தொகுதி 48 · கடிதம் 3748
“வாய் நீளம்” தோற்றுப்போகும்; “வாய்மையே வெல்லும்!”
2013-05-05
உடன்பிறப்பே,
3-5-2013 அன்று என்ன காரணத்தாலோ முதலமைச்சர் பேரவையில் 110வது விதியை விட்டுவிட்டார். கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை முதலமைச்சரே முன்மொழிந்து, அவரே அந்தத் தீர்மானத்தின் மீது நீண்ட நேரம் பேசி நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்றால், அதைப்பற்றி முன்கூட்டியே உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருந்தால், அந்தப் பொருள் பற்றி அவையிலே பேசுவதற்கு உறுப்பினர்கள் தயாராக வந்திருப்பார்கள். ஆனால் முதல் நாள் இரவுதான் மன்ற உறுப்பினர்களுக்கே தெரிவித்து மறுநாள் முதலமைச்சர் தனக்கென ஓர் உரையைத் தயாரித்து வைத்துக்கொண்டு, அவையிலே உள்ள மற்றவர்கள் அந்தப் பொருள் பற்றி விரிவாகப் பேசுவதற்கு இடமே அளிக்காமல், அந்த உரையைப் படித்து முடித்துவிட்டார்.
முதலமைச்சர் பேரவையிலே படித்த உரையைத் தமிழ்நாட்டு மக்களை ஒருமுறை கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த உரையில்; தொடக்கம் முதல் முடிகின்ற வரையில் எனக்குச் செய்யப்பட்ட “அர்ச்சனை” தான்! கச்சத் தீவை மீட்க வேண்டுமென்றால் மீட்க வேண்டியதுதானே? அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் வேண்டுகோள் அவர்களுக்கு விடுக்க வேண்டியதுதானே? இதிலே என்மீது “புகழ”(?) பாடுவதற்காகப் பேரவையிலே ஒரு தீர்மானமா?
திடீரென்று கச்சத் தீவு பற்றிய தீர்மானம் அம்மையாருக்கு எப்படி நினைவுக்கு வந்தது? கடந்த மாதம் 15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் பேரவையில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் கொண்டுவர உசுப்பி விட்டிருக்கிறது போலும்!
“டெசோ” நிறைவேற்றிய தீர்மானத்தின் இறுதியாக; இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்துச் சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்டரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தில் ஜெயலலிதாவைப் பற்றியோ, அவரது கட்சியைப் பற்றியோ நாம் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் இவ்வளவு நேரம் செலவிட்டு என்னைப் பற்றி “புராணம்” பாட வேண்டுமா என்ன?
இலங்கைத் தமிழர்களுக்காக - தமிழக மீனவர்களுக்காக என் வாழ்நாளில் நான் பாடுபட்டேனா இல்லையா என்பதை அவர்களே அறிவார்கள், தமிழ்நாட்டு மக்களே அறிவார்கள். அதற்காக நான் தமிழக முதலமைச்சரிடம் சான்றிதழா கேட்டேன்?
“கச்சத் தீவை மீட்டே தீருவேன்” என்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு சூளுரைத்ததைப்போல நானா சூளுரைத்தேன்? அவர் சபதம் செய்துதான் 22 ஆண்டுகள் ஓடிவிட்டன! என்ன செய்து முடித்துவிட்டாரா? 15-8-1991 அன்று ஜெயலலிதா என்ன பேசினார்? “கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது” என்று முழங்கியது நானா? ஜெயலலிதாவா? அப்படிச் சவால் விட்டுவிட்டுத் தற்போது என்னைப் பார்த்து, ஏன் போராடவில்லை என்றும், துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்றும் குற்றம் சாட்டுவது நியாயம்தானா?
25-12-1990 அன்று சங்கராச்சாரியாரைச் சந்திக்க வந்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் அவர்களைத் தனது வீட்டிற்கே அழைத்து ஜெயலலிதா தேநீர் விருந்து கொடுத்து, தொடர்ந்து டெல்லி சென்று பிரதமரிடமும், குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனிடமும் தி.மு. கழக ஆட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. எனவே அந்த ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று நேரில் புகார் மனுக் கொடுத்தாரே ஜெயலலிதா, அதைப்போல கச்சத் தீவுப் பிரச்சினைக்காக டெல்லி சென்று பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் எத்தனை முறை சந்தித்தார்? என்னென்ன போராட்டங்களை, எந்தெந்தத் தேதியிலே நடத்தினார் என்று பட்டியலிட முடியுமா? 20-4-1992 அன்று இதே சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறினாரே, அதை மறந்துவிட்டுத் தற்போது நான் கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை, எதை மீட்டிக் கொண்டிருந்தேன் என்று கேள்வி கேட்டால் என்ன செய்வது? சட்டப்பேரவையிலேயே: “கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று ஜெயலலிதாவே பேசிவிட்டு, இப்போது என்மீது குறை கூறுவது என்ன வேடிக்கை? ஜெயலலிதா மேலும் அப்போது பேசும்போது, “மீனவர்கள் இண்டர்நேஷனல் பவுண்டரி லைனைக் கடந்து சென்று கச்சத் தீவு அருகில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்தால்தான் அவர்களுக்குப் போதிய அளவு நல்ல வகை மீன்கள் கிடைக்கின்றன. நம்முடைய இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்றால், அவர்களுக்குத் தேவையான அளவு நல்ல ரக மீன்கள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பலமுறை இண்டர் நேஷனல் பவுண்டரி லைனைக் கடந்து செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் அவர்களுடைய படகுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்கள் பிடித்து வைத்திருக்கின்ற மீன்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு, அவர்களுடைய படகுகளை எரித்து, இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன” என்று பேரவையில் குறிப்பிட்டாரா இல்லையா?
கச்சத் தீவை தாரைவார்க்கத் தி.மு.க. எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவும் இல்லை, தாரைவார்க்க உடன்படவும் இல்லை. தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவுப் பிரச்சினையை எழுப்பிக் கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை.
ஒன்றைச் சொல்ல வேண்டுமேயானால் - 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “The ceding of this tiny island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான் - என்று அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறிப்பிட்டது உண்டா இல்லையா?
முதலமைச்சர் ஜெயலலிதா தனது உரையில், ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கப்போவது தெரிந்திருந்தும் ஏன் எந்தவிதமான நடவடிக் கையையும் கருணாநிதி உடனே எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
ஒப்பந்தம் 26/28-6-1974 அன்று கையெழுத்தான உடனேயே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினேன். அதில் பொன்னப்ப நாடார், ஏ.ஆர். மாரிமுத்து, ஆறுமுகசாமி, திருப்பூர் மொய்தீன், அப்துல்வகாப், அரங்கநாயகம், வெங்கடசாமி, ஜி. சாமிநாதன், ஈ.எஸ். தியாகராசன், ஏ.ஆர். பெருமாள், சக்திமோகன், மணலி கந்தசாமி, ம.பொ.சி., ஏ.ஆர். தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட அப்போதே மறுத்துவிட்டது. ஆனால் அதே 29ஆம் தேதியன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
Dear Prime Minister,
On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the decision contained in the Resolution and take appropriate action? என்று எழுதியிருக்கிறேன். இதுதான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்துவிட்டேன் என்பதற்கான ஆதாரமா? “துரும்பைக் கூடக் கிள்ளிப்போடவில்லை” என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே; துரும்பைக் கிள்ளிப் போட்ட தற்கான ஆதாரம்தான் இது!
அதுமாத்திரமல்ல; 24-7-1974 அன்று கச்சத்தீவுப் பிரச்சினைக்காகத் தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்களைத் தி.மு.க. நடத்தியது. தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களிலே முதலமைச்சராக இருந்த நானே கலந்து கொண்டேன். 23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை வந்தபோது, “தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அப்போது தி.மு. கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா. செழியன் குறிப்பிட்டார். “தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும்” என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலேயே அதாவது 21-8-1974 அன்று பேரவையில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, கச்சத் தீவின்மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என்பதாகும். ஆனால் இந்தத் தீர்மானத்தை ஜெயலலிதா, “பெயரளவிலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக” தற்போது சொல்லியிருக்கிறார். நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் “பெயரளவிலே” நிறைவேற்றப்பட்டது, அம்மையார் நிறைவேற்றினால் மட்டும் “முழு மனதோடு” நிறைவேற்றப்படுவதா?
அடுத்து ஜெயலலிதா தனது நீண்ட உரையில் எடுத்து வைத்திருக்கும் மற்றொருவாதம் - “1974இல் திரு. கருணாநிதி கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன், பதறிப் போனேன் என்கிறார். ஆனால் 2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன பித்தலாட்டம்” என்று பேரவையில் பேசியிருக்கிறார். “பித்தலாட்டம்” என்று யாரோ ஒரு உறுப்பினர் அல்ல; முதலமைச்சரே இப்படிப் பேசி அவை நடவடிக்கைக் குறிப்பிலே இடம்பெற்றுள்ளது.
15-4-2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, குறைந்தபட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஜெயலலிதா நேற்றையதினம் பேரவையில், “ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, கருணாநிதி சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்; இது என்ன பித்தலாட்டம்” என்று கேட்டிருக்கிறார். தீர்மானத்தில் “ஒப்பந்தம் கையெழுத்தானபோது” என்றுதான் இருக்கிறதே தவிர, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே” என்று குறிப்பிடப்படவில்லை. இதில் இருந்து யார் செய்தது பித்தலாட்டம் என்பதையும், பேரவையில் முதலமைச்சரே உண்மையை மறைத்துத் தவறான தகவலைத் தெரிவித்திருக்கிறார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
அடுத்து, ஜெயலலிதா தனது உரையில் “கச்சத் தீவுப் பிரச்சினையில் திரு. கருணாநிதியின் செயலற்ற தன்மை காரணமாக, இரட்டை நிலை காரணமாக, தனக்கே இயல்பான கபட வேடம் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். சட்டப் பேரவையில் ஒரு முதலமைச்சரே இந்த அளவிற்குக் கடுமையாக என்னைத் தாக்கிப் பேசுவது முறைதானா என்பதை தமிழ்நாட்டு மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.
எது இரட்டை நிலை? “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும்” என்று பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்துவிட்டு, தற்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறாரே; அதுவல்லவா இரட்டை நிலை!
இலங்கையிலே அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, “போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று பேரவையில் ஜெயலலிதா முழங்கினாரே, அதற்குப் பெயர் இரட்டை நிலையா? கபட நாடகமா? ஏதோ எப்படியோ பதவியிலே இருக்கிறோம், நம்மை எதிர்க்க யாரும் இல்லை, நாம் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம், நாம் பேசி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால், கைதட்டி அதற்கு தலையாட்டுவோர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் இப்படியெல்லாம் பேசலாமா?
ஜெயலலிதா திரும்பத் திரும்ப தனது உரையில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகப்போவது எனக்குத் தெரியும் என்பதைப் போலக் கருதிக்கொண்டு பேசியிருக்கிறார். இதற்கு நான் விளக்கம் சொல்வதைவிட 17-8-1991 அன்றே “தினமணி” நாளேடு எழுதிய தலையங்கத்தில், “1974இல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி திருமதி பண்டாரநாயகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமுன்னர் இதைப் பற்றித் தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை” என்று அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், “1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களைக் கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்குக் கச்சத் தீவின் அருகில் மீன் பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது” என்று எழுதப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது மீன் பிடிக்கும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறுவது சுத்தப்பொய், பித்தலாட்டம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
1996ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலும், பிறகு 2006 முதல் 2011 வரையிலும் தி.மு.கழகம் தானே ஆட்சியிலே இருந்தது, அப்போது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். நான் திரும்ப 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதலும் ஜெயலலிதாதானே ஆட்சியிலே இருக்கிறார், இவர் ஏன் கச்சத் தீவை மீட்கவில்லை என்று கேட்டால் இவர் எங்கே கொண்டுபோய் முகத்தை வைத்துக்கொள்வார்?
2006ஆம் ஆண்டு முதலமைச்சராக திரு. மு. கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார், இருந்தாலும் கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட, கச்சத் தீவுப் பிரச்சினையில் அ.தி.மு.க. ஆட்சி 1991ஆம் ஆண்டு பேரவையிலே கொண்டு வந்த தீர்மானத்தையும் நினைவூட்டி 22- 9-2006 அன்று நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் - “I am sure you are also aware of the fact that the Legislative Assembly of Tamil Nadu had passed a Resolution in 1991 on this issue wherein the Tamil Nadu Legislative Assembly called upon the Government of India to take all urgent action and efforts necessary to get back Katchathivu and restore it to the Indian territory apart from moving the Sri Lankan Government to pay compensation for families of fishermen killed by the Sri Lankan Navy as well as those who have lost their belongings in the attacks by them. Government of India was also requested to move the Sri Lankan Government to create “Congenial conditions for Tamil Nadu fishermen to lead a peaceful life” - என்றும் நினைவூட்டியிருக்கிறேன்.
கிறித்தவர்களும், மற்றவர்களும் ஆண்டு தோறும் கச்சத் தீவுக்குச் சென்று அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தத் திருவிழாவே நடக்கவில்லை. 2010ஆம் ஆண்டு கழக ஆட்சியிலேதான் நான் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசிடம் இதுபற்றிப் பேசி மீண்டும் அந்தக் கோவில் திருவிழா நடைபெற்றது.
23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பாற்றவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதியிருக்கிறார். “The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theevu could be upheld at the same time.” - அதாவது, கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காயவைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் - என்று இப்படியெல்லாம் அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைக்கு நம்மைப் பாத்துக் கேள்விக் கணை தொடுக்கிறார்; பாவம்!
ஜெயலலிதா ஏற்கனவே ஒருமுறை வெளியிட்ட அறிக்கையிலே ஒன்றைச் சொல்லியிருக்கிறார். “கச்சத் தீவுப் பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்று அவரே வெளியிட்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு, தான்தான் இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் “அவதாரம்” எடுத்ததைப் போலவும், மற்றவர்கள் எல்லாம் எதுவுமே செய்யவில்லை என்பதைப் போலவும் கருதிக் கொண்டு, தனக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகச் சட்டப்பேரவையில் சண்டமாருதம் செய்துவிட்டுப் போகட்டும்; அதற்காக என்னைப் பற்றி “வாய் நீளம்” காட்டிப் பேசினால், அவர் அதில் தோற்றுத்தான் போவார்! “வாய்மையே வெல்லும்” என்பதை நாம் நிலைநாட்டியே தீருவோம்.
அன்புள்ள, மு.க. 5-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗