தொகுதி 48 · கடிதம் 3750
எழுச்சி நாள் வெற்றி பெற பணியாற்றுவோம்!
2013-05-08
உடன்பிறப்பே,
7-5-2013 அன்று “சேது சமுத்திரத் திட்டம்” பற்றி “நாஸா” அமைப்பு தெரிவித்ததாக எதிர்த் தரப்பினர் கூறிய வார்த்தைகளையும், அதற்கு மத்திய அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலு தெரிவித்த பதில்களையும் எழுதியிருந்தேன். அதற்கு மற்றுமோர் ஆதாரமாக “நாஸா” அமைப்பு என்ன தெரிவித்தது என்றால்,
“NASA had issued the following disclaimer when it was brought to their notice that certain statements were attributed to them - “The image may be ours, but their interpretation is not certainly ours........ Remote sensing images or photographs from orbit cannot provide direct information about the origin or age of a chain of islands, and certainly cannot determine whether humans were involved in producing any of the pattern seen” எனவே, அறிவியல் ரீதியாகவோ - ஆழ் கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ - மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது என்பதுதான் உண்மை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் என்பவர் “ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை” என்று தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
20.3.2007 அன்று மத்திய அரசின் சார்பில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஒரு விவாதம் நடைபெற்றபோது, சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.கே.ரகுபதி, ஐ.ஏ.எஸ்., பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வுகள் மூலம் சேது சமுத்திரத் திட்டப் பகுதியில் மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை மத்திய அமைச்சர், துறை அதிகாரிகள், மத அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் உரிய ஆவணங்களுடன் எடுத்து விளக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்து தர்ம ஆச்சாரிய சபை செயலாளர் சுவாமி பரமானந்த சரஸ்வதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், அதிகாரிகள் அளித்த விளக்கம் பற்றித் திருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், பத்திரிகையாளர்களிடம் அவர்கள் அந்தப் பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
சேதுக் கால்வாய் திட்டத்தினால்; ஒட்டுமொத்தத் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திடும் என்பது குறித்துத் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்த திரு.ரகுபதி கூறுவது என்ன?
“செங்கடலையும் மடகாஸ்கரையும் இணைக் கும் சூயஸ்
கால்வாய், பசிபிக் - அட்லாண்டிக் பெருங்கடல்களை
இணைக்கும் பனாமா கால்வாய், வடகடலையும் பால்டிக்
கடலையும் இணைக்கும் கீல் கால்வாய் போன்று
மன்னார் வளைகுடாவையும் பாக் நீரிணையையும்
கால்வாய் மூலம் இணைத்துப் பெருங் கப்பல்
போக்குவரத்தை ஏற்படுத்தும் சேது சமுத்திரத் திட்டம்
தமிழகத்தில் தொழில் வர்த்தக மேம்பாட்டையும்,
பொருளாதார வளர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும்.
இது தமிழகத்துக்குக் கிடைத்துள்ள அரிய பரிசு”
- என்று கூறியிருக்கிறார்.
இதிலிருந்து நடுநிலை உணர்வுகளுடன் சிந்திப்பவர்களுக்கு சேது சமுத்திரத் திட்டத்தின் நியாயம் புலனாகிறது என்பதும் இத்திட்டத்தைத் தடுக்க வேண்டுமென்ற நோக்குடன் செயல்படுபவர்களுக்கு நியாயம் என்றுமே புலப்படாது என்பதும் தெளிவாகிறது.
“பனாமா கால்வாய்” “சூயஸ் கால்வாய்' இந்த இரண்டு கால்வாய்களும் நிலத்தை அகழ்ந்து ஆழப்படுத்தி அதன் வழியாகக் கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் சேது கால்வாய்த் திட்டம் இந்த இரு கால்வாய்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது! வேறுபட்டது! வித்தியாசமானது! வட அமெரிக்கா- தென் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் நிலத்தில் வெட்டப்பட்டது பனாமா கால்வாய்; எகிப்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நிலத்தில் வெட்டப்பட்டது சூயஸ் கால்வாய்! ஆனால் சேதுக் கால்வாய் முழுக்க முழுக்க இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பரப்பில் பாம்பனுக்கு அருகில்; ஆதம் பாலம் எனப்படும் பாறைகளை 40 அடி ஆழப்படுத்திக் கப்பல்களை இயக்கிடத் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
தி.மு.கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றிப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் நீண்டதோர் உரையினை 9-10- 1960 அன்று ஆற்றினார். அதிலே சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசியதாவது:-
“நாம் திட்டவட்டமாக மத்திய அரசிடம் கேட்க வேண்டியது - மத்திய சர்க்கார், மாநில சர்க்காருக்கு என்னென்ன திட்டங்களை, திட்டவட்டமாக நிறைவேற்றப் போகிறீர்கள்? சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் ஆகிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றப் போகிறீர்களா இல்லையா என்று திட்டவட்டமாகக் கேட்க வேண்டும். இந்த நேரத்தில் நான் அமைச்சரவையைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய திறமையைப் பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதில் நீங்கள் வெற்றி பெறுவதிலிருந்துதான், இனிமேல் உங்களுடைய திறமையைப் பற்றி நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். இதைப்பற்றி விசாரித்து அறிக்கை கொடுப்பதற்காக இந்திய சர்க்கார் நமது ராஜ்யத்தின் தலைசிறந்த அறிவாளி திரு.ராமசாமி முதலியார் அவர்களை நியமித்தார்கள். அவர்கள் ஆராய்ச்சி செய்து கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டு அதில் ஏற்படுகின்ற சில்லறை தகராறை வைத்துக்கொண்டு, பத்து கோடியா, பதினைந்து கோடியா என்கின்ற புள்ளி விவரங்களால் ஏற்படும் தகராறை வைத்துக்கொண்டு, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க முடியுமோ என்னவோ தெரியவில்லை. நான் மீண்டும் இந்த தமிழகத்தின் அமைச்சரவையைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றப் போகிறீர்களா அல்லது நாங்கள் இதைவிட்டு விலகவா என்று மத்திய சர்க்காரை இந்தச் சர்க்கார் துணிந்து கேட்க வேண்டும்”
1960ஆம் ஆண்டில் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசியுள்ளார். 1961ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத் திலும், 1966ஆம் ஆண்டு விருகம்பாக்கத்திலும் நடைபெற்ற கழக மாநாடுகளில் சேது சமுத்திரத் திட்டம் தீர்மானமாக வலியுறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு, 1967ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், “எழுச்சி நாள்” கொண்டாடி அதில் சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம் பற்றி அண்ணா அவர்கள் வலியுறுத்தியதோடு சட்டமன்றத் தொடரிலும் இவை பற்றி வலியுறுத்திப் பேசினார்.
தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுக வேலைகள் சுணக்கமுற்று, மீன் பிடித் துறைமுகமாக மாற்ற முயற்சி நடந்தபோது, 1967ஆம் ஆண்டு சென்னை வந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு. வி.கே.ஆர்.வி.ராவ் அவர்களை அவர் தங்கியிருந்த இடத்திற்கே அண்ணா அவர்களும், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நானும் தேடிச் சென்று சந்தித்தோம். அப்போது முன்னாள் முதல்வர், பெரியவர் திரு.பக்தவத்சலம் அவர்களையும் முன்னாள் தொழில் அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று துறைமுகம் நஷ்டத்தில் இயங்கும் நிலைவந்தால், அந்த நஷ்டத்தை மாநில அரசே ஏற்கும் என்ற உறுதியையும் தந்து தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம் வருவதற்குப் பேரறிஞர் அண்ணா பெரும்பாடுபட்டார்.
1972ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவுவாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிலையைப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார், முதல்வராக இருந்த என் தலைமையில் திறந்து வைத்தார். அப்போதும் நான் தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர, சேதுக் கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று பேசினேன்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், “நீண்ட காலமாக வாக்குறுதி அளவிலேயே இருந்து வருகிற சேதுக் கால்வாய் திட்டப் பணியை விரைவில் தொடங்கிச் செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்” (பக்கம் 13) என்று குறிப்பிட்டிருந்தோம். நம்மைப் போலவே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், சேது சமுத்திரம் திட்டம் தேவை என்பது அப்போது வலியுறுத்தப்பட்டிருந்தது. (பக்கம் 33)
சேது சமுத்திரத் திட்டம் 2,427 கோடி ரூபாய்த் திட்டம். இதில் அரசின் மூலதனம் 495 கோடி ரூபாய். இந்தியக் கப்பல் கழகம் 50 கோடி ரூபாய். தூத்துக்குடி துறைமுகம் 50 கோடி ரூபாய். இந்திய தூரவாரிக் கழகம் 30 கோடி ரூபாய். எண்ணூர் துறைமுகம் 30 கோடி ரூபாய். பாரதீப் துறைமுகம் 30 கோடி ரூபாய். சென்னை துறைமுகம் 30 கோடி ரூபாய். விசாகப்பட்டினம் துறைமுகம் 30 கோடி ரூபாய். பொதுமக்களுடைய பங்கு 226 கோடி ரூபாய். அரசு உத்தரவாதம் தருகின்ற கடன் தொகை வகையில் 1456 கோடி ரூபாய். மொத்தம் 2,427 கோடி ரூபாய். இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கான பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன.
இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அந்தக் குழுவின் தலைவர் பிரதமர் ஆவார். மேலும் அந்தக் குழுவில் உறுப்பினர்களாகப் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், சரத்பவார், லாலுபிரசாத் யாதவ், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கமல்நாத், மணிசங்கர் அய்யர் ஆகியோர் இடம்பெற்று இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். சேது சமுத்திரத் திட்டத்தின் வாயிலாக ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதன் வாயிலாகச் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிட்டும். துறைமுகங்களில் கையாளப்படும் ஒவ்வொரு டன் சரக்கின் மூலம் தலா 11 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சேது சமுத்திரத் திட்டம் குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எழுப்பியுள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டுள்ளது. 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டுச் சுற்றுச் சூழல் சம்பந்தமான கூடுதல் பரிசோதனைகள் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நிறைவேறினால் முதல் ஆண்டில் இருந்தே செயலின் இலாபம் இருக்கும். இத்திட்டம் நேரடியாகவே இலாபகரமாக இருக்கும். 1955ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும் தொழில்நுட்ப ரீதியாக இந்தத் திட்டம் சாத்தியமானது என்று நிரூபித்திருக்கின்றன. இதில் எள்ளளவு ஐயம்கூட யாருக்கும் இருந்தது இல்லை. பவளப் பாறைகளை இத்திட்டம் பாதிக்குமா? மன்னார் வளைகுடாவில் ஆதாம் பாலம் பகுதி தவிர, பிற பகுதிகளில் எவ்வித ஆழப்படுத்தும் பணியும் இந்தத் திட்டத்தில் நடைபெறாது. மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடிக்கும், பாம்பன் தீவிற்கும் இடையில் கடற்கரையைச் சார்ந்த மன்னார் வளைகுடா கடல் வாழின தேசிய பூங்கா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவிலிருந்து பத்து கி.மீ. வரை உள்ள பகுதிகள் மன்னார் வளைகுடா கடல் வாழின உயிர்ச் சரணாலயம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 21 தீவுகளைச் சுற்றி ஆழமற்ற பகுதிகளில்தான் பவளப் பாறைகள் அமைந்துள்ளன. ஏற்படப்போகும் கடல் வழிப்பாதையிலோ அல்லது ஆழப்படுத்தப் போகும் ஆதாம் பாலத்திலோ பவளப்பாறைகள் இல்லை என்பது மறுக்க முடியாத ஒன்று. இக்கடல் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களிலிருந்து கழிவுப் பொருட்கள் பன்னாட்டுச் சட்டங்களின்படியும், இந்தியக் கடல் வணிகச் சட்டத்தின்படியும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் கழிவுப் பொருட்கள் குறிப்பாக எண்ணெய் கசிவுகள் பவளப் பாறைகளைத் தாக்கும் வாய்ப்பும் ஒரு சிறிதும் இல்லை. நிலத்தில் அமையப் போகும் கட்டமைப்புகள் தனுஷ்கோடி பகுதிகளில் 12.5 ஏக்கர் பரப்பளவிலும், கோடியக்கரை பகுதிகளில் 2.5 ஏக்கர் நிலப் பகுதியிலும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலம் மட்டுமே இதற்குப் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கட்டமைப்புகள் ஏற்படுவதால் மீனவர்கள் இடமாற்றம் செய்யப்படும் வாய்ப்பும் இல்லை. சில மீனவர்கள் அரசு நிலங்களில் குடிசை அமைத்து வாழ்ந்தால்கூட அவர்களுடைய இடமாற்றத்திற்கான முழு செலவும் திட்ட நிறுவனமே ஏற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உடன்பிறப்பே, இத்தகைய சிறப்பான சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடரக் கூடாது என்றுதான் தமிழக அ.தி.மு.க. அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருக் கிறார்கள். தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருக்கின்ற நிலையிலும், அந்தத் திட்டத்தின் அவசியத்தை எடுத்து மக்களுக்கு விளக்கிடத் தான் வரும் 15ஆம் தேதியன்று தமிழகமெங்கிலும் “எழுச்சி நாள்” கண்டனக் கூட்டங்களை அறிவித்திருக்கிறோம்.
அன்புள்ள, மு.க. 8-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗