித்து எனது கருத்தைத் தெரிவித்தார். அதன் பின்னர் அன்று இரவே நெய்வேலி நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை விற்கும் முடிவை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தையும் திரும்பப்பெற்றனர்.
அதன் பின்னர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் பிரச்சினை குறித்து 8-5-2012 தேதிய “முரசொலி”யில், உடன்பிறப்பு மடலில் நான் எழுதும்போது, “மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இந்தப் பிரச்சினையிலே அக்கறையின்றி இருந்தாலும், மத்திய அரசும், இந்தத் துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு போராடுகின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை; அழைத்துப் பேசிச் சுமூக முடிவுகாண முன்வர வேண்டுமென்றும், அதற்குப் பிரதமர் அவர்கள் ஆவன செய்திட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டேன்.
பேரவை நடைபெற்றபோது, 3-5-2012 அன்று கேள்வி நேரம் முடிந்ததும், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், “நெய்வேலி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை, எனவே மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
உடனே தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், திரு. சி.த. செல்லப்பாண்டியன் எழுந்து, “என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டப் பிரச்சினை தமிழக அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல, எனவே அதில் தலையிட முடியாது” என்று பதிலளித்தார். (தினமணி 4-5-2012) இதிலே தலையிட முடியாது என்று பேரவையில் பதிலளித்த இதே அமைச்சர், 8-5-2012 அன்று மீண்டும் பேரவையில், “என். எல்.சி., தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையம் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தவில்லை. என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்” என்றார். (தினமணி 9-5- 2012)
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினை என்பது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தொடர்கின்ற ஒன்றாகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு நீடித்த ஒப்பந்தப் பிரச்சினை 1994ஆம் ஆண்டில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் முயற்சியின் காரணமாக ஓரளவு தூரத்து வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொழில் கூட்டுறவு சேவை சங்கம் தொடங்கப்பட்டு (Neyveli Lignite Corporation Industrial Co- operative Service Society) அதில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்து, அதன் மூலம் இடைத் தரகர்களை (Contractors) நீக்கி, அவர்களுக்குக் கூட்டுறவு சங்கமே ஊதியம் வழங்கி வந்தது. பின்னர் நிர்வாகத்தில் பணி காலியாகும் பொழுதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி வருகிறார்கள்.
1994க்குப் பின், தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தவர்களைக் கூட்டுறவு சங்கத்திலே உறுப்பினர்களாக்க நிர்வாகம் தவறி விட்டதால், மீண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர ஆரம்பித்தது. இதனால் 2008ஆம் ஆண்டில் தி.மு. கழக ஆட்சியின் போது போராட்டம் நடைபெற்றது. அப்போதும் 13 ஆயிரம் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஆட்சியிலே இருந்த தி.மு. கழகம் மாநில அரசுக்கு இதிலே அக்கறை இல்லை என்று சொல்லாமல், முதலமைச்சராக இருந்த நானே இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு; அதன் விளைவாக, 16-6-2008 அன்று தொழிற்சங்கமும், நிர்வாகமும், டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பாகக் கலந்து பேசி ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு; அதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5000 பேர்களைக் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்வது; ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெற்றுவந்த ஊதியத்தைவிட, மாதம் ரூ. 750/- உயர்வு தருவது என்று இசைவு தந்து ஒப்பந்தம் ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
அதன் பின்னர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் நிர்வாகம் கால தாமதம் செய்ததால், 2010ஆம் ஆண்டு மீண்டும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். அப்பொழுதும் தமிழக முதலமைச்சராக இருந்த நான், 15-10-2010 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதன் பின்னர் நிர்வாகத்தை அழைத்துப் பேசி, மாதம் 1,040 ரூபாய் ஊதிய உயர்வு என ஏற்றுக்கொள்ளச் செய்தேன். இதனைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர்கள் மட்டும் ஏற்றுக்கொண்டார்கள். மற்றத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனே நான் அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும், 26-10-2010 அன்று தலைமைச் செயலகத்திற்கே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, நிர்வாகத்தையும் சம்மதிக்க வைத்து, உயர்வு ரூ. 1,040 என்பதை ரூ. 1,560 என்ற அளவிற்கு உயர்த்தியும், மேலும் பல சலுகைகளையும் வழங்கச் செய்தேன். நான் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திருப்தியடைந்து பணிக்குத் திரும்பினார்கள். எனக்கு நன்றி தெரிவித்தார்கள். இது 2010ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடைபெற்றது.
ஆனால் 2012ஆம் ஆண்டில் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கூட்டுறவு சேவை சங்கத்தில் பதிவு செய்வதை நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கால தாமதம் செய்து வந்தது. அதன் காரணமாகத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நெய்வேலியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத் தலைமை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடந்தபோதிலும், உடன்பாடு ஏற்படவில்லை. தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க என்.எல்.சி. நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அப்போது கூறப்பட்டது.
தி.மு. கழக ஆட்சியில் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியபோது எத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என்பதை மேலே எழுதினேன். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழக அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகமே எழுந்தது. இந்த நிலையில், “மத்தியில் ஒரு அரசு இருப்பதாகவே தெரியவில்லை” என்று அ.தி.மு.க.வினர் குறை சொன்னார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ பேச்சுவார்த்தை நாள் கணக்கில் நடந்ததே தவிர, முதல் அமைச்சரோ, அமைச்சரோ இதிலே தலையிடவில்லை! இறுதியாக அந்தப் போராட்டம் 5-6-2012 அன்று முடிவுற்றது.
இதற்கிடையே 24-5-2013 அன்று மத்திய அமைச்சர், நண்பர் நாராயணசாமி அவர்கள் என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்பதைப் போலக் கருத்து தெரிவித்திருக்கிறார். புதுவை உட்பட தமிழகத்திற்கும், குறிப்பாகத் தொழிலாளர்களுக்கும் விரோதமான இந்தக் கருத்து, தி.மு.கழகத்திற்கு ஏற்புடைய கருத்து அல்ல. தம்பி முரசொலி மாறன் மத்திய அரசின் தொழில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக “நவரத்னா” தகுதி பெற்ற என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு மீண்டும் ஈடுபடக்கூடாது, அது தேவையற்றுத் தமிழர்களைக் குறிப்பாக நெய்வேலி தொழிலாளர்களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல், அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு மேலும் ஒரு எதிர்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டாமென்று எச்சரிக்க விரும்புகிறேன்.
அன்புள்ள, மு.க. 26-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗