உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3749

இந்துக்களை இம்மியளவும் புண்படுத்தாத சேதுத் திட்டம்! கலைஞர் தொடர் கடிதம்-3

2013-05-07

உடன்பிறப்பே,

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 15-5-2013 அன்று தமிழகம் முழுவதும் “எழுச்சி நாள்” கூட்டங்களை நடத்த முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டு மென்பதற்காக 1-5-2013 அன்றும் 3-5-2013 அன்றும் பல குறிப்புகளை நான் எழுதியிருந்தேன். அதனைத் தொடர்ந்து வேறு சில விளக்கங்களையும் தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

இந்திய தீபகற்பம் முழுவதிலும், 3,554 கடல் மைல்தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி அமையப் பெறவில்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் (Sand Stone Reef) அமைந்துள்ளன. அது, ஆதாம் பாலம் (Adams bridge) என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் ஏறத்தாழ 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது.

கப்பலின் பயண தூரத்தைக் குறைப்பதற்காக இந்திய கடற்பகுதிக்குள் கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படும் வகையில், “சேது சமுத்திரக் கால்வாய்” வெட்டுவதற்கு 1860ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.

1860இல் கமாண்டர் ஏ.டி டெய்லர் திட்டம்

1861இல் டவுன்ஸ்சென்ட் திட்டம்

1862இல் பிரிட்டிஷ் பாராளுமன்றக்குழு திட்டம்

1863இல் சென்னை மாகாண ஆளுநர் சர் வில்லியம்

டென்னிசன் திட்டம்

1871இல் ஸ்டோட்டாட் திட்டம்

1872இல் துறைமுக பொறியாளர் ராபர்ட்சன் திட்டம்

1884இல் சாஜான் கோட் திட்டம்

1903இல் தென்னிந்திய ரயில்வே பொறியாளர் திட்டம்

1922இல் இந்திய அரசின் துறைமுக பொறியாளர் சர்

இராபர்ட் பிரிஸ்டோ திட்டம் -என பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும், எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மத்திய அரசு 1955ஆம் ஆண்டில் சர் ஏ.இராமசாமி முதலியார் அவர்களைத் தலைவராகக் கொண்டு சேதுசமுத்திரத் திட்டக் குழு ஒன்றை அமைத்தது. அப்போதைய தெற்கு ரயில்வே தலைமை வர்த்தகக் கண்காணிப்பாளர் எஸ்.கே. முகர்ஜி, கல்கத்தா துறைமுகத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் பி.என்.சட்டர்ஜி, கடல்வள ஆலோசகர் கேப்டன் ஜே.ஆர். டேவிஸ் ஆகியோர் இதன் உறுப்பினர்கள். சர் ஆர்.ஏ. கோபாலசாமி அய்யங்கார், ஐ.சி.எஸ். (1969ஆம் ஆண்டில் கழக அரசு அமைத்த முதல் காவல் ஆணையத்தின் தலைவராகத் திகழ்ந்தவர்) இந்த சேது சமுத்திரத் திட்டக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றினார்.

இந்தக் குழு,

1) இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கு ஆழ்கடல் கப்பல்கள் வந்துசேர ஆடம்ஸ் பாலம் அருகில் ஒரு கால்வாய் வெட்டி மன்னார வளைகுடாவையும், பாக் ஜலசந்தியையும் இணைப்பதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்தது.

2) தூத்துக்குடியை ஆழ்கடல் துறைமுகம் ஆக்குவதற்கு இந்தக் கால்வாய் துணைபுரியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தது.

இதன் பயனாக, தூத்துக்குடி துறைமுகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சேதுக் கால்வாய்த் திட்டம் அவசியமென்று இக்குழு கருதியது.

விரிவான ஆராய்ச்சி, கவனமான மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் சாத்தியமானது என்றும், நன்மை பயக்கக் கூடியது என்றும்,

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே இத்திட்டத்தினை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும், 1956 ஆம் ஆண்டில் சர் ஏ. ராமசாமி முதலியார் குழு பரிந்துரை செய்தது.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன்மூலம் சென்னை தூத்துக்குடி கடல் வழி பயணத்திற்கு 360 கடல் மைல் தூரம் குறையும் என்றும், பயண காலத்தில் ஒன்றரை நாள் மிச்சமாகும் என்றும் இக்குழு தெரிவித்தது. எனினும், சேதுக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென மத்திய அரசினை திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளிலும் இது பற்றிய தீர்மானங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு வந்த தேர்தல் அறிக்கைகளிலும் இத்திட்டம் சேர்க்கப்பட்டு வந்தது.

1967 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க. அரசு அமைந்த நிலையில், எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டு சேது சமுத்திரத் திட்டம் கோரப்பட்டது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 23.7.1967 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்த முடிவு செய்தார். அதனையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் அனைவருடைய ஆதரவையும் கோரினார். அப்பொழுது அண்ணா அவர்கள்,

“சேதுக் கால்வாய் திட்டம் - தூத்துக்குடி துறைமுகத் திட்டம் இரண்டும் ஒருங்கிணைந்தால் அதைத் தமிழகத்தின் “சூயஸ் கால்வாய்” என்று கருதலாம்.

இப்போது சிலோனைச் சுற்றி கொழும்பு துறைமுகத்திற்குப் போய் கிட்டத்தட்ட 600 மைல்கள் சுற்றிக் கொண்டு வருகின்ற வெளிநாட்டுக் கப்பல்கள், இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் அந்நிலைமையை தவிர்த்துவிட இயலும்.

வெளிநாட்டுக் கப்பல்கள் - பிரமாண்டமான கப்பல்கள் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிற்க முடியாது. ஆழ்கடல் துறைமுகமாக இருக்குமானால் பெரிய கப்பல்கள் வர பல நாட்டுக் கப்பல்கள் வரத்தக்க பெரிய அனைத்து நாட்டுத் துறைமுகமாக மாறும்.

அப்படி மாறும்போது பல்வேறு வகையான தொழில்கள் கிடைக்கும். அப்படி கிடைக்குமானால் பொருளாதார வளர்ச்சி நிரம்ப ஏற்படும்”

-என்று கூறி தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை அண்ணா வலியுறுத்தினார்.

சேலம் இரும்பாலைத் திட்டத்தையும், சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்தையும் நிறைவேற்றிட தமிழகம் முழுவதிலும் 23.7.1967 அன்று “எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த எழுச்சி நாளின்போது தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் எழுச்சி நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில்,

“தூத்துக்குடி, சேலம் திட்டங்கள் ஏன் தேவை - எதற்குத் தேவை என்பனவெல்லாம் ஆண்டுக் கணக்காக தமிழ்நாட்டுத் தலைவர்களால் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதை இந்தக் கூட்டம் மீண்டும் நினைவூட்டுகிறது. சேலம் இரும்பு உருக்காலையும், தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகமும், தமிழர்களின் இன்றியமையாத் தேவை என்பதை சர்வ கட்சியினரும் அடங்கிய இந்தக் கூட்டம் மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தெரிவிப்பதுடன், இந்தத் திட்டங்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்றுவதற்கு உடனடிச் செயல்களில் முனைந்து ஈடுபட வேண்டுமென்று மத்திய அரசை மிக அழுத்தமாக வற்புறுத்துகிறது” என்று எழுச்சி நாள் கூட்டத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2004ஆம் ஆண்டு மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகு தான், ● சேதுசமுத்திரத் திட்டம் 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ● ஏறத்தாழ 150 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறக் கூடிய நாளாக 2.7.2005 அமைந்தது. ● 2.7.2005 அன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்களும், நானும் முன்னிலை வகித்தோம். ● சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் பணி தொடங்கி சிறப்பாக நடைபெறவும் தொடங்கியது. ஆனால் திட்டம் தொடங்கி, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இந்தத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட பிறகு, இத்திட்டம் நடைபெற்று விட்டால், தி.மு.கழகத்திற்கு பெயர்வந்து விடுமே என்ற ஒரே காரணத்திற்காக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பல்வேறு முயற்சிகளிலே ஈடுபடுகிறார்கள். ராமர் பாலம் என்றெல்லாம் அதற்கு வர்ணம் பூசி மதப் பிரச்சினைகளை ஏற்படுத்த முயலுகிறார்கள். ராமா சேது பாலம் எதுவும் அந்தப் பகுதியில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும், எந்தவொரு தொல்லியல் ஆராய்ச்சியும் இப்படி ஒரு பாலம் இருந்ததாக உறுதி செய்யவில்லை என்றும் திட்டவட்டமாக மத்திய அரசின் சார்பில் மாநிலங்களவையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திருமதி அம்பிகா சோனி அவர்களால் எழுத்துப் பூர்வமான பதிலிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்ட சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழு தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன் 25-4-2007 அன்று செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “ராமர் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம். அதில், கடலில் உள்ள படிமங்கள்தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமா பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்து விடும் வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரமாக செயற்கைக்கோள் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான “நாஸா” வெளியிட்டிருப்பதாகக் கூறினர்.

“ராமர் பாலம் இருப்பதாக நாஸா படங்களை வெளியிட்டதாகக் கூறுவதில் உண்மை இல்லை” என்று அப்போதே மறுத்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, “நாஸா” அமைப்புக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது குறித்து நாஸா எந்தவிதமான பதிலும் அனுப்பவில்லை” என்றும் அப்போதே விளக்கினார்.

மேலும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இராமநாதபுரத்தில் அளித்த பேட்டியில் “ஒட்டு மொத்த இந்து மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் தனுஷ்கோடி கடலில் ராமர் பாலம் இருப்பதாக பிரச்சினையை கிளப்புகிறார்கள். அந்தக் கடல் பகுதியில் மனித கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததாக துளி அளவு கூட ஆதாரம் இல்லை. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ் துளை சோதனை நடத்திப் பார்த்ததில் பாலம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரமோ, சுற்றுச் சூழல் பாதிப்போ இல்லை. இந்து மக்களின் மனம் புண்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கான அறிவியல் ஆய்வு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. டெல்லியில் இந்து மத சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டினோம். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்” என்று தெளிவாக்கினார். தொடர்ந்து மீண்டும் எழுதுகிறேன்.

அன்புள்ள, மு.க. 07-05-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗