உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3763

அனைத்து உண்மையும் அனைவருக்கும் தெரியுமே!

2013-05-31

உடன்பிறப்பே,

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை “வீடியோ கான்பரன்சிங்” மூலமாக முதல் அமைச்சர் 29-5-2013 அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திறந்துவைக்க இருந்ததைப் பற்றி விரிவாக நான் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து எழுதியிருந்தேன். திட்டத்தைத் தொடங்குவது பற்றி அனைத்து நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் அரசின் சார்பில் வெளிவந்திருப்பதையும், தொடங்கிவைத்த பிறகு, அதற்கு நன்றி தெரிவித்துப் பொது மக்கள் அல்ல, அந்தத் துறையின் அமைச்சரே முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருப்பதையும் கண்டிருக்கக் கூடும். விளம்பரம் பெற்றதற்கு நன்றிக் கடனாக அந்தப் பத்திரிகைகள் எல்லாம் முதல் அமைச்சரின் உரையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதற்காகத்தானே முழுப் பக்க விளம்பரம்?

காணொலிக் காட்சி மூலமாகத் திட்டத்தைத் தொடங்கிவைத்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் வழக்கம்போல் தி.மு.கழக ஆட்சியின்மீது பாய்ந்து பிராண்டியிருக்கிறார். குறிப்பாக 1994ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் போதிய நிதி திரட்ட இயலவில்லை என்றால் எதற்காகத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது?

அவர் இரண்டாவதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்திற்காக நிதி உதவி கேட்டு 18-8-2005 அன்று மத்திய அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டது என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். இரண்டாவதாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது 2001ஆம் ஆண்டு. பொறுப்புக்கு வந்தவுடன் 2001ஆம் ஆண்டே இந்தத் திட்டத்திற்காக நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பாமல் 18-8-2005 வரை நான்காண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்?

மேலும் முதலமைச்சர் தனது பேச்சில் 2008ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால் அப்போது எந்த ஆட்சி நடைபெற்றது என்பதைக் குறிப்பிடவில்லை. 2008ஆம் ஆண்டு நடைபெற்றது தி.மு.கழக ஆட்சி. அந்த ஆட்சிக் காலத்திலேதான் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பா.ஜ.க. போராட்டம் நடத்தியது என்றும், அதை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததாகவும், 27-3-2008 அன்றும் 1-4- 2008 அன்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரித் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுவிட்டு, அதன்பின்னர் “கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் நாம் கலந்து பேசி தேவைப்பட்டால் களம் காண்போம்” என்று 5-4-2008 அன்று நான் அறிவித்து அந்தத் திட்டத்தை நான் நிறுத்தி வைத்துவிட்டதாகவும், அதுபற்றிப் பேரவையில் கேள்வி கேட்க முயன்ற ஜெயலலிதாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதனால் அவர் வெளியே சென்று, முதலமைச்சராக இருந்த நான் பதவி விலக வேண்டுமென்று கூறியதாகவும் பேசியிருக்கிறார்.

இதற்கான விளக்கங்களை நான் அளித்தாக வேண்டும். ஒகேனக்கல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இல்லை. ஆளுநர் ஆட்சிதான் நடைபெற்றது. பொதுத் தேர்தல் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் கர்நாடக பா.ஜ.க. சார்பில் அங்கே எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு, அங்கே வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் எல்லாம் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் கடைகள் எல்லாம் நாசமாக்கப்பட்டன. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. தமிழ்த் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. தமிழகச் சட்டப்பேரவையில் மத்திய அரசின் ஒத்துழைப்பைக்கோரி இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், தமிழர்கள் தாக்கப்படுவது நின்றபாடில்லை. கர்நாடக பா.ஜ.க.வின் செயல்களைக் கண்டித்து, தமிழ்த் திரையுலகம் சார்பில் 4-4-2008 அன்று சேப்பாக்கத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவராக இருந்த கே.ஆர்.ஜி. தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், விஜய்காந்த், அஜீத்குமார், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் இராம.நாராயணன், டி. ராஜேந்தர், பி. வாசு, முக்தா சீனிவாசன், சேரன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., சரத்குமார், தனுஷ், ஜீவா, சிம்பு, நடிகைகள் மனோரமா, குஷ்பு, ஸ்நேகா, நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பிரச்சினை காரணமாக இரண்டு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானபோது, கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பெரிதும் அல்லல்களுக்கு ஆளான நேரத்தில் - அங்கே ஒரு ஆட்சி அமைய ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் அதுவரை தற்காலிகமாக இந்தப் பிரச்சினையில் அமைதி காப்போம் என்றும், அதற்குப் பிறகும் நிலைமை நீடிக்குமானால் பொறுமையாக இருக்கத் தேவையில்லை என்றும் முதலமைச்சராக இருந்த நான் அறிக்கை கொடுத்தது உண்மைதான். அவ்வாறு நான் அறிக்கை வெளியிடாமல் அமைதியாக இருந்திருந்தால், கர்நாடகாவில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கப்பட்டிருக்கும். தமிழர்களுக்குத் தீங்கேதும் நேர்ந்து விடாமல் காப்பதற்காக முன்னெச்சரிக்கையாக நான் மேற்கொண்ட நடவடிக்கையைத்தான் நேற்றைய தினம் முதலமைச்சர் மிகப்பெரிய புகாராகத் திட்டத்தையே கைவிட்டதைப் போல எடுத்துக் கூறியிருக்கிறார்.

உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட என்னுடைய இந்த முடிவு பற்றி அப்போதே 7-4-2008 தேதிய “இந்து” ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அது வருமாறு :-

“அமைதியும், பொறுமையும் சில நேரங்களில் மிகப்

பெரும் நற்குணங்களாகும். கர்நாடக மாநிலச்

சட்ட மன்றத் தேர்தல் நடந்து முடியும்வரை

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் பற்றிப் பொறுமை காக்கும்படி அறிவுறுத்தி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.கருணாநிதி எடுத்துள்ள நடவடிக்கை மிகச் சரியானது. அரசியல் முதிர்ச்சியுடன் கூடிய இந்தத் தலையீடு கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் உடனடியாகப் பதற்றத்தைத் தணித்துள்ளது. பேருந்துகளைத் தீக்கிரையாக்குதல், கடை களைத் தாக்குதல், திரையரங்குகளை மூடுதல் போன்றவற்றில் சில நாட்களாக ஈடுபட்டு வந்த இருபுறமும் உள்ள வன்முறையாளர்களுக்குத் திடீரென்று போராடுவதற்கு எந்தக் காரணமும் இல்லாமல் போய்விட்டது. வன்முறையை அமைதி அணி வகுப்பு மூலம் எதிர்க்கும் தமிழக முதல்வரின் (கருணாநிதியின் ) முன் முயற்சியின் பின்னுள்ள நல்ல எண்ணத்தைக் கர்நாடகாவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாகப் புரிந்துகொண்டனர். ஒகேனக்கல் திட்டம் பேச்சுவார்த்தை நிலையிலிருந்து களத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் ஆயின, அதனால் மேலும் ஒரிரு மாதங்கள் காத்திருப்ப தால் எந்த இழப்பும் ஏற்பட்டு விடாது. எப்படிப் பார்த்தாலும் இந்தத் திட்டம் பற்றிக் கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுடன்தான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையையும் நடத்த முடியும். புதிய சட்டமன்றம் அமைந்த பிறகுதான் இது சாத்தியமாகும். நடைமுறைக்கு உகந்த இந்த நடவடிக்கை மூலமாக, திரு. கருணாநிதி நிலைமையை வெகு சாமர்த்தியமாகச் சமாளித்துள்ளார். இதிலே வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள், குறிப்பாக எதைப் பாத்தாலும் சந்தேகப்படும் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தலைவருமான ஜெயலலிதா, இந்தப் பிரச்சினையில் மாநில அரசுடன் பொதுவான, ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக, இதிலும் குற்றம் கண்டுபிடித்து அரசியல் ஆதாயம் தேட முயலுகின்றனர்”

(Silence and patience are sometimes great virtues. No dialogue is possible in an emotion-charged atmosphere and Tamil Nadu Chief Minister M. Karunanidhi has done very well to counsel patience on the Hogenakkal drinking water project until the Karnataka Assembly election is concluded.

This Statesmanly intervention cooled tempers overnight in both Tamil Nadu and Karnataka; after days of burning buses, attacking shops, and closing down cinemas, chauvinist elements on both sides were suddenly left without a cause to fight for.

Political leaders in Karnataka, who seemed belligerent on the issue after the BJP raised the ante, were quick to see the good sense behind the Tamil Nadu Chief Minister’s initiative to counteract the violence with a peace march.

The Hogenakkal project took years to move from the discussion board to the field and waiting out another couple of months will cost nothing.

In any case meaningful talks on the project can only be held with an elected Government in Karnataka, and this will be possible only after the new Assembly is constituted by the end of May. By injectinga dose of practicality, Mr. Karunanidhi skilfully managed a situation that, in less experienced hands, could have spun out of control.

Sadly, opposition leaders in Tamil Nadu, especially former Chief Minister and AIADMK leader Jayalalithaa, instead of making common, constructive cause with the State Government on this issue, are cynically trying to make political capital out of it.)

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசும்போது என்மீது கூறிய குற்றச்சாட்டிற்கு “இந்து” அப்போதே எழுதிய தலையங்கமே பதிலாகும். “இந்து” நாளேடு ஜெயலலிதாவைப் பற்றி அன்று விளக்கி விமர்சனம் செய்தது இன்றும் பொருந்தும் என்பதை ஜெயலலிதா நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இந்தத் திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கலாம் என்று நான் வெளியிட்ட அறிக்கையைப் பேரவையில் அறிவிக்காமல், அனைவரையும் கலந்து பேசாமல் அறிக்கை விடலாமா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். இதே கேள்வியை 2008ஆம் ஆண்டிலேயே அவர் கேட்டு, அப்போதே நான் அதற்குப் பதிலளித்திருக்கிறேன். பேரவை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து விடுமுறை. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்து கொண்டு பேரவையில் அறிவிப்பதென்றால், அதற்குள் இரண்டு மாநிலங்களிலும் பல உயிரிழப்புகளும், உடைமை நாசங்களும் ஏற்படுவதற்கு இடம் தந்துவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் நெருக்கடியான நிலைமையைத் தவிர்ப்பதற்காக, காலந் தாழ்த்தாமல் அப்போது அவசரமாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. நான் அப்போது வெளியிட்ட அறிக்கை பற்றிப் பேரவையில் கேள்விகேட்க ஜெயலலிதா முயன்றதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஒரு புகார் சொல்லியிருக்கிறார். அதற்கும் நான் விளக்கமளிக்கிறேன். சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது ஒரு உறுப்பினரோ அல்லது ஒரு கட்சி சார்பிலோ விளக்கம் கேட்பதாக இருந்தாலும், உரிமை மீறல், ஒத்திவைப்பு போன்ற பிரச்சினைகள் பற்றி எழுப்புவதாக இருந்தாலும், காலையில் பேரவை தொடங்கி, வினா விடை என்ற கேள்வி பதில் நேரம் முடிந்த பிறகுதான் எழுப்ப முடியும் என்பது சட்டமன்ற விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா அவர்களும், அவரது கட்சியினரும் காலையில் சட்டமன்றம் கூடியதும், உரிமைப் பிரச்சினையோ, ஒத்திவைப்புப் பிரச்சினையோ எழுப்புவதாகச் சொல்லிப் பேசுவதற்கு முற்பட்டபோது, கேள்வி நேரம் முடிந்த பிறகு பிரச்சினையை எழுப்புங்கள், அதற்கு ஆளுங்கட்சி சார்பில் விளக்கம் தரப்படும் என்று எடுத்துக் கூறியும் கூட, பேரவையின் விதிகளை மதித்து அந்த ஒரு மணிநேரம் கூட காத்திருக்க அவர்களுக்கு மனம் இல்லாமல், வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் பேரவையை விட்டு வெளியேறி விட்டு, தற்போது பேரவையில் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது அவர்கள் ஆட்சியில் எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதைத் தமிழகமே நன்கறியும். ஜனநாயகத்தில் இன்னமும் நம்பிக்கை உள்ளவர்களும், சட்டமன்ற மரபுகளை உணர்ந்தவர்களும் அதை அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டேயிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் ஒகேனக்கல் திட்டம் முடுக்கி விடப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்தத் திட்டம் யார் ஆட்சிக் காலத்தில் விரைந்து திட்டம் தீட்டப்பட்டு, முடுக்கி விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது என்பதை அந்தப் பகுதி மக்களே நேரில் கண்கூடாகக் கண்டு தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் கடந்த பிப்ரவரி மாதம் சென்றபோது, 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே முடிவடைந்திருக்கக் கூடிய திட்டம், அ.தி.மு.க. ஆட்சி செய்த தாமதத்தால் தொடங்கப்படவில்லை என்று கூறியதைப் பொய்ப்பிரச்சாரம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்காக அட்டவணை ஒன்றே தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டம் முடியக் கூடிய அளவிற்குக் கழக ஆட்சியில் முறைப்படுத்தப்பட்டு, அவ்வாறே பணிகள் நடைபெற்றுவந்தன. அந்தப் பணிகளையெல்லாம் அடிக்கடி நேரில் சென்று அந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் கண்காணித்து வந்ததன் அடிப்படையிலேதான் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் பேசினாரே தவிர, பொய்ப் பிரச்சாரம் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இரண்டாண்டு காலத்தில் செய்யாததை ஆட்சியில் இல்லாத போது இரண்டு மாதத்தில் நிறைவு செய்வதாக ஸ்டாலின் கூறியது நகைப்புக்குரியதாக உள்ளது என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது முனைப்பாக பணிகளை விரைவுபடுத்திய காரணத்தினால் தான் தற்போது அம்மையாரால் தொடக்க விழாவினை நடத்த முடிந்திருக்கிறது என்பதுதான் உண்மை. கழக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளின் அறுவடையைத்தான் தற்போது அவர்கள் செய்திருக்கிறார்களே தவிர, இந்தத் திட்டத்தின் பயன்களைத் தி.மு.க.வைப் போல கொண்டாடுவதற்கு அ.தி.மு.க.விற்கு உரிமை இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒகேனக்கல் திட்டப் பணிகள் முழுமை பெறவில்லை, பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு அடையாளமாக “தினமலர்”

நாளேடு வெளியிட்டிருந்த புகைப்படத்தையே எடுத்துக்காட்டி, அவசர அவசரமாக இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படுவது ஏன் என்று நான் கேட்டிருந்த கேள்விக்கு முதலமைச்சர் ஏனோ பதிலே அளிக்கவில்லை. நான் கூறியது உண்மை என்பதை நிரூபிக்கத்தக்க வகையில், இன்று “இந்து” நாளேட்டிலேயே “People in many rural areas were upset that the water did not reach them” (கிராமப்புறங்கள் பலவற்றுக்குக் குடிநீர் சென்று சேராததால், மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாவம், முதலமைச்சர் என்ன செய்வார்? அதிகாரிகள் பதில் எழுதிக் கொடுத்திருந்தால் தானே, அவர் படித்திருப்பார்! அதிகாரிகள் ஏன் எழுதிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியுமே!

அன்புள்ள, மு.க. 31-5-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗