தொகுதி 48 · கடிதம் 3747
அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக?
2013-05-03
உடன்பிறப்பே,
சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களின் எத்தனை ஆண்டுக் காலக் கனவு?
150 ஆண்டுக் காலமாக தமிழ்மக்கள் கண்ட கனவு தான் சேது சமுத்திரத் திட்டம். பேரறிஞர் அண்ணா அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆட்சியிலே இருந்த போதே “எழுச்சி நாள்” கடைப்பிடித்தார். தி.மு.கழகம் மாத்திரமல்ல; அ.தி.மு.க.வும் 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததை மக்கள் மறந்து விடவில்லை. மத்தியிலே அமைகின்ற ஆட்சியிடம் சேது திட்டத்தை வலியுறுத்திக் கேட்டுப் பெறுவோம் என்றார்கள். அவர்களே தற்போது சேது சமுத்திரத் திட்டம் வேண்டாமென்று உச்சநீதிமன்றத்திலே 29-4-2013 அன்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஏன்? அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதே 10-5-1986 அன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகளின் துவக்க விழா 2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 2ஆம் நாள் மதுரை மாநகரமே குலுங்குகின்ற வண்ணம் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டிருந்து நடத்திய காட்சிதான் தற்போது என் கண்ணுக்குத் தெரிகிறது. மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுதான் மதுரை விழாவுக்குத் தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சேது சமுத்திரத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். திருமதி சோனியா காந்தி அம்மையாரும், நானும் விழாவிற்கு முன்னிலை வகித்தோம். தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழக அரசின் ஒரே பிரதிநிதியாகச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், தயாநிதிமாறன், ஆ.இராசா, அன்புமணி ராமதாஸ், மணிசங்கர அய்யர், கே.எச். முனியப்பா ஆகியோரும், தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., டாக்டர் ராமதாஸ், வைகோ, என்.வரதராசன், தா.பாண்டியன், கே.எம். காதர்மொகிதீன் எம்.பி. ஆகியோரும் விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த விழாவில் அவர்கள் உரையாற்றியதைத் தற்போது நினைவுபடுத்துவதும் என் கடமை.
பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பேசும்போது, “மதுரையில் இன்று சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டச் செயல்பாடுகளைத் துவக்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்நாள் இந்திய மக்களுக்குக் குறிப்பாகத் தமிழக மக்களுக்குத் தேசிய குறைந்தபட்ச செயல் திட்டத்தில் எங்களது அரசு கொடுத்த புனித வாக்குறுதியை நிறைவேற்றும் நன்னாள். சேது சமுத்திரத் திட்டம்; கடல் பொருளாதார வருவாயைப் பெருக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
150 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கனவு இன்று நிகழ்வுக்கு வந்திருக்கிறது. இக்கனவை நனவாக்கிய நமது மதிப்புமிகு தலைவர்களான திரு.கருணாநிதி அவர்களையும், திருமதி. சோனியாகாந்தி அவர்களையும் பாராட்டுகிறேன்.
சேது சமுத்திரத் திட்டம் இந்தியத் துறைமுகத் துறையில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாபெரும் திட்டமாகும். இது பயண நேரத்தைக் குறைக்கிறது. அத்துடன் மீனவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அமையக்கூடியது. இந்தத் திட்டம் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மேம்பாட்டினையும் தமிழக மற்றும் கோரமண்டல கடற்கரைப் பகுதிக்குக் கொண்டுவரும் என்பதில் எனக்கு எவ்வித அய்யமும் இல்லை. இந்தப் புதிய முயற்சி மற்றும் தொழில் முனை செயல்பாடுகளில் சேது சமுத்திரத் திட்டம் ஒரு முக்கியப் பங்குவகிக்கும். இந்தத் திட்டம் நமது நாட்டின் தலைசிறந்த கடல் வாணிக மரபை மீண்டும் புதுப்பிக்கும் என்று நான் நம்புகிறேன். சிறிது நேரத்துக்கு முன், கலைஞர் கருணாநிதி அவர்கள் இங்கே பேசும்போது சென்னையில் உலகத் தரம் வாய்ந்த வாகன சோதனை மையம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். உலகத் தரம் வாய்ந்த வாகன சோதனை மையத்தைச் சென்னை அருகே ஒரகடத்தில் அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதை இங்கே நான் அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
திருமதி சோனியாகாந்தி அவர்கள் பேசும்போது, “இன்று ஒரு 150 ஆண்டுக் கனவு நனவாகின்றது. இத்தனை ஆண்டுக் காலமாக சேது சமுத்திரத் திட்டம் பேசப்பட்டு வந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த எதுவும் செய்யப்படவில்லை. இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொழில்நுட்ப சவாலான, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, இந்தத் திட்டத்தை நனவாக்க உறுதியுடன் காலடி எடுத்துவைத்திருக்கின்றது. இம்மாபெரும் திட்டம் இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு தொடர்ச்சியான கடல்வழிப் பாதை அமைப்பதால், தேசிய அளவிலும், மண்டல அளவிலும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு, குறிப்பாகத் தென் மாவட்டங்கள் இத்திட்டத்தால் பெரும் பயனடையும். தமிழகத்தின் கடலோரப் பகுதியின் பொருளாதாரமும், கடல் வணிகமும் பெரும் வளர்ச்சி பெறும்” என்றார்.
மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம் உரையாற்றும்போது, “2004 மே மாதம் 22ஆம் நாள் மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. சரியாக ஆறு வார காலத்திலே பிரதமர் ஒப்புதல் அளித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து, 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதியன்று, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று முதல் நிதிநிலை அறிக்கையிலே அறிவித்தோம். இதோ 2005ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மகத்தான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறோம். 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய்ச் செலவிலே இத்திட்டம் நிறைவேறப் போகிறது. இந்தத் திட்டத்திற்கு வாங்கப் போகிற கடன் தொகைக்கு மத்திய அரசு தன் உறுதியை அளித்திருக்கின்றது. ஆகவே நிச்சயமாக இந்தத் திட்டம் குறித்த காலத்திலே குறித்த செலவுத் தொகையிலே நிறைவேறும்” என்றார்.
சேதுசமுத்திரத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ, “1967ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள், “சேதுக் கால்வாய் அமையட்டும், செந்தமிழ் நாடு செழிக்கட்டும்” என்று எழுச்சி நாள் கொண்டாடிய அதே ஜூலை மாதத்தில் இந்தத் திருவிழா நடைபெறுவது சாலப் பொருத்தம். இந்தச் சேது சமுத்திரத் திட்டம் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரும், காங்கிரசின் கே.டி. கோசல்ராமும் குரல் கொடுத்த திட்டம். என் ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்கள், 1958ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்திலே முரசு கொட்டிய திட்டம். டாக்டர் ராமசாமி முதலியார் கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற ஏன் இன்னும் தாமதம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், அதே சட்டமன்றத்தில் சங்கநாதம் எழுப்பிய திட்டம். பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய வற்புறுத்தலால் பண்டித நேரு அவர்கள் 1963 செப்டம்பர் 12இல் அறிவித்த திட்டம். 1998இல் செப்டம்பர் 15இல் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த தின விழா மறுமலர்ச்சிப் பேரணியில் சேதுக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம். 24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் என் சக்திக்கேற்ற வகையில் எல்லாம் குரல் கொடுத்தும், 2004ல் எனது ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்கள் முயற்சியில்; மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குகின்ற பொறுப்பை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் ஏற்றிருந்த நேரத்திலே அவர்கள் இடத்திலே சென்று சேதுக் கால்வாய்த் திட்டத்தைக் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேருங்கள் என்று சொன்னதை ஏற்று அவர்கள் சேர்த்துக் கொடுத்த திட்டம். இது தொடங்குகிற நாள் மகிழ்ச்சிக்குரியது. பனாமா கால்வாயைப்போல் - சூயஸ் கால்வாயைப் போலப் புகழ் பெறப் போகும் இந்தத் தமிழன் கால்வாய்க்கு 2427 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தந்துள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே உங்கள் பெயரும் உங்கள் அரசின் பெயரும் காலக் கல்வெட்டிலே பதிக்கப்படும்” என்றெல்லாம் தெரிவித்தார்.
மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும், இந்த நாளுக்குத்தான் ஏங்கிக் கொண்டிருந்தோம். இந்த நாள் மிக முக்கிய நாள். வரலாற்றில் இந்த நாள் அனைத்துத் தமிழர்களுக்கும் மிக முக்கிய நாள். அதை விட இங்கே நம்முடைய தமிழகத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் பல ஆண்டு காலமாக இந்தத் திட்டம் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று மிகவும் பாடுபட்டு, அந்தக் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு பல சாதனைகளைத் தமிழகத்திற்குச் செய்து கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கிய சாதனை இந்த சேது சமுத்திரத் திட்டம்” என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த இன்றைய மத்திய அமைச்சர் தம்பி ஜி.கே.வாசன் பேசும்போது, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தமிழக மக்களுடைய நீண்ட நாள் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை இன்றைக்கு நிறைவேற்றியிருக்கின்றது. இது தமிழகத்திற்குக் கிடைத்த பெருமை. சேதுசமுத்திரத் திட்டம் வரும் வருடங்களிலே தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டுவரக்கூடிய அடித்தளமான திட்டம். அத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்திற்குப் பின்னால் மிகச் சிறந்த முறையிலே குரல் கொடுத்த ஐயா கலைஞர் அவர்களுக்கும், பிரதமருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த என். வரதராசன் உரையாற்றும்போது, “சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் வறுமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கக் கூடிய காலம் இது. அத்தகைய போராட்டத்திற்குச் சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகள் பயன்பட வேண்டும். வேலைவாய்ப்பை நல்குகிற திட்டமாக இது வளர்க்கப்பட வேண்டும். ஒரு நல்ல திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய தா. பாண்டியன், “இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கும், இன்னொரு வகையிலே இந்திய நாடு முழுமைக்கும் நல்ல ஒரு திருநாள். தேங்கிக் கிடந்த ஒரு திட்டத்தை இன்று துவங்குகிற நல்ல நாள்.
145 ஆண்டுகளாகக் கருக்கொண்டிருந்த ஒரு குழந்தை அவதரித்திருக்கிற நாள். இந்நாள் வெட்டப்படுவது கால்வாய் என்றாலும், அது தூண்டிவிடப் போவது இந்தத் தமிழ்நாட்டின் பொருளாதார மாற்றத்தை, வளர்ச்சியை. அது இந்திய நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும். சுற்றி வரும் கப்பல்களின் கால் அளவைக் குறைக்கும். எனவே இது நாட்டுக்கு நல்ல செய்தி. சிலர் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கே சிறப்பாக விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.
அந்த விழாவிலே நான் பேசும்போது, “இன்று இனிய நாள். “எழுச்சி நாள்” எழுச்சி வெற்றி பெற்ற நாள். 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது உரிமைகளை எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் விட்டுத்தர மாட்டோம், அந்த உரிமைகளுக்காக அதை வழங்கக் கூடியவர்கள் இடத்திலே வாதாடுவோம், போராடுவோம் என்பதற்கேற்ப “எழுச்சி நாள்” கொண்டாடி, தூத்துக்குடி துறைமுகம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகியவைகளோடு இணைத்து சேது சமுத்திரத் திட்டமும் வேண்டும் என்று வாதாடியபோது அந்த எழுச்சி நாள் கூட்டங்களிலே அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா உரையாற்றியபோது, இந்தத் திட்டம் நிறைவேறுமா என்பது உள்ளபடியே கேள்விக் குறியாக இருந்தது.
பல கட்சிகளை ஒன்றாகச் சேர்த்து, இந்தக் கூட்டணியால் கட்சிகளை மாத்திரமல்ல, கடல்களையும் இணைக்க முடியும் என்பதற்கு அடையாளமாக அந்த இணைப்பின் வடிவமாக - சின்னமாக - சேது சமுத்திரத் திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்குகின்றோம். இந்தத் திட்டத்தினால் ஏற்படக் கூடிய பயன்கள் எவை எவை என்பதை நம்முடைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்பது மன்னார வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைத்து ஆதம் பாலம் வழியாக இந்தியக் கடற்பரப்பில் ஒரு கடல் வழித் தடத்தை உருவாக்குவது ஆகும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தக் கால்வாய் இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மாத்திரமல்லாமல், இந்த நாட்டிற்கே தொழில் வளத்தைப் பெருக்கக் கூடிய ஆதார சுருதியாக விளங்குகின்ற திட்டமாகும்” என்றெல்லாம் எடுத்துரைத்தேன்.
அந்தத் தொடக்க விழாவினையே தடுத்து நிறுத்திட வேண்டுமென்று அப்போது சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக் கொடுத்தார்கள். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,
“தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தைத் தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடாக் கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழா வுக்குத் தடை கிடையாது” என்று கூறித் தீர்ப்பளித்தது.
இவ்வளவையும் மீறி மக்களின் வரிப்பணம் 829 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காகச் செலவிட்ட பிறகு, தற்போது மதம் சம்பந்தமான காரணங்களைத் தெரிவித்து எப்படியாவது இந்தத் திட்டத்திற்கு மூடு விழா செய்திட நினைப்பதைத் தமிழகம் புரிந்துகொள்ள வேண்டாமா? இந்தத் திட்டத்தினால் தென் தமிழகம் பெரும் பயன்பெறும், குறிப்பாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்த பிறகும், இந்தத் திட்டம் வரக் கூடாது என்று நினைப்பது முறைதானா? மாநிலத்திலே ஆட்சியிலே இருப்போர், இதுபோன்ற திட்டங்களை எப்படியாவது பெற்று, அதனை நிறைவேற்றி மாநில மக்கள் பயன்பெற நினைப்பார்களே தவிர, மிகுந்த முயற்சியெடுத்துப் பெற்ற திட்டம் தேவையில்லை என்று அரசின் சார்பிலேயே நீதிமன்றத்திற்குச் சென்று தெரிவிப்பார்களா? தமிழ்நாட்டு மக்களுக்கு இதையெல்லாம் புரியவைக்க வேண்டிய கடப்பாடு தி.மு.கழகத்திற்கு உண்டு. அதை நிறைவேற்றுவதற்காகத்தான் தலைமைக் கழகத்தின் சார்பில் 15-5-2013 புதன்கிழமை அன்று தமிழகமெங்கும் சேது சமுத்திரத் திட்டம் தொடரப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி “எழுச்சி நாள்” கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. எப்போதும்போல, இந்தக் கூட்டங்களையும் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக நடத்திட வேண்டுமென்று சேது சமுத்திரத் திட்டத்திற்காகப் பெரிதும் பாடுபட்டவர்களில் ஒருவன் என்ற முறையில் உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள, மு.க. 3-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗