தொகுதி 48 · கடிதம் 3751
ஒரு நாடகமன்றோ நடக்குது நாட்டிலே!
2013-05-09
உடன்பிறப்பே,
தமிழகச் சட்டப்பேரவையில் 2013-2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை 21-3-2013 அன்று தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது பொது விவாதம் முடிவுற்று, நிதியமைச்சர் அதற்கு நீண்ட பதிலும் அளித்துள்ளார். அதன் பின்னர் அரசின் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் அந்தந்தத் துறை அமைச்சரால் முன்மொழியப்பட்டு, அதன் மீது மன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து, அமைச்சர்களும் பதிலளித்து அறிவிப்புகளையும் செய்திருக்கிறார்கள். குறிப்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் 8-4-2013 அன்றும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் 7-4-2013 அன்றும், வேளாண்மைத் துறை அமைச்சர் 5-4-2013 அன்றும் தங்கள் துறைக்கான மானியக் கோரிக்கைகளுக்குத் தேவையான நிதியினைக் கோரி பேரவையும் அந்தத் தொகைக்கு அனுமதி அளித்துவிட்டது. ஆனால் அந்த மூன்று துறைகள் பற்றிய ஏராளமான அறிவிப்புகளை 6-5-2013 அன்று முதலமைச்சர் பேரவையில் 110வது விதியின் கீழ் மூன்று அறிக்கைகளைப் படித்து, வழக்கம்போல, அந்த அறிவிப்புகளைப் பாராட்டி கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் மட்டும் 984 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்திருக் கிறார். ஆனால் நிதி நிலை அறிக்கையில் இந்தத் துறைக்குச் செய்யப்பட்டுள்ள மொத்த ஒதுக்கீடே 5.19 கோடியே 15 லட்சம் ரூபாய்தான். அதாவது சுமார் ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கு - 18.97 சதவிகித அளவிற்கு முதலமைச்சரே 110வது விதியின் கீழ் அறிவித்திருக்கிறார். தற்போது அறிவித்துள்ள இந்த அறிவிப்புகள் ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வருமா? அல்லது புதிதாக இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா? அல்லது வெறும் அறிவிப்பு என்பதின் கீழ் வருமா? முதலமைச்சரை இந்த அறிவிப்புக்காக பேரவையில் பாராட்டினார்களே, அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
பல்வேறு துறைகளுக்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைவான தொகை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்தத் தொகை உயர்ந்துள்ளதாகவும் முதலமைச்சர் 110வது விதியின் கீழான அறிக்கையில் குறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அதிகமாக அதிகமாக, ஒதுக்கீட்டுத் தொகையும் உயரும். நிதியமைச்சராக சி.சுப்பிரமணியம் அவர்கள் தமிழகச் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நமது பட்ஜெட் 100 கோடி ரூபாய் அளவிற்குத்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்தத் தொகை ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. எனவே தற்போது ஒதுக்கீட்டுத் தொகை உயர்ந்து விட்டதாக முதலமைச்சர் பெருமை பேசிக் கொள்வதில் பயனில்லை.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், 2001-2006 ஆம் ஆண்டுக் காலத்தில் ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? 3 ஆயிரத்து 393 கோடியே 62 இலட்சம் ரூபாய். ஆனால் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் வேளாண்மைத் துறைக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 7 ஆயிரத்து 414 கோடி ரூபாய். அதாவது கழக ஆட்சிக் காலத்தில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
அடுத்து உணவு உற்பத்தி பற்றி குறிப்பிடும் போது முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் டன் என்ற அளவினையும் கடந்து சாதனை படைத்தது என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுள்ளார். 2011ஆம் ஆண்டில் மே திங்கள் வரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இருந்தது. எனவே அந்த ஆண்டில் வேளாண் உற்பத்தி பெருகியது என்றால், அதிலே கழக அரசுக்கும் பெருமை உண்டு. ஆனால் தற்போது நிலைமை என்ன? இந்த ஆண்டு முழுக்க முழுக்க அ.தி.மு.க. ஆட்சிதானே நடைபெற்றது? உணவு உற்பத்தியைப் பெருக்கியிருக்கிறார்களா? இன்னும் சொல்ல வேண்டுமேயானால், 2005-2006இல் அ.தி.மு.க. ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி தமிழகத்தில் 61.46 இலட்சம் டன்தான். இந்த உற்பத்தி 2006-2007இல் தி.மு.கழக ஆட்சியில் 82.63 இலட்சம் டன்னாகவும், 2008-2009இல் 91.11 இலட்சம் டன்னாகவும், 2009-2010இல் 95.60 இலட்சம் டன்னாகவும் பெருகியது என்றால், அது தி.மு.கழக அரசின் சாதனை அல்லவா? கரும்பு உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் கரும்பு உற்பத்தி திட்டம் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 275 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப் போவதாக முதலமைச்சர் பேரவையில் அறிவித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலே உள்ள கரும்பு விவசாயிகள் இந்த அரசிடம் எதிர்பார்ப்பது என்ன? கரும்புக்கு உரிய விலை கேட்கிறார்கள்.
“2012-2013ஆம் ஆண்டுக்கான கரும்புப் பருவத்திற்கு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 2,350 என்று விலை நிர்ணயம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போதே தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் தலைவர் “கரும்பு உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின் பற்றாக்குறை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறை எனப் பல நெருக்கடிகள் உள்ளன. எனவே, உற்பத்திச் செலவுகளை உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கைவைத்துப் போராடி வருகிறோம். ஆனால், தமிழக அரசு தற்போதுள்ள விலையை விட 250 ரூபாய் மட்டுமே உயர்த்தி, டன்னுக்கு 2,350 ரூபாய் என்று விலையை அறிவித்திருப்பது வேதனையாக இருக்கிறது. கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இது திருப்தி அளிக்கவில்லை” என்றெல்லாம் தெரிவித்தார்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 3இல் “கரும்பு உற்பத்தி புரட்சித் திட்டம்” என்ற தலைப்பில் “எத்தனால் எரிபொருள் உற்பத்தியைப் பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை; டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும் - அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். தேர்தல் அறிக்கையிலே 2,500 ரூபாய் என்று சொல்லிவிட்டு, கடந்த ஆண்டும் 2,100 ரூபாய் என்றுதான் அறிவித்தார்கள். அப்போது கரும்பு விவசாயிகள் எல்லாம் இந்த ஆண்டாவது டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார்கள். ஆனால் இந்த ஆண்டிலும் 2,350 ரூபாய் என்று மட்டுமே அறிவித்திருப்பதைக் கேட்டு நொந்து போயிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சர்க்கரை ஆலை உரிமையாளர்களையும், விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்களையும் கொண்ட முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவித்து வழங்கி வந்தது.
ஆனால், 2001ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. 5 ஆண்டுக் காலம் முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டியோ, விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்களின் கருத்துக்களைக் கேட்டோ முடிவெடுக்காமலேயே மத்திய அரசு விலையை மட்டுமே வழங்கி வந்ததை கரும்பு விவசாயிகள் அனைவரும் அறிவார்கள் அதனை அவர்கள் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்.
எனவே கரும்பு விலை உயர்வு பற்றி 110வது அறிக்கையில் தெரிவிக்காமல், மீண்டும் கரும்பு உற்பத்தி திட்டம் என்றும், அதற்கு 275 கோடி செலவிடப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
தோட்டக்கலைத் துறை பற்றியும் குறிப்பிட்டு, அதற்கு 112 கோடியே 49 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிவித்திருக்கிறார். இந்தத் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், ஆளுங்கட்சிக்காரர்களால் “ஸ்வாகா” செய்யப்பட்டது பற்றி, நான் பல ஆதாரங்களுடன் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அந்த இடத்தை அரசு மீட்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த அழகில் அந்தத் துறைக்கு மேலும் 112 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையைப் பற்றி முதலமைச்சர் படித்த அறிக்கையில் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் நலிவுற்று இருந்ததாக ஒரு குற்றச்சாட்டினை 110வது விதியிலே பேரவையிலே சொல்லியிருக்கிறார். 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோதும், ஏறத்தாழ 1,200 தொடக்க கூட்டுறவு வங்கிகள் நலிந்த நிலையிலேதான் இருந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் 171 கோடி ரூபாய் அளவிற்கு வைப்புத் தொகைகளை திரும்ப வழங்கமுடியாமல் கூட்டுறவுச் சங்கங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து நின்றன. 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 12 வங்கிகள் தேசிய வங்கிகளிடமிருந்து கடன் பெற தகுதி இல்லாமல் இருந்தன. பல கூட்டுறவு விற்பனைச் சங்கங்களும் செயல் இழந்து கிடந்தன. கூட்டுறவு நுகர்வோர் சங்கங்களும் பல கோடி ரூபாய் நட்டத்தில் இருந்தன. இத்தகைய நலிந்த நிலையில் இருந்த கூட்டுறவு இயக்கத்தை கழக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உன்னத நிலைக்கு கொண்டு வந்தோம், அ.தி.மு.க. ஆட்சியில் 199 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நிர்வாகச் சீர்கேட்டால் செயல்படாதது என்று நீக்கி வைத்ததையெல்லாம், கழக ஆட்சியில் மீண்டும் புதுப்பித்து இயங்கச் செய்தோம்.
50 கோடி ரூபாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் செல்வதைக் கண்காணிக்க கணினிமயம் ஆக்கப் போகிறார்களாம். கழக ஆட்சிக் காலத்திலேயே மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொதுவான மென்பொருள் தயாரிக்கப்பட்டு, 1033 வங்கிக் கிளைகளில் 1021 கிளைகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அனைத்திலும் பொதுக்கணக்கு முறை அமுல்படுத்திடவும், அதற்கான பொதுவான மென்பொருளை உருவாக்கிடவும் கழக ஆட்சியில் திட்டமிட்டு, தமிழகத்தில் உள்ள 4531 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் பயன்படுத்திட வழிவகை செய்யப்பட்டது. 38 இலட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மென்பொருளை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, இந்தியா முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைக் கணினி மயமாக்கப் பயன்படுத்த அப்போதே விருப்பம் தெரிவித்தது.
இரண்டு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகளை அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கியதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமையாகச் சொல்லியிருக்கிறார். ஆசியாவிலேயே முதலாவதாக கால்நடைக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக 1990ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியிலேதான் ஒரு புதிய பல்கலைக் கழகமே தொடங்கப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகத்திற்காக 2 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடமும் கழக ஆட்சியிலேதான் கட்டப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எப்போதுமில்லாத அளவாக 274 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழான அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் பேரவையில் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 2013-2014 ஆம் ஆண்டில், மேலும் 100 கால்நடைத் துணை நிலையங்கள் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும், 450 கால்நடை மருத்துவமனைகளில், 115 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகளை மேலும் சீரமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது” என்று பக்கம் 23-24இல் கூறப்பட்டுள்ளது. இதிலே எது உண்மை என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக 6-5-2013 அன்று ஒரு நாளில் மட்டும் வேளாண்மைத் துறைக்காக 965 கோடி ரூபாய்க்கான அறிவிப்புகளும் - உணவுத் துறையைப் பொறுத்து 771 கோடி ரூபாய்க்கான அறிவிப்புகளும் - கால்நடைத் துறையில் 15 கோடி ரூபாய்க்கான அறிவிப்புகளும் என்று அறிவிப்புகளாக அடுக்கியிருக்கிறார்கள். இந்த அறிவிப்புகள் எல்லாம் அமைச்சரவையிலே விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதா? இந்த அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கான அறிவிப்புகள் அன்றாடம் முதலமைச்சரால் செய்யப்படுகிறதே, இந்த அறிவிப்புக்கான திட்டங்களை எல்லாம் நிதிநிலை அறிக்கையிலே ஏன் செய்யவில்லை? ஒவ்வொரு துறைக்குமாக மொத்தம் முப்பதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கிறார்களே, அவர்கள் தங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்தபோது இந்த அறிவிப்புகளையெல்லாம் ஏன் செய்யவில்லை? சட்டப்பேரவை விதியின் கீழ் படிக்க வேண்டிய அறிக்கையையே 110வது விதியின் கீழ் முதலமைச்சரே படிக்கிறார்! யார் தான் எதைப் பற்றித்தான் இப்போது கவலைப்படுகிறார்கள்! ஒரு நாடகமன்றோ நடக்குது நாட்டிலே!
அன்புள்ள, மு.க. 09-05-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗