தொகுதி 48 · கடிதம் 3752
“சேது”வுக்கு முட்டுக்கட்டை! தமிழர் வாழ்வைச் சீரழிக்கும் நடவடிக்கை!
2013-05-10
உடன்பிறப்பே,
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் செயல்பட அனுமதிப்பது பற்றி 6-5-2013 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், “அணு மின் நிலையம் செயல்படுவதால் தங்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அணு மின் நிலையங்கள் அமைப்பது வாழ்வுரிமையைப் பறிப்பதற்காக அல்ல; வாழும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவே என நீதிமன்றம் கருதுகிறது. பொதுநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்க இதுபோன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றெல்லாம் கூறப்பட்டிருப்பதை நினைவில் கொண்டால், சேதுசமுத்திரத் திட்டமும் மக்களின் வாழும் உரிமைகளை உறுதிப் படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்படும் திட்டமாகும்; மேலும் முழுவதுமாய்ப் பொதுநலனுக்கே முக்கியத்துவம் அளித்திடும் திட்டமுமாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா, 2-7-2005 அன்று மதுரையில் நடைபெற்றபோதே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில்,
“என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத்திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற்கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் அறிக்கையும், 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்துவதற்கு நான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அதாவது சேது சமுத்திரத் திட்டம் வருவதற்கே தான்தான் காரணம் என்பதைப்போல கூறிக் கொண்டார். அப்படிச் சொல்லி அப்போது தனக்குப் பெருமை தேடிக் கொண்டவர், தற்போது அதே திட்டம் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை நாடிச் சென்றுள்ளார் என்பதுதான் வேடிக்கையான முரண்பாடு!
1998ஆம் ஆண்டு தேசியச் சுற்றுச் சூழல் பொறியியல் நிறுவனத்திடம் ஜெயலலிதாவின் வலியுறுத்தல் காரணமாக அறிக்கை பெறப்பட்டதாக ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறியுள்ளார். அதற்குப் பிறகு நடந்ததை அவர் அறியவில்லைபோலும்! அப்போது தரப்பட்ட அறிக்கை போதுமானதாக இல்லை என்பதற்காக மீண்டும் ஒருமுறை அதே நிறுவனத்திடம் விவரமான அறிக்கையைத் தருமாறு தூத்துக்குடி துறைமுகக் கழகம் கேட்டுக்கொண்டு, அவ்வாறே ஒரு விளக்கமான அறிக்கை அந்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் இத்திட்டம் குறித்து “சிலரின்” தூண்டுதலின்பேரில் வழக்கு ஒன்று வந்தபோது, தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் நிறுவனத்திடம் அவர்கள் அளித்த அறிக்கை விவரமான ஒன்றா என்று கேட்டபோது, அந்த நிறுவனம் திட்டவட்டமாகத் தாங்கள் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகுதான் அந்த விவரமான அறிக்கையைத் தாக்கல் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உறுதியான விளக்கத்திலிருந்தும்; இத்திட்டம் நன்றாக ஆய்வு நடத்தப்படாமல் நிறைவேற்ற முன் வந்து விட்டது என்ற ஜெயலலிதாவின் கூற்று எந்த அளவுக்கு உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பது தெளிவாகிறது!
“மத்திய சுற்றுச் சூழல் - வனத்துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி மாநில அரசிடமிருந்து அவ்வமைச்சகம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டியது சட்டப்படி அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலுங்கூட, தமிழக அரசின் தடையின்மைச் சான்றிதழுக்காகக் காத்திருக்காமல், இத்திட்டத்திற்கான சுற்றுச் சூழல் சார்ந்த அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் வனத் துறை அமைச்சகம் தடாலடியாக வழங்கிவிட்டது” என்று ஜெயலலிதா தனது நீண்ட அறிக்கையிலே அப்போதே தெரிவித்தார்.
“N.O.C. from the State Government or Tamilnadu Pollution Control Board is not a statutory requirement for consideration of environmental clearance for a project for which such clearance is to be accorded by the Central Government as per the Environmental Impact Assessment Notification dated 27-1-1994. Neither the notification, which has the force of law, nor Schedule IV which is appended to it and lays down the procedure for public hearing stipulates such No Objection Certificate”
(27-1-1994ஆம் தேதிய சுற்றுச் சூழல் துறை வகுத்துள்ள விதிமுறைப்படி, மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட வேண்டிய எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில சுற்றுச் சூழல் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் தேவை என்பது சட்டப்பூர்வமான ஒன்றல்ல. சட்டப்பூர்வமாக ஏற்கப்படும் அந்த விதி முறைப்படியோ அல்லது அத்துடன் இணைக்கப்பட்ட ஷெட்யூல் நான்கின்படியோ மக்கள் கருத்தாய்வினைப் பெறும்போது தடையில்லாச் சான்றிதழ் தேவையென்று சொல்லப்படவில்லை.)
சேது சமுத்திரத் திட்டம் கூடாது என்று ஓ. பெர்னாண்டஸ் என்பவர் தொடுத்த வழக்கில் 17-12-2004 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி வி.பாலசுப்பிரமணியம் அளித்த தீர்ப்பில் முக்கிய பகுதி :-
“தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தைத் தடை செய்யும் நோக்கத்துடன் மனுதாரர் இந்த நீதிமன்றத்திற்கு விரைந்து வந்து வழக்கைத் தொடர்ந்துள்ளார். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நாட்டிற்கு மிகுந்த நற்பலனை கொடுக்கக் கூடியது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் ஸ்ரீலங்கா நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக்ஜலசந்தியில் குறுக்காகக் கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். கப்பல் கம்பெனிகளின் எரிபொருள் செலவும் சேமிக்கப்பட்டு வியாபார விருத்திக்கு அவை பயன்பட வழிவகுக்கும். இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கரையோர நகரங்களிலும் போக்குவரத்து மேம்பாடு அடைந்து அபிவிருத்தி செய்ய ஏதுவாகும். இத்திட்டமானது சூயஸ் கால்வாய்த் திட்டத்தைப் போன்றது. அதாவது ஐரோப்பா நாட்டிலிருந்து ஆசியாவின் துறைமுகங்களை அடைய வேண்டிய கப்பல்கள் சூயஸ் கால்வாயை அமைப்பதற்கு முன், ஆப்பிரிக்கக் கண்டத்தை முழுவதும் சுற்றி வலம்வர வேண்டியதாய் இருந்தது. சூயஸ் கால்வாய்த் திட்டத்தின் மூலம் மேற்படி சுற்றுப் பாதை தவிர்க்கப்பட்டுக் காலநேரம் மற்றும் பணம் மிச்சப்படுத்தப்பட்டது. இதே மாதிரி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. பொதுமக்களிடம் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியாளர்கள் ஏற்கனவே விசாரணை அறிக்கையை அனுப்பிவைத்துள்ளார்கள். எங்கள் அபிப்பிராயத்தில் சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் விரைவில் முடிவடைய ஏதுவாகும். நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றங்களைச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற கருத்தை வலியுறுத்துவதன்மூலம் தடை ஏற்படுத்தல் கூடாது என்று இந்த வழக்கைவிட்டுப் பிரியும் முன் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.”
சேது சமுத்திரத் திட்டத்தைத் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதிலே கொண்டு ஓர் அரசின் பெயரைப் பயன்படுத்தி, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், முட்டுக்கட்டை போடுவதும் நாட்டு மக்களின் வாழ்வையும், முன்னேற்றத்தையும் குலைக்கச் செய்யும் நடவடிக்கைகளாகும். சமச்சீர் கல்வித் திட்டமா? அது தி.மு.கழக ஆட்சியால் தொடங்கப்பட்ட திட்டமா? அதற்கு அனுமதி கிடையாது என்பதும்; ஓமந்தூரார் வளாகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகமா? 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தி.மு.கழக ஆட்சியிலே கட்டப்பட்ட திட்டமா? அது கூடாது என்பதும்; அங்கே மருத்துவமனை அமைப்போம் என்றெல்லாம் சொன்னால், அதனால் கருணாநிதிக்கு எந்த இழப்பும் இல்லை. அந்த இடத்திலே தொடர்ந்து தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் நடைபெற்றிருந்தால் அதைக் கட்டியது யார், எந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்று பேசுபவர்களைவிட, அந்த இடத்திலே மருத்துவமனை தொடங்கப் போவதாகச் சொல்வது பற்றியும், கடந்த இரண்டாண்டு காலமாக அந்தக் கட்டிடத்தை அப்படியே எதற்கும் பயன்படாத இடமாக வைத்திருக்கிறார்களே, அதைப்பற்றியெல்லாம் இப்போது அந்தப் பக்கம் போவோரும் வருவோரும் என்ன பேசிக்கொண்டு செல்வார்கள்? “கருணாநிதி கட்டியது என்பதற்காக ஜெயலலிதா இப்படி எதற்கும் பயன்படாமல் செய்திருக்கிறாரே, நாம் கொட்டிக் கொடுத்த வரிப்பணத்திலே கட்டப்பட்ட கட்டடம் அல்லவா?” என்று பேசிக் கொண்டுதானே சென்றிருப்பார்கள்! இதுபோல் எத்தனை திட்டங்கள்? காவல் துறையினர் மீது தனக்குத்தான் அக்கறை என்பது போல முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். ஆனால் சென்னை மாநகரில் காவல்துறை ஆணையர் அலுவலகத் திற்காக 100 கோடி ரூபாய்ச் செலவில் பல மாடிக் கட்டிடம் கட்டி முடித்து எத்தனை மாதங்கள் ஆகின்றன? கழக ஆட்சியிலே கட்டப்பட்டது என்பதற்காகத் திறப்பு விழா நடத்தப்படாமல் போட்டு வைத்திருக்கிறார்கள். அதனால் கருணாநிதிக்கு என்ன இழப்பு? அதைப் பார்க்கும் காவல் துறையினர் அனைவரும் “மகராஜன், 100 கோடி ரூபாய் செலவழித்து கட்டிவைத்ததை, இந்த அம்மாளுக்குத் திறக்க மனம் வரவில்லையே?” என்றுதான் பேசிக்கொண்டு செல்வார்கள். அதைப் போலத்தான் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் கழக ஆட்சியில் பிரதமர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் என்பதற்காகப் பல கோடி ரூபாய்ச் செலவிடப்பட்ட நிலையில், அதற்கும் தடங்கல் செய்து அந்தத் திட்டமும் சுணங்கிக் கிடக்கிறது. இதையெல்லாம் தொடர்ந்து பார்த்துவரும் தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசைப் பற்றி என்ன எண்ணிக் கொள்வார்கள் ?
சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துச் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் ஒரு சிலர் கற்பனையான காரணத்தை முன் வைத்து, அதிலே தலையிட்டு, அதற்கு மூடு விழா நடத்த முனைவது சரிதானா என்று நியாயம் கேட்டு உண்மையை நிலைநாட்டுவதற்காகத்தான் 15ஆம் தேதியன்று தி.மு.க. “எழுச்சி நாள்” கண்டனக் கூட்டங்களை நடத்துகிறது. காழ்ப்புணர்ச்சிக்கும் ஓர் எல்லை உண்டு. அதைச் சொந்தக் காரியங்களிலேகூட காட்டட்டும்; ஆனால் மக்களுக்குப் பயனளித்திடும் அரசுப் பணிகளிலே காட்டுவது எப்படிச் சரியாகும்? நான்கு பேருக்கு நல்லது செய்யத் தான் பொதுவாழ்வுக்கு வருவது; நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் செய்வதற்காகவா பதவி? தற்போது நடைபெறும் ஆட்சியினர் எப்படியெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நடந்து கொள்கிறார்கள் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துதான் வருகிறார்கள். ஆனால் அதை நாட்டு மக்களிடம் விளக்கிட வேண்டிய பல எதிர்க்கட்சிகள், அதனை எடுத்துக் கூறுவதற்கே தயங்குகிறார்கள். நமக்கு ஏன் வீண் வம்பு என்று நினைக்கிறார்கள். துணிந்து யாராவது ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தால், அதை ஜனநாயகத்தின் இயல்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்த ஆட்சியினர் எடுக்கிறார்கள். பத்திரிகைகளாவது அதைப் பற்றியெல்லாம் எழுதுகின்றனவா என்றால், அவர்களுக்கும் பிரச்சினை. கடந்த மாதம் ஆங்கில நாளேடு ஒன்றில், போக்குவரத்துத் துறையில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் டெண்டர் ஊழல் பற்றிப் பெரிதாக முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிடப்பட்டது. அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. மறுநாள் அதுபற்றி தி.மு. கழகத்தின் சார்பில் விரிவாக எழுதியவுடன், அந்தப் பத்திரிகை மீது வழக்கு போடப்போவதாக அரசு அறிவித்துவிட்டது. மறுநாளே அந்தப் பத்திரிகை நமக்கேன் வம்பு என்று அரசைத் தாக்கி அப்படிச் செய்தி வெளியிடுவதையே நிறுத்திவிட்டது. சேது சமுத்திரத் திட்டம் என்பது தென் மாவட்ட மக்களுக்கெல்லாம் வாழ்வாதாரத்தை உயர்த்தித் தரக் கூடிய ஒரு திட்டம். பல ஆண்டுக் காலமாகப் பலரும் கோரிக்கை வைத்த திட்டம். அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் குரல் கொடுத்த திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் கோரிக்கை வைக்கவேண்டுமே தவிர, அந்தத் திட்டம் கூடாது என்று எந்த ஆட்சியினராவது கேட்பார்களா? ஆனால் அந்த விசித்திரமும், வேதனையும்தான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பதை 15ஆம் தேதி கழகம் நடத்தவிருக்கின்ற கூட்டங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் எடுத்துரைத்திட வேண்டும். அதை மனதிலேகொண்டுதான் இந்த விளக்கங்களையெல்லாம் திரட்டி உனக்குத் தந்துள்ளேன்.
இந்தக் கருத்துகளை நீயும் தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம்
தெளிவுபடுத்து! யார் எது சொன்னாலும், என்றும் போல் நம் பணி
தொடரட்டும்!
15ஆம் தேதி வடசென்னையில் நடைபெறும் எழுச்சி
நாள் கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். அதைப்போலவே
கழகத்தின் முன்னணியினரும், சொற்பொழிவாளர்களும்
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உரையாற்ற இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டங்களையெல்லாம் மிகவும் வெற்றிகரமாக நடத்தித் தர வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
(முற்றும்)
அன்புள்ள,
மு.க.
10-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗