தொகுதி 48 · கடிதம் 3746
காழ்ப்புணர்வின் உச்சகட்டம்!
2013-05-01
உடன்பிறப்பே,
15-9-2007 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட நான் என் பேச்சின் இறுதியாக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அந்தக் கூட்டத்தில் அது நிறை வேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் வருமாறு :-
“ஏறத்தாழ நூறாண்டுக் காலக் கனவாகவும், திராவிட இயக்கத்தின் தனிப் பெரும் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வந்த சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியாகாந்தி அவர்களும் பேருதவி புரிந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள நிலையில், அதனைக் கெடுத்து, தென்னக மக்களுடைய பொருளாதார வளம் பெருகிட இயலாமல், ராமர் பாலம் என்ற மதவாத மிரட்டலைச் செய்திட ஒரு சில மதவாத அமைப்புகள் குறுக்கே நிற்பதற்கு; மத்திய அரசு அஞ்சி அதற்கு இடம்தரக் கூடாது என்றும், மதவாத மூட நம்பிக்கைகளை வேரோடுகளையப் போரிட்ட ஈரோடு தந்தை வள்ளல் பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாகத் தென்னக மக்களின் சார்பில் குரல் கொடுக்கிறோம்”
இது கழகப் பொதுக் கூட்டத்தில் 2007இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆனால் இதற்கு எதிர்ப்பாக இன்னொரு தீர்மானம்; அது என்ன தெரியுமா?
“சேது சமுத்திரத் திட்டத்தின் பெயரால் ராமர் பாலத்துக்குச் சேதம் விளைவிக்க மத்திய அரசு முயற்சித்தால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும். ராமர் பாலத்தைச் சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. ஏற்காது. ராமர் பாலம் இல்லாமல் ராமாயணம் கிடையாது. இந்தியாவின் அடையாளமும் முழுமையாகாது” என்று பா.ஜ.க.வின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் 3-3-2013 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அந்தக் கூட்டத்தில், “ராமர் பாலத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கத் தமிழக அ.தி.மு.க. அரசு அளித்து வரும் ஒத்துழைப்பை பா.ஜ.க. பாராட்டுகிறது” என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களின் எத்தனை ஆண்டுக் காலக் கனவு?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி மத்தியிலே அமைந்து, அதிலே தி.மு.க.வும் இடம்பெற்றபோது, சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது குறைந்தபட்சத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டோம். அதனையொட்டி, 27-5-2004 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வைக்கப்பட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்தில், “Long Pending Schemes in specific States that have national significance, like the Sethu Samuthiram Project....will be completed expeditiously” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையிலும் அது சேர்க்கப்பட்டு, மதுரையில் நடந்த சேது சமுத்திரத் திட்டத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டோம். சேது சமுத்திரத் திட்டத்திற்காக அந்தக் காலத்தில் நாம் மட்டுமே குரல் கொடுக்கவில்லை.
2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில்,
“தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டு மொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்து ஆண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்” என்று சொல்லியிருந்தார்கள்.
இப்படிச் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்ட ஜெயலலிதா தலைமையிலே உள்ள தமிழக அரசுதான், நேற்றைய தினம் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது என்றால், இதற்குப் பெயர்தானே இரட்டை வேடமும், கபட நாடகமும் ஆகும்.
1955ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும் தொழில் நுட்பரீதியாக இந்தத் திட்டம் சாத்தியமானதுதான் என்றே நிரூபித்திருக்கின்றன. இதில் எள்ளளவு ஐயமும் யாருக்கும் இருந்தது இல்லை.
புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், பா.ஜ.க. வைச் சேர்ந்த திரு. அருண் ஜேட்லி, 9-3-2001 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆய்வுப் பொறுப்பு, 2001 அக்டோபரில் ‘நீரி’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் (NEERI) ‘நீரி’ என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதனை ஆய்வு செய்து, எந்தக் கேடும் வராத- குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற - சிறந்த தடம் ஆறாம் வழித்தடமான, “ஆதாம் பாலம்” பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது.
இறுதியாக 31.3.2005 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் தனது முறையான நடைமுறைகளுக்கும், விரிவான ஆய்வுகளுக்கும் பிறகு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை வழங்கியது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் ஆகியவற்றின் மூலம் இந்த “ஆதாம் பாலம்” கடல் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இருப்பதற்கான உருப்படியான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத காரணத்தால்தான், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உட்பட அடுத்தடுத்து வந்த எந்த ஒரு அரசும் இத்திட்டப் பகுதியைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் இல்லை; அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவும் இல்லை.
9.3.2001 இல் அமைச்சர் அருண்ஜேட்லி; 25.10.2002இல் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர்; 29.10.2002 இல் அமைச்சர் வி.வி. கோயல்; அதற்குமுன் அமைச்சர் சத்ருகன் சின்கா ஆகியோர் “ஆதாம் பாலம்” வழியிலான 6-வது எண் வழித்தடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நேற்றையதினம் (29-4-2013) தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சேது சமுத்திரத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ராமர் பாலத்தைத் தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தவோ, உடைக்கவோ கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி, அ.தி.மு.க. அரசு இப்போது இத்திட்டத்தை எதிர்க்கிறது. ஆனால் 2001 தேர்தல் அறிக்கையில் பக்கம் 83-84இல் ஜெயலலிதா கூறியுள்ளது என்ன:-
“இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்லவேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்திக் கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்”
- என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் “ஆடம்ஸ் பிரிட்ஜ்” என்றும், “மணல் மேடுகள்” என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று “ராமர் பாலம்” எனக் கூறுவது எப்படி? ஏன்?
“ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்குப் பொருந்தாத பல கதைகளைப் புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை” என்று பண்டித நேரு அவர்கள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்களில் (டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலில்) குறிப்பிடப்பட்டுள்ளது.
“The Ramayana is not history or biography. It is a part of Hindu mythology” என்று ஆழ்ந்த ராமபக்தரான மூதறிஞர் இராஜாஜி அவர்களே குறிப்பிட்டுள்ளார்.
10-5-1986 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அடிக்கல் நாட்டப்பட்டுச் சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுவரை 829 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு, இவ்வளவு பணமும் செலவழிக்கப்படும்வரை வாய் மூடி மெளனியாக இருந்துவிட்டுத் தற்போது திடீரென்று இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட ஜெயலலிதா நினைப்பது சரிதானா?
**சேதுத் திட்டம் நிறைவேற்றப்படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய்த் திட்டத்தின்கீழ் மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்; இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்;** **நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.**
**ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் துறை முகங்கள் மேம்படுத்தப்படுவதன் வாயிலாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புக் கிடும்; சேது சமுத்திரக் கால்வாயைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் சுமார் 424 மைல் அளவுக்குக் குறையும்.**
இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்குக் குறையும் வாய்ப்புள்ளது. கணிசமான எரி பொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகைக் கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும்.
**பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளைக் கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறைமுகம் பெருமளவில் வளர்ச்சி அடையும்; கடற்படை மற்றும் கடலோரப் படைக் கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும். இதன் மூலம் இந்தியப் படைத்திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.**
தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர். பாலுவின் நல்ல முயற்சியின் காரணமாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தத் திட்டம் பூர்த்தியடைந்து விட்டால் தி.மு. கழகத்திற்கு பெரும் பெயர் வந்து விடுமே என்ற காரணத்தால், இந்தத் திட்டத்திற்காக 829 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கும் மூடு விழா நடத்த அ.தி.மு.க. அரசு காழ்ப்புணர்வோடு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பதுதான் உண்மை!
அன்புள்ள, மு.க. 1-5-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 48 PDF ↗