தொகுதி 48 · கடிதம் 3757
இரண்டாண்டு ஆட்சி; சாதனையா? வேதனையா?
2013-05-18
உடன்பிறப்பே,
2013-2014ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்” கூட்டத்தொடர் 16-5-2013ஆம் தேதியோடு நடைபெற்று முடிந்திருக்கின்றது. அ.தி.மு.க. ஆட்சியின் இரண்டாண்டுகள் முடிவடைகின்ற நாள் வரை பேரவையை நீடிக்கச் செய்து, இறுதி நாளன்று ஆளுங்கட்சிக்கு மிகவும் நெருக்கமான கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதாவை வானளாவப் போற்றிப் புகழ்ந்த பிறகு, அவர்களின் பேச்சுக்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் ஏற்கனவே தான் தயாரித்து வந்த நீண்ட உரையைப் படித்து முடித்திருக்கிறார். அவரின் நீண்ட பதிலுரையில், பெரும் பகுதியை; நான் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தன் நேரத்தைச் செலவிட்டு விளக்கமளித்துள்ளார். விளக்கத்தைக்கூட அவருக்கே உரிய “நாகரிகமான” நடையில் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த இந்த இரண்டாண்டு காலத்தில் 100க்கு மேற்பட்ட அறிவிப்புகளை 110வது விதியின் கீழ் பேரவையில் படித்தாரே, அந்த அறிக்கைகள் எல்லாம் பல துறை அமைச்சர்களின் பொறுப்பிலே உள்ளவை ஆயிற்றே, அந்த அறிக்கைகளைச் சம்பந்தப் பட்ட துறை அமைச்சர்களை விட்டுப் படிக்கச் சொல்லாமல் அனைத்தையும் முதலமைச்சரே அன்றாடம் படித்தாரே, பிறகு அந்த அமைச்சர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது உறுப்பினர்கள் எடுத்துச் சொல்லும் கோரிக்கைகளை அதிகாரிகளோடு கலந்து பேசி விட்டு அதன் பிறகு அறிவிப்புகளை; தான் வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்த பிறகு, அதிகாரிகளோடு கலந்து பேசி விட்டு, அந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களே 110வது விதியின் கீழ் படித்திருக்கலாம் அல்லவா? முதல் அமைச்சர் படித்த அந்த 100க்கு மேற்பட்ட அறிவிப்புகளில் ஒருசிலவற்றையாவது அந்தத் துறை அமைச்சர்கள் மூலமாகப் படிக்கச் செய்திருக்கலாம் அல்லவா? அல்லது தற்போது அவை விதி 110 என்பது முதலமைச்சர் மட்டுமே படிக்கத் தகுந்தது - முதலமைச்சருக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு வாய்ந்தது என்று மாற்றப்பட்டு விட்டதா? இதைப்பற்றி முதலமைச்சர் தனது நீண்ட பதிலில் எதுவும் தெரிவிக்கவில்லை .
அது மாத்திரமல்ல; முதலமைச்சர் தனது பதிலில், மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளை அதிகாரிகளோடு கலந்து பேசிவிட்டு, அதன் பிறகு 110வது விதியின் கீழ் அறிவிப்புகளைப் படிப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் முதலமைச்சர் படித்த பல அறிவிப்புகள், பேரவையில் எந்தச் சட்டமன்ற உறுப்பினரும் எழுப்பாத கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை பதிலைத் தயாரித்த அதிகாரிகள் மறந்து விட்டனர் போலும்! உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை, நாகை மாவட்டத்தில் எண்ணூர் ஆழ்கடல் துறைமுகம், ஒரு மிதக்கும் திரவ நிலை எரிவாயு முனையம் ஆகியவை 3500 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும்; திருமழிசையில் அடுக்கு மாடித் தொழில் வளாகம்; போன்ற அறிவிப்புகளையெல்லாம் எந்த உறுப்பினரும் கோரிக்கையாக பேரவையில் எழுப்பியதாகச் செய்திகள் இல்லை. முதலமைச்சர் பேரவையில் நன்றி தெரிவித்துப் பேசும்போது, கடந்த இரண்டாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந்தத் திட்டங் களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது என்று நீண்ட பட்டியலிட்டிருக்கிறார். ஆனால் முதலமைச்சர் படித்த அந்தத் திட்டங்கள் எல்லாம் 16ஆம் தேதி காலையிலேயே வெளிவந்த ஆங்கில, தமிழ் நாளேடுகள் அனைத்திலும் - . ஒவ்வொரு பத்திரிகையிலும் நான்கு பக்க விளம்பரங்கள் என்ற அளவிலே சொல்லப்பட்டவைகளைத்தான் பேரவையிலே முதலமைச்சர் படித்திருக்கிறார். “முரசொலி”, “தினகரன்” ஏடுகளைத் தவிர அரசின் அந்த நான்கு பக்க விளம்பரங்கள் “தீக்கதிர்” உள்ளிட்ட அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளன.
அந்த விளம்பரங்களுக்காக அ.தி.மு.க. அரசு எத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தைச் செலவிட்டிருக்கிறது; கடந்த இரண்டாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு விளம்பரத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது; என்ற விவரத்தை வெளியிட்டால் மக்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்படக் கூடாது என்பது என் நோக்கமல்ல. தி.மு.கழக ஆட்சியிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை ஓர் அளவோடும் எல்லைக் குள்ளும் இருக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு இந்த அளவிற்கு அதிகமாக மிதமிஞ்சிய விளம்பரங்கள் என்ற பெயரால் அரசுப் பணத்தை வாரி வழங்குவது என்பது மறைமுகமாக, அரசுக்கு எதிரான செய்திகளைப் பத்திரிகை நெறியைப் போற்றிடும் வகையில் ஜனநாயக ரீதியாக வெளியிடாமல் செய்வதற்கான ஒரு தூண்டுகோலாக அமைந்து விடும். அரசை எதிர்த்து எழுதும் ஏடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வழங்கும் விளம்பரங்கள் கிடைக்காது என்றால், கோடி பெரிதா - ஏடு பெரிதா என்ற நிலையில் எந்த ஏடுகள்தான் அரசின் குறைகளை எழுதி நடுநிலையோடு கடமையாற்றிட முடியும்? சட்டமன்ற விதி 110இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட திட்டங்களுக்கு நிதி ஆதாரம் - நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியின் தொகை வருமா? அல்லது இதற்கெனத் தனியாக நிதி ஒதுக்கப்படுமா? அல்லது வெறும் அறிவிப்பு என்பதின் கீழ் வருமா? இவ்வளவு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையிலேயே ஏன் செய்யவில்லை? துறைகளின் அமைச்சர்கள் மானியக் கோரிக்கைக்குப் பதிலளித்த போது ஏன் இந்த அறிவிப்புகளைச் செய்யவில்லை? என்றெல்லாம் கேட்டதற்கு, “ஐந்து முறை முதலமைச்சராகவும், நான்கு முறை நிதியமைச்சராகவும் இருந்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் தெரியவில்லையா?” என்று குதர்க்கமாகக் கேட்டிருக்கிறார். அந்த வழி முறைகள் ஓரளவுக்குத் தெரிந்த காரணத்தால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தேன். இதுவரை நடைபெற்ற எந்த ஆட்சியிலாவது, இத்தனை அறிவிப்புகளை முதல் அமைச்சரே பேரவையில் படிப்பதும், அதற்கு அன்றாடம் பாராட்டுச் சொற் பொழிவுகள் நடைபெறுவதும் என்ற நடைமுறை இருந்தது உண்டா?
என் கேள்விக்குப் பதிலாக, “வரவு - செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு, திட்ட நிதி அளவு முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில், வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கம் செய்ய இயலாது, எனவேதான் நிதி ஒதுக்கம் இல்லாத புதிய திட்டங்களுக்குத் தனியே அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அவை “புதுப் பணி”களாகவும் “புது துணைப் பணி”களாகவும் கருதப்பட்டுத் திருத்திய மதிப்பீட்டில் தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும்” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இதுதான் உண்மை . ஆனால் திருத்திய மதிப்பீட்டில் ஓரளவிற்குத் தான் நிதியினைக் கோர முடியும். ஒரு நிதி நிலை அறிக்கையிலே சொல்லப்பட வேண்டிய அளவிற்கும் மேலாக அறிவிப்புகளையெல்லாம் செய்துவிட்டு, அத்தனையையும் திருத்திய மதிப்பீட்டில் கோரிப் பெறுவோம் என்றால், அதற்குத் தேவையான நிதி; மிகவும் அதிகமாக தேவைப்படும் நிலையில், அதனை எப்படித் திரட்ட முடியும்?
அதற்காகத்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, “நிதி நிலைக் குழு” (Standing Finance Committee) கூட்டங்கள் பல நாட்கள் நடைபெற்று, ஒவ்வொரு துறையின் அமைச்சரும், தன் துறையின் வாயிலாக நிதிநிலை அறிக்கையிலே சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் எவை என்பது பற்றியும், பதிலுரையில் சொல்வதற்கான திட்டங்கள் எவை என்பது பற்றியும் அந்தத் துறையின் மூத்த அதிகாரிகளின் துணையோடு விவாதிப்பார்கள். தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முதலமைச்சர் அந்தக் கூட்டத்தில் எந்தெந்த திட்டங்களைச் சேர்க்கலாம் என்று முடிவெடுத்துக் கூறுவார். அந்தத் திட்டங்கள் தான் நிதிநிலை அறிக்கையிலே இடம் பெறும். அதற்கு மாறாக அன்றாடம் ஒவ்வொரு துறை பற்றியும் சாதாரணமாக ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு, இரண்டு கோடி ரூபாய் அறிவிப்புகளைக்கூட, அந்தத் துறையின் அமைச்சரை விட்டுப் படிக்கச் செய்யாமல் முதலமைச்சரே திடீரென்று முடிவெடுத்து, அவையில் வந்து படிப்பதும், அதை முதன்முதலாகத் தெரிந்துகொண்டதைப்போல அந்தத் துறையின் அமைச்சரும் மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களைப்போல அவையிலே எழுந்து முதலமைச்சருக்குப் பாராட்டு தெரிவிப்பதும், அதைக் கேட்டு முதல்வர் புளகாங்கிதம் அடைவதும் எந்த நடைமுறையைச் சேர்ந்தது?
ராஜாஜியைப்போலத் தன்னைக் கருதிக் கொண்டு, ஜெயலலிதா ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக் கதையைக் கூறி, உண்மையைத் திசை திருப்ப முனைவது நல்லதல்ல. “வெறும் அறிவிப்பு என்பது திரு. கருணாநிதிக்குத்தான் கைவந்த கலை. 2006ஆம் ஆண்டு நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று கூறினார். கடைசிவரை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்திற்கு நிலம் வழங்கப்படவில்லை” என்று ஒரேயொரு உதாரணத்தைத் தன் பதிலில் முதலமைச்சர் எடுத்துக்காட்டியிருக்கிறார். பாவம்; அவரால் சொல்ல முடிந்தது அந்த ஓர் உதாரணத்தைத்தான் போலும்! ஆனால் அதுவும் உண்மையான தகவலா ?
2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குறுதி அளித்தபடி, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் 17-9-2006 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 15-2-2011 வரை 41 ஆயிரத்து 970 ஆதி திராவிடர்களுக்கு 45 ஆயிரத்து 64.62 ஏக்கர் நிலமும், 3 ஆயிரத்து 277 பழங்குடியினருக்கு 3 ஆயிரத்து 872.46 ஏக்கர் நிலமும், 66 ஆயிரத்து 790 பிற்படுத்தப் பட்டோருக்கு 82 ஆயிரத்து 222.69 ஏக்கர் நிலமும், 58 ஆயிரத்து 269 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 62 ஆயிரத்து 84.18 ஏக்கர் நிலமும், பிற வகுப்பினரில் 8 ஆயிரத்து 692 பேருக்கு 19 ஆயிரத்து 750.65 ஏக்கர் நிலமும் என மொத்தம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் பண்படுத்தப்பட்ட நிலம் இலவசமாக வழங்கப்பட்டது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தத் துறையின் கீழே இன்றைக்கும் கிடைக்கும் ஆதாரங்களை வாங்கிப் பார்த்துத் தெளிவடையலாம். கழக ஆட்சியில் எந்தெந்தத் தேதியில், எந்தெந்த மாவட்டத்தில் நிலம் வழங்குவதற்கான விழாக்கள் நடைபெற்றன என்ற விவரம் வேண்டுமானால், அதையும் விரிவாகக் கொடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். அந்த விழாக்கள்கூட “வீடியோ கான்பரன்சிங்” மூலமாக அல்ல; நானே நேரடியாகச் சென்று வழங்கிய விவரங்களைப் பழைய நாளேடுகளை வாங்கிப் படித்துப் பார்த்தால்கூடத் தெரிந்து கொள்ள முடியும். எனவே வெறும் அறிவிப்பு என்பது எனக்குக் கை வந்த கலை அல்ல; சொல்வதைச் செய்து, செய்வதைச் சொல்லிப் பழக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இன்னும் கூற வேண்டுமானால் சொல்லாததையும் மாநில நலன் கருதிச் செய்து பழக்கப்பட்டவன்தான் என்பதை மனச்சாட்சி உள்ள அதிகாரிகளிடம் கேட்டால் விளக்கம் பெற முடியும்.
என்னைப் பற்றிக் கேள்வி கேட்கும் முதலமைச்சர், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் விலை கொடுக்கப்படும் என்று அறிவித்தாரா இல்லையா? ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து நான்கு பக்கங்களுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறாரே, அதிலே கரும்பு விலை பற்றி ஏன் தெரிவிக்கவில்லை?
ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருக்கு இது தெரியவில்லையா என்று வக்கணையாக என்னைக் கேட்டுள்ள முதல்வரிடம், 111வது விதியின்கீழ்ப் படிக்க வேண்டிய விளக்க அறிக்கையை 110வது விதியின்கீழ் எப்படி படித்தீர்கள் என்று கேட்டிருந்தேனே, மூன்று முறை முதல்வராக இருந்தவருக்கு இதுகூடத் தெரியவில்லையா என்று நான் சிறுபிள்ளைத்தனமாகக் கேட்க மாட்டேன்.
110வது விதியின்கீழ் முதலமைச்சர் படித்த 100க்கு மேற்பட்ட அறிக்கைகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம் என்பதற்கு ஒரு சில சான்றுகளையும் முதலமைச்சர் பேரவையில் படித்துக் காட்டியிருக்கிறார். முதலமைச்சரோ, அமைச்சர்களோ பேரவையில் அறிவித்துவிட்டால், அவைகளை நடைமுறைப் படுத்தித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட “உறுதிமொழிக் குழு” (Assurance Committee) கேள்வி எழுப்பும். ஆனால் முதலமைச்சர் 110வது விதியின்கீழ் அறிவித்த பின்வரும் திட்டங்கள் என்னவாயிற்று?
8-9-2011 அன்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமழிசையில் 2,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும், 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்படும் என்றும்;
3-5-2012 அன்று காவலர்களுக்கு “உங்கள் சொந்த இல்லம்” என்ற திட்டத்தின்கீழ் 36 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும்;
7-5-2012 அன்று காவேரி டெல்டா பகுதிகளில் வெள்ள நீரைத் தேக்கி வைக்க 1500 கோடி ரூபாய்ச் செலவில் திட்டம் என்றும்; 9-5-2012 அன்று மாமல்லபுரத்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்க 1,420 கோடி ரூபாயில் திட்டம் என்றும்; பல்வேறு திட்டங்களையெல்லாம் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பேரவையில் படித்தாரே, அந்தத் திட்டங்கள் எல்லாம் என்னவாயிற்று என்பதையும் விளக்கியிருக்கலாமே? அதையெல்லாம் விட்டுவிட்டு, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது பற்றியும், வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டது பற்றியும், சேமிப்புக் கிடங்குகள் கட்டியது பற்றியும் மிகச் சாதாரண அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாகப் பேரவையில் முதலமைச்சர் எடுத்துக் கூறியிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்து ஆண்டுகள் இரண்டு பூர்த்தியாகிவிட்டது. தற்போது என்ன நிலைமை? விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்துகொண்டே போகிறது. காய்கறிகளின் விலைகூட, கட்டுக்குள் இல்லை. சட்டம், ஒழுங்கு நிலையோ கேட்க வேண்டியதில்லை. நேற்றையதினம் கூட எழும்பூர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த ஒருவரே சரமாரியாக வெட்டப்பட்டிருக்கிறார். அவர் நீதிபதியின் அறைக்குள் சென்று உயிர் பிழைத்திருக்கிறார். சென்னை பொது மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தவரையே கொலை செய்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இரண்டாண்டு கால ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டு. கிராமங்களில் 15 மணி நேர மின்வெட்டு. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயிகள் சாகுபடியே செய்ய முடியவில்லை. இந்த இலட்சணத்தில் இரண்டாண்டு சாதனை என்று நான்கு பக்கங்களுக்கு ஆங்கிலம், தமிழ்ப் பத்திரிகைகளிலே விளம்பரம் கொடுத்து, அந்தப் பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட முனைந்துள்ளார்கள். சட்டப்பேரவையிலே ஜனநாயகம் இல்லை. அரசை எதிர்த்துப் பேச எந்த உறுப்பினருக்கும் வாய்ப்பு தரப்படுவது இல்லை. சட்டமன்றத்திற்கு வெளியே கூட யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் உடனே அவதூறு வழக்குகள். பத்திரிகைகளும் அவதூறு வழக்குகளுக்குத் தப்புவதில்லை. எந்த அமைச்சருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. கேவலம் ஒரு கோடி ரூபாய் அறிவிப்புகளைக்கூட முதலமைச்சரே அறிவிக்கிறார். அதுவும் விவாதத்தின்போது அல்ல. கேள்வி கேட்க யாரும் முன்வராத நிலையில் 110வது விதியின்கீழ் அரசின் அறிவிப்புகள் வெளியாகின்றன. உடனே பாராட்டு சொற் பொழிவுகள். இதுதான் நடைபெறுகின்றன. காழ்ப்புணர்வுக்கோ கேட்கவே தேவையில்லை. கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பிலே போடுகிறார்கள் . உதாரணம் சேது சமுத்திரத் திட்டம் மற்றும் மதுரவாயல் - எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் போன்றவைகளாகும். அந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்க வேண்டிய மாநில அரசே, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அந்தத் திட்டம் வேண்டாம் என்று கூறுகின்ற அளவிற்கு நிலைமை உள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த ஆட்சி என்பது பாராட்டு மழையிலும், விளம்பர வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்படுகிறது என்பதுதான் உண்மையிலும் உண்மை.
அன்புள்ள, மு.க. 18-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗