உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3753

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி; அன்றும் - இன்றும்!

2013-05-11

உடன்பிறப்பே,

7-5-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் எந்தத் துறை பற்றிய மானியக் கோரிக்கை விவாதிக்கப்பட்டது, அதிலே யார் யார் பேசினார்கள், அந்தத் துறையின் அமைச்சர் அதற்கு என்ன பதில் சொன்னார் என்று எந்த விவரமாவது ஏடுகளில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் நடைபெறுவது என்ன? ஆங்கிலத்தில் சொல்வார்களே, “One Man Show” - அதுதான் இங்கே நடைபெறுகிறது. அந்த வரிசையில் பேரவையில் கேள்வி நேரம்கூடச் சில நாட்களில் இடம்பெறாமல் இருக்கிறது, ஆனால் முதலமைச்சரின் 110வது விதியின் கீழான அறிக்கைகள் அன்றாடம் உண்டு; அவை நாளேடுகளிலும் பக்கம் பக்கமாக இடம் பெறுகின்றன.

7-5-2013 அன்று தொழில்துறை பற்றிய அறிவிப்புகளை முதலமைச்சர் படித்திருக்கிறார். தொழில்துறை பற்றிய மானியக் கோரிக்கை பேரவையிலே ஏற்கனவே விவாதிக்கப்பட்டு பதிலும் அந்தத் துறை அமைச்சர்களால் கூறப்பட்டாகிவிட்டது. ஆனால் அந்தத்துறை பற்றிய அறிவிப்புகளைத்தான் முதலமைச்சர் பேரவையில் நேற்று படித்திருக்கிறார்.

முதலமைச்சர் 110வது விதியின்கீழ் அறிக்கை படித்து முடித்ததும், குடியரசுக் கட்சி, கொங்குப் பேரவை, பார்வர்டு பிளாக், சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் பாராட்டுரைகள்! முதல்வரின் அறிவிப்புகளால் தமிழகம் இந்தியாவின் மான்செஸ்டர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - இது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டுரை. அத்துடன் பாராட்டுரை முடியவில்லை. துறையின் அமைச்சர் மோகன், “செயற்கரிய செயல்களை செய்யக் கூடியவர் நம்முடைய அம்மா. அவர் சுனாமியையே விரட்டி அடித்தவர். தமிழகம் முதல் மாநிலம் என்கிற பெயர் பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற நல்ல திட்டங்களை அறிவிக்கிறார். வெளிச்சத்தைத் தருகிறார்” என்று கூறியிருக்கிறார். அடுத்து துறையின் இன்னொரு அமைச்சர் எழுந்து, “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று முனைப்புடன் அம்மா நல்லாட்சி நடத்துகிறார். அதற்கு முத்தாய்ப்பாக இந்தத் திட்டங்களை அறிவித்துள்ளார்” என்கிறார்.

பேரவைத் தலைவர், “தமிழகம் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற நம் அம்மா இப்போது தொழில் துறையில் தமிழகத்தை மேலும் முன்னேற்றுவதற்காக இந்தப் புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். விடிவெள்ளியாக வந்து அவர் தமிழகத்திற்கு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறார்” என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அன்றாடம் கேள்வி நேரம் முடிந்து, முதலமைச்சர் 110வது விதியின்கீழ் அறிக்கைகளைப் படிக்க, அதை அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரவேற்று பாராட்டுரை வழங்க, அமைச்சர், பேரவைத் தலைவர் ஆகியோரின் போற்றிப் புகழுரைக்குப் பிறகுதான் திட்டமிட்டபடி மானியக் கோரிக்கை மீதான விவாதம். இதுதான் தமிழகச் சட்டப்பேரவையில் இப்போதெல்லாம் நடக்கிறது. எதிர்த்துக் கேட்பவர்கள், மாற்றுக் கருத்தோடு விமர்சனம் செய்பவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஜனநாயக நெறிகளுக்குப் புறம்பாக, தி.மு.கழக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். அன்றையதினம் தொழில்துறை குறித்து முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் என்ன தெரியுமா?

❖ திருவரங்கம் தொகுதியில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை; நாகை மாவட்டத்தில் ஓர் ஆழ்கடல் துறைமுகம், ஒரு மிதக்கும் திரவ நிலை எரிவாயு முனையம், 500 மெகாவாட்திறனுள்ள எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி ஆலை ஆகியவை 3,500 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும்; ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது புதிய தொழிற் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்; திருமழிசையில் அடுக்குமாடித் தொழில் வளாகம் ஒன்று சிட்கோ நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும்.

இப்படி அறிவிப்புகள் தொடருகின்றன. இதிலே திருமழிசையில் அடுக்குமாடித் தொழில் வளாகம் பற்றிய அறிவிப்பினைப் படித்தபோது எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது! அதைப்பற்றி நான் கடந்த மாதமே எழுதியிருந்தேன்.

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 9-9-2011 அன்று முதலமைச்சர் இதே 110வது விதியின்கீழ் ஓர் அறிக்கை படித்தார். அது திருமழிசையில் 311 ஏக்கரில் குடியிருப்புகளை அமைக்கப் போவதாகவும், சென்னை அருகே துணை நகர் அமைக்கப் போவதாகவும் அறிவித்து, அனைத்து ஏடுகளிலும் இப்போது போலவே பெரிதாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். - ஆனால் அந்தத் திட்டம் முதலமைச்சர் அவ்வாறு அறிவிப்பதற்கு முன்பே 25-8-2011 அன்று பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே இடம்பெற்றிருந்தது. அதையேதான் பின்னர் முதல மைச்சர் 110வது விதியின்கீழ் அறிவிப்பாகப் படித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு என்னவாயிற்று? திருமழிசையிலே துணைக்கோள் நகரம் அமைந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அதுபற்றி 5-5-2013 அன்று வெளி வந்த செய்தியிலேகூட, அத்திட்டம் வருவதற்குச் சிக்கலோ சிக்கல் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

தொழில்துறை பற்றி முதலமைச்சர் ஏராளமான அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ள இந்த நேரத்தில்; கழக ஆட்சியில் தொழிற் துறைக்காக எதுவுமே செய்யப்படவில்லையா என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில், கழக ஆட்சியில் நடந்த ஒரு சில பணிகளை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

2006இல் கழக அரசு அமைந்தபின் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளைக் (Blocks) கண்டறிந்து, அவற்றில் தொழில் தொடங்கும் வழிமுறைகளை நிர்ணயிப்பதற்காகத் தொழில்துறைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று 20.7.2006 அன்று அமைக்கப்பட்டது.

தமிழக தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு உதவிட முதலமைச்சர் தலைமையில் தொழில் வர்த்தகக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட, “சிறப்புத் தொழில் முனைப்புக் குழு” (Special Task Force) 8.11.2006 அன்று அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறைகளின் பங்களிப்பை 21 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்துவதற்கும் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பை ஆண்டுக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் என இரட்டிப்பாக்கிடவும், புதிய கண்டுபிடிப்புகளிலும், உயர்தொழில் நுட்பத்திலும் தமிழகத்தை ஒப்புயர்வற்ற நிலைக்கு உயர்த்துவதற்கும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய புதிய தொழிற்கொள்கை 2007ஆம் ஆண்டில் உருவாக்கி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் போட்டியிடும் தன்மையை அதிகரித்து அவற்றின் செயல்திறனைப் படிப்படியாக மேம்படுத்துதல்; விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்திட, வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதத்திற்கும் அதிகமாக நிர்ணயித்தல் போன்றவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக 2008ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான தனிக் கொள்கை உருவாக்கப்பட்டது.

2009-2010ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கை தயாரிப்பதற்கு முன்பாகத் துணை முதலமைச்சர் தம்பி மு.க.ஸ்டாலின் 13.6.2009 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர மற்றும் பெரும் தொழில் முனைவோர் கூட்டமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்தாலோசித்தார். அதன்பின் அத்தகைய கூட்டம் நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன. மைய அரசின் மத்திய புள்ளிவிவர நிறுவனம் (Central Statistical Organisation) 2011இல், தனது 2008-09இல் தொழிற்சாலைகள் குறித்த ஆண்டு ஆய்வினை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி; தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது; இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது; தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 17 இலட்சத்து 74 ஆயிரத்து 19 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணிபுரிகின்றனர்; “மொத்த முதலீட்டின்” வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது; “மொத்த தொழில் உற்பத்தியில்” தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது; மேலும் “நிகர மதிப்பு கூடுதல்” அளவில் தொழிற்சாலை வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது என்றெல்லாம் எழுதியிருந்தது.

“Wall Street Journal” தனது 2010, ஜூலை 8ஆம் நாளிட்ட இதழில் தமிழக அரசின் செயல்பாடுகளை மிகவும் புகழ்ந்து கூறியிருக்கிறது. மேலும், அந்த இதழில் “தமிழ்நாடு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாக செயல்படுகிறது. மேலும், தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 12க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்குகிறது என்றும் கூறிப் பாராட்டியுள்ளது.

முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதில் இந்தியாவின் சிறந்த மூன்று மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகத் திகழ்வதை, “ASSO CHAMP” நிறுவனம் வெளியிட்ட BIZCON என்ற அறிக்கையில் சிறப்பித்துக் கூறியிருக்கின்றது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) 2010 அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான அறிக்கையில் தமிழகம் இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது மாநிலமாகத் திகழ்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 2001இல் அ.தி.மு.க. ஆட்சியின் தொடக்கத்தில் அதாவது, 2001 மே திங்கள்வரை தமிழகத்தில் செய்யக் கருதப்பட்ட தொழில் முதலீடு 1 இலட்சத்து 83 ஆயிரத்து 49 கோடியே 37 இலட்ச ரூபாய்; அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்த 2006 மே திங்கள் வரை 5 ஆண்டுகளில் இந்த முதலீடு ஏறத்தாழ 8 ஆயிரத்து 742 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே உயர்ந்து 1 இலட்சத்து 91 ஆயிரத்து 791 கோடியே 98 இலட்ச ரூபாய் என இருந்தது.

ஆனால், 2006இல் கழக ஆட்சி அமைந்த பிறகு புதிய தொழில் கொள்கையை வகுத்துத் தொழில்வளர்ச்சிக்கு அளித்துவரும் ஊக்கம், தொழில் முதலீட்டாளர்களுடன் தொழில் நேயத்துடன் கொண்டுள்ள வெளிப்படையான அணுகுமுறை உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள தொழில் கட்டமைப்புகள் முதலியவற்றின் பயனாக ஐந்தாண்டுகளில் 5 இலட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 இலட்ச ரூபாய் அதிகரித்து மொத்த முதலீடு 2010 டிசம்பர்த் திங்களில் 7 இலட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 இலட்ச ரூபாய் என - ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து, தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது.

2001-2006 ஐந்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் அதற்கு முந்தைய கழக அரசின் ஆட்சியில் இருந்த முதலீட்டைவிட அதிகரித்த தொழில் முதலீடு 8 ஆயிரத்து 742 கோடியே 61 இலட்சம் ரூபாய் மட்டுமே.

ஆனால், 2006-2011 ஐந்து ஆண்டுகால கழக ஆட்சியில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தைவிட அதிகரித்த தொழில் முதலீடு 5 இலட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 இலட்ச ரூபாய்.

“சிப்காட்” பற்றியெல்லாம் முதலமைச்சர் பேரவையில் படித்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியிலேதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மேம் படுத்தப்பட்ட தொழில்மனைகளை அனைத்து அடிப்படை வசதிகளுடனும் உருவாக்கி; தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்கிட, “சிப்காட்” நிறுவனத்தையே 1971ஆம் ஆண்டில் அன்றைய கழக அரசு ஏற்படுத்தியது. முதலமைச்சர் படித்த அறிக்கையில் அவரது தலைமையிலான அரசுதான் தொழில்துறையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று கூறிய காரணத்தால், கழக ஆட்சிக் காலத்தில் தொழில் துறையில் எந்த அளவிற்கு முனைப்புக் காட்டப்பட்டது, முன்னேற்றம் ஏற்பட்டது என்பதற்கான சிறு குறிப்பினை மட்டும் தந்துள்ளேன். எந்தெந்த தொழிற்சாலைகள் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன என்பதைக் கூறவேண்டுமென்றால் அதற்குத் தனியாகத்தான் எழுத வேண்டும்.

அன்புள்ள, மு.க. 11-5-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗