தொகுதி 48 · கடிதம் 3756
அறிவிப்போடு நிற்குமா அம்மாவின் திட்டங்கள்!
2013-05-15
உடன்பிறப்பே,
30-4-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில்,
“கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், இங்கிருந்து செல்லும் பேருந்துகளில் பாதிக்குமேல் தென் மாவட்டங்களுக்குச் செல்பவையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், தென் மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளுக்கென தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளி வட்டச்சாலை ஆகியவற்றிற்கு இடையே வண்டலூர் - வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.
இவ்வாறு வண்டலூரில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்ததற்கு, அந்தப் பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில், புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் கூறும்போது “வண்டலூர் -வாலாஜாபாத்தை ஒட்டியுள்ள நஞ்சை விவசாய நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பல குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றன. ஏற்கனவே சாலை விரிவாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா அமைக்கவென்று பல ஏக்கர் நிலங்களை அரசு எடுத்துள்ளது. 1985இல் வண்டலூர் பூங்காவைத் திறந்த அன்றைய முதலவர் எம்.ஜி.ஆர். வண்டலூரில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. இனி ஒரு நிலம்கூட எடுக்கப்பட மாட்டாது என்றார். ஆனால் இப்போது விவசாய நிலத்தில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று இன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, புறநகர்ப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்று கூறியதாக “தினமலர்” நாளேடு எழுதியுள்ளது.
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் பேரவையில் அறிக்கை படித்தவுடன், “ஏற்கனவே வேளச்சேரியிலும், மாதவரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்போவதாகத் தீட்டப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று?” என்று கேட்டிருந்தேன். அதற்கு அரசுத் தரப்பிலிருந்து பதில் வராவிட்டாலும், அதே “தினமலர்” நாளேட்டில் இன்றைய தினம் (14-5-2013) வெளி வந்துள்ள செய்தியில், “வேளச்சேரி வெளியூர் பஸ் நிலையம் கைவிடப்படுகிறது - சி.எம்.டி.ஏ. புதிய முடிவு” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :-
“சென்னை வேளச்சேரியில் வெளியூர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிடுவது என, சி.எம்.டி.ஏ., (சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள புறநகர்ப் பேருந்து நிலையத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ததில், வேளச்சேரியிலும், மாதவரத்திலும் வெளியூர் பேருந்துகளுக்கான முனையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2011- 12ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி வேளச்சேரியில் மேம்பால ரயில் நிலைய வளாகத்தில் காலியாக உள்ள, 12 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க, 48 கோடி ரூபாயும், மாதவரத்தில் 8 ஏக்கர் நிலப் பரப்பில் பேருந்து நிலையம் அமைக்க 32 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியதுடன், நிர்வாக ஒப்புதலும் அளித்து 2011 அக்டோபர் 31ஆம் தேதி (அ.தி.மு.க. ஆட்சியில்) அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில், வேளச்சேரி யில் பேருந்து முனையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட நிலம், போக்குவரத்துத் துறையால் உத்தேசிக்கப்பட்டுள்ள “மோனோ” ரயில் திட்டத்துக்குத் தேவைப்படும். எனவே “மோனோ” ரயில் திட்டத்துக்கான நிலம் எவ்வளவு என்பதை முடிவு செய்தபின், பேருந்து முனையம் அமைப்பதற்கான நிலத்தை இறுதி செய்யலாம் என போக்குவரத்துத் துறையால் தெரிவிக்கப்பட்டது. அதுவரை இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பது என சி.எம்.டி.ஏ. முடிவு செய்திருந்தது.
சமீபத்தில், தென் மாவட்டப் பேருந்துகளின் தேவைக்காக வண்டலூரில் 65 ஏக்கரில் புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலை யில், வேளச்சேரியில் வெளியூர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம், ஒட்டுமொத்தமாக கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.”
- இவ்வாறு செய்தி வெளிவந்திருப்பதோடு, இதைப் பற்றி சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வேளச்சேரியில் வெளியூர் பேருந்துகளுக்கான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது முதலமைச்சர் வண்டலூரில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று 110வது விதியின்கீழ் அறிக்கை படித்து - அந்த அறிவிப்பை அந்தப் பகுதி விவசாயிகள் எம்.ஜி.ஆரின் வாக்குறுதியை எடுத்துக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? வண்டலூரில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புறநகர்ப் பேருந்து நிலையம் வரப்போகிறதா? வேளச்சேரி, மாதவரம் புறநகர்ப் பேருந்து நிலையங்களின் கதி என்ன? இதற்கான விளக்கங்களை முதல் அமைச்சர் மற்றொரு 110வது விதியின்கீழ் எப்போது படிப்பார்? ஓகோ! 110வது விதிப்படி விளக்கம் தரக் கூடாதோ?
அன்புள்ள, மு.க. 15-05-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗