தொகுதி 48 · கடிதம் 3760
எச்சரிக்கையல்ல; எண்ணிப் பார்ப்பதற்காக!
2013-05-22
உடன்பிறப்பே,
13-5-2013 அன்று பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய நீண்ட சொற்பொழிவை முடிக்கும்போது, “அரசியல் கட்சி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் பாடுபடக் கூடியதாகவும், பொதுமக்களின் நலனை முன்வைத்துச் செயல்படக் கூடியதாகவும், மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமெனில், அதனை ஜனநாயக ரீதியாக, அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். எதிர்ப்பை வன்முறை மூலம் தெரிவிப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் கட்சியினரைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், அவர்களைச் சமுதாயத்தின் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, சட்ட விரோதச் செயல்கள் எதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது கட்சித் தலைவர்களின் பொறுப்பும், கடமையும் ஆகும். ....... பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து பா.ம.க.வைத் தடை செய்யப்போவதாக முதலமைச்சர் பேரவையில் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டபோது, 16-5-2013 அன்று நான் அளித்த பதிலில், “அவர்கள் குறிப்பிட்டது பா.ம.க. என்று நாம் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? பொதுவாக வன்முறைக் கட்சிகளைத் தடை செய்யப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். தர்மபுரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பெண்களைக் கொளுத்தி, பேருந்துகளை அடித்து நொறுக்கி - கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை, பேருந்திலே வைத்து உயிரோடு கொளுத்தி, அந்தச் சாம்பலை அவர்களுடைய பெற்றோர்களுக்கு அனுப்பினார்களே, அந்த வன்முறைக்கு இவர்கள் என்ன விளக்கம் அளித்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், “வன்முறை” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, எந்தக் கட்சிகளையும் அடக்கி விடலாம் என்று கருதுவது கனவாகவே முடியும்” என்று கூறியிருந்தேன்.
வேளாண் கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்பு என்பதால், அதுபற்றிய விளக்கத்தைச் சற்று விரிவாக நினைவுபடுத்துவது அவசியமென்று கருதுகிறேன். கொடைக்கானலில் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏழு மாடிகள் கொண்ட “பிளசண்ட் ஸ்டே” ஓட்டலுக்குச் சட்ட விரோதமாக அனுமதி அளித்தது தொடர்பாகக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் இன்றைய முதலமைச்சர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு நடைபெற்று 2-2- 2000 அன்று வழக்கை விசாரித்த இரண்டாவது தனி நீதிபதி திரு. இராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கும் வகையில் 3-3-2000வரை தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்தியும் வைத்தார். ஆனால் அன்று நடைபெற்றது என்ன?
இந்தத் தீர்ப்பு கூறப்பட்டவுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாகக் கூடியிருந்த அ.தி.மு.க.வினர் அங்கேயே வன்முறையில் இறங்கினர். அந்த வழியாக வந்த பேருந்துகளை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த கடைகள் மீது கல்வீசித் தாக்கியதோடு கடைகளைச் சூறையாடினர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பீதிக்கு ஆளானார்கள். அங்கு மட்டுமின்றித் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் வன்முறையில் இறங்கினர். ஆங்காங்கே பேருந்துகளைத் தீவைத்துக் கொளுத்துவது, கடைகளைச் சூறையாடுவது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இரண்டு பேருந்துகளில் கிருஷ்ணகிரி அருகே உள்ள பையூர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்துவிட்டுக் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்துகளைத்தான் அ.தி.மு.க.வினர் வழிமறித்துத் தாக்க முற்பட்டனர். தங்களை விட்டுவிடுமாறு மாணவிகள் கெஞ்சியும் கேளாமல், பெட்ரோல் குண்டுகளை அந்தப் பேருந்துகளின் மீது வீசி மாணவிகளை உள்ளேயே வைத்துக் கொளுத்திய காரணத்தால் மூன்று மாணவிகள், நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி, விருதாசலத்தைச் சேர்ந்த காயத்ரி, சென்னையைச் சேர்ந்த ஹேமலதா ஆகியோர் உயிரோடு எரிந்து சாம்பலானார்கள். மேலும் 17 மாணவிகள் தீக்காயமடைந்தனர். இந்தச் செய்தியினைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள் எல்லாம் கொதித்தெழுந்தனர்.
ஆனால் அப்போது ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் “தீவிரவாதிகள் தலைதூக்கி நிற்கும் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் கொடுமைகளை இழைத்துவிட்டு அ.தி.மு.க.வினர் மீது பழிபோட முயற்சி நடைபெறுகிறது. தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள், விஷமிகள், குண்டர்கள் துணையோடு இந்த அராஜகச் செயல்களை இழைத்துவிட்டு அ.தி.மு.க.வினர் மீது பழி போடுகிறார்கள்” என்று கூறினார். நடைபெற்ற சம்பவத்திற்காக தி.மு.கழக ஆட்சியை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டுமென்றும் ஜெயலலிதா அப்போது கூறினார். அந்த மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திச் சாம்பலாக்கியது பற்றிய வழக்கு முறைப்படி நடைபெற்ற போதிலும், 2001ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த வழக்கில் சுணக்கம் ஏற்பட்டது.
5-11-2001இல் வழக்கு விசாரணை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 22 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி என்பதால், 20 சாட்சிகள் தடம் புரண்டனர். இதனை எதிர்த்து இறந்துபோன கோகிலவாணியின் தந்தை வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 20-9-2003 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் அளித்த தீர்ப்பில் முக்கிய பகுதி வருமாறு :-
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆளுங்கட்சியைச்
சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள்ளனர். போலீஸ் மீதான நம்பிக்கை, நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்துள்ளனர். இந்த இமாலயத் தவறுக்காக உள்துறைச் செயலாளர் மற்றும் சி.பி., சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. ஆகியோரை இந்த நீதிமன்றம் கண்டிக்கின்றது. அரசு தரப்பு சாட்சியங்களைக் கலைப்பதற்கு அனுமதி அளித்த குற்றத்துக்காக சி.பி., சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி. மீது, அதன் ஐ.ஜி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் வலிமையையும், கம்பீரத்தையும் நிலைநாட்டவும், இவ்வழக்கில் நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெறவும், இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து சேலம் மாவட்டக் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது.
தவறான சாட்சியம் அளித்தது, பொய்யான அறிக்கையில் கையெழுத்திட்டது, வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அழிக்கக் காரணமாக இருந்தது, குற்றவாளிகள் சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கக் காரணமாக இருந்தது போன்ற குற்றங்களுக்காக விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு அலுவலர்கள் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டது, கீழ்த்தரமானது, வெட்கப்படக்கூடியது.”
உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் அவர்கள் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவைகளா? ஆனால் அதற்குப் பிறகும் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் துவங்கவே இல்லை.
3-12-2004 அன்று சேலம் நீதிபதி காவல் துறை அதிகாரியிடம் பேருந்து எரிப்பு வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 14 மாதங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வாய்தாவின் போதும் விசாரணை அதிகாரிகள் யாரும் ஆஜராவதில்லை. வழக்கு காலதாமதம் ஆகிறது. அரசு வழக்கறிஞர் நியமன உத்தரவைப் பெறுவதில் உங்களுக்கு என்ன சிரமம் என்று கேட்டார். நீதிபதியின் கேள்விக்குக் காவல் துறை அதிகாரி பதில் அளிக்கையில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என மேல் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதிவிட்டேன். அவரும் அரசுக்குப் பலமுறை கடிதம் எழுதியுள்ளார் என்று கூறினார். எனவே கோகிலவாணியின் தந்தை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அரசு முறையான உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், வழக்கு விசாரணையும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி விரைவாக நடக்கவில்லை என்றும் தனது மனுவிலே குறிப்பிட்டிருந்தார். இந்த மனு குறித்த வழக்கு 17-2- 2005 அன்று வந்தபோது, அரசு வழக்கறிஞர் துரைசாமி தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், கோர்ட்டு ஊழியர்கள் அவற்றைத் தேடி வருகிறார்கள் என்றும், காணாமல் போன ஆவணங்களைப் புதுப்பிக்கக் காலம் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதன்மீது நீதிபதி கனகராஜ், “3 மாணவிகள் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறது. 3 நாட்களுக்குள் கோப்புகளைக் கண்டுபிடித்து வழக்கு விசாரணையைத் துரிதமாக நடத்த வேண்டும். தவறினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவேன்” என்று அரசின் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு இந்த வழக்கு 18-2-2005 அன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கனகராஜ் தெரிவித்த கண்டனம் வருமாறு “மாணவிகளை எரித்த வழக்கைச் சேலம் கோர்ட்டு விரைவாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம். ஆனால் அதைச் செய்யவில்லை. கடந்த 15 மாதங்களாக வழக்கு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையை நடத்தாமல் ஏன் இருந்தீர்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதில் அரசு வக்கீல் மீது அதிகமாகக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்ட நாள் முதல் இதுவரை இந்த வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு இதுவரை தமிழகத்தில் எந்தெந்த உள்துறை செயலாளர்கள் பொறுப்பில் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் இந்த வழக்கின் தாமதத்திற்குக் காரணம் என்ன என்று விளக்கம் அளித்து அடுத்த வாரம் 27ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் காரணம் என்ன என்றும் பதிலளிக்க வேண்டும்.”
இந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழக மக்களும் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, இந்த ஆட்சியினர் தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகளின்மீது தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். காவல் துறையினர் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் நடத்தவிருந்த கூட்டத்திற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றும், அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைய மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன. கரூர் மாவட்டத்தில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் 15ஆம் தேதியன்று திருமணவிழா, பொதுக் கூட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டபோது, அதற்காக விளம்பரத்தட்டிகளை வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியிலே இருக்கும்போது, கடந்த காலத்தில் தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னென்ன செய்தோம் என்பதையே மறந்துவிட்டுச் செயல்படுவது நல்லதல்ல! ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல! அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம்! இது எச்சரிக்கையல்ல; எண்ணிப் பார்ப்பதற்காக!
அன்புள்ள, மு.க. 22-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗