தொகுதி 48 · கடிதம் 3759
மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?
2013-05-21
உடன்பிறப்பே,
இன்றைய “இந்து” நாளிதழில் “Expressway : Contractor demands Rs. 103.95 Crores” என்ற தலைப்பில் புகைப்படத்துடன் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :-
“Soma Constructions Ltd., the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project, has sought Rs. 103.95 crore from the National Highways Authority of India. The latest claim from the company, for the four-month period from January 1, 2013 is towards idling and loss of turnover profit. The Rs. 1815 crore project that will allow residents of Poonamallee and Vanagaram to commute to the City quicker, has been on hold for over 13 months after the Water Resources Department issued stop notice in March 2012 citing a deviation from the original alignment. The issue is in Court. Around Rs. 500 crore has already been spent on the project and 20 percent of the work completed. In February, it had sought Rs. 668.8 crore as compensation for the delay in executing the project. In a recent letter to the NHAI, Soma has also sought an interest of Rs. 14 crore for March and April for non-payment of compensation within 30 days”
(மதுரவாயல் - சென்னை துறைமுக உயர்நிலை பறக்கும் சாலைத் திட்டத்தை எடுத்து செயல்படுத்திவரும் “சோமா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்” என்ற நிறுவனம், இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து 103.95 கோடி ரூபாய் தரவேண்டுமென்று கேட்டிருக்கிறது. 2013 ஜனவரி 1ஆம் தேதி முதல் நான்கு மாதங்களாக வேலை எதுவும் நடைபெறாமல் இருந்ததற்காகவும், இலாபத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்புக்காகவும் இந்தத் தொகையை அந்த நிறுவனம் கோரியிருக்கிறது. அடிப்படையான திட்ட வரைவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகக் காரணத்தைச் சொல்லித் தமிழக அரசின் நீராதாரத் துறை 2012 மார்ச் மாதத்தில் “நோட்டீஸ்” கொடுத்ததன் விளைவாகக் கடந்த 13 மாதங்களாக வேலை எதுவும் நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 1815 கோடி ரூபாயாகும். திட்டம் நிறைவேற்றப்பட்டால் பூவிருந்தவல்லி, வானகரம் பகுதியிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வருவோர் மிக விரைவில் வந்து சேர முடியும். மாநில அரசு கொடுத்த நோட்டீஸ் சம்மந்தமான பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக 668.8 கோடி ரூபாயை “சோமா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம்” பெப்ரவரி மாதத்திலேயே கேட்டிருந்தது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அந்த நிறுவனம் அண்மையில் அனுப்பிய கடிதத்தில் 14 கோடி ரூபாய் வட்டியாகத் தர வேண்டுமென்றும் கேட்டிருக்கிறது. முப்பது நாட்களுக்குள் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தாததால் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான வட்டித் தொகையாகும் இது.)
இவ்வாறு 20-5-2013 தேதிய “இந்து” நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. 2006 தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
“சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப்
பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் “பறக்கும்சாலைத்
திட்டத்தை (Elevated Highway) செயல்படுத்துவோம்”
என்று வெளியிட்டிருந்ததை அடுத்து, தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்திற்கு உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
தம்பி டி.ஆர். பாலு போன்றவர்கள் தொடர்ந்து முயற்சியெடுத்து, சென்னைத் துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் மேம்பாலச் சாலைத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இது, இந்தியாவிலே மிக நீளமான உயர்மட்ட சாலையாக அமையும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்திலிருந்து தங்கு தடையற்ற சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காகக் கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாகப் பறக்கும் விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குத் தமிழக அரசு 22-6-2007 அன்று கொள்கை அளவில் அனுமதி வழங்கியது. இந்த மேம்பாலச்சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் நில எடுப்புக்கான செலவுத் தொகையையும் மற்றும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், மறு குடிஅமர்வுக்கு வகை செய்தல் ஆகியவற்றுக்காக ஏற்படும் செலவினத்தையும் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகமும், தமிழ்நாடு அரசும் 50க்கு 50 என்கிற விகிதாச்சார அடிப்படையில் ஏற்பதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு 130 கோடி ரூபாய் செலவாகும். இதைத் தவிர, இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைப்பதையொட்டி இப்பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் அனுமதி பெறுதல், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றை இடமாற்றம் செய்தல் போன்ற பணிகளுக்காக இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட இதுபோன்ற மிகப் பெரிய திட்டங்கள் என்றால், இன்றைய தமிழக முதல் அமைச்சருக்கு எப்படித்தான் இருக்குமோ, அவற்றுக்கு மூடு விழா நடத்துவதற்கு என்ன வழி என்றுதானே பார்ப்பார்! சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு உதாரணம் போதாதா? தமிழகத்தின் 150 ஆண்டுக்காலக் கனவான அந்தத் திட்டத்தைக் கழக ஆட்சியில் அரும்பாடுபட்டு மத்திய அரசில் வாதாடி, போராடி ஒப்புதலும் பெற்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமரும், சோனியா காந்தியும், நானும் மற்றும் தமிழகத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டு மதுரை மாநகரிலே மிகச் சிறப்பாக நடைபெற்று - அதன் பிறகு 800 கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்ட பிறகு, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்தத் திட்டத்தைப் பல மாதங்களாக முடக்கி போட்டிருக்கின்ற அ.தி.மு.க. அரசின் செயல்பாடு தமிழகம் அறியாததா என்ன? இவ்வளவுக்கும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். ஏன் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோரிய திட்டம் அது. அந்தத் திட்டமே கூடாது என்று இப்போது அவர்களே உச்ச நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றால், எப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகிறது என்பதற்கு வேறு சான்றுகளா வேண்டும்? இந்தச் சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் திட்டத்திற்கான பணிகள் பற்றி “இந்து”, “டைம்ஸ் ஆப் இந்தியா”, “தினத்தந்தி” நாளேடுகள் ஏற்கனவே விரிவாகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் வந்துள்ள தகவல்படி, கடந்த ஒராண்டாக மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகூடத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தைத் தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால்தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடாக 668 கோடி ரூபாய் வழங்கவேண்டுமென்று ஏற்கனவே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியிருந்ததோடு, தற்போது மேலும் 103.95 கோடி ரூபாய் இந்த நான்கு மாத கால தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென்று கோரியிருப்பதாக “இந்து” நாளிதழ் எழுதியிருக்கின்றது. இந்தக் காலதாமதம் மேலும் நீடிக்குமேயானால் இந்த இழப்பீட்டுத் தொகை மேலும் உயர்ந்துகொண்டே போகும் அபாயமும் உள்ளது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் அணுகுமுறையால் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற மிகப் பெரும் கட்டமைப்புக்கான திட்டங்கள் மற்ற மாநிலங்களில் எவ்விதத் தடையுமின்றி மாநில அரசுகளின் மனப்பூர்வமான ஒத்துழைப்போடும், உதவியோடும் வேகமாக நிறைவேறி வருகின்ற நிலையில் தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசின் எதிர்மறை அணுகுமுறையின் காரணமாகத் திட்டம் தாமதமாகி வருவதோடு, இழப்பீட்டுத் தொகையை ஒப்பந்தக்காரர்கள் கேட்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சருக்குக் கடந்த ஒரு வார காலமாகத்தான்
110வது விதியின்கீழ் அறிக்கை படிப்பதிலிருந்து சற்று ஓய்வு கிடைத்துள்ளது. எனவே இனியாவது காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, கழக ஆட்சியிலே தீட்டப்பட்ட திட்டங்கள் என்பதற்காகக் கிடப்பிலே போட ஏற்பாடுகளைச் செய்து அதனால் கெட்டப் பெயரைச் சம்பாதிப்பதை விட்டுவிட்டு, கிடப்பிலே போடப்பட்டுள்ள இந்தத் திட்டங்களையெல்லாம் உடனடியாகத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
அன்புள்ள,
மு.க. 21-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗