உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3758

இட ஒதுக்கீட்டுக் கொள்கை முழுமை பெற...

2013-05-19

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, கழகமும் இடம்பெற்றிருந்த தேசிய முன்னணி அரசின் பிரதமர் - சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்கள் காலத்திலிருந்தே, மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (Other Backward Classes) 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கி வருகிறது. இவர்களில் முன்னேறியவர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மிகாமல் வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த உச்ச வரம்பை நகர்ப்புறங்களில் ரூ. 12 இலட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூபாய் 9 இலட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த அளவிற்குச் சாத்தியம் இல்லை என்றும், ஒரே மாதிரியாக 6 இலட்சம் ரூபாயாக உயர்த்தலாம் என்றும் மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. இந்த நிலையிலேதான் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை நான்கரை இலட்சம் ரூபாயிலிருந்து ஆறு இலட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனச் செய்தி வெளிவந்துள்ளது.

18-4-2008 அன்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, “சமூக நீதிப் பயணத்தில் நாம்” என்ற பொருள் பற்றி விவாதிப்பதற்காக நடைபெற்ற தி.மு. கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில், நீண்ட நேரம் விவாதித்து, நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் வருமாறு :-

“டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலும், திருமதி சோனியா காந்தி அவர்கள் வழிகாட்டுதலிலும், மத்தியிலே அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை நிறைவேற்றிடும்வண்ணம், இந்திய அரசியல் சட்டத்தில் 93வது திருத்தத்தைச் செய்து, அதனடிப்படையில் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை நிறைவேற்றியதையும்; அந்தச் சட்டத்தின் செல்லத்தக்க தன்மையினை (validity), இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் ஏற்றுக்கொண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும்; கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு மனமார வரவேற்று, பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் - 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கிவிட வேண்டுமென்று (exclusion of creamy layer) தெரிவித்திருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்குள் பொருளாதார அளவுகோலைத் திணிப்பதையோ, பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதையோ ஏற்றுக் கொண்டதில்லை.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழகத்தில் நடத்திய பெரும் கிளர்ச்சியின் காரணமாகவும் - பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கொடுத்த அழுத்தத்தினாலும் (pressure) - பண்டித ஜவஹாலால் நேரு அவர்கள் முன்வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951ஆம் ஆண்டு நிறைவேற்றிய முதலாவது திருத்தத்தின் மூலம், இணைக்கப்பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில் “சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் (socially and educationally)” என்ற சொற்றொடர்தான் இணைக்கப்பட்டது. அப்போது சிலர் “பொருளாதார ரீதியாக (economically)” என்ற சொற்றொடரும் இடம்பெற வேண்டுமென்று வலியுறுத்தியும், அதனைப் பண்டித நேரு அவர்களோ, அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. “சமூகரீதியாக” என்பது பரந்துபட்ட பல பொருள்களை உள்ளடக்கிய விரிவானதொரு சொல்லாகும். ('socially' is a much wider word including many things)” என்று பண்டித நேரு பதில் விளக்கமளித்தார். அன்றிலிருந்து இன்றுவரை “சமூ கரீதியாகவும், கல்வி நிலையிலும்” என்ற சொற்றொடர் இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தப்படாமல், நிரந்தரமாகிவிட்ட நிலையில்; “பொருளாதார ரீதியாக” என்ற இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெறாத சொற்றொடரைப் பயன்படுத்தி “பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கிவிட வேண்டும்” என்று சொல்வது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டு களாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு - அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இட ஒதுக்கீடு என்பதாகும்.

ஒரு குடும்பத்தினுடைய ஆண்டு வருவாய் என்பது ஆண்டுக்காண்டு பல்வேறு காரணிகளால் வேறுபடுவது கண்கூடு. எனவே, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வருமான வரம்புக்கு மிகுந்த வருமானத்தின் காரணமாக இடஒதுக்கீட்டுக்குத் தகுதியில்லை என்று சான்றளிக்கப்பட்ட ஒருவர், வேறு ஒரு ஆண்டில் வருமான வரம்பிற்கு உட்பட்ட வருமானத்தின் காரணமாகச் சான்றிதழ் பெறுவதற்கு வாய்ப்புண்டு. அதைப்போலவே, ஒரே குடும்பத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதி பெற்றவராகவும், மற்றொருவர் மற்றொரு ஆண்டில் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதியில்லாதவராகவும் ஆகிவிடுவதற்கும் வாய்ப்புண்டு. இது ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளுள் வேறுபாட்டையும், சில நேரங்களில் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்குவதற்கு வழி வகுத்தது போல் ஆகிவிடும். பிற்படுத்தப்பட்டோரைப் பேதப்படுத்தினால் முழு இடஒதுக்கீட்டு அளவும் அவர்களுக்குக் கிட்டாமல் போய்விடக் கூடும்.

எனவே, பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு ஏதுவாக அனைத்து முயற்சிகளையும் பண்டித நேருவும், அண்ணல் அம்பேத்கரும் எடுத்துரைத்த கருத்துக்கு முரண் இல்லாமல், சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டுமென்றும்; இதற்கிடையே -

அரிய வாய்ப்பாக மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் நீண்டகாலத்திற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாகவும், உடனடியாகவும் வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்திட வேண்டுமென்றும்; மத்திய அரசை கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

இந்த முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அப்போதே அனுப்பிவைத்தோம்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலேயே “Government can make a relaxation to some extent so that sufficient number of candidates may be available for the purpose of filling up the 27 per cent reservation. It is for the Union Government and the State Governments to issue appropriate guidelines to identify the ‘creamy layer’ so that SEBC are properly determined in accordance with the guidelines given by this Court. If, even by applying this principle, still the candidates are not available, the State can issue appropriate guidelines to effectuate the implementation of the reservation purposefully. - அதாவது;

27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நிரப்பிடும் படியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைத்திடத் தக்கவகையில், “கிரீமிலேயருக்கான” அளவுகோல்களை ஓரளவுக்கு அரசு தளர்த்திக் கொள்ளலாம். இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒட்டி - சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டோரை முறையாகத் தீர்மானித்திட - மத்திய அரசும், மாநில அரசுகளும் - “கிரீமிலேயரை” அடையாளப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதைப்பற்றி முடிவு செய்துகொள்ளலாம். அதற்குப்பிறகும் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால், இடஒதுக்கீட்டினை - அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் - செயல்படுத்திடத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதால்; பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குப் போக, எஞ்சியுள்ள இடங்களைப் பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே உள்ளோர் பெற்றிடத்தக்க வகையில் கிரீமிலேயருக்கான அளவுகோல்களைத் திருத்திக்கொள்ள தீர்ப்பிலேயே இடம் உள்ளது என்பதையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

வருமான வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 4.5 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியபோது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேதான் உயர்த்தப்பட்டது. வருமான வரம்பை உயர்த்தியதன் மூலமாக அதிக எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடம்பெற முடியுமென்ற காரணத்தால், அப்போதே அதனை நான் வரவேற்றுப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அதன்பிறகும் அந்த 4.5 லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பினையும், 9 இலட்சம் ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு கடிதமும் எழுதினேன்.

தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வருமான வரம்பினைக் கிராமப்புற மக்களுக்கு 9 லட்சம் ரூபாய் என்றும், நகர்ப்புற மக்களுக்கு 12 இலட்சம் ரூபாய் என்றும் உயர்த்தப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அமைச்சரவை தற்போது இந்தப் பரிந்துரையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், வருமான வரம்பினை 4.5 லட்சம் ரூபாயிலிருந்து 6 இலட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்திருப்பது, நமக்கு முழு நிறைவு அளிக்கவில்லை என்றபோதிலும், நீண்ட காலமாக இதற்காக வாதாடி வந்தவன் என்ற முறையில் ஓரளவு திருப்தியை அளித்துள்ளது. இந்த முடிவினை எடுத்துள்ள மத்திய அரசுக்கு கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையைக் கடந்த முறை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதைப் போலவே, இந்த முறையும் ஏற்றுக்கொண்டு வருமான வரம்பினைக் கிராமப்புற மக்களுக்கு 9 லட்சம் ரூபாய் என்றும், நகர்ப்புற மக்களுக்கு 12 இலட்சம் ரூபாய் என்றும் உயர்த்தி அறிவித்திட வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும் இட ஒதுக்கீட்டிலிருந்து “கிரீமிலேயர்” என்ற பாகுபாட்டையே முழுவதுமாக நீக்கிவிட வேண்டுமென்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோரிக்கையாகும்.

அன்புள்ள, மு.க. 19-5-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗