உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3754

ஈழத்தில் இன்னமும் தொடர்வதா இந்தக் கொடுமை?

2013-05-12

உடன்பிறப்பே,

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எண்ணற்ற இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைத்திடவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்துச் சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு; குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை முடிந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. பல விசாரணைக் குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கை நிகழ்வுகளின் கொடுமைகளை உலக அரங்கிற்குக் கொண்டு சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. மேலும் ஒரு சான்றாவணமாக, சர்வதேசப் பொது மன்னிப்பு அவை (Amnesty International) விசாரணை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சர்வதேசப் பொது மன்னிப்பு அவை எனும் அமைப்பு எவ்வித அரசியலையும் - எந்த நாட்டு அரசையும் - எந்த ஒரு மதத்தையும் சார்ந்திராத சுதந்திரத் தன்மை கொண்டதாகும். அந்த அமைப்பு 150 நாடுகளில் முப்பது இலட்சம் ஆதரவாளர்களையும், உறுப்பினர்களையும் கொண்டு இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் அடிப்படை நோக்கமே, மனித உரிமைகளுக்குப் புறம்பான செயல்களைத் தடுத்து நிறுத்துவதாகும்.

இலங்கையின் பல்வேறு தரப்பினரிடமும், நேர்காணல் நடத்தித் தொகுக்கப்பட்ட விவரங்களை 30-4-2013 அன்று சர்வதேசப் பொது மன்னிப்பு அவை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு, “கருத்து வேறுபாட்டின் மீது இலங்கை அரசின் தாக்குதல்” என்று தலைப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையிலே பதிவாகியுள்ள செய்திகள் நம்மைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி வேதனை அடையச் செய்கின்றன.

இலங்கையில் கருத்து வேறுபாடு என்பது அபாயகரமானது. போர் முடிந்த பின்னருங்கூட, அரசியல் - சமூக நடவடிக்கைகளில், இலங்கை அரசினர் பொறுமையின்மையையே கடைப்பிடித்து வருகிறார்கள். மனித உரிமைகள் மற்றும் மனித நேயம் தொடர்பான சர்வதேச சட்ட மீறல்களுக்கான சாட்சியங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. போரின் போது புரிந்த குற்றச் செயல்களை மறைத்து, சட்ட ரீதியான - அரசியல் ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, அந்தக் குற்றச் செயல்களைப் பற்றி அறிந்தோர் உலகுக்கு உண்மையை உரைத்து இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து விடுவார்கள் என்பதற்காக, அப்படிப்பட்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களைச் சிறைக்கு அனுப்புவதும், கடத்திச் செல்வதும், கொலை செய்வதுமான கொடுமைகளை இலங்கை அதிகார பீடத்திலே அமர்ந்திருப்போர் நிகழ்த்தி வருகிறார்கள்.

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் என்பதே குற்ற நடவடிக்கை என்பதைப் போலவும், கருத்து வேற்றுமை என்பதே தேசத் துரோகம் என்பதைப் போலவும் கணிக்கப்படுகின்றன. கருத்து வேற்றுமையை வேரறுப்பதிலும்; இலங்கை அரசின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிர்ப்பான அமைப்புகளையும், நீதித் துறையையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழித்தொழிப்பதிலும்; இலங்கை அரசினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மனித உரிமைகளைக் காப்பாற்றிடும் வகையில் தீர்ப்புகளை வழங்கியமைக்காக, 2013 ஜனவரியில் இலங்கை நாட்டின் தலைமை நீதிபதி - வழக்கறிஞர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புகளுக்கிடையே - பதவி நீக்கம் செய்யப்பட்டார். கருத்து வேற்றுமையை வெளிப்படுத்தும் வழக்கறிஞர்களைக் கண்காணிப் பதும், அவர்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. மனித உரிமைகளுக்காக வாழும் வழக்கறிஞர்கள், சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் வழக்கறிஞர் கள், மாணவர் தலைவர்கள், பேராசிரியர்கள், மதத் தலைவர்கள், தொழிற் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என யாரும் விட்டு வைக்கப்படாமல், அனைவருமே அரசினரின் கோபத்திற்கும் தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்டோரைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவோர் மற்றும் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவோர் அனைவருமே அச்சுறுத்தப்படுகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் பயமுறுத்தப்பட்டும், தாக்கப் பட்டும் வருகிறார்கள். 2006 முதல் குறைந்தது பதினைந்து பத்திரிகையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 25க்கும் மேலான பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வலைத்தளம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசை விமர்சிக்கும் மேலும் ஐந்து வலைத்தளங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தேசப் பாதுகாப்பு என்று சொல்லியே, தனது நடவடிக்கைகள் அனைத்தையும் இலங்கை அரசு இதுவரை நியாயப்படுத்தி வந்தது. இனியும் இலங்கை அரசின் இந்த வாதத்தை நடுநிலை நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைக் காப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியும், அச்சுறுத்தியும், கைது செய்து சிறையில் அடைத்தும், கொலை செய்தும் தொடர்ந்து கொடுமைகள் புரிந்து வரும் இலங்கை அரசு, இத்தகைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்றும்; 2013 செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறுவதால் அதற்கு முன்பே ஐ.நா. மன்றமும், காமன்வெல்த் அமைப்பும் இலங்கையில் நடந்த அனைத்து வகை மீறல்களுக்கும் இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்திட வேண்டுமென்றும்; பொது மன்னிப்பு அவை வலியுறுத்தி வருகிறது.

காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடு என்ற வகையில் இலங்கை, மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தின் அம்சங்கள் அனைத்தையும் பிழையின்றி நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைக்குச் சட்டம் எதையும் இயற்றாத நாடு இலங்கை. கருத்துச் சுதந்திரம், மக்கள் அமைதியாகக் கூடுதல் மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகிய சர்வதேசப் பொறுப்பை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து விட்டது.

2005 நவம்பரில் ராஜபக்சே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அப்பாவி மக்கள் மீது சொல்லொணாக் கொடுமைகளை ஏவியும் - போர்க் குற்றங்களை எண்ணற்ற வகையில் புரிந்தும் - மனித சமுதாயத்திற்கு எதிராக என்னென்ன அத்துமீறல்களைச் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் கணக்கற்ற முறையில் நடத்தியும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

2006 ஜனவரி 2 அன்று திரிகோணமலையில் மனோகரன், யோகராஜா, லோகித ராஜா, தங்கதுரை, சண்முகராஜா என்ற இருபது வயதே ஆன ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கோர நிகழ்வைப் படம் பிடித்த பத்திரிகையாளர் சுப்பிர மணியம் சுகித ராஜா என்பவர் 2006 ஜனவரி 24 அன்று கொலை செய்யப்பட்டார்.

இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள முத்தூர் நகரத்தில் “பிரெஞ்ச் நிவாரண அமைப்பு” - “பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு” ஆகியவற்றைச் சேர்ந்த 15 பேர், 2006 ஆகஸ்ட் 6 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். 2006இல் பொன்னுத்துரை யோகராஜா என்பவரின் இரண்டு மகன்களும் கொல்லப்பட்டனர்.

2006இல் வன்முறை பரவிடத் தொடங்கியதும், பத்திரிகை “சென்சார்” நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, பத்திரிகையாளர்கள் குறி வைக்கப்பட்டனர். பத்திரிகையாளர் திசைநாயகம் 2008 மார்ச் 7இல் கைது செய்யப்பட்டார். 2009 ஜனவரி 8இல் “சண்டே லீடர்” பத்திரிகை ஆசிரியர், விக்கிரம துங்கே பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார். உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளர், ஜெயந்தா 2009 ஜூன் மாதம் கடத்திச் செல்லப்பட்டு, துன்புறுத்தப்பட்டதில் தொடர்ந்து எழுத முடியாத அளவுக்கு அவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. சிங்களத் தொழிற்சங்கத் தலைவர்களும் - “அகுணா” என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர்களுமான லலித் சேனாவி ரதனா, நிகல் சேரசிங்கே, சிசிரா பிரியங்காரா ஆகியோர் காணாமல் போனதாகக் கற்பனைக் கதை ஜோடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கேலிச் சித்திரக்காரர் பிரகீத் 2010இல் காணாமல் போனார். 2012 பிப்ரவரி 11 அன்று ராமசாமி பிரபாகரன் என்ற வணிகர் அவரது வீட்டிலிருந்தே கடத்திச் செல்லப்பட்டார். ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்ட நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றம் சென்றதற்காக, அம்பாறா மாவட்டம் அஸ்ரப் நகரைச் சேர்ந்த பெண்கள் பெருமளவுக்குத் துன்புறுத்தப் பட்டார்கள். 2012 ஏப்ரல் 7ஆம் தேதியன்று முன்னணி சோஷலிசக் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் பிரேமகுமார் குணரத்தினம், திமுத்து அட்டிகலா ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டார்கள். 2011 டிசம்பர் 9 முதல் அரசியல் ஆர்வலர்களான லலித் வீர ராஜு மற்றும் குகன் முருகானந்தம் ஆகிய இருவரையும் காணவில்லை. “உதயன்” நாளேட்டில் பணியாற்றுவோர் தொடர்ந்து தாக்கப் படுகின்றனர். 2011 ஜூலையில் “உதயன்” ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் தாக்கப்பட்டு பெருமளவுக்கு காயப்படுத்தப்பட்டார். 2013 பிப்ரவரி 13 அன்று பராஸ் சவுகத் அலி என்ற “சண்டே லீடர்” பத்திரிகையாளர் கழுத்தில் சுடப்பட்டார். 2013 பிப்ரவரியில் தனது கடமையைச் செய்து கொண்டிருந்த பி.பி.சி. செய்தி அமைப்பைச் சேர்ந்த சார்லஸ் ஹாவிலண்ட் என்பவர் போலீசாரால் மிரட்டப்பட்டார். அதன் காரணமாக பி.பி.சி. இலங்கையில் தனது செய்தி ஒலிபரப்பை ரத்து செய்தது. இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா பேரணி ஒன்றில் பேசிய போது, சுனந்தா தேசப் பிரியா, நிமல்கா பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகிய பத்திரிகையாளர்களின் எலும்பை உடைத்து விடப் போவதாக பகிரங்கமாகவே எச்சரித்தார்.

2007 ஜூன் மாதம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றி வந்த தமிழர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

2009 ஜூன் 13 அன்று ஐ.நா. அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். 2009 செப்டம்பரில் ஜேம்ஸ் எல்டர் எனும் யுனிசெப் பிரதிநிதி இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டார். அதைப் போலவே மற்றொரு பிரதிநிதியான கார்டான் வீஸ் என்பவர் முல்லைத் தீவில் நடந்தது “ குருதிக் குளியல்” என்று விமர்சித்ததற்காக நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார். 2009 ஜூலையில் ஐ.நா. உதவியாளர் பீட்டர் மெக்கே நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இலங்கை நிகழ்வுகளைப் பற்றி எழுதி வந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 2009 ஏப்ரலில் “யு.கே. டைம்ஸ்” பத்திரிகையாளர் ஜெரமி பேஜ் கைது செய்யப்பட்டார். “சேனல் 4” செய்தி அமைப்பின் மூன்று செய்தியாளர்கள் 2009 மே மாதம் நாடு கடத்தப்பட்டனர்.

ஐ.நா. அமைப்போடும், வெளிநாட்டுத் தூதரகங்களோடும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் சர்வதேசத் தகவல் அமைப்புகளோடும் தொடர்பு வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 2008 செப்டம்பரில் ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அரசு சாரா நிவாரண அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

2009 மே 19 அன்று நாடாளுமன்றத்தில் வெற்றி உரையாற்றிய ராஜபக்சே, “இலங்கையில் இனி சிறுபான்மையோர் என்போரே இல்லை” என்றும்; “நாட்டை நேசிப்போர் மற்றும் பிறந்தது முதலே நாட்டை நேசிக்காதோர் என இரு பிரிவினர் மட்டுமே உள்ளனர்” என்றும் பேசினார். 2010 செப்டம்பர் 8 அன்று செய்யப்பட்ட இலங்கை அரசியல் சட்டத்தின் 18வது திருத்தத்தின்படி, மனித உரிமைகள் ஆணையம், தேசிய போலீஸ் ஆணையம், பொதுப்பணியாளர் தேர்வாணையம், நீதித் துறைப் பணியாளர் ஆணையம் ஆகியவை இலங்கை அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன.

இலங்கைத் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டுவது அரசியல் சட்ட விரோதம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகும், குற்றம் சுமத்தப்பட்டது. 2012 சூலையில் முஸ்லீம் ஒருவருக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் எழுந்த பிரச்சினையில் தீர்ப்பை மாற்றி எழுதிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் நீதி மன்றமே தீக்கிரையாக்கப்படும் என்றும் அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டியதாக மன்னார் மாஜிஸ்திரேட் புகார் தெரிவித்தார். நீதித் துறை பணியாளர் ஆணையத்தின் செயலாளர் மஞ்சுளா திலகரத்னே மீது 2012 அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் இப்போது கருத்து வேற்றுமையின் மீது அதிகாரத்தை ஒருமுகப்படுத்திக் கொள்ளும் முயற்சி மற்றொரு புறமும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்களை மறுத்தும், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் - சட்ட விதிமுறைகளுக்கியைந்த ஆட்சி நடத்துதல் பற்றி வெற்று உறுதிமொழிகளைத் தாராளமாக வழங்கியும், சர்வதேச அரங்கில் இரட்டை வேடம் போட்டு நாடகம் ஆடி வருகிறது ராஜபக்ஷே அரசு. அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைத்திடவில்லை. போருக்கு முன்னும் பின்னும் காணாமல் போனவர்கள், எவ்வித விசாரணையுமின்றி கொலைக் களம் அனுப்பப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் தொடர்பான பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. பொது மன்னிப்பு அவை, சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையின் போர்க் குற்றங்கள் மீது சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணை வேண்டுமென்று திரும்பத் திரும்பக் குரல் கொடுத்தும் உரிய பயன் இதுவரை உருவாகிடவில்லை. இலங்கை ராஜபக்ஷே அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் பற்றிச் சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட நாமும் தொடர்ந்து குரல் கொடுப்போம்! நமது குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும்!

அன்புள்ள, மு.க. 12-05-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗