உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 48

தொகுதி 48 · கடிதம் 3745

அமைப்பு சாராத் தொழிலாளர்களும் - நானும்!

2013-04-30

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நன்மைகள் செய்து நலன் பேண வேண்டுமென்பதற்காகவே, 35 நலவாரியங்களை அமைத்து, அந்த வாரியங்களின் மூலமாக அந்தந்தத் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி, அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளையெல்லாம் செய்து, அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காத்து வந்ததைத் தமிழ்நாட்டுத் தொழி லாளர்கள் மறந்திருக்கமாட்டார்கள். எந்தெந்த வகைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கெனத் தனி வாரியம் ஒன்று அமைக்க வேண்டுமென்று கழக ஆட்சியில் கோரிக்கை வைத்தபோதெல்லாம் அந்தக் கோரிக்கைகளை ஏற்று, அந்தத் தொழிலாளர்களுக்கான வாரியங்கள் அமைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். அந்த வாரியங்களிலே உறுப்பினராக ஆக வேண்டுமென்றால், தொழிற்சங்கம் மூலமாக வேண்டுகோள் வந்தாலேபோதும், உடனடியாக உறுப்பினர் அட்டைகள் அந்தத் தொழிற்சங்கம் மூலமாகவே வழங்கப்பட்டுவிடும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு என்று ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், அந்தந்தக் குழுக்களிலே கழக ஆட்சியிலே இடம் பெற்றிருந்தார்கள். ஆனால் தற்போது, அ.தி.மு.க. ஆட்சியிலே ஆலோசனைக் குழுக்களே மீண்டும் புதுப்பிக்கப்படவும் இல்லை; அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்கள் அனைத்தும் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டவை என்ற ஒரே காரணத்தினால் செயலிழந்து முடமாக்கப்பட்டு விட்டன. தற்போது உறுப்பினராகப் பதிவு செய்திட வேண்டுமென்றால், உறுப்பினர்களே நேரில் வர வேண்டும் - கிராம நல அதிகாரி சான்றிதழ் அளிக்க வேண்டும் - வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும் என்று இப்படியெல்லாம் கடும் நிபந்தனைகள்!

இந்த நேரத்தில் ஐந்தாவது முறையாகக் கழக ஆட்சி பொறுப்பேற்ற 13-5-2006 முதல் 19-4-2011 வரை எந்தெந்த நலவாரியங்களின் சார்பில் எந்த அளவிற்கு உதவிகள் வழங்கப் பட்டன என்பதைப் பற்றிச் சுருக்கமாக விளக்கிட விரும்புகிறேன்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 10 இலட்சத்து 59 ஆயிரத்து 969 தொழிலாளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு, அவர்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 44 தொழிலாளர் குடும்பங்களுக்கு 100 கோடியே 54 இலட்சத்து 504 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டில் அப்போதைய தி.மு.க. அரசினால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டுவந்த தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்திருந்த 4 இலட்சத்து 49 ஆயிரத்து 938 தொழிலாளர்களில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 724 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 67 கோடியே 33 இலட்சத்து 7 ஆயிரத்து 113 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

2000-2001 ஆம் ஆண்டில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு உருவாக்கிய தமிழ்நாடு ஆட்டோரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர்கள் நல வாரியம் முதலான 9 அமைப்புசாரா நல வாரியங்களை முந்தைய அ.தி.மு.க அரசு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்துடன் இணைத்துவிட்டது.

ஆனால், அந்த 9 வகை அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுவரும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் நலன்களில் அக்கறை கொண்டு சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் அவையனைத்தையும் 1.9.2006 முதல் மீண்டும் தனித்தனி நல வாரியங்களாகச் செயல்படும் வகையில் கழக அரசு ஆணையிட்டதுடன், மேலும் பல அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களையும் உருவாக்கி அவற்றின்மூலம் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துப் பல வகை நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது.

அந்த வகையில், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்ட ஒரு இலட்சத்து 619 தொழிலாளர்களில் 17 ஆயிரத்து 46 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 3 கோடியே 92 இலட்சத்து 11 ஆயிரத்து 633 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட 34 ஆயிரத்து 182 தொழிலாளர்களில் 16 ஆயிரத்து 634 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 3 கோடியே 14 இலட்சத்து 60 ஆயிரத்து 732 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட 25 ஆயிரத்து 397 தொழிலாளர்களில் 9 ஆயிரத்து 332 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 2 கோடியே 8 இலட்சத்து 89 ஆயிரத்து 826 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட 4 இலட்சத்து 42 ஆயிரத்து 288 தொழிலாளர்களில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 850 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 61 கோடியே 25 இலட்சத்து 95 ஆயிரத்து 684 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட 82 ஆயிரத்து 61 தொழிலாளர்களில் 29 ஆயிரத்து 65 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 9 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்து 489 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட 33 ஆயிரத்து 416 தொழிலாளர்களில் 7 ஆயிரத்து 401 பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 55 இலட்சத்து 49 ஆயிரத்து 745 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துகொண்ட 1 இலட்சத்து 80 ஆயிரத்து 116 தொழிலாளர்களில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 185 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 23 கோடியே 88 இலட்சத்து 20 ஆயிரத்து 61 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு காலணிதோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்ட 11 ஆயிரத்து 225 தொழிலாளர்களில் 3 ஆயிரத்து 61 பணியாளர் களின் குடும்பங்களுக்கு 89 இலட்சத்து 59 ஆயிரத்து 583 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதுபோலவே, தமிழ்நாடு ஓவியர் நல வாரியம் என்றும், தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் என்றும், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியம் என்றும், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நலவாரியம் என்றும், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம் என்றும், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம் என்றும், சமையல் கலைஞர்கள் நல வாரியம் என்றும் பல்வேறு வகைத் தொழிலாளர்களுக்காக வாரியங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொழிலாளர் நலத்துறை அல்லாத பிற துறைகளின் கீழ் இயங்கிய மற்ற 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்போரின் நலன்களைக் கருத்தில் கொண்டு கேபிள் டி.வி. தொழிலாளர்கள் நலவாரியம் 28.3.2008 அன்று அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் சமூகப்பாதுகாப்பு மற்றும் நலத் திட்டம் 7.8.2006 அன்று தொடங்கப்பட்டு, 18.1.2007 அன்று விவசாயத் தொழிலாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் ஒரு கோடியே 74 இலட்சத்து 65 ஆயிரத்து 498 தொழிலாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அதில் 8 இலட்சத்து 72 ஆயிரத்து 981 விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 684 கோடியே 2 இலட்சத்து 55 ஆயிரத்து 686 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்’ 20.4.2007 அன்று தொடங்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதற்கட்டமாக 1 கோடி ரூபாய் நிதி அனுமதிக்கப்பட்டது. இவ்வாரியத்தில் 25 ஆயிரத்து 192 கலைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு 15.3.2011 வரை 4 ஆயிரத்து 869 கலைஞர்களின் குடும்பங்களுக்கு 66 இலட்சத்து 31 ஆயிரத்து 567 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

‘தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்’ 27.5.2008 முதல் தொடங்கப்பட்டது. 15.3.2011 வரை 9 ஆயிரத்து 762 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 593 நரிக் குறவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 97 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

‘தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம்’ 22.4.2007 அன்று தொடங்கப்பட்டு, 65 ஆயிரத்து 326 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 15.3.2011 வரை 2 ஆயிரத்து 30 பூசாரிகளின் குடும்பங்களுக்கு 63 இலட்சத்து 21 ஆயிரத்து 45 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

‘தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம்’ 24.4.2007 முதல் தொடங்கப்பட்டு, இவ்வாரியத்தில் 15.3.2011 வரை 52 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, 3 ஆயிரத்து 632 பேருக்கு ஒரு கோடியே 62 இலட்சத்து 75 ஆயிரத்து 478 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

‘தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்’ 10.4.2008 அன்று தொடங்கப்பட்டு, 2 ஆயிரத்து 86 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். 775 பயனாளிகளுக்கு 3 இலட்சத்து 83 ஆயிரத்து 880 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

‘தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்’ 20.4.2007 அன்றும், தமிழ்நாடு உலமா மற்றும் பணியாளர் நல வாரியம் 24.8.2009 அன்றும்; தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் 31.8.2010 அன்றும், ‘தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம்’ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் 20.4.2007 அன்றும் தொடங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் 43 ஆயிரத்து 351 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, 15.3.2011 வரை 1,133 பேருக்கு 17 இலட்சத்து 86 ஆயிரத்து 440 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள மீனவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென ‘தமிழ்நாடு மீனவர் நல வாரியம்’ 29.6.2007 அன்று உருவாக்கப்பட்டது. 3 இலட்சத்து 85 ஆயிரத்து 756 மீனவ தொழிலாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, 15.3.2011 வரை 5 ஆயிரத்து 60 உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு 5 கோடியே 22 இலட்சத்து ஓராயிரத்து 411 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு திரைப்படத் துறையினர் நல வாரியம் 28.10.2009 அன்றும், தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் நல வாரியம் 16.5.2010 அன்றும், தமிழ்நாடு காதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம் 6.8.2010 அன்றும், தமிழ்நாடு பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் 17.8.2010 அன்றும் தொடங்கப்பட்டன. மாநிலம் முழுவதிலும் உள்ள ஆவண எழுத்தர்கள் மற்றும் குடும்பத்தினர் நலனைக் கருத்தில் கொண்டு, 28.10.2010 அன்று ஆவண எழுத்தர் நலவாரியம் உருவாக்கப்பட்டது.

ஆக மொத்தம் 35 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 13 இலட்சத்து 55 ஆயிரத்து 884 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களில், 21 இலட்சத்து 41 ஆயிரத்து 279 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 1011 கோடியே 56 இலட்சத்து ஓராயிரத்து 87 ரூபாய் உதவித்தொகை கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது.

கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இந்த உதவிகள் எல்லாம் தற்போது தொடர்ந்து வழங்கப்படுகின்றனவா, அந்த வாரியங்களின் கதி என்ன என்றே தெரியாதநிலை உள்ளது. இதைப்பற்றியெல்லாம் ஆராய்வதற்காகச் சென்னை மாநகரில், ஏ.ஐ.டி.யு.சி. சங்க அலுவலகத்தில், கடந்த 23ஆம் தேதியன்று தொழிற்சங்கத் தலைவர், தோழர் எஸ்.எஸ். தியாகராசன் தலைமையில் அனைத்துச் சங்கங்களின் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., மற்றும் எச்.எம். எஸ். சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தொ.மு.ச. சார்பில் கழகத் தொழிலாளர் அணிச் செயலாளர் தம்பி சிங்கார இரத்தின சபாபதியும் கலந்து கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. அரசின் அமைப்புசாராத் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, வரும் 7-5-2013 அன்று காலை 10 மணியளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட அலுவலகம் முன்பு பத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முன்வந்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு சாராத் தொ.மு.ச. பேரவையைச் சார்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று நானும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு மே தினத்தையொட்டி; தமிழக முதலமைச்சர் பேரவையில் படிக்கும் 110வது விதி அறிக்கையாக, இந்த 35 வாரியங்களையும் மீண்டும் உயிர்ப்பித்து பல லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றுவதாக அமைய வேண்டும் என்பதே அந்த வாரியங்களைத் தொடங்கக் காரணமாக இருந்தவன் என்ற முறையில் எனது எதிர்பார்ப்பும் விருப்பமுமாகும்.

அன்புள்ள, மு.க. 30-4-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 48 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 48 PDF ↗